மின்துறை கார்ப்பரேட்டுக்கு!
கட்டண உயர்வு மக்களுக்கு!

மக்களின் மீதான மறுகாலனியாக்கப் போரை முறியடிப்போம்!

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
சிறுகுறு வணிகர்களே, உற்பத்தியாளர்களே!

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பெட்ரோல்-டீசல்-கேஸ் விலை உயர்வு என பத்தாண்டுகளாக பாசிச மோடி அரசு தொடுத்துவரும் தாக்குதல்களால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் உழன்று வருகின்றனர். இந்நிலையில் மின்சார சட்டத் திருத்த மசோதா 2022 என்ற பெயரில் மின்துறையை மொத்தமாக தனியாருக்குத் தாரைவார்த்து, இலவச, மானிய மின்சாரத்தையும் ஒழித்துக்கட்டி நமது வாழ்வை மரணக்குழியில் தள்ளிவிடத் துடிக்கிறது, பாசிச மோடி அரசு.

தனியார்-கார்ப்பரேட்டுகளையும் போட்டி என்ற பெயரில் மின்விநியோகத்தில் ஈடுபட திறந்துவிட்டுள்ள இச்சட்டத் திருத்தமானது, ஆயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்கள், தொழிலாளர்களின் வியர்வையாலும் இரத்தத்தாலும் உருவாக்கப்பட்டுள்ள மின் கட்டமைப்புகளை  கார்ப்பரேட்டுகள் நோகாமல் (BSNL-ஐப் போல) அபகரித்துக் கொள்ள வழிவகை செய்துள்ளது.

கார்ப்பரேட்டுகளிடம் மின்கொள்முதல் செய்துவரும் மாநில அரசுகள் (மாநில மின்வாரியங்கள்) தேர்தலுக்கு அஞ்சி மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்கி வருகின்றன. இனி அதற்கும் ஆப்பு வைக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. வீட்டு இணைப்புகள், கிராமப்புறங்கள், மலைவாழ் மக்களுக்கு மலிவு விலையிலும் விவசாயம், கைத்தறி, விசைத்தறிகளுக்கு மானியமாகவும் வழங்கப்படும் மின்சாரத்தை “அறிவுப்பூர்வமற்றது” என்று கூறி “படிப்படியாக ஒழித்துக் கட்டிவிட” நேரடியாகவே இச்சட்டத் திருத்தத்தின் பிரிவுகள் 86, 61 பரிந்துரைக்கிறது. அவர்களுக்கும் சந்தை விலையில்தான் மின்சாரத்தை விற்க வேண்டுமென்கிறது.

எளிமையாகக் கூறினால், முன்பு நாம் ரூ.50-க்கு மாதாந்திரம் ரீசார்ஜ் செய்துவந்தோம். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஒழிக்கப்பட்ட பின் ஏர்டெலும் ஜியோவும் இன்று ரூ.300-ஐ நம்மிடமிருந்து கொள்ளையடிக்கின்றன. அதைப்போல மின்விநியோகம் கார்ப்பரேட்டுகள் பிடியில் செல்லும்போது மின்கட்டணமும் பலமடங்கு உயரும்.

இவ்வாறு கார்ப்பரேட்டுகள் பகற்கொள்ளையடிப்பதற்காகவே மின்பயன்பாட்டைத் துல்லியமாக அளவிடும் ஸ்மார்ட் மீட்டர்களை நாடுமுழுவதும் 2025-க்குள் பொருத்த மோடி அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை 1.26 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முதற்கட்டமாக இதன் மூலம், மக்கள் அதிகம் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நேரங்களுக்கு (காலை 6-10, மாலை 6-10) சாதாரண விலையை விட கூடுதல் கட்டணத்தை நிர்ணயிக்கப் போவதாக மோடி அரசு அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் கார்ப்பரேட்டுகள் ரீசார்ஜ் முறையில் மின்சாரத்தை விற்று பகற்கொள்ளையடிக்கப் போகிறார்கள்.

மேலும், மின்கட்டணத்தை உயர்த்தவும், மானியங்களை வெட்டவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் எல்லா மாநில அரசுகளையும் நிர்ப்பந்தித்து வருகிறது. 2022-2027 வரை ஆண்டுக்கு ஒருமுறை கட்டண உயர்வை திணிக்கச் சொல்லி தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தமிழக அரசுக்கு உத்திரவிட்டுள்ளது. இதன்படி ஆண்டுக்கொருமுறை மின்கட்டண உயர்வு இனி நம்மீது திணிக்கப்படவுள்ளது.

இதனடிப்படையில்தான் கடந்த செப்டம்பர்-2022 இல் வீடுகள் உள்ளிட்ட அனைத்துப் பயன்பாடுகளுக்குமான மின் கட்டணத்தை சுமார் 32%-க்கும் அதிகமாக தமிழக அரசு உயர்த்தியது. சிறுகுறு தொழிலகங்கள் மின்சாரத்தை நுகர்ந்தாலும் நுகராவிட்டாலும் செலுத்தும் நிலைக்கட்டணத்தையும் (fixed charge) பல மடங்கு உயர்த்தியது. இக்கட்டண உயர்வே உழைக்கும் மக்கள், சிறுகுறு வணிகர்கள், உற்பத்தியாளர்கள் தலையில் இடியாய் வந்திறங்கிய சூழலில், மீண்டும் 2023, ஜூலை 1 முதல் வணிக மற்றும் தொழில் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை யூனிட்டுக்கு 13 முதல் 32 காசுகள் வரை உயர்த்தியுள்ளது.

தமிழ்நாடு அரசின் இப்புதிய கட்டண உயர்வானது வீட்டு இணைப்புகளுக்கு இல்லை என்று கூறுவது முழு உண்மையல்ல. வீடுகளுக்கும் 2.18% மின் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு இத்தொகையை (ரூ.394 கோடி) தமிழக அரசே மின்வாரியத்துக்கு அளிப்பதாகக் கூறியுள்ளது என்பதே உண்மை.

நிர்வாகத் திறனின்மை, ஊழல் போன்றவற்றால் மாநில மின்வாரியங்கள் – குறிப்பாக தமிழக மின்வாரியம் ரூ.1.60 இலட்சம் கோடி –  நட்டத்தில் இயங்குவதாகக் கூறி மின்விநியோகத்தைத் தனியாருக்குத் திறந்துவிடும் இச்சட்டத்திருத்தத்தை அயோக்கியத்தனமாக மோடி அரசு நியாயப்படுத்துகிறது. மேலும், மக்களுக்கு வழங்கும் மானிய, இலவச மின்சாரங்களால் மாநில அரசுகளுக்கு கடும் நிதிஇழப்புகள் ஏற்படுவதாகவும் இவைதான் வாரியங்களின் மேற்படி நட்டம், கடன் சுமைக்குக் காரணமென்றும் அடித்துக் கூறி இவைகளையெல்லாம் குறைக்கவும் வெட்டவும் துடிக்கிறது.

மின்வாரிய நட்டத்திற்கு காரணம்
மானியமா? தனியார்மயமா?

2000-ஆம் ஆண்டு வரை அநேகமாக அனைத்து மாநில மின்வாரியங்களும் இலாபத்தில்தான் இயங்கிவந்தன. நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் பறித்து மீண்டும் காலனியாக்கும் உலகமயம், தனியார்மயம், தாராளமயம் (உ.த.தா) என்ற கொள்கையின்படி அரசின் கையிலிருந்த மின்துறையானது 1990-களில் தனியார்-கார்ப்பரேட்டுகளுக்குத் திறந்துவிடப்பட்டது. அரசால் அனைவருக்கும் மின்சாரத்தை வழங்க முடியாது; தனியாரையும் மூலதனம் போட அனுமதிக்க வேண்டும்; அதனால் மின்சாரத்தின் விலை குறையும் – என்றெல்லாம் அடித்துப் பேசி இக்கட்டுமானச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி அனல், புனல் மின்னுற்பத்திக்கான நிலக்கரி, இயற்கை எரிவாயு அனைத்தும் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு அரசு மின்னுற்பத்தி நிலையங்கள் திட்டமிட்டுச் சீரழிக்கப்பட்டன. 2003-ஆம் ஆண்டுக்குப் பின் வேகமாக வளர்ந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் (Renewable Energy) – சூரியஒளி, காற்றாலை போன்றவை – மூலம் பெறும் மின்னுற்பதி முழுவதும் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டது. அரசின் மின்னுற்பத்தி திட்டமிட்டு கைகழுவப்பட்டதால் தனியார்-கார்ப்பரேட் மின்னுற்பத்தி நிலையங்களிடம் மாநில மின்வாரியங்கள் கையேந்த வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டன. இவைதான் நட்டத்திற்கான அடிப்படைக் காரணமாகும்.

மேலும், இத்தனியார்-கார்ப்பரேட் முதலாளிகள் பகற்கொள்ளையடிக்க ஏதுவாக மின்சாரம் கொள்முதல் செய்யும் ஒப்பந்தங்களை (PPAs) மாநில அரசுகள் போட்டுள்ளன. உதாரணமாக, சந்தையில் தற்போது சூரியஒளி மின்சாரம் ஒருயூனிட் ரூ.3-க்கு கிடைக்கும் நிலையில்,  2015-41 வரை 25 ஆண்டுகளுக்கு ரூ.7-க்கு கொள்முதல் செய்வதாக சென்ற அ.தி.மு.க. ஆட்சியில் அதானியுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் 25 ஆண்டுகளுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1000 கோடி மின்வாரியத்துக்கு இழப்பு ஏற்படும். வேறு வார்த்தையில் கூறினால், ஆண்டொன்றுக்கு ரூ.1000 கோடி அதானி கொள்ளையடிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல தனியாரிடமிருந்து ஒரு யூனிட் கூட மின்சாரம் கொள்முதல் செய்யாவிட்டாலும் நிலைக்கட்டணம் என்ற பெயரில் ஆண்டுதோறும் மாநில மின்வாரியங்கள் பல்லாயிரம் கோடியை இக்கார்ப்பரேட்டுகளுக்கு வாரி இறைக்கின்றன. உதாரணமாக, மத்திய பிரதேச மாநிலம் ரூ.5000 கோடியை ஒரு யூனிட் கூட கொள்முதல் செய்யாமல் ஆண்டுதோறும் தனியாருக்கு கப்பம் கட்டி வருகிறது. இத்தகைய அநீதியான மின் கொள்முதல் ஒப்பந்தங்களிலிருந்து மாநில அரசுகளே நினைத்தாலும் வெளியே வர முடியாது.

இவையன்றி, மின்னுற்பத்திக்கான நிலக்கரி, உபகரணங்கள் போன்றவற்றின் கொள்முதல் விலைகளை மோசடியாக மிகைப்படுத்திக் காட்டுவது (over invoicing) போன்ற கிரிமினல் நடவடிக்கைகளில் அதானி, எஸ்ஸார், டாடா போன்ற நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இதன்மூலம் மட்டும் ரூ.50,000 கோடி கொள்ளையை-ஊழலை செய்துள்ளன. இவையனைத்தும் எரிபொருள் விலையுயர்வு என்ற பெயரில் மக்களின் தலைமீதே கட்டண உயர்வாகச் சுமத்தப்படுகிறது.

இவ்வாறு மறுகாலனியக் கொள்கையின்படி கோடிக்கணக்கான ரூபாய் அரசு மின்வாரியங்களின் பணம் (மக்களின் பணம்) தனியார்-கார்ப்பரேட் முதலாளிகளின் கஜானாவை நிரப்பத் திருப்பிவிடப்பட்டுள்ளது. இவைதான் மாநில மின்வாரியங்களின் இன்றைய நட்டத்திற்கு அடிப்படைக் காரணமாகும். கார்ப்பரேட்டுகள் அடித்த இப்பகற்கொள்ளையை மூடிமறைக்கும் அயோக்கிய சிகாமணிகள்தான் ‘மக்களுக்கு வழங்கும் மானியங்களால்தான் நட்டம் ஏற்படுகிறது’ என்று கதையளக்கிறார்கள்.

40 கோடி மக்கள் இன்றுவரை மின் இணைப்பின்றி இருளில் வாழ்கின்றனர். இதுதான் ‘அனைவருக்கும் மின்சாரம்’ என்ற பெயரில் நுழைந்த தனியார்மயத்தின் 30 ஆண்டு சாதனையின் யோக்கியதை!

எனவே மின்துறை தனியார்மயம் என்பது கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக காவி-கார்ப்பரேட் பாசிசக் கும்பல் மக்கள் மீது தொடுத்திருக்கும் மறுகாலனியாக்கப் போர் என்று சொல்கிறோம். ஓடி ஒளிய இடமேதுமில்லை. ஒரு போரை எப்படி எதிர்கொள்ள வேண்டுமோ அப்படி இதை எதிர்கொண்டே தீர வேண்டும்!

  • மின்துறை கார்ப்பரேட்மயமாவதையும் மின்கட்டணம் உயர்த்தப்படுவதையும் தடுத்து நிறுத்துவோம்!
  • மின்கட்டணத்தை உயர்த்தி ஏழைகளை இருட்டில் தள்ளும் மின்சார சட்டத் திருத்த மசோதா-2022ஐ கிழித்தெறிவோம்!
  • கார்ப்பரேட்டுகளின் பகற்கொள்ளைக்காக ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதை எதிர்த்துப் போராடுவோம்!
  • மின்துறையைத் தனியாருக்குத் தாரைவார்த்து மின்சாரக் கொள்ளைக்கு வழிவிடும் மறுகாலனியாக்கத்தைத் தகர்த்தெறிவோம்!
  • மறுகாலனியாக்கத் தாக்குதலைத் தீவிரப்படுத்திவரும் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! மக்கள் ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!!

 

 

 

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன