பாலஸ்தீனத்தின் காசா பகுதியின் மீதான இஸ்ரேலின் தாக்குதலானது போர் என்ற வரையறையைத் தாண்டி இனஅழிப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான வடக்கு காசா பகுதி மக்களுக்கு உணவு, தண்ணீர், மின்சாரம், மருத்துவ வசதிகள் என எதுவும் கிடைக்காதபடி தடுத்திருப்பதுடன், அங்கிருந்து அவர்கள் வெளியேறிவிடாதபடிக்கு அப்பகுதியைச் சுற்றிலும் ஏவுகணைத் தாக்குதல்களையும், விமானம் மூலம் குண்டு மழை பொழிவதையும் இஸ்ரேல் தொடர்கிறது.
இஸ்ரேலின் கடந்த கால ஆக்கிரமிப்புப் போர்களால் துரத்தியடிக்கப்பட்டு கையளவு துண்டு நிலமான காசா பகுதியில் 23 லட்சம் பாலஸ்தீனர்கள் வசித்துவரும் நிலையில், தற்போது அவர்களை ஒட்டுமொத்தமாக சுற்றிவளைத்து தாக்கும் வேலையில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை 3000க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பத்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். நேற்று (17 அக்டோபர் 2023) காசாவின் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மட்டும் 500க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கான நிவாரணப் பொருட்களை காசா பகுதிக்குள் கொண்டு செல்லவும் இஸ்ரேல் தடைவிதித்துள்ளது. காசாவிற்கும் வெளிநாடுகளுக்கும் இடையிலான எல்லா எல்லைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்ரேல் அனைத்து எல்லைகளையும் மூடிவிட்டது. எகிப்து எல்லைப் பகுதியான ரபாவில் தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி அந்தப் பகுதியில் நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் எதுவம் நுழையாதபடி தடுத்து வருகிறது. இதன் காரணமாக பல நூறு டன் நிவாரணப்பொருட்கள் எகிப்து எல்லையில் குவிந்து கிடக்கின்றன. போர் குறித்த சர்வதேச சட்டங்கள், ஒப்பந்தகள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, மனித குலத்திற்கு எதிரான இனஅழிப்புப் போரில் இஸ்ரேல் இறங்கியுள்ளது.
காசா பகுதியில் ஆட்சி செய்துவரும் ஹமாஸ் அமைப்பினர், இம்மாத துவக்கத்தில் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலை முகாந்திரமாகக் கொண்டு இந்த இனஅழிப்பு ஆக்கிரமிப்புப் போரை இஸ்ரேல் நியாயப்படுத்தி வருகிறது. இதற்கு முந்தைய போர்களைப் போல் அல்லாமல் இந்த முறை ஹமாஸ் அமைப்பினரை முற்றிலுமாக துடைத்தழித்துவிடப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தாக்குதல் தொடுப்பது இது முதல் முறையல்ல, கடைசிமுறையும் அல்ல. தங்களுக்கென்று ஒரு நாடின்றி உலகம் முழுவதும் பரவியிருந்த யூதர்களுக்கு, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னரான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு காலனியாதிக்க ஆங்கிலேய அரசு இஸ்ரேலை உருவாக்கியது தொடங்கி, பாலஸ்தீனத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ள இஸ்ரேல் தொடர்ந்து முயன்று வருகிறது. 1948 தொடங்கி இன்று வரை பாலஸ்தீனப் பகுதிகளை அக்கிரமிப்பதற்காக இஸ்ரேல் பல போர்களையும் தாக்குதல்களையும் தொடுத்திருக்கிறது.
குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில், பாசிஸ்டுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான அரசு இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்த பிறகு மேற்குக் கரைப் பகுதியில் குடியேரிய இஸ்ரேலியர்கள் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. பாலஸ்தீனர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இஸ்ரேல் அரசு முழுமையாக ஆதரவளிப்பதுடன், அவர்களைப் பாதுகாக்க இஸ்ரேல் இராணுவமும் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் அந்தப் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அதே சமயம், ஜூலை மாதத்தில், பாசிச நெதன்யாகு அரசு கொண்டுவந்த நீதித்துறை சீர்திருத்தங்கள், பாசிஸ்டுகளுக்கு அதிக அதிகாரம் அளிப்பதாகவும், அவர்களது ஊழல்களை விசாரிக்க முடியாத சூழலை ஏற்படுத்துவதாகவும் இருந்தபடியால் அதற்கெதிராக இஸ்ரேலிய பொது மக்கள் திரண்டு போராட ஆரம்பித்தனர். உள்நாட்டில் தனது ஆட்சிக்கு ஏற்பட்ட பிரச்சனையைத் திசை திருப்பிடவும் ஹமாஸ் நடத்திய தாக்குதல் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
இஸ்ரேலின் இந்த இனஅழிப்புப் போருக்கு அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய அரசுகள் ஆதரவளித்துள்ளன. அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது கப்பல்படையை இறக்கிவிட்டுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மற்ற நாடுகள் எதுவும் செயல்படமால் தடுத்து மிரட்டிவைப்பதற்காக அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை இஸ்ரேல் கடற்பகுதியில் குவித்துள்ளது. இந்தப் போரில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அறிவித்துள்ள அமெரிக்க அதிபர் பிடன், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை நேரில் சந்திக்க அந்நாட்டிற்கே செல்லவிருக்கிறார். இந்தியா உட்பட ஏனைய அமெரிக்க விசுவாச நாடுகளின் தலைவர்களும் ஹமாஸைக் கண்டித்திருப்பதுடன் இஸ்ரேலுக்குத் தங்களது ஆதரவை அறிவித்துள்ளனர்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்பதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை. மத்தியத் தரைக்கடல் பகுதயில் தனது மேலாதிக்க நலனைப் பாதுகாக்கும் விசுவாசமான அடியாளாக இஸ்ரேலை அமெரிக்கா வளர்த்துவிட்டுள்ளது. பொருளாதார ரீதியிலும், இராணுவ ரீதியிலும் இஸ்ரேலின் வளர்ச்சிக்கு அமெரிக்கா பெரிதும் உதவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் கோடி ருபாயை இஸ்ரேலுக்கு நிவாரணத் தொகையாக அமெரிக்க வழங்கி வருகிறது. அதுமட்டுமன்றி கடந்த 50 ஆண்டுகளில் மொத்தமாக 175 லட்சம் கோடி ருபாய் அளவிற்கு இராணுவ உதவிகளை வழங்கியதன் மூலம் இஸ்ரேலை மிகப்பெரிய இராணுவ சக்தியாக அமெரிக்க வளர்த்துள்ளது.
பாலஸ்தீனத்திற்கு எதிரான கடந்த காலப் போர்களின் போதும் அமெரிக்கா இஸ்ரேலைத்தான் ஆதரித்துள்ளது. பாலஸ்தீன விடுதலைக்காக போராடி வந்த யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை அமைப்பைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததன் மூலம் 1993-95 ஆண்டுகளில் கையெழுத்தான ஓஸ்லோ ஒப்பந்தத்தை அமெரிக்கா சாத்தியமாக்கியது. ஓஸ்லோ ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கோ பாலஸ்தீனத்திகோ சொந்தமில்லாத சர்வதேச நகரம் என அறிவிக்கப்பட்ட ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்துள்ளார்.
அமெரிக்காவின் கைப்பாவையாக, யாசர் அராபத்தின் சீடர் மஹ்மூத் அப்பாஸ் பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையை தற்போது ஆட்சி செய்து வருகிறார். இவரைத்தான் பாலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அமெரிக்காவும், ஐக்கிய நாடுகள் சபையும் அங்கீகரித்துள்ளன.
ஆனால் பாலஸ்தீன மக்கள் மத்தியில் அமெரிக்க விசுவாசியான அப்பாஸிற்கு ஆதரவு இல்லை. பாலஸ்தீன விடுதலை அமைப்பில் தற்போது கோலோச்சி வரும் அப்பாஸின் பத்தா கட்சியின் மீது நம்பிக்கையிழந்த காரணத்தால்தான் 2006ம் ஆண்டு நடந்த தேர்தலில் காசா மக்கள் ஹமாஸ் இயக்கத்தினரைத் தேர்ந்தெடுத்தனர். தேர்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்த பத்தா கட்சியினை வெளியேற்றிவிட்டு 2007ம் ஆண்டுமுதல் காசா பகுதியை ஹமாஸ் ஆட்சி செய்து வருகிறது.
அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வராத ஹமாஸ் இயக்கத்தினரை ஒடுக்கி மேற்குக் கரைப் பகுதியைப் போன்றே காசாவிலும் தனது பொம்மை அரசை நிறுவ அமெரிக்கா விரும்புகிறது. அதற்கான தருணத்தை ஹமாஸ் நடத்திய தாக்குதல் வழங்கியுள்ளது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான், அந்தத் தாக்குதலில் பலநூறு அப்பாவி இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் அந்தத் தாக்குதலைக் காரணமாக காட்டி பல ஆயிரம் அப்பாவி பாலஸ்தீனர்களை படுகொலை செய்து காசா பகுதியை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை நியாயப்படுத்த முடியாது.
நாசிக்களின் வதை முகாம்களில் அடைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட யூதர்களைப் போல இன்றைக்கு நம் கண்முன்னே காசாவில் பல லட்சம் மக்கள் சாவின் விளிம்பில் நிற்கிறார்கள். தனது பிராந்திய மேலாதிக்க நலனுக்காக அமெரிக்காவும், பிரதேச ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காக இஸ்ரேலும் இணைந்து தொடுத்துள்ள அக்கிரமிப்புப் போர்தான் பாலஸ்தீனத்தின் மீதான இந்த தாக்குதல். ஹமாஸ் அமைப்பினரை தீவிரவாதிகள் என்றும் இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்றும் சித்தரிப்பதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய நாடுகள் இந்த இனப்படுகொலையை மூடி மறைக்கின்றன.
- அறிவு