காவிகளின் கூடாரமாக மாறிவரும்
அலகாபாத் உயர்நீதிமன்றம்

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகள் உரக்கச் சொல்வது ஒன்றைத்தான் காவி பாசிச சித்தாந்தம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆழமாக வேறூன்றியிருக்கிறது. இந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் யாரும் ஆர்.எஸ்.எஸ். பாஜக போன்ற இயக்கங்களுடன் நேரடித் தொடர்பில் இல்லை. இருந்தும் அவர்கள் காவி பாசிசத்திற்கு சேவை செய்யும் வகையில் செயல்படுகின்றனர்.

 

 

கடந்த ஏப்ரல் மாதம் “நீதித்துறை நியமனங்கள் மற்றும் சீர்திருத்தங்கள்” என்ற தலைப்பில் மூத்த வழக்குரைஞர் பிரசாந்த் பூசன் தனது என்ஜிஓ மூலமாக ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய பேரா. மோகன் கோபால், 2047 க்குள் நீதிமன்றத்தின் துணையோடு ஹிந்து ராஷ்ட்ரத்தினை நிறுவுவதற்காக நீதித்துறைக்குள் ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பல் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அம்பலப்படுத்தி பேசி இருந்தார். [1]

அதில், நீதிபதிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் ஒன்று அரசியலமைப்பு சட்ட நீதிபதிகள் (Constitutionalist judges) இரண்டு இறையியல் நீதிபதிகள் (Theocratic judges). இதில் அரசியலமைப்பு சட்ட நீதிபதிகள் தங்களுடைய வழக்கு விசாரணையையும், தீர்ப்புகளையும் வழங்க அரசியலமைப்பு சட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு செயல்படுபவர்கள். இறையியல் நீதிபதிகள் தங்களுடைய வழக்கு விசாரணையையும், தீர்ப்புகளையும் வழங்க அரசியலமைப்பு சட்டத்தினையும் தாண்டி பழங்கால இலக்கியங்கள், புராணங்கள் வேதங்கள் ஆகியவற்றின் துணையோடு விளக்கம் கொடுத்து செயல்படுபவர்கள் என வகைப்படுத்தி, இறையியல் நீதிபதிகளின் எண்ணிக்கை கடந்த 8 ஆண்டுகளில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

காவி பாசிசத்திற்கு ஆதரவாகச் செயல்படும் இத்தகைய நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க நீதிமன்றங்களில் காவி பாசிச சித்தாந்தத்தின் செல்வாக்கு அதிகரிக்கத் தொடங்குகிறது. இது அவர்கள் அளிக்கின்ற தீர்ப்புகளில் துலக்கமாக வெளிப்படுகிறது. அந்த வகையில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் காவி பாசிசத்தின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதை சமீபத்தில் அங்கே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் நமக்கு தெளிவாக காட்டுகின்றன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பாபர் மசூதி இடிப்பு வழக்கு போன்ற வழக்குகளில் பாசிச சக்திகளுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியுள்ள இந்த நீதிமன்றத்தில், சமீப காலங்களில் மிகச் சாதாரண வழக்குகளில் கூட ஆர்.எஸ்.எஸ். தொண்டனின் மனநிலையில் இருந்து நீதிபதிகள் பலர் தீர்ப்பு வழங்கி வருகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இது போன்று மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை இளைஞர் ஒருவர், திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததை அடுத்து, அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கு அலகாபாத் உயர்நீதி மன்றத்திற்கு வந்தது.

அப்போது இளைஞரின் சார்பில் வாதாடிய வழக்குறைஞர் ‘அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் உள்ளது. இந்த தோஷம் இருப்பவர்களை திருமணம் செய்தால், குடும்பத்துக்கு அழிவு ஏற்படும். அதனால் தான், அந்த பெண்ணை என் கட்சிக்காரர் திருமணம் செய்யவில்லை’ என வாதிட்டார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணின் வழக்கறிஞர், பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இல்லை என்று பதில் வாதத்தை முன்வைத்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிரிஜ் ராஜ் சிங், மே 23-ம் தேதியன்று இரு தரப்பினரும் தங்களின் ஜாதகத்தை 10 நாள்களுக்குள் லக்னோ பல்கலைக்கழக ஜோதிடவியல்துறை தலைவரிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்றும், இதை ஆய்வு செய்து, அந்த பெண்ணுக்கு, செவ்வாய் தோஷம் உள்ளதா, இல்லையா எனப் பல்கலைக் கழகத்தின் ஜோதிடத்துறை மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சீலிடப்பட்ட உறையில் வைத்து, அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் இருவிரல் பரிசோதனையே பிற்போக்குத்தனமானது என அதைப் புறக்கணித்துவிட்டு, அறிவியல்பூர்வமாக அதைக் கையாண்டு வருகின்றனர். தமிழ்நாட்டில், சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் குழந்தைத் திருமணம் செய்த வழக்கில், இருவிரல் பரிசோதனையை அரசு மேற்கொண்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பொய்யாக குற்றஞ்சாட்டி வருகிறார். ஆனால் அலகாபாத் நீதிமன்றமோ பாலியல் வல்லுறவு வழக்கில் சோதிடம் பார்க்கச் சொல்லும் அதிமுற்போக்குத் தீர்வை முன்வைக்கிறது. நம்மூர் மரத்தடி கட்டப்பஞ்சாயத்தினர் கூட முன்வைக்க தயங்கும் இந்த தீர்ப்பைப் பார்த்துக் கொதித்துப் போன உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் உடனடியாக உச்சநீதிமன்ற அமர்வு ஒன்று அதனை விசாரிக்க வேண்டும் என  உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், இன்னொரு வழக்கில், உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மதரசாவில் பணிபுரிந்த அசாஜ் அஹமத் என்ற ஆசிரியர் அவருடைய நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பளத்தை விடுவிக்கவும், வழக்கமான சம்பளத்தை வழங்கவும் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினேஷ் குமார் சிங், வழக்கிற்கு துளியும் சம்பந்தம் இல்லாமல் மதரசா போன்ற நிறுவனங்களுக்கு மாநில அரசு எப்படி  நிதியளிக்கலாம். இது அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே இது குறித்து மாநில அரசும், மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

அரசுப் பணத்தில் மதரசா நடத்தப்படுவதையும், ஹஜ் பயணத்திற்கு நிதிஉதவி அளிக்கப்படுவதையும் எதிர்த்து காவிக் கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.  அலகாபாத் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு காவிக் கும்பலின் பிரச்சாரத்தை அடியொற்றி அதனை நியாயப்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. 

சம்பளப்பாக்கியைப் பெற்றுத்தரக் கோரிய வழக்கை மதரசாக்களுக்கு எதிராக திருப்பி தீர்ப்பளித்த நீதிபதி தினேஷ் குமார் சிங் இதுபோன்ற தீர்ப்புகளை இதற்கு முன்பும் வழங்கியுள்ளார். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் வெறுப்புப் பேச்சுக்கு எதிராக 2007-ம் ஆண்டு பர்வேஸ் என்பவர் தொடுத்த வழக்கை 16 ஆண்டுகள் இழுத்தடித்து கீழமை நீதிமன்றம் நிராகரித்தது. இதனை எதிர்த்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பர்வேஸ் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் பர்வேஸின் மனு மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதற்கு நீதிபதி தினேஷ் குமார் சிங் கூறிய காரணம் ஒரு ஆர்எஸ்எஸ்-காரனின் சிந்தனைக்கு ஒப்பானதாகும். அதாவது மனுதாரர் பர்வேஸ் 2007-ம் ஆண்டு முதல் இவ்வழக்கிற்காக விடாப்பிடியாகப் போராடி வருகிறார், அவ்வாறு போராடுவதற்கு அவருக்கு பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை விசாரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன் பொருள் இஸ்லாமியர்கள் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இந்துத்துவா தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கிறார்கள் என்ற காவிகளில் பிரச்சாரத்தை தனது தீர்ப்பில் ஒழிவு மறைவின்றி அப்படியே கூறியிருக்கிறார் இந்த உயர்நீதிமன்ற நீதிபதி.

அடுத்ததாக, ஞானவாபி மசூதி குறித்த வழக்கு ஒன்றிலும் சமீபத்தில் இதே போன்றதொரு தீர்ப்பு அலகாபாத் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிலைகளை தினமும் வழிபட அனுமதி கோரி தில்லியைச் சேர்ந்த 5 பெண்கள் சார்பில் ஏற்கெனவே வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரணைக்கு எடுக்க கூடாது என ஞானவாபி மசூதியின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது.  அந்த மனுவை மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[2] 

இதனை எதிர்த்து ஞானவாபி மசூதியின் சார்பில் அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இவ்வழக்கின் தீர்ப்பை நீதிபதி ஜேஜே முனீர் தற்பொழுது வழங்கியுள்ளார். அதில் “… மா ஸ்ரீநகர் கௌரி, விநாயகர், ஹனுமான் மற்றும் பிற தெய்வங்களை வழிபடுவதற்கான உரிமையை அமல்படுத்தக் கோருவது, ஞானவாபி மசூதியின் தன்மையை கோவிலாக மாற்றும் செயல் அல்ல”, என்று கூறி ஞானவாபி மசூதி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்துள்ளார்.

அயோத்தி வழக்கிலும் கூட முதலில் குழந்தை இராமன் சிலையை மசூதிக்குள் வைத்து வழிபாடு நடத்திப் பின்னர் அந்த மசூதியை இடித்து நாடு முழுவதும் கலவரம் நடத்தியது இந்தக் காவிக் கும்பல். ஞானவாபி மசூதியிலும் அதே உத்தியைக் கையாளுகின்றனர். பாசிசக் கும்பலின் திட்டத்திற்கு அலகாபாத் நீதிமன்றம் இந்த தீர்ப்பின் மூலம் சட்டப்பூர்வ அனுமதி அளித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட இத்தீர்ப்புகள் உரக்கச் சொல்வது ஒன்றைத்தான் காவி பாசிச சித்தாந்தம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆழமாக வேறூன்றியிருக்கிறது. இந்த தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகள் யாரும் ஆர்.எஸ்.எஸ். பாஜக போன்ற இயக்கங்களுடன் நேரடித் தொடர்பில் இல்லை. இருந்தும் அவர்கள் காவி பாசிசத்திற்கு சேவை செய்யும் வகையில் செயல்படுகின்றனர். அந்த அளவிற்கு பாசிச சித்தாந்தத்தின் தாக்கம் உத்திரப் பிரதேசத்தில் வழுவாக இருக்கிறது. 

காவி பாசிசம் தன்னுடைய ஆதரவாளர்களைக் கொண்டு அரசுத் துறைகளில் நிரப்புவதோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. அதனையும் தாண்டி அரசுத் துறைகள் மொத்தத்தையும் தனது  சித்தாந்தத்தின் செல்வாக்கின் கீழ் கொண்டுவர தொடர்ந்து வேலை செய்கிறது. தேர்தல் அரசியலுக்கு வெளியே அது உருவாக்கி வைத்திருக்கும் நூற்றுக் கணக்கான அமைப்புகள் மூலம் இதனை அது சாதிக்கிறது. செய்தித்தாள்கள், இணையதளம், சமூக ஊடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள் என எல்லாத் திசையிலும் காவி பாசிசத்தின் பிரச்சாரம் வீச்சாக நடைபெறுகின்றது. இதற்கென கோவில் திருவிழா பூக்கமிட்டி தொடங்கி, கார்ப்பரேட் சாமியார்கள் வரை ஒரு பெரும் படையையே பாசிசம் உருவாக்கி வைத்திருக்கிறது. அதனைக் கொண்டு அலகாபாத் நீதிமன்றம் மட்டுமல்ல், அனைத்து நீதிமன்றங்களையும் காவி பாசிசத்தின் கூடாரமாக மாற்றும் திசையில் அது வேகமாக முன்னேறி வருகின்றது. 

  • மகேஷ்

[1] இது குறித்த செங்கனல் கட்டுரை

[2] இது குறித்த செங்கனல் கட்டுரை.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன