பத்திரிகை செய்தி!
30-06-2023
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
2020-ஆம் ஆண்டு ஆசாத் சமாஜ் என்ற கட்சி தொடங்கப்பட்டது. பீம் ஆர்மி என்று அழைக்கப்படும் இக்கட்சி தலைவராக இருந்த சந்திரசேகர் ஆசாத் ராவனை, 28-06-2023 அன்று காவி பாசிச கும்பல் சுட்டுக் கொல்ல முயன்றுள்ளது. அவர் உடனடியாக மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மேற்கு உத்திரபிரதேசத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைக்காக போராடிவருபவர் சந்திரசேகர் ஆசாத் ராவன். அதோடு மட்டுமின்றி பா.ஜ.க.வின் இசுலாமிய விரோத, தலித் விரோத அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவருபவர். குறிப்பாக, டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். இதேபோல் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர்.-க்கு எதிரான போராட்டம் முதலியவை அவர் பங்கெடுத்த குறிப்பிடத்தக்க போராட்டங்கள் ஆகும். இதுபோன்ற தொடர் போராட்டம் காரணமாக இவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொய்வழக்கு போடப்பட்டது. ‘அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இவர் மீது வழக்கு தொடுக்கபட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டு இதிலிருந்து நீதிமன்றம் விடுதலை செய்தது.
நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகளை வேட்டையாடுவது, சி.பி.ஐ., என்.ஐஏ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறை முதலிய அரசு அமைப்புகளை பயன்படுத்தி பொய்வழக்கு போட்டு எதிர்க்கட்சிளை ஒழித்துகட்டுவது, வாய்ப்புக் கிடைத்தால் தன் குண்டர்படையைக் கொண்டு அவர்களைக் கொன்றொழிப்பது என்ற ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க. கும்பலின் பாசிச பயங்கரவாத நடவடிக்கையாகத் தொடர்ந்து வருகிறது. அதுவும் பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் இதுபோன்ற பாசிச பயங்கரவாதத் தாக்குதல்கள் சர்வசாதாரணமாக நடக்கின்றன.
உ.பி.யின் எதிர்க்கட்சியான சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ், ‘உ.பி.யில் காட்டாட்சி நடக்கிறது, அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆதரவோடுதான் இத்துப்பாக்கி சூடு நடந்துள்ளது’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.வை எதிர்த்து மக்கள் பிரநிதிகாளாக போராடும் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை என்பதை புரிந்துகொள்ள முடியும்.
ஜனநாயகம் எங்கள் டி.என்.ஏ.வில் உள்ளது இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்ற புதுக்கதையை அமெரிக்காவில் சமீபத்தில் அவிழ்த்துவிட்டார் மோடி. ஆனால், சந்திரசேகர் ஆசாத் மீதான துப்பாக்கி சூடு போன்று தொடர்ந்து நடந்துவரும் பாசிச பயங்கரவாத வெறியாட்டங்கள்தான் இந்திய ஜனநாயகத்தின் ‘உண்மையான’ யோக்கிதை!
ஜனநாயகத்தை மிச்சமீதியின்றி ஒழித்துக்கட்டிவிடத் துடிக்கும் இத்தகையதொரு பாசிச பயங்கரவாத கும்பலை தேர்தல் மூலம் வீழ்த்த முடியாது. இத்தகைய தாக்குதல்களுக்கெதிராக உறுதியோடு போராடக்கூடிய மக்கள் படையைக் கட்டியமைப்பதன் மூலமே பாசிசத்தை வீழ்த்த முடியும்.
இவண்,
தோழர் முத்துக்குமார்,
மாநில செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 9790138614