விவசாயிகளின் வருமானத்தை 2022 ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்குவேன் என பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தது மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. ஆனால் இத்தனை ஆண்டுகால மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை. மாறாக விவசாயிகளின் வறுமையும், கடனும் தான் இரட்டிப்பாகியிருக்கிறது. விவசாயம் மூலம் பெறும் வருமானத்தை வைத்து கொண்டு, விவசாயிகள் கண்ணியமாகக் கூட வாழமுடியாமல் திணறுகின்றனர்.
மோடியின் ஆட்சியில் விவசாயிகள் பட்டினியில் பரிதவிக்கிறார்கள். அவர்களின் வறுமை குறைந்தபாடில்லை. இன்னும் அதிகமாகி கொண்டே செல்கிறது. வறட்சியும், இயற்கை சீற்றமும் சேரும் போது விவசாயிகள் கூடுதலாக நொடிந்து போய் விடுகின்றனர்.
அரசின் விவசாய விரோதப் போக்கினால் விவசாயிகள் விவசாயத்தை விட்டு வெளியேறி நகர்ப்புறங்களில் குவிந்து வருவது அதிகரித்து வருகிறதென்றால், மறுபுறம் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தமது வறுமையைப் போக்க, தமது விவசாய நிலங்களில் வேலைப் பார்த்துக் கொண்டே, கூடவே ஏதேதோ உதிரியான வேலைகளில் ஈடுபட்டு அற்ப கூலி பெற்று, தங்களது பிழைப்பை நடத்தி வருகிறார்கள் என்பதை “டிரான்ஸ்பார்மிங் ரூரல் இந்தியா” அறக்கட்டளை என்ற நிறுவனம் தனது ஆய்வு மூலம் சமீபத்தில் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனம், இந்தியாவின் 20 மாநிலங்களில் உள்ள சுமார் 6115 சிறு விவசாயிகளிடம் டிசம்பர் 2022 முதல் பிப்ரவரி 2023 வரை ஆய்வு மேற்கொண்டது. இதில் 84 விழுக்காடு விவசாயிகள் தங்களது விவசாய வருவாய் மூலம் அரைகுறை பட்டினியோடு வாழ்க்கையை நகர்த்துகிறார்கள், பல்வேறு இயற்கை சீற்றம் ஏற்பட்டு பயிர்கள் பாதிக்கப்பட்டாலும், விவசாய நிலங்களை விற்பதற்கு தயாராக இல்லை என்கின்றனர்.
இந்த அறிக்கையில் பங்கு பெற்ற 70 விழுக்காடு சிறுவிவசாயிகள் தங்களது பட்டினியை போக்க விவசாயம் பார்த்துக் கொண்டு கூலி வேலைக்கு போவதாக கூறுகின்றனர். இந்த 70 விழுக்காடில் முக்கால்வாசி விவசாயிகள் வீடு கட்டுமான வேலை, சாலை போடும் வேலை, ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு வேலைக்கு செல்கின்றனர். மீதமுள்ள 18 விழுக்காடு விவசாயிகள் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டு தங்களது வாழ்க்கையை நகர்த்துகின்றனர். கூடுதலாக 16 விழுக்காடு விவசாயிகள், தையல் வேலை, கொத்தனார், தச்சர், எலக்டிரிசியன், கைவினைஞர்கள் மற்றும் பிற சுயதொழில்கள் செய்து தங்களது குடும்பத்தை நடத்தி வருவதாக கூறுகின்றனர்.
கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதாக கூடுதலாக 12 விழுக்காடு விவசாயிகள் தெரிவித்த போதிலும், இதில் சரிவர வருமானம் வருவதில்லை என பத்தில் ஒன்பது விவசாயிகள் தெரிவிக்கின்றனர். நீரில்லாமல் விவசாய நிலங்களே காய்ந்து கிடப்பதால், மாடுகளுக்கு போதிய தீவனம் இல்லை. பெருமுதலாளித்துவ கம்பெனிகள், வறட்சியை சாக்காக வைத்து தீவன விலையை உயர்த்தி வருகின்றன. அநியாய விலை கொடுத்து தீவனத்தை வாங்கி மாடுகளை பராமரிக்க விவசாயிகளுக்கு வசதியில்லை. தீவனத்தை குறைத்தால் மாடுகள் கறக்கும் பாலும் குறைகிறது. இதனால் கால்நடை வளர்ப்பிலும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை.
இந்த ஆய்வில் பங்கு பெற்ற விவசாயிகள், தாங்கள் விவசாயம் மூலம் ஈட்டும் ஆண்டு வருமானம் ரூ 40,000 தான் என்கின்றனர். அதிலும் குறிப்பாக ஆய்வில் பங்கு கொண்ட 50 விழுக்காடு விவசாயிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக தங்களது ஆண்டு வருமானத்தில் எந்த வித முன்னேற்றமும் இல்லை என்கிறார்கள். மோடியின் அண்டப்புளுகான விவசாயிகளின் வருமான இரட்டிப்புக்கு இவ்விவசாயிகளின் தேங்கி நிற்கும் ஆண்டு வருமானமே சாட்சியாக உள்ளது.
மோடி அரசு, விவசாயிகளுக்காக அறிமுகப்படுத்தப்படும் திட்டங்கள் பற்றி பீற்றிக் கொள்கிறது. ஆனால் இவ்விவசாயிகள் அரசு கொண்டு வந்த இடுபொருட்களை வாங்குவதற்கான வசதிகள், கொள்முதல் நிலையங்கள், ஏஜென்சிகளுக்கு விளைபொருட்களை விற்பனை செய்தல் மற்றும் நேரடி பணப் பரிமாற்றத் திட்டம் ஆகியவற்றைப் பற்றி அறிந்திருந்தாலும், இந்த வசதிகள் திட்டங்களை அவர்கள் பயன்படுத்தும் அளவு மிக குறைவு என இவ்வறிக்கை கூறுகிறது.
பி.எம் கிசான் கார்டு பற்றி 68 விழுக்காடு விவசாயிகள் தெரிந்திருந்தாலும் இதன் ஒரு பகுதியான கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தை வெறும் 24 விவசாயிகள் தான் பயன்படுத்துகின்றனர் என இவ்வறிக்கை கூறுகிறது.
சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் தங்களது விவசாய நிலத்தில் அரை குறை பட்டினியோடு வேலை பார்க்கும் விவசாயிகள், தங்களது பிழைப்பை நடத்த பிற வேலைகளை கூலிக்காக, ஓய்வு ஒழிச்ச3லின்றி, விடுமுறை இன்றி பார்த்து வருகின்றனர். இது தான் நாட்டிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் நிலைமை.
ஆனால் விவசாயிகளின் ஓட்டுகளை பெற்று ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் மோடியின் தலைமையிலான கும்பல், கார்ப்பரேட் நலனுக்காகதான் வேலை செய்கிறது ஒருக்காலும் விவசாய நலனில் அக்கறை செலுத்துவதில்லை. இதற்கு அவர்கள் கொண்டு வர முற்பட்ட வேளாண் விரோத சட்டங்களே சாட்சி
தீவிர வறுமையினால் குமுறிக் கொண்டிருக்கும் விவசாயிகள், மோடியின் விவசாயிகளின் இரட்டிப்பு வருமானம் போன்ற பொய் வாக்குறுதிகளை இனியும் நம்பத் தயாராக இல்லை.
- தாமிரபரணி