ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதியின் பரிசீலணைக்கு ஆளுநர் அனுப்புவதற்கு வழியில்லை என்று கருத்துத் தெரிவித்திருப்பதுடன், மசோதா பிரச்சனையை தமிழக முதலமைச்சருடன் பேசித் தீருங்கள் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு ஆலோசனை வழங்கியுள்ளது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு.
நிலுவையில் உள்ள மசோதாக்கள் குறித்து, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை நடைபெறும் ஒவ்வொரு முறையும் இதே போல எச்சரிக்கையையும், கருத்துத் தெரிவிப்பதையும் உச்சநீதிமன்றம் வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இதற்கு முன்பும் இதே பிரச்சனையில், நெருப்போடு விளையாடாதீர்கள் என இதே அமர்வு நவம்பர் 10ம் தேதி ஆளுநர்களை எச்சரித்திருந்தது, அதனையடுத்தே ஆளுநர் ஆர்.என். ரவி நவம்பர் 13ம் தேதி 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியிருந்தார். தமிழக அரசும் நவம்பர் 18ம் தேதி சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, அந்த மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றியது.
சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், நவம்பர் 28ம் தேதியன்று ஜனாதிபதியின் பரிசீலணைக்கு ஆளுநர் அனுப்பியிருந்தார். அப்படி அனுப்பியதைத்தான் தவறு என உச்சநீதிமன்றம் தற்போது சுட்டிக்காட்டியுள்ளது.
ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையிலான பிரச்சனை கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பேசுபொருளாக உள்ளது.
ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா என பாஜக, ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் அனைத்திலும் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் அம்மாநில அரசுகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு பதிலளிக்காமல் பல மாதங்கள் கிடப்பில் போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
பாஜக ஆளும் மாநிலங்களில் இரட்டை எஞ்சின் ஆட்சி எனப் பிரச்சாரம் செய்து வரும் அக்கட்சி, மற்ற மாநிலங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரகளின் செயல்பாடுகளைத் திட்டமிட்டு முடக்கவே இந்த ஆளுநர் பதவியைப் பெரிதாக பயன்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார். பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடித்து வந்தார். இதே போல கேரள மாநிலத்திலும், ராஜஸ்தானிலும், தெலுங்கானாவிலும் பல மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன.
இந்த மாநிலங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உச்சநீதிமன்றத்தை அணுகி மசோதாக்களின் மீது ஆளுநர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கேட்டிருந்தன. நவம்பர் 10ம் தேதி பஞ்சாப் மாநில அரசின் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் அமர்வு சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களைக் கிடப்பில் போடுவதன் மூலம் ஆளுநர் நெருப்போடு விளையாடுவதாக கூறியிருந்தது. அதே தினத்தில் ஆர்.என்.ரவிக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனுவைப் பற்றி பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அதே அமர்வு, 12 மசோதாக்களின் மீது முடிவெடுக்காமல் இருப்பது “மிகவும் கவலைக்குரிய விசயம்” எனக் கூறியிருந்தது. இதனையடுத்துத்தான் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களைத் திருப்பி அனுப்பியதும் நடந்தது.
இதை வைத்து ஆளுநருக்கு பாடம் புகட்டிவிட்டதாகவும், தங்களுக்குச் சாதகமாக அரசியலைமைப்புச் சட்டம் இருப்பதாகவும் திமுக தரப்பில் செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் பிரச்சாரம் நடைபெற்றது.
ஆனால் பஞ்சாப் மாநில அரசின் வழக்கில் தீர்ப்பளித்திருந்த நீதிமன்ற அமர்வு, “அரசியலமைப்பின் 200வது பிரிவு ஆளுநர்கள் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவோ, திருப்பி அனுப்பவோ அல்லது மாநில அரசின் மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு அனுப்பவோ அதிகாரம் அளிக்கிறது.” என்று கூறும் அதே வேளையில், “சட்டப்பிரிவு 200ன் முக்கியப் பகுதி, மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்க ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கிறது” என்றும், அந்த சூழ்நிலையில், ஆளுநர் அதை “முடிந்தவரை விரைவில்” மாநில சட்டமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கூறுவதாக தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
“முடிந்தவரை விரைவில்” என்று அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதற்கு எவ்வளவு காலம் என்பது வரையறுக்கப்படவில்லை. இது உடனடியாக எனப் பொருள்படும் வகையில்தான் இதுவரை அமுல்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதுதான் மரபாக இருக்கிறது. ஆனால் அரசியல் சாசன சட்டப்படி ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட முடியாது.
அதனால்தான் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதாக முடியும் என்று தனது தீர்ப்பில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளது.
உண்மையில் உச்ச நீதிமன்றத்தால் ஆளுநருக்கு எதிராக எவ்வித உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இந்த விசயத்தில் கருத்துத் தெரிவிக்க மட்டுமே முடியும்.
அரசியல் சாசனத்தின் 361வது பிரிவு நீதிமன்ற உத்தரவுகளில் இருந்து மாநில ஆளுநர்களைப் பாதுகாக்கிறது. அந்தப் பிரிவின் படி ஆளுநரோ, ஜனாதிபதியோ தங்களது நடவடிக்கைகள் குறித்த எந்த நீதிமன்றத் தீர்ப்பிற்கும் கட்டுப்படத் தேவையில்லை.
எனவே உச்சநீதிமன்றம் என்னதான் கருத்துத் தெரிவித்தாலும், ஆளுநருக்கு எதிராக தீர்ப்பளித்தாலும், அதனை ஆளுநர் தரப்பு ஏற்று நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பல்வேறு மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றுவிட்டதாலும், சில மசோதாக்களின் மீது மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது அம்பலப்பட்டு எதிர்ப்பலைகளை உருவாக்கியிருப்பதாலும் மசோதாக்களைத் திருப்பியனுப்பிய அதே சமயம், அவற்றை மீண்டும் ஜனாதிபதியின் பரிசீலணைக்கு அனுப்பியதன் மூலம், ஆளுநர் தரப்பு, பிரச்சனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
மாநில அரசின் அதிகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, அரசின் நடவடிக்கைகளை முடக்கிப்போடும் இந்த அத்துமீறலுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில், அரசியல் சாசனத்தின் சட்டப்பிரிவுகளுக்கு பல்வேறு வியாக்கியானங்களைக் கொடுப்பதையும், அவற்றை வைத்து மயிர்பிளக்கும் விவாதங்களை நடத்துதையும் பாஜக கும்பல் செய்துவருகிறது.
இந்த விசயத்தில் மாநில அரசு செய்யக் கூடியதெல்லாம், ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பது. அதனையும் தமிழக அரசு ஏற்கெனவே செய்துவிட்டது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்கள் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசும், ஜனாதிபதியும் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இருந்தும் ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் தமிழக ஆளுநருக்கு ஆதரவாக உச்சநீதிமன்றத்தில், மசோதாக்களைக் கிடப்பில் போடுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என வாதாடுகிறார். உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைகளையும், மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களையும், ஒன்றிய அரசோ, ஆளுநரோ மதிக்கப்போவதில்லை.
அப்படியே நிலைமை முற்றிப்போய் பாஜகவிற்கு எதிரான சூழ்நிலை ஏற்பட்டால், தற்போதைக்கு உள்ள மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கும் நாடகத்தை நடத்தி பிரச்சனையைத் தள்ளிப் போடலாம். ஆனால் ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதை பாஜக நிறுத்தாது.
இந்த ஆளுநர் பதவி என்பதே மாநில அரசுகளைக் கண்காணிக்க உருவாக்கப்பட்டதுதான். “பிரிட்டன் முடியரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு பதிலாக, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் எனபதைத் தவிர இந்த ஆளுநர் பதவி என்பது மாநில முதலமைச்சரை கட்டுப்படுத்துவதற்கு உள்ள பதவி என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை” என 1949ம் ஆண்டு நடைபெற்ற அரசியலைமைப்புச் சட்ட விவாதத்தின் போது அசாம் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர் ரோகிணி குமார் கூறியிருந்தார். ஆளுநர் என்பவர் ஒன்றிய அரசின் ஏஜண்டாக மாநில அரசுகளைக் கண்காணிக்க, கட்டுப்படுத்த நியமிக்கப்படுபவர் என்ற இந்த கருத்தே அன்றைய அரசியலமைப்புக் குழுவின் ஒருமித்த கருத்தாக இருந்தது.
அதற்குப் பிறகு வந்த ஆண்டுகளில், காங்கிரஸ் ஆட்சியின் போது பல்வேறு சமயங்களில், இந்த ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துவதும், கலைப்பதும் பலமுறை நடந்துள்ளது.
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி மாநிலங்களில் தலையிடுவது இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போதே கூட ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் மாவட்டம் தோரும் சென்று அதிகாரிகளைச் சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். தற்போதும் கூட பஞ்சாப் மாநில ஆளுநராக உள்ள அவர், இதனைத் தொடர்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு இணையாக, இன்னும் சொல்லப்போனால் ஒரு படி மேலே அதிகாரம் கொண்ட நிழல் ஆட்சியை ஆளுநரால் நடத்த முடியும், அதுவும் மாநில அரசைக் கலைக்காமலேயே, என்பதை புரோகித் காட்டி வருகிறார்.
ஆங்கிலேயக் காலனியாதிக்க காலத்தில், காலனி நாடுகளுக்கு என நிர்வாக கட்டமைப்பையும், அதற்கு பிரதிநிதிகளைத் தேர்வு செய்வதையும் ஏற்படுத்திவிட்டு, காலனி நாடுகள் தனது கட்டுப்பாட்டை விட்டு அகன்றுவிடாமல் இருக்க வைசிராய்கள், கவர்னர்களை பிரித்தானிய முடியாட்சி உருவாக்கியதோ அதே போன்றுதான் மாநிலங்களைக் கட்டுப்படுத்த இந்திய ஆளும் வர்க்கம் ஆளுநர் பதவியை உருவாக்கி வைத்தது. அந்த ஆளுநர் பதவியைவைத்துக் கொண்டே தனக்கு செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் நிழல் ஆட்சி நடத்த நினைக்கிறது பாசிச கும்பல்.
சட்ட வரம்பிற்குள் நின்று கொண்டு ஆளுநருடன் மல்லுக்கட்டுவதோ, ஆளுநருக்கு உத்தரவிடுங்கள் என நீதிமன்றத்திடமும், ஒன்றிய அரசிடமும் மன்றாடுவதோ, இல்லை வேறு ஆளுநரை நியமிக்கும்படி கோருவதோ இவ்விசயத்தில் மாற்றம் எதையும் கொண்டுவராது. ஆளுநர் பதவியே தேவையில்லை அதனை நீக்க வேண்டும் எனக் கோருவதுதான் சரியானது. அந்தக் கோரிக்கைக்காக அனைத்து மாநில அரசுகளையும் இணைப்பதையும், அதனை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதும்தான் அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்க முடியும்.
- அறிவு