தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சனைகளுக்கு துரும்பையும் அசைக்காத பாஜகவும் அதன் மாநிலத் தலைவர் அண்ணாமலையும், திமுக மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை மட்டும் பயன்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளனர். அமலாக்கத்துறையையும், வருமான வரித்துறையையும் பயன்படுத்தி அடுத்தடுத்து திமுக அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்திவருவதுடன், அதையே மையமாக வைத்து மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய பாத யாத்திரை கிளம்பிவிட்டனர். பலகோடி ருபாய் செலவில் செய்தி ஊடகங்களின் நேரடி ஒளிபரப்புடன், சினிமா கழிசடை கதாநாயகனின் புதுப்பட விளம்பரம் போல அண்ணாமலைக்கு நாயக பிம்பம் கட்டும் வேலை ஜரூராக நடைபெற்று வருகிறது.
காவி பாசிஸ்டுகள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஒரே மாதிரியான தந்திரத்தை எல்லா இடங்களிலும் பயன்படுத்துவதில்லை. தமிழகத்திற்கு ரெய்டும், பாதயாத்திரையும் என்றால் வடமாநிலங்களுக்கு கலவரங்கள். சங்கிகள் நடத்திய மதவெறி ஊர்வலம் கலவரமாக மாறி தற்போது ஹரியானா மாநிலம் முழுவதையும் பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. திங்களன்று தொடங்கிய கலவரம் அங்கே இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஹரியானா கலவரத்தில் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த இரண்டு போலீசார், உட்பட இதுவரை ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குருகிராம் பகுதியில் 19 வயது இமாம் ஒருவர் இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காக வழிபாடு நடத்திக் கொண்டிருந்த போதே கலவரக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளார். இந்தக் கலவரத்தில் இதுவரை நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். பலநூறு வாகனங்கள் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் மேவாட் மாவட்டம் முழுவதும் போலீசுப் படைகள் குவிக்கப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பிரிஜ் மண்டல் ஜலாபிஷேக்’ என்ற பெயரில் காவி பாசிச அமைப்புகளான விஷ்வ ஹிந்து பரிஷத்தும், பஜ்ரங்க தளமும், ஹரியானாவின் குருகிராம் அடுத்துள்ள நுஹ் பகுதியில் ஒரு ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஊர்வலம் மத ஊர்வலமாக இல்லாமல் மதவெறியைத் தூண்டும், காவி பாசிஸ்டுகளின் அரசியல் ஊர்வலமாக நடத்தப்பட்டு வருகிறது.
பிட்டு பஜ்ரங்கி, மோனு மானேசர்
இந்த ஊர்வலம் நடப்பதற்கு பல நாட்களுக்கு முன்பிருந்தே சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் விஷச் பிரச்சாரம் காவிக் கும்பலால் நடத்தப்பட்டுள்ளது. பிட்டு பஜ்ரங்கி என்ற காவி வெறியன் மதவெறியைக் கக்கும் காணொளியில் இந்த ஊர்வலத்தில் தான் கலந்து கொள்ளப் போவதாகவும் துணிவிருந்தால் தடுத்துப் பாருங்கள் எனவும் சவால் விட்டுள்ளான். சவால் விட்டதோடு ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்புச் செய்து தன்னை தடுக்க யாருக்கும் துணிவில்லை என தொடர்ந்து வன்முறையைத் தூண்டி விட்டுள்ளான்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பசு பாதுகாவலர் என்ற பெயரில் இஸ்லாமியர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் மோனு மானேசர் என்ற காவி வெறியனும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளான். பசுக்களை கொன்றதாக கூறி இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த நசீர்-ஜுனைத் என்ற இருவரைப் படுகொலை செய்த வழக்கின் முதல் குற்றவாளியான இந்த மோனு மானேசர், தலைமறைவாக இருந்து கொண்டு ஊர்வலத்தில் கலந்து கொள்ள போவதாக வீடியோ வெளியிட்டது இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. மோனு மானேசர் தங்கள் பகுதிக்கு வரக்கூடாது என பல இஸ்லாமிய அமைப்புகள் சமூக வலைத்தளத்தில் அறிவித்திருக்கின்றன.
பிட்டு பஜ்ரங்கியும், மோனு மானேசரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டால் நிச்சயமாக பிரச்சனையாகும் என்பது தெரிந்திருந்தும், ஹரியான மாநில அரசும், மேவாட் மாவட்ட நிர்வாகமும் அவர்களைத் தடுத்து கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துள்ளனர்.
வாள், அரிவாள், துப்பாக்கி என ஆயுதங்களை ஏந்திக் கொண்டு, இஸ்லாமிய வெறுப்பு கோசங்களுடன், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கெட்லாமோட் பகுதியை ஊர்வலம் வந்தடைந்த போது, மோனு மானேசர் ஊர்வலத்தில் கலந்து கொண்டுள்ளதாக தகவல் பரவியதால் அங்கிருந்தவர்களால் ஊர்வலம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து இரு தரபிலும் மாறி மாறித் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்துள்ளனர். கெட்லாமோட் பகுதியில் மட்டும் 3 மணி நேரம் இந்தச் சண்டை நடந்துள்ளது. கலவரக்காரர்களுக்கு பயந்து ஊர்வலத்தில் வந்த பலர் அருகிலிருந்த கோவிலில் தஞ்சமடைந்த போது, அவர்கள் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக போலிச் செய்தியைப் பரப்பி மற்ற பகுதிகளில் கலவரத்தைத் தூண்டியுள்ளனர்.
இதுவரை 100க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டு நிலமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டாலும், நீறு பூத்த நெருப்பாக கலவர நெருப்பு மீண்டும் வெடிக்க காத்திருக்கிறது.
அண்ணாமலையும் மோனு மானேசரும் காவி பாசிசத்தின் இரண்டு முகங்கள். இன்றைக்கு “என் மண் என் மக்கள்” என சைவப் புலியாக நாடகமாடிக் கொண்டிருக்கும் காவி பாசிஸ்டுகள் வாய்ப்புக் கிடைத்தால் நாளை தமிழகத்தையும் கலவரக் காடாக மாற்றிவிடுவார்கள்.
- அன்பு