இந்தியப் புரட்சிக்கான மக்கள்திரள் வழியை வடிவமைத்தவர்களில் ஒருவரும், மா.அ.க. இ.பொ.க. (மா-லெ)ன் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான, நக்சல்பாரித் தோழர் அன்பழகனின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி (ஜூன் 28, 2023), “இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்தி முறை பற்றிய குறிப்புகள்” என்ற நூலை மா.அ.க. இ.பொ.க.(மா-லெ)ன் தலைமைக் கமிட்டி வெளியிடுகிறது.
முன்னுரையிலிருந்து சில பகுதிகள்….
இந்திய விவசாயத்தில் முதலாளித்துவம் பற்றி
எல்லா மா-லெ குழுக்களும் இந்தியாவை அரை-நிலப்பிரபுத்துவ நாடாக வரையறுத்திருந்த போதிலும், பெரும்பாலான மா-லெ குழுக்கள் இந்த நிலைமையை மாறாத ஒன்றாகவே பார்த்தன, பார்த்து வருகின்றன. அதாவது, இந்தியாவின் அரை-நிலப்பிரபுத்துவ தன்மையில் முதலாளித்துவம் புகுந்து கொண்டிருந்தாலும், அது ஏகாதிபத்தியத்தை தூக்கியெறியாமல் முதலாளித்துவமாக மாறாது என்கிற கருத்துப் போக்கு மா-லெ குழுக்களிடம் பலமாகவே இருக்கிறது. குறிப்பாக, விவாசயத்தில் முதலாளித்துவ வளார்ச்சி என்பது பல்வேறு வழிகளில் வகைகளில் நடைபெறலாம் என்பதை உள்வாங்காமல் இருக்கின்றன.
ஆனால், எமது அமைப்பு 1980களிலேயே, நமது நாடு பிரஷ்யன் – ஜங்கர் பாணியில் முதலாளித்துவ வளர்ச்சியை ஆளும் வர்க்கங்கள் மாற்றிக் கொண்டு வருகின்றனர் என்பதை கூறியது.
“…[இந்திய] விவசாயத்தில் மேலிருந்து கொண்டு வரப்படும் பிரஷ்யன்–ஜங்கர் முறையிலான முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை ஒன்றுதான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த முறைக்கே உரித்தான, மிகமிக மெதுவான, மக்களுக்கு அதிக இன்னல்களைத் தருகின்ற வளர்ச்சி என்ற குணாம்சங்கள் அரைக்காலனி – அரை நிலப்பிரபுத்துவத்திற்கு உரிய பிரத்யேக குணாம்சங்களோடு சேர்த்து, இந்திய விவசாயத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறையானது மிகவும் மெதுவாகவும், இன்னல்கள் தரக்கூடியதாகவும் வளர்கிறது. சிறு நிலச்சுவாந்தார்கள் நிலமிழத்தல், உற்பத்தியாளரை உற்பத்திச் சாதனங்களுடன் இணைக்கும் நீச வடிவம் கொண்ட விளைச்சல்-பங்கீட்டு முறையின் வளர்ச்சி, நிலத்தை காலி செய்தல், தொழில் முயற்சித் தன்மையுள்ள உரிமையாளர்கள்-பண்ணைகள் தோன்றுதல் – ஆகிய இந்த நீண்ட செயல்முறை கிராமப்புறங்களில் இந்தவகை முதலாளித்துவ வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருப்பதைக் காட்டினாலும், மொத்தத்தில் இந்திய விவசாயத்தில் அரை-நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறைகளும், உறவுகளுமே மிகுநிலை பெற்றுள்ளன.” [இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவம், இரண்டாம் பதிப்பு, பக், 191-192]
இன்றைய நிலைமையில் அரை-நிலப்பிரபுத்துவம் என்கிற வரையறை எந்தளவிற்கு நமது நாட்டு நிலைமைகளுக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை ஆராய்வதென்பது புரட்சியின் கட்டத்தை தீர்மானிப்பதற்கு கேந்திரமானதாகும். அவ்வாறு ஆய்வு செய்தபோது, இந்திய விவாசய உற்பத்தில் முதலாளித்துவ உற்பத்திமுறையே மேலோங்கியிருப்பதாக முடிவிற்கு வந்துள்ளோம். குறிப்பாக, பிரஷ்யன்–ஜங்கர் பாணியில் முதலாளித்துவ மாற்றம் நடைபெறாமல், வேறொரு குறிப்பான வகையில் முதலாளித்துவ மாற்றம் நடைபெற்றுள்ளதாக பார்க்கிறோம்.
1980களின் நிலைமையின்படி, இந்திய நாடானது தரகு அதிகார வர்க்கத் தன்மையுடைய முதலாளித்துவ உற்பத்திமுறையை மேலாதிக்கத்திலும் நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையை மிகுநிலையிலும் கொண்ட நாடாக இருந்தது; இதன் பொருள் தேசிய வருமானத்திலோ இந்திய மக்களின் உழைப்புத்துறைக் கட்டுமானத்திலோ, முதலாளித்துவ உற்பத்திமுறை பிரதானமாக, அதிகமான, மிகுநிலை பெற்றிருக்கிறது என்பதல்ல. மாறாக, நிலப்பிரபுத்துவ உற்பத்திமுறையே தேசிய வருமானத்திலும் (40%-க்கும் மேல்) உழைப்புத்துறை கட்டுமானங்களிலும் (70%-க்கும் மேல்) அதிகமானதாக, பிரதானமானதாக மிகுநிலை பெற்றிருந்தது என்பதாகும். இதன் அடிப்படையில்தான் இந்தியாவை அரை-நிலப்பிரபுத்துவ நாடாக வரையறுத்தோம்.
இன்று இந்த நிலைமை வெகுவாக குறைந்துவிட்டது. மொத்த உள்நாட்டு உற்பத்தில் விவசாயத்தின் பங்கானது சுமார் 17% மட்டுமே உள்ளது. கால்நடை வளர்ப்பு, மீன்பிடிப்பு போன்ற துறைகளை கணக்கில் கொள்ளாமல் நிலத்தை உழுது உற்பத்தி செய்யப்படுவதை மட்டும் கணக்கில் கொண்டால் இது இன்னும் குறைவாக இருக்கும்.
மேலும், இந்திய விவசாய உற்பத்தி என்பது நிலத்தை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் சரி அல்லது உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களை அடிப்படையாக வைத்து பார்த்தாலும் சரி, சிறு, குறு, நடுத்தர விவசாய உற்பத்தியே மேலோங்கியிருக்கிறது. பெரும் நிலவுடைமையோ (நிலப்பிரபுத்துவ பெரும் பண்ணையோ அல்லது முதலாளித்துவ பெரும் பண்ணையோ), அதிலிருந்து வரும் விவசாய உற்பத்தி பொருட்களோ விவசாய உற்பத்தியை ஆதிக்கம் செய்யவில்லை. அதாவது, ஜங்கர் நிலப்பிரபுக்கள் இந்திய விவசாய உற்பத்தியில் பிரதான பாத்திரம் ஆற்றவில்லை என்பது மட்டுமல்ல; அப்படிப்பட்ட வர்க்கமே கிட்டதட்ட இல்லை என்கிற நிலைமைதான் உள்ளது.
சிறு, குறு, நடுத்தர விவசாயத்திலும் கூட முதலாளித்துவ சந்தையே எல்லாவற்றையும் தீர்மானிப்பவையாக இருக்கிறது. சிறு, குறு, நடுத்தர விவசாயக் குடும்பங்கள் கூட விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் அல்ல; பிறத் தொழில்கள், கூலி உழைப்பு (சிறு, குறு நிலவுடமைக்கு முற்றிலும் பொருந்தும்) போன்ற விவசாயமல்லாத வருவாய் மூலாதாரங்களையே பிரதானமாக சார்ந்திருக்கின்றன. அதாவது, விவசாயநீக்கமயமாகும் போக்கில், பாட்டாளிமயமாகும் போக்கில் உள்ள வர்க்கமாக இருக்கிறது; வேறுவார்த்தைகளில் சொன்னால், முதலாளித்துவ ரிசர்வ் பட்டாளத்தின் பகுதியாக இருக்கிறது என்பதாகும். ஒட்டுமொத்த கிராமப்புற பொருளாதாரத்தை எடுத்துக்கொண்டால், அவை விவசாயமல்லாத உற்பத்தியை பிரதானமாக கொள்ளுவகையில் சென்றுக் கொண்டிருக்கிறது. தமிழகம் போன்ற சில மாநிலங்களில் கிராமப்புற பொருளாதாரம் பிரதானமாக விவசாயமல்லாத உறப்த்தியைக் கொண்டதாகவே இருக்கிறது.
அதாவது, இந்திய விவசாய உற்பத்தி என்பது நிலப்பிரபுத்துவ கட்டுத்தளைகள் பெரும்பாலும் இல்லாத, முதலாளித்துவ சந்தையுடன் இணைக்கப்பட்ட சுதந்திர விவசாயிகளின் உற்பத்தியை மையமாகக் கொண்டது எனும் வகையில் முதலாளித்துவ உற்பத்திமுறை வகைப்பட்டதாக மாறியுள்ளது என்று கருதுகிறோம். ஆக, 1970களில் இருந்த நிலப்பிரபுக்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையிலான முரண்பாடு மறைந்து, இன்றைய இந்திய விவாசயத்தில் வர்க்க முரண்பாடு என்பது பலத்தரப்பட்ட விவசாய வர்க்கங்களுக்கும் (சிறு, குறு, நடுத்தர விவசாயிகளுக்கும்) தரகு முதலாளிகள்[1], ஏகாதிபத்திய முதலாளிகளுக்குமான முரண்பாடே பிரதானமாமதாக மாறிவிட்டது என்று கருதுகிறோம். மேலும், இந்த நிலைமைகளில் இருந்து பெரும் முதலாளித்துவ நிலவுடைமைகளை உருவாக்கும் திட்டத்துடன் தரகு முதலாளிகளுக்காகவும் ஏகாதிபத்திய முதலாளிகளுக்காகவும் இந்திய அரசு விவசாய உற்பத்தியை மாற்றியமைக்கும் முயற்சியிலும் இருக்கிறது. இவற்றை விளக்கும் வகையில், முதல்நிலையாக ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு விவசாயத் திட்டத்தை பருண்மையாக வகுக்கும்வகையில் ஆய்வை தொடர்ந்து முடிக்க வேண்டியிருக்கிறது.
மேலும், இந்திய பொருளாதாரத்தின் இன்னொரு முக்கிய பகுதியான தொழிற்துறை சேவைத்துறை மற்றும் நிதிமூலதனம் பற்றிய ஆய்வை செய்து முடித்தால்தான் இந்திய சமுதாயப் பொருளாதாரப் படிவத்தைப் பற்றி ஒரு முடிவிற்கு வர முடியும். அந்த வகையில் தொழிற்துறையைப் பற்றிய பருண்மையான ஆய்வை செய்வது கேந்திரமானது.
இதுவல்லாமல், இன்றைய இந்திய நிலைமைகளில் தரகு அதிகாரவர்க்க முதலாளி வர்க்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், வளர்ச்சி பற்றியும், அவர்களுக்கும் சர்வதேச நிதிமூலதனத்திற்கும் இடையே நிலவும் சார்புத்தன்மை பற்றியும், தரகு முதலாளிகள் ஏகபோகமாக வளர்ந்திருக்கிறார்களா, இந்தியா ஒரு பிராந்திய துணை மேல்நிலைவல்லரசு என்ற நிலைப்பாட்டின் இன்றைய பொருத்தப்பாடு, எந்த உற்பத்திமுறை மிகுநிலையும் மேல்நிலையும் பெற்றிருக்கிறது ஆகியவை பற்றியும் ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.
கிராமப்புற பொருளாதாரம், நகர்ப்புற பொருளாதாரம், விவசாய வர்க்கங்கள், தொழில்துறை வர்க்கங்கள், இந்தியாவில் இவற்றின் தனித்தன்மைகள், உலக முதலாளித்துவக் கட்டமைப்பில் இந்தியாவின் இடம் மற்றும் சார்பின் தன்மை ஆகியவற்றை கணித்து இந்தியாவின் சமுதாயப் பொருளாதாரப் படிவத்தை பற்றி முடிவெடுக்க வேண்டியுள்ளது.
000
இந்திய விவசாய உற்பத்தி என்பது முதலாளித்துவமாக மாறிவிட்டது என்பதனை விளக்கும்வகையில் முதல்நிலையாக தொகுக்கப்பட்டுள்ள அறிக்கையையே இப்போது முகவுரையுடன் வெளியிடுகிறோம். ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம், அடிப்படை நிலைப்பாடுகளைப் பொருத்தவரை, பேராயம் அல்லது பீளனத்தால் நிறைவேற்றப்பட்ட பிறகே கட்சியின் முடிவுகளாக அறிவிக்கப்படுவது கம்யூனிஸ்ட் கட்சிகளின் அமைப்புமுறையாகும். இந்திய விவசாய உற்பத்தியின் தன்மை அரை-நிலப்பிரபுத்துவம் அல்ல முதலாளித்துவமேயாகும் என்கிற முடிவுங்கூட அடிப்படை நிலைப்பாடு தொடர்பானதுதான். அந்தவகையில், முழு ஆய்வையும் முடித்து கட்சியின் முடிவுகளாக வெளியிடுவதுதான் பொருத்தமானதாக இருக்கும்.
இருந்தபோதிலும், இது முக்கியமானதொரு முடிவு என்பதாலும், ஏற்கனவே உள்ள மா-லெ இயக்கங்களின் நிலைப்பாடுகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வரக்கூடிய முடிவு என்பதாலும் விவாதத்திற்காக வெளியிடுகிறோம். இந்த அறிக்கை, இன்னும் முழுமைப் பெறவில்லை. இருப்பினும், விவாதத்திலிருந்து பெறப்படும் கருத்துக்கள், விமர்சனங்கள், ஆலோசனைகள் விவசாயத்தில் முதலாளித்துவ வளர்ச்சிக் குறித்து சரியான, முழுமையான சித்திரத்திற்கு வர உதவும் என்கிற நோக்கத்தினால் உந்தப்பட்டு வெளியிடுகிறோம். ஆகையால், இந்த அறிக்கையின் மீதான தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் பகிர்ந்து கொள்ளுமாறு மா-லெ இயக்கத் தோழர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்,
தலைமைக் கமிட்டி
மா.அ.க.,
இ.பொ.க. (மா-லெ), தமிழ்நாடு
[1] இந்திய பெருமுதலாளிகளின் தன்மை, ஏகாதிபத்தியங்களுடனான அவர்களது உறவு ஆகியவை பற்றிய ஆய்வில் இன்னும் முடிவிற்கு வரவில்லை. அதில் மாற்றம் இருந்தால் இந்த வரையறைகளும் மாற்றப்பட வேண்டி வரும்.