இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றுவதே எங்களது இலக்கு; வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்குதற்கான தடைகள் இல்லாத சூழலை ஏற்படுத்துவதன் மூலம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்க உக்குவிப்பதுடன் உற்பத்தியாகும் பொருட்களை உலகின் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வோம்; இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை ஊக்குவிப்போம் என நியாயம் கற்பித்து மோடி அரசால் ஆத்மநிர்பார் பாரத், மேக் இன் இந்தியா போன்ற திட்டங்கள் ஆரவாரமாக துவக்கப்பட்டது
இத்திட்டங்களின் கீழ் பல அந்நிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து கிளம்பி இந்தியாவில் தொழில் தொடங்க படையெடுக்கப் போவதகாவும் இதனால் இந்தியாவில் தொழில் வளர்ச்சி; பொருள் உற்பத்தி; அவற்றின் ஏற்றுமதி பெருகும் என பாஜக துதிபாடிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் சுயசார்பு உற்பத்தியை ஊக்குவித்து, நாட்டின் ஏற்றுமதியை அதிகப்படுத்த, அந்நிய முதலீட்டை மேலும் ஈர்க்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2020 ஆம் ஆண்டு 14 துறைகளை உள்ளடக்கிய ’உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம்’ (production linked incentive scheme-PLI ) என்ற திட்டத்தை மோடி அரசு அறிமுகப்படுத்தியது.
உற்பத்தி துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் முதலீடு நாட்டின் பொருளாதாரத்தில் வளர்ச்சியை கொண்டு வருகின்றன எனவும் ஆனால் நாட்டில் நிலவும் தொழில் கட்டமைப்பு குறைபாடுகள், திறனற்ற தொழிலாளர்கள், பலவீனமான ஆராய்ச்சி துறை போன்ற காரணங்களினால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்ய விரும்புவதில்லை. இதை ஈடுகட்டும் நோக்கத்தில், அக்கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகள் கொடுத்து அதன் மூலம் முதலீடுகளை இந்தியாவிற்குள் ஈர்ப்பதற்காக பி.எல்.ஐ திட்டம் உருவாக்கப்பட்டதாக கூறுகின்றனர்.
இத்திட்டத்தின் மூலம் வாகன உற்பத்தி, மின்னனு துறை, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட 14 துறைகளுக்கு உற்பத்தி ஊக்கத்தொகையாக 4% முதல் 6% வரை 4 முதல் 5 ஆண்டுகள் வரை வழங்கப்படும். அதாவது மேற்கூறிய துறை சார்ந்த நிறுவனங்கள் விற்பனை செய்யும் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் 4% முதல் 6% ரூபாய் வரை இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி ஊக்கத்தொகை என்ற பெயரில் அரசு வழங்கும்.
உதாரணமாக 2021 ஆம் ஆண்டில் (அடிப்படை ஆண்டு) கைப்பேசியை அசெம்பிள் செய்யும் ஒரு நிறுவனம் 500கோடிக்கு விற்பனை செய்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்நிறுவனம் 2022ஆம் ஆண்டில் 1000 கோடிக்கு விற்பனை செய்தால், ஒரே ஆண்டில் 500 கோடி அதிகமாக விற்பனை செய்ததற்காக, உற்பத்தி ஊக்க விகிதமான 5 விழுக்காடு தொகையாக ரூ 25 கோடியை பெறும்.(500*5/100=25)
இத்திட்டத்திற்காக மோடி அரசு 2022 ஆம் ஆண்டின் பட்ஜெட்டின் போது 1,97,000 கோடியை ஒதுக்கியது இதன் கீழ் அதிகபட்சமாக கைப்பேசி மற்றும் மின்னனு பாகங்கள் உற்பத்திக்கு ரூ 40.995 கோடி; வாகன மற்றும் வாகன உதிரிபாகங்கள் உற்பத்திக்கு 25,900 கோடிகளை ஒன்றியஅரசு ஒதுக்கியுள்ளது கைப்பேசி துறையை பொறுத்தவரையில் சாம்சங், பாக்ஸ்கான், பெகட்ரான், விஸ்ட்ரான், ரைசிங்ஸ்டார் போன்ற பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், லாவா, டிக்ஸான் டெக்னாலஜி போன்ற இந்திய நிறுவனங்களும் அடங்கும். இதில் ஐபோனுக்காக அசெம்பிள் செய்யும் தைவான் நிறுவனமான பாக்ஸ்கான் ஆகஸ்ட் 2021 ஆம் ஆண்டிலிருந்து மார்ச் 2022 வரை மட்டுமே மோடி அரசிடமிருந்து ரூ 357 கோடியை உற்பத்தி ஊக்கத்தொகையாக பெற்றிருக்கிறது
சீனாவிலிருந்து பல நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்குகின்றன. அந்நிய முதலீடு தான் இந்திய வளர்ச்சியின் அறிகுறி என பாஜக ஆதரளாவர்களின் பிரச்சாரம் முடுக்கிவிடப்படுகின்றன. அந்நிய முதலீட்டை கவருவதற்காக கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்க குறைந்த விலையில் விளை நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பது மின்சாரம், தண்ணீர் போன்ற சேவைகளை குறைந்த விலையில் வழங்குவது, விதவிதமான வரிச்சலுகைகள், என்று அரசு நிதியை–நமது பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி இறைக்கப்படுகின்றன.
இதுமட்டுமில்லாமல் இந்தியாவின் நகர்ப்புறங்களை நோக்கி அன்றாடம் விசிறியடிக்கப்படும் உழைப்பாளி மக்கள் பெரும் ரிசர்வ் பட்டாளமாக திரண்டு நிற்கின்றனர். இதைப் பயன்படுத்தி அவர்களை மிகக் குறைந்த கூலிக்கு ஒப்பந்தத் தொழிலாளர்களாகவும், அன்றாட கூலிகளாகவும் வேலைக்கு அமர்த்தி 12 மணிநேரம் 14 மணிநேரம், இரண்டு ஷிப்ட்டுகளை தொடர்ந்தாற் போல செய்ய வைப்பது, எந்த உரிமையும் இன்றி கொத்தடிமைகள் போல நடத்துவது என ஒட்டச் சுரண்டி கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்கனவே கொழுத்து வருகின்றனர்.
இக்கார்ப்பரேட் முதலாளிகள் மீண்டும் கொழுக்கும் வகையில் சுயசார்பு உற்பத்தி என்ற போர்வையில் உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் என்ற பெயரில் மக்கள் பணத்தை முதலாளிகளுக்கு மேலும் வாரி இறைக்கிறது மோடி அரசு.
இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்கும் அந்நிய நிறுவனங்கள் நாட்டை வளமாக்கவில்லை. அவை, அரசு அளித்துள்ள அத்தனை சலுகைகளையும் அனுபவிப்பதோடு, உற்பத்தி ஊக்குவிப்பு திட்டம் மூலம் மக்கள் பணத்தை சட்டபூர்வமாகவே திருடி செல்கின்றனர். இதனை, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல கைப்பேசியை அசெம்பிள் செய்யும் நிறுவனங்களின் லாபத்தைக் கொண்டே நாம் விளங்கிக் கொள்ளலாம்
கைபேசிகளின் ஏற்றுமதி 2018 ஆம் ஆண்டில் 24,000 கோடி ரூபாயில் இருந்தது. அதுவே 2023 ஆம் ஆண்டில் 82000 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது. கைபேசிகளின் ஏற்றுமதி உயர்ந்ததற்கு காரணம் மோடி அரசின் பி.எல்.ஐ திட்டமே காரணம் என காவி கும்பலும் தரகு-அதிகார வர்க்க அறிவு ஜீவிகளும் பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆனால் கைபேசிகள் துறையில் நடந்த இந்த ஏற்றுமதி உயர்வு ஒரு போதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்கெளிப்பு செலுத்தவில்லை என பி.எல்.ஐ திட்டத்தை முதலாளித்துவ பொருளாதார நிபுணரான முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் அம்பலப்படுத்தியுள்ளார்.
கைபேசிகளின் பல்வேறு உதிரிபாகங்களை பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் வெறுமனே அசெம்பிள் செய்வதற்கு மட்டும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு போனுக்கான விலையில் 4% செலவாகிறது என்று வைத்துக்கொண்டால் அதே போனுக்கு மோடி அரசு பி.எல்.ஐ திட்டத்தின் கீழ் போனுக்கான விலையில் 6% த்தை உற்பத்தி ஊக்கத்தொகையாக ஒரு போனுக்கு வழங்குகிறது. ஒரு போனை அசெம்பிள் செய்வதற்கு அசெம்பிள் செலவு போக 2% இலாபமாக கிடைப்பதால் அக்கார்ப்பரேட் அந்நிறுவனங்கள் தங்களது கடைகளை இந்தியாவில் விரிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன. இப்படி தான் இந்தியாவின் கைபேசிகளின் ஏற்றுமதி அதிகமாகி இருக்கிறது. இதைத் தான் நாட்டின் வளர்ச்சி என்கிறார்கள் என்று PLI திட்டத்தை அம்பலப்படுத்தியுள்ளார் ரகுராம்ராஜன்.
கைபேசி நிறுவனங்களின் முதலீடு ஒருபோதும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவில்லை. உதிரிபாகங்களை இறக்குமதி செய்து வெறுமனே அசெம்பிளி செய்வது என்பது நாட்டின் பொருளாதாரத்தின் மதிப்புகளை கூட்டுவதில்லை என்கிறார் ரகுராம் ராஜன்.
இந்திய தொழில்கட்டமைப்பு, தொழிலாளர்களின் திறன்கள் இந்திய ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவற்றை மேம்படுத்துவதற்கு பதிலாக அசெம்பிளி லைன் மூலம் கைபேசிகளை ஒருங்கிணைத்து ஏற்றுமதி செய்யும் மூன்றாம் நிலை திறனுள்ள தொழிலுக்கு மானியம் என்ற பெயரில் மக்கள் பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுக்கப்பட்டு வருகின்றது. கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிப்பதற்கு புதிய திட்டங்கள் சட்டபூர்வமாக பகிரங்கமான வழிகளில் நிறைவேற்றப்படுகின்றன. அவர்களை கொழுக்க வைப்பதற்கு மோடி அரசு ஒரு பணியாள் போல செயல்படுகிறது
காலனியாதிக்க காலக்கட்டத்தில், கிழக்கிந்திய கம்பெனியும், பிரிட்டன் ஏகாதிபத்தியும் நாட்டின் வளங்களை கொள்ளையடித்து சென்றார்கள். ஆனால் தற்போது பல கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய மக்களின் பணத்தை, உழைப்பை, நாட்டின் வளத்தை சட்டபூர்வமாகவே கொள்ளையடித்து செல்கின்றனர். இந்த மறுகாலனியாதிக்க கொள்ளையை வளர்ச்சி, என்ற பெயரில் மூடிமறைக்கிறார்கள் ஆளும் வர்க்க கும்பல்கள்.
- தாமிரபரணி