தமிழ்நாடு முழுவதும் வீடுகளின் பொதுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாக கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவித்தது. அதன்படி 19 ஆயிரம் கோடி ருபாய் செலவில், 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், 1.17 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் மூன்று கட்டங்களாக பொருத்தப்படவிருக்கின்றன.
இதற்கென சென்னை தியாகராய நகரில் 1.3 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்திப் பார்க்கும் சோதனை முயற்சி ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் கொள்முதல் செய்வதற்காக ஏற்கெனவே இரண்டு கட்ட ஏலம் முடிந்துவிட்டது. மூன்றாவது கட்ட ஏலம் விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள 3 கோடிக்கும் அதிகமான வீட்டுப் பயன்பாட்டிற்கான மின் இணைப்புகளில், நகர்ப்புறங்களில் உள்ள பெரும்பான்மை மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை 2025ம் ஆண்டிற்கும் முடித்துவிட தமிழ்நாடு மின்சார வாரியம் நினைக்கிறது. மற்ற இணைப்புகளுக்கும் படிப்படியாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்திவிடவும் திட்டமிட்டுள்ளது.
தற்போது பயன்பாட்டில் உள்ள ஸ்டாடிக் மீட்டர்களில் மின்வாரிய ஊழியர்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மின்சார பயன்பாட்டுக் கணக்கீட்டை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை எடுக்க வேண்டியிருக்கிறது. இந்த முறையில், மின்வாரிய ஊழியர்கள் சரியான தேதியில் வந்து கணக்கெடுக்காமல் இருப்பது. கணக்கெடுக்க வரும் போது வீட்டில் ஆள் இல்லாமல் இருந்தால் மின்வாரிய ஊழியரின் இஷ்டத்திற்கு ஒரு தொகையை நிர்ணயிப்பது என பல குளறுபடிகள் இருக்கின்றன. இந்தக் குளறுபடிகளைக் காரணாமாக காட்டி ஸ்மார்ட் மீட்டர் பொருத்திவிட்டால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடும் எனக் கூறுகிறார்கள்.
ஒவ்வொரு முறையும் மின்சாரப் பயன்பாடு குறித்து உரித்த நேரத்தில் கணக்கிட்டு கட்ட வேண்டிய தொகையை ஸ்மார்ட் மீட்டரே நிர்ணயித்து அதனை நுகர்வோரின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிவிடும். இதன் மூலம் கணக்கீட்டு முறையில் உள்ள குளறுபடிகளை சரிசெய்துவிடலாம் எனக் கூறுகிறார்கள். அதே போன்று மின் கட்டணத்தை உரிய தேதியில் கட்ட தவறு பயனாளரின் மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்படுவதுடன், அவரே கட்டணத்தைக் கட்டிவிட்டால் அடுத்த சில நொடிகளில் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு தானாக மீண்டும் இயங்க ஆரம்பித்துவிடும் என்றும் கூறுகிறார்கள்.
ஸ்மார்ட் மீட்டர்கள் மின் பயன்பாடு குறித்த தகவல்களை மின்வாரியத்தில் உள்ள கணிணியில் உடனுக்குடன் தொடர்ந்து பகிர்வதால், ஒரு பகுதியில் எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. எந்த நேரத்தில் பயன்பாடு அதிகமாக உள்ளது என மின்சார வாரியம் கண்காணித்து அதற்கேற்ப மின்விநியோகத்தை சீர்படுத்த முடியும் என ஸ்மார்ட் மீட்டரின் நன்மைகளை அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள்.
ஆனால் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின்சார வாரியம் கூறும் காரணங்கள் எல்லாம் மக்களை ஏமாற்றும் தந்திரங்களே ஆகும். ஏனென்றால் தமிழ்நாட்டில் தொழிற்துறைக்கென வழங்கப்படும் மின் இணைப்புகளை ஸ்மார்ட் மீட்டர்களுக்கு மாற்றும் பணி இந்த ஆண்டு தொடக்கத்திலேயே கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி முடிவடைந்ததும், மின்சார வாரியம் உடனடியாக “பீக் ஹவர் சார்ஜஸ்” அதாவது காலை 6 மணிமுதல் 10 மணிவரை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு 25% அதிக கட்டணம் விதிக்கும் முறையை, தொழிற்துறை இணைப்புகளுக்கு கொண்டுவந்தது.
இதே போன்ற “பீக் ஹவர்ஸ்” கட்டணத்தை வீடுகளுக்கான மின் இணைப்புகளுக்கும், 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து கொண்டு வரவுள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதாவது 2025 மார்ச் மாதத்திற்குள் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணிகள் முடிவடைந்த பிறகு அடுத்த மாதத்திலேயே “பீக் ஹவர்ஸ்” கட்டணம் வசூலிக்கப்படும் என மின்சார வாரியம் கூறுகிறது.
“பீக் ஹவர்ஸ்” கட்டணம் வசூலிப்பதுதான், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதன் உண்மை நோக்கம் என மின்சார வாரியம் இதன் மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. தற்போது இருக்கும் ஸ்டாடிக் மீட்டரைக் கொண்டு இரண்டு மாதங்களில் மொத்தமாக எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை மட்டுமே கணிக்க முடியும். இதனைக் கொண்டு எந்த நேரத்தில் எவ்வளவு மின்சாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள் எனக் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் இதனை ஸ்மார்ட் மீட்டரைக் கொண்டு எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
நமது குடும்பங்களில் காலை 6 மணிமுதல் 10 மணி வரை என்பது சமையல் செய்வது, பள்ளிகளுக்கும், வேலைக்கும் தயாராகி கிளம்புவது ஆகிய வேலைகளைச் செய்யும் நேரம். அப்போது வீட்டில் உள்ள மிக்சி, மின்விசிறி, தொலைக்காட்சி, வாட்டர் ஹீட்டர், இஸ்திரிப் பெட்டி என எல்லா மின்சாதனங்களும் பயன்பாட்டில் இருக்கும். அதே போன்று மாலை 6 மணிமுதல் 10 மணிவரை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கும் நேரம் ஆகையால் மின்சார சாதனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்படும். இந்த நேரங்களில் மின்சார பயன்பாடு அதிகமாக இருக்கும். அதனைக் கணக்கிட்டு அதிக கட்டணம் வசூலிப்பது என்பது மக்களின் சட்டைப்பையிலிருந்த்து பணத்தைக் கொள்ளையடிக்கும் ஜேப்படி வேலைக்கு ஒப்பானது.
இப்படி நம்மைக் கொள்ளையடிக்க பொருத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கான விலையையும் நாம்தான் கொடுக்க வேண்டியிருக்கும். ஒரு சிங்கிள் ஃபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை ரூ.6 ஆயிரம், அதே போல மூன்று ஃபேஸ் ஸ்மார்ட் மீட்டரின் விலை ரூ.10 ஆயிரம். ஆனால் தற்போதுள்ள ஸ்டாடிக் மீட்டர் விலை முறையே 650 மற்றும் 1600 ருபாய்கள். இவ்வளவு விலை உயர்ந்த மீட்டரை பொருத்துவதற்கு தற்போது கட்டணம் எதையும் மின்சார வாரியம் நிர்ணயிக்கவில்லை என்றாலும், இதற்கென ஆகும் 24 ஆயிரம் கோடி செலவையும் மின் கட்டண உயர்வின் மூலம் நம்மிடம் இருந்து பிடுங்கிவிடுவார்கள். உயர்த்தப்பட்ட கட்டணத்தை உரிய தேத்திக்குள் கட்டத் தவறும் பட்சத்தில் அடுத்த நொடியே, நமது வீட்டிற்குக் கூட வராமல் மின்சாரம் துண்டிக்கப்படும். அந்த வசதியையும் ஸ்மார்ட் மீட்டரே மின்சார வாரியத்திற்கு செய்துகொடுத்துள்ளது.
இதுமட்டுமன்றி இந்த ஸ்மார்ட் மீட்டரை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு மாதமும் பராமரிப்புத் தொகையை மின்வாரியம் கொடுக்க வேண்டியிருக்கும். அதாவது இதற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் மின் கணக்கீட்டைப் பராமரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களுக்கான பராமரிப்புத் தொகை என்ற பெயரில் மிகப்பெரிய தொகை ஒன்றை மாத மாதம் மின்சார வாரியம் கொடுக்க வேண்டும். ஏற்கெனவே தொழிற்துறை இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தில் 30ஆயிரம் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றிற்கான பராமரிப்புத் தொகையையே அதற்கான நிறுவனங்களுக்குக் கொடுக்க முடியாமல் தமிழ்நாடு மின்சாரவாரியம் திண்டாடி வருகிறது. இந்நிலையில் 3 கோடி ஸ்மார்ட் மீட்டர்களுக்கு அவர்களால் நிச்சயமாக கொடுக்க முடியாது. அந்தத் தொகையும் நமது தலையில்தான் சுமத்தப்படும்.
இதையெல்லாம் மறைத்துவிட்டு நவீன தொழில்நுட்பம், தானாக மின் பயன்பாட்டை கணக்கிட்டு நமது கைப்பேசிக்கே விவரங்களை அனுப்பும் வசதி, கணக்கீட்டுக் குளறுபடிகளையெல்லாம் சரிசெய்து மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கவே ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதாக கூறி நம்மை மின்சார வாரியம் ஏமாற்றுகிறது.
மக்கள் நலனை கருத்தில் கொண்டு,அரசு மின்கட்டணத்தை நிர்ணயம் செய்வது என்ற முறையை ஒழித்து விட்டு, சந்தைக்கேற்ப மின்கட்டணத்தை உயர்த்துவது என்பது ஸ்மார்ட்மீட்டர் மூலம் எளிதாக நடைபெறும். உழைப்பை மட்டுமே நம்பி வாழும் மக்களின் பணத்தை பலாத்காரமாக பிடுங்கப்படுவதற்கு கொண்டுவரப்படும் இந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை அனைவரும் ஒன்று சேர்ந்து எதிர்த்து முறியடிக்க வேண்டும்.
- அறிவு