இடஒதுக்கீட்டு அரசியலால் பாசிசத்தை வீழ்த்த முடியுமா?

இந்துராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை, சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட சனாதனத்தின் ஆட்சியை நிறுவத்துடிக்கும் காவி பாசிச சக்தியான பாஜக, தனது சித்தாந்தத்திலும், நடைமுறையிலும் என்றைக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் பாஜகவின் இடஒதுக்கீட்டு வெறுப்பை மட்டும் வைத்து அதனை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதுதான் தவறு.

 

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அதன் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டிற்கு தற்போது இருக்கும் 50 சதவீத உச்சவரம்பு தகர்க்கப்படும் என்றும், பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் விரைவாக அமுல்படுத்தப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாத நரேந்திர மோடியின் இயலாமையை சாடியதுடன், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்படி காங்கிரஸ் பாஜகவை நிர்பந்திக்கும் என்றும் அது நடக்காதபட்சத்தில் பாஜகவை அகற்றிவிட்டு காங்கிரஸ் அதனை செய்து முடிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில், பீகார் மாநிலத்தை பின்பற்றி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல திமுக, நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளும் இடஒதுக்கீட்டை வைத்து பாஜகவிற்கு எதிரான அரசியலை முன்நகர்த்த தொடங்கியுள்ளனர். இந்த மாத துவக்கத்தில் பீகார் மாநில சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியானதிலிருந்து இந்தியா கூட்டணி கட்சிகளின் பல்வேறு தலைவர்களும் பாஜகவை சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான கட்சியாக முன்னிறுத்தி பேசி வருகின்றனர்.

நவம்பரில் வர இருக்கும் 5 மாநில சட்டமன்ற தேர்தல்களிலும், அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலிலும் இதனையே மையப்படுத்தி பாஜகவை வீழ்த்த முடியும் என இந்தியா கூட்டணியினர் நினைக்கின்றனர்.

உயர் சாதியினருக்கு இடஒதுக்கீடு வழங்கியது, பீகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவிடாமல் தடுக்க வழக்குத் தொடுத்தது, தேசிய அளவில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த மறுப்பது எனத் தொடரும் பாஜகவின் இடஒதுகீட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி அதனை பிரச்சாரமாக கொண்டு சென்று பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்களின் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்பிவிட முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.

இந்துராஷ்டிரம் என்ற பெயரில் பார்ப்பனிய மேலாதிக்கத்தை, சாதிய ஒடுக்குமுறையை அடிப்படையாக கொண்ட சனாதனத்தின் ஆட்சியை நிறுவத்துடிக்கும் காவி பாசிச சக்தியான பாஜக, தனது சித்தாந்தத்திலும், நடைமுறையிலும் என்றைக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிராகவே இருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் மாற்றுக் கருத்தும் இல்லை. அதே சமயம் பாஜகவின் இடஒதுக்கீட்டு வெறுப்பை மட்டும் வைத்து அதனை வீழ்த்திவிட முடியும் எனக் கருதுவதுதான் தவறு.

இடஒதுக்கீடு குறித்தும், சமூகநீதி குறித்தும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வும் ஆதரவும் உள்ள தமிழ்நாடு, பீகார் போன்ற மாநிலங்களில் வேண்டுமானால் பாஜகவிற்கு எதிரான இந்த அரசியல் எடுபடலாம். ஆனால் காவி பாசிஸ்டுகள் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் இந்துத்வ மதவெறி அரசியலைக் கொண்டு சென்றதன் விளைவாக காவி பாசிசத்திற்கென்ற மக்கள் அடித்தளம் உருவாகியுள்ள உத்திரபிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களிலோ, காவி பாசிசம் விரைவாக செல்வாக்குப் பெற்றுவரும் மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களிலோ, வடகிழக்கிலோ அல்லது சட்டீஸ்கர் போன்ற மாநிலங்களிலோ இடஒதுக்கீட்டு அரசியலை மட்டும் வைத்து பாஜகவை வீழ்த்த முடியுமா?

2014ல் ஆட்சியைக் கைப்பற்றியது தொடங்கி மோடி தலைமையிலான காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை தொடர்ந்து அமுல்படுத்தி வருகிறது. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் எனும் மறுகாலனியாக்க கொள்கைகளை முன் எப்போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமாக நடைமுறைப்படுத்தும் பாசிச மோடி அரசு கார்ப்பரேட் நலன் காக்க இதுவரை கொண்டுவந்துள்ள திட்டங்கள், உருவாக்கிய சட்டங்கள், பிறபித்துள்ள உத்தரவுகள் காரணமாக பல லட்சம் விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். வேலைவாய்ப்பின்மை சதவீதம் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சத்தைத் தொட்டுள்ளது. பணவீக்கம் அதிகரித்து விலைவாசி உயர்வு சந்திராயனை விஞ்சி நிலவைத் தொடும் வேகத்தில் பறக்கிறது. மக்களின் வாங்கும் சக்தி மிகவும் குறைந்து போயுள்ளது.

பன்னாட்டு முதலாளிகளும் அவர்களது அடிவருடிகளான அம்பானி அதானி போன்ற இந்தியத் தரகு முதலாளிகளும் பொதுத் துறை வங்கிகளைச் சூறையாடியது மட்டுமன்றி நிலக்கரி, இரும்பு உள்ளிட்ட இயற்கை வளங்களை சூறையாடிக் கொழுக்கவும் அனுமதி கொடுத்துள்ளது இந்த பாசிச மோடி அரசு. அதேசமயம் சிறுதொழில் முதலாளிகளையும், உற்பத்தியாளர்களையும் தொழிலிலிருந்தே விரட்டியடிக்கும் வேலையையும் செவ்வனே செய்து வருகிறது.

நாட்டின் இறையாண்மையை ஏகாதிபத்தியங்களிடம் அடகு வைத்து, அவர்களின் கொள்ளைக்கு நாட்டைத் திறந்துவிட்டதை மறைப்பதற்காக, போலி தேசிய வெறியையும், மதவெறியையும் தூண்டிவிட்டு மக்களைத் திசைதிருப்பி வருவதுடன், எதிர்த்துப் பேசும் அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் என அனைவரின் மீதும் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐயை ஏவி விடுகிறது. ஊபா, தேசதுரோகச் சட்டம் போன்ற ஆள்தூக்கிக் கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி தனக்கு எதிரானவர்களை அடக்கி ஒடுக்குகிறது இந்தப் பாசிச கும்பல்.

பாசிசத்தின் இத்தகைய தேசவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டியிருக்கிறது. காவி பாசிச கருத்துக்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகாமல் தடுத்து, அதற்கு உள்ள மக்கள் அடித்தளத்தை உடைக்க வேண்டுமானால் பாசிசத்தின் உண்மை முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது. இனம், மொழி, மதம் கடந்து பாசிசத்திற்கு எதிராக ஒட்டுமொத்த நாட்டையும் அணிதிரட்ட வேண்டும். அத்தகையதொரு ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமே பாசிசத்தை எதிர்கொண்டு வீழ்த்த முடியும். 

இதுவரை இந்தத் திசையில் இந்தியா கூட்டணியினர் ஒரடி கூட எடுத்துவைக்கவில்லை. ஒருவேளை இவர்கள் ஓட்டுச் சீட்டை மையப்படுத்திய தேர்தல் கணக்குகள் மூலம் பாசிச சக்தியான பாஜகவை வீழ்த்தி ஒன்றிய அரசை கைப்பற்றினாலும் கூட பாசிசத்திற்கு வளர்ந்து வரும் மக்கள் அடித்தளத்தை உடைக்காதவரை அசுர பலத்துடன் பாசிசம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்க முடியாது.

  • அறிவு

 

  

2 Comments

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன