ஜெய்ப்பூர் ரயிலில் காவி பாசிஸ்டின் தாக்குதல் : சிறுபான்மையினர் படுகொலையும், பெரும்பான்மையினர் மௌனமும்.

2015ல் முகமது அக்லக்கை படுகொலை செய்த போது, தங்களை நியாயப்படுத்திக்கொள்ள காவி பாசிஸ்டுகளுக்கு மாட்டுக்கறி என்ற காரணமாவது தேவைப்பட்டது. ஆனால் இன்று, “நீ முஸ்லீம் என்ற காரணம் மட்டுமே போதும், உன்னைக் கொலை செய்ய” எனக் காவி வெறியர்கள் கூறும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

பாபரின் பரம்பரையே பாகிஸ்தானுக்கு ஓடுகிறாயா? சவக்குழிக்கு செல்கிறாயா? ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ ‘உயிர் மேல் ஆசையிருந்தால்’ ஜெய் ஸ்ரீராம் என முழங்கு! ராம பக்தனாக மாறு! என்ற தனது மதவெறி கோஷங்களைக் கொண்டு தினமும் நாட்டில் பல கலவரங்களை உருவாக்கி வருகிறது காவி கும்பல்.

இந்த கொலை வெறி கோஷங்கள், பாசிஸ்டுகளின், மதக்கலவரங்களை தூண்டுவது  என்ற  யுக்தியை தாண்டி, பொது இடங்களில் அப்பாவி முஸ்லிம் மக்களை சுட்டுக் கொலை செய்யும் அளவிற்கு தற்போது வளர்ந்து விட்டிருக்கிறது.  

வரலாறு காணாத அளவுக்கு நாட்டில் காவி பாசிசம் மூர்க்கமாகி வருகிறது என்பதற்கு  அன்றாடம் நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் சாட்சியாக உள்ளன. கிரிமினல்கள், பொறுக்கிகள் மட்டுமில்லை, துப்பாக்கி ஏந்திய போலீசும் கூட காட்டுமிராண்டிகளாக காவி பாசிசத்தை  விரைவுப் படுத்த  கிளம்பி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட காட்டுமிராண்டித்தனமான ஒரு செயல்தான் சமீபத்தில் மும்பை – ஜெய்ப்பூர் இரயிலில் நடந்திருக்கின்றது.

இரயில்வே கான்ஸ்டபிளான சேத்தன் சிங் என்ற  இந்து வெறி மிருகம், ஜூலை 31ம் தேதி அதிகாலை மும்பை – ஜெய்ப்பூர் இரயிலில் பயணம் செய்த போது,  தனது துப்பாக்கியால், பழங்குடியின சமூகத்தை சேர்ந்த தன் மூத்த போலீசு அதிகாரியான ஏ.எஸ்.ஐ திகாராம் மீனாவை சுட்டுக் கொன்றிருக்கிறான். பின்னர் அதே இரயில்பெட்டியில் பயணித்த முஸ்லீம் மதத்தை சார்ந்த அப்துல் காதர்பாய் பன்புர்லாவின் என்பவரின் தாடி மற்றும் அவரின் மத உடை அடையாளத்தை வைத்து அவரை சரமாரியாகச் சுட்டு கொன்றிருக்கிறான்.

இதன் பின்பு நான்கு இரயில் பெட்டிகளின் வழியாக நடந்து சென்று இன்னொரு முஸ்லீமான சையது செய்புல்லா என்பவரை அடையாளம் கண்டு அவரை சுட்டுக் கொன்றுள்ளான். அதன் பின்பும் தனது மதவெறி அடங்காமல்  இன்னும் இரண்டு இரயில் பெட்டிகள் கடந்து சென்று அஸ்கர் அப்பாஸ் சேக் எனும் முஸ்லீமை அடையாளம் கண்டு அவரையும் சுட்டுக் கொன்றுள்ளான்.

2015ல் முகமது அக்லக்கை படுகொலை செய்த போது, தங்களை நியாயப்படுத்திக்கொள்ள காவி பாசிஸ்டுகளுக்கு மாட்டுக்கறி என்ற காரணமாவது தேவைப்பட்டது. ஆனால் இன்று, “நீ முஸ்லீம் என்ற காரணம் மட்டுமே போதும், உன்னைக் கொலை செய்ய” எனக் காவி வெறியர்கள் கூறும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது.

இரயில் பயணத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்ட இந்த மூன்று முசுலீம்களில், அஸ்கர்(48) பிகாரை மாநிலத்தை சார்ந்தவர். ஜெய்ப்பூரில் ஒரு வளையல் கடையில் வேலை பார்த்து வந்திருக்கிறார். தன் குடும்பத்தின் வறிய நிலைமை காரணமாகவே மும்பைக்கு வேலை தேடி  அந்த இரயிலில் சென்று கொண்டிருந்தார்.

சையது என்பவர் மும்பை வழியாக ஹைதராபாத் சென்று கொண்டிருந்தார்.  சையத்துக்கு மூன்று பெண்கள், அதில் கடைசி பெண் குழந்தைக்கு, ஆறு மாதம் தான் ஆகிறது. இவர் ஹைதராபாத்தில் ஒரு அலைபேசி கடையில் வேலை பார்த்து தன் குடும்பத்தை நடத்தி வந்துள்ளார்.

மூன்றாவது நபரான அப்துல் காதரின் குடும்பம் துபாயில் இருப்பதால், இந்த மாதம் அங்கு செல்ல அவர் திட்டமிட்டிருந்தார். இதற்கான வேலைகளுக்காக அவர் இரயிலில் பயணம் செய்துள்ளார்.

மூன்று அப்பாவி முசுலீம்களையும், ஒரு இரயில்வே போலீசு அதிகாரியையும் சுட்டுக்கொன்ற பிறகும் இந்த மிருகத்திற்கு மதவெறி அடங்கவில்லை. நால்வரையும் சுட்டுக் கொன்று விட்டு, சுட்டுக்கொல்லப்பட்ட ஒருவரின் பிணத்தின் அருகில் நின்று ‘நீங்கள் வாக்களிக்க விரும்பினால், நீங்கள் இந்தியாவில் வாழ விரும்பினால் மோடிக்கும், யோகிக்கும் வாக்களிக்க வேண்டும்’ என பேசும் காணொளி தற்போது சமூக வலைத் தளங்களில் வெளிவந்துள்ளது.

 

நெஞ்சமே வெடித்து விடும் அளவுக்கு இம்மிருகம் நடத்திய இப்படுகொலைகளை பற்றி ஊடகங்கள், மக்களுக்கு நேர்மையான முறையில் கூறாமல் ஏய்த்து வருகின்றன. இது ஒரு மனநலம் குன்றிய மனிதனின் செயல் என்றும், மத வெறுப்பு இக்கொலைகளுக்கு காரணமல்ல என்றும் மக்களை நம்ப வைக்க கடுமையாக பாடுபடுகின்றன. கொல்லப்பட்டவர்களின் அடையாளங்களை மறைத்து வெறுமனே நான்கு மனிதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என இப்படுகொலைகளின் காரணங்களை மறைக்கின்றன.

மூன்று மூஸ்லிம்களை தேடிச் சென்று கொல்லும் அளவிற்கு துணிந்த இந்த கிரிமினலுக்கு, மத வெறுப்புணர்வு எங்கிருந்து வந்தது என்பதை எந்த ஊடகங்களும் கேள்விக்குள்ளாக்கவில்லை.

சுட்டுக்கொன்றவன் மனநலம் பாதிக்கப்பட்டவன் என்றால் அவன் கையில்  இரயில்வே அதிகாரிகள் ஏன் துப்பாக்கி கொடுத்தனர் என நேர்மையான கேள்வியைக் கூட கேட்க ஊடகங்கள் தயாராக இல்லை

இதுவே கொலையாளி  ஒரு முசுலீமாக இருந்து, அவன் இந்து பயணிகளை சுட்டுக் கொன்றிருந்தால் ஊடகங்களும், காவிக்கும்பலும் இந்நிகழ்வை ஒரு பயங்கரவாத தாக்குதலாகவே சித்தரித்து இருப்பார்கள். பாகிஸ்தானின் மீது சந்தேகம் என காதை கிழிக்கும் பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டிருக்கும்.

மாறாக போலீசு சீருடை அணிந்த ஒரு இந்து, மூன்று முஸ்லீம்களை சுட்டுக்கொன்ற பிறகும் கூட அவனை ஒரு மத பயங்கரவாதி என்று கூட ஊடகங்கள் அழைக்கத் தயாராக இல்லை.

குற்றவாளி, அரசுப் படையின் ஒரு அங்கம். முன்று அப்பாவி முசுலீம்களை சுட்டுக் கொன்றிருக்கிறான். இதற்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். ஆனால் இரயில்வே அமைச்சரிலிருந்து நாட்டின் பிரதமர் வரை இந்த படுகொலைகளுக்கு வருத்தமோ, கொல்லப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலோ இதுவரை கூறவில்லை.

டில்லியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக போராடியவர்களை, அவர்களின் ஆடைகளை வைத்து அடையாளம் காணலாம் என காவி கும்பலுக்கு கற்றுக் கொடுத்த மோடி, இக்கொலைகளை பற்றி ஒரு போதும் பேசப் போவதில்லை.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட், பிரான்சில் நகேல் மெர்ஜொக் என சிறுபான்மையினர் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அதனைக் கண்டித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய போராட்டங்களை அந்நாடுகள் எதிர்கொண்டன.

ஆனால் அவற்றை ஒத்த, இந்தப் படுகொலையானது, இந்திய மக்களின் மனதில் அதிர்வுகளை ஏற்படுத்திய போதிலும், இதனைக் கண்டித்து சிறிய அளவில் கூட போராட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. அந்த அளவிற்கு சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஒரு அன்றாட நிகழ்வாகச் சாதாரணமாகக் கடந்து செல்லும் மனநிலையை நோக்கி மக்களை காவி பாசிஸ்டுகள் நகர்த்தி வருகின்றனர்.

பாசிசத்தின் வெற்றி என்பது அதற்காக துப்பாக்கி தூக்க தயாராக இருக்கும் சில ஆயிரம் மதவெறியர்களை நம்பி அல்ல, இது போன்ற மதவெறிப் படுகொலைகளைப் பற்றிக் கவலைப்படாமல், கடந்து செல்லும் கோடிக்கணக்கானவர்களது மௌனத்தில்தான் இருக்கிறது. அந்த மௌனத்தைக் கலைக்க வேண்டுமானால், காவி பாசிஸ்டுகள் சிறுபான்மையினருக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்தமாக இந்நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் எதிரானவர்கள் என அம்பலப்படுத்தும் நமது குரல் அவர்களைச் சென்றடைய வேண்டும்.

  • சந்திரன்

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன