வேலைநேர சட்டத்திருத்தம்
தொழிலாளர்கள் மீது திணிக்கப்படும் சீன மாடல் சுரண்டல்.

இந்த சட்டதிருத்தங்களுக்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்தும், பல்வேறு தொழிற்சங்கங்களும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளும் தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்ததையடுத்தும், சட்ட திருத்தங்களின் செயலாக்கத்தை நிறுத்தி வைப்பதாக தற்போது முதலமைச்சர் அறிவித்துள்ளார். இது தற்காலிக பின்வாங்குதலே, தொழிலாளர்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையிலான போராட்டத்தில் அரசு என்றைக்கும் முதலாளிகள் சார்பாகவே நின்றிருக்கிறது. மாநில அரசின் சட்டதிருத்தங்கள் பின்னடைவை சந்தித்தாலும், ஒன்றிய அரசின் சட்ட தொகுப்புகளில் ஏற்கெனவே பரிந்துரைக்கப்பட்டுள்ள இதே திருத்தங்கள் நம் மீது கூடிய விரைவில் திணிக்கப்படும்.

தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களில் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணிநேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிக்க அனுமதிக்கும் சட்ட திருத்தத்தை திமுக அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த சட்ட திருத்தம் குறித்து சட்டசபையிலும், பொதுவெளியிலும் பேசிவரும் திமுக அமைச்சர்கள் “இது தொழிற்சாலைகளில் ஒரு நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தும்”, “தொழிலாளர் நலன் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படும்”, “தொழிலாளர் விரும்பினால் மட்டும் 12 மணி நேரம் வேலை செய்யலாம்”, “இந்த சட்டத்தை பயன்படுத்தி விதிமீறல்களில் தொழிற்சாலைகளை இறங்கினால் திமுக அரசு தொழிலாளர்களைப் பாதுகாக்கும்”, என பல விளக்கங்களை அளிக்கின்றனர்.

ஆனால் அவர்கள் இதுவரை பதில் கூறாத கேள்வி ஒன்று இருக்கிறது. இப்போது இந்த சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? இதற்கு நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக பதிலளிக்கும் வகையில் “மின்னணு நிறுவனங்கள் இது போன்ற ஒரு நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்க்கிறார்கள்” என அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் பேசியுள்ளார். அதாவது மின்னணு நிறுவனங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவே இன்றைக்கு இந்தச் சட்டதிருத்தம் கொண்டு வரப்படுகிறது என அமைச்சர் கூறுகிறார்.

இங்கே நெகிழ்வுத் தன்மை என்பது முதலாளிகள் தொழில் தொடங்க வசதி செய்து கொடுப்பது என்று அமைச்சர் பூசி மொழுகுகிறார். ஆனால் அவர்கள் கூறும் நெகிழ்வுத் தன்மை என்பது தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை ஒட்டச்சுரண்டுவது, அதன் மூலம் முதலாளிகளின் லாபத்தை உத்திரவாதப்படுத்துவது. இதற்காகத்தான் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்துவதற்காக நிர்பந்திக்கின்றன.

 

 

தொழிலாளர் சட்டங்களைத் திருத்த வேண்டும் என தமிழக அரசை நிர்பந்திக்கும் அந்த மின்னணு நிறுவனம் எது என்று பார்த்தால், அது பாக்ஸ்கான் நிறுவனம்தான். கடந்த மாதம் கர்நாடக மாநில அரசை நிர்பந்தித்து இதே போன்றதொரு தொழிலாளர் நலச் சட்ட திருத்தத்தை, பாக்ஸ்கான் நிறுவனம், அம்மாநிலத்தில் கொண்டுவந்தது. இது பல்வேறு செய்தி ஊடகங்களில் வெளியாகியுள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் வேலை நேரத்தில் திருத்தம் உள்ளிட்ட பல தொழிலாளர் நலச் சட்ட திருத்தங்களை கொண்டுவர பாக்ஸ்கான் நிறுவனம்தான் பின்னணியில் இருந்து நிர்பந்திக்கிறது.

பாக்ஸ்கான் நிறுவனம் ஏன் தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்த தமிழக அரசை நிர்பந்திக்க வேண்டும்?

உலக அளவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் செல்பேசிகளை உற்பத்தி செய்வதில் முதலிடத்தில் இருப்பது தைவான் நாட்டைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் பெரும்பான்மை உற்பத்தி நிலையங்கள் சீனாவில் இருக்கின்றன. கடந்த மார்ச் மாதம் வெளியான செய்திகளின் அடிப்படையில் பார்த்தால் பாக்ஸ்கான் சீனாவில் இருக்கும் தங்களது தொழிற்சாலைகளைப் படிப்படியாக இந்தியாவிற்கு மாற்றம் செய்து கொண்டு வர திட்டமிட்டுள்ளது தெரிகிறது. இதற்கென கிட்டத்தட்ட 6000 கோடி ருபாய் அளவிற்கு இந்தியாவில் முதலீடு செய்யப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து இந்தியாவிற்கு தனது தொழிற்சாலைகளைக் கொண்டுவர வேண்டும் என்றால் சீனாவில் இருப்பது போல தொழிலாளர்களை வரைமுறையின்றிச் சுரண்டும் வசதி தனக்கு அளிக்கப்பட வேண்டும் என பாக்ஸ்கான் கருதுகிறது.

சீன மாடல் சுரண்டல்

சீனாவின் குவாங்சோ, ஷென்சென் போன்ற நகரங்களில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலைகளில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அங்கே தொழிலாளர்கள் மீதான சுரண்டல் என்பது எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடக்கிறது.

  • சராசரி வேலை நேரம் என்பது 10 முதல் 12 மணி நேரங்கள்.
  • பல நேரங்களில் தொழிலாளர்கள் பகல் இரவு என இரண்டு ஷிப்டிலும் வேலை செய்ய வேண்டியது இருக்கும். கூடுதல் உழைப்புக்கு (Overtime) சம்பளம் கிடையாது.
  • வாரத்திற்கு ஒருநாள், ஞாயிறு விடுமுறை எல்லாம் கிடையாது, மாதத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே விடுமுறை. அதுவும் நிர்வாகம் முடிவு செய்யும் நாட்களில் மட்டுமே விடுமுறை.
  • வேலை நேரத்தில் ஏற்படும் விபத்துக்களில் தொழிலாளி இறந்து போனாலோ அல்லது நிரந்தர ஊனமடைந்தாலோ எவ்வித இழப்பீடும் கிடையாது.
  • ஆலை வளாகத்திற்குள் இருக்கும் சிறிய மருத்துவ நிலையத்தை தாண்டி தொழிலாளர்களுக்கு எவ்வித மருத்துவ உதவியையும் நிர்வாகம் வழங்காது.
  • நிர்வாகம் கொடுக்கும் இடத்தில் தான் தொழிலாளர்கள் தங்க வேண்டும். தொழிற்சாலைகளுக்கு அருகில், அந்தமான் செல்லுலர் சிறைச்சாலையினை ஒத்த குடியிருப்பில், அவர்கள் கொடுக்கும் உணவை உண்டுதான் தொழிலாளர்கள் வாழ வேண்டும்.
  • மிகவும் குறைவான கூலி மட்டுமே கொடுக்கப்படும். சீன நகரங்களில் வாழ்க்கை நடத்த சராசரியாக மாதம் ஒன்றிற்கு 600 டாலர் வரை தேவைப்படும். ஆனால், பாக்ஸ்கான் நிறுவனம் இதில் பாதியைத்தான் கிட்டத்தட்ட 330 டாலரை தனது தொழிலாளர்களுக்கு ஊதியமாக கொடுக்கிறது.
  • அதிலும் கூட உணவு, தங்குமிடம் போன்ற “வசதிகளுக்காக”, கணிசமான தொகையைப் பிடித்துக் கொள்கின்றனர்.
  • மிச்சமுள்ள பணத்தை தொழிலாளர் குடியிருப்புக்கு உள்ளேயே இருக்கும் ஏ.டி.எம்.களைப் பயன்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். தேவையின்றி வெளியே செல்லக் கூடாது.
  • ஆலைக்குள்ளே தொழிலாளர்கள் எப்போதும் கண்காணிப்பிலேயே வாழ்கின்றனர். அவர்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு படைப்பிரிவால் எந்நேரமும் கண்காணிக்கப்படுகிறார்கள்.
  • சக தொழிலாளியிடம் பேசக் கூடாது. மேலாளர்கள், லைன் லீடர்கள், போர்மேன் போன்றோர்கள், தொழிலாளர்களை வேலை நேரத்தின் போது பேச விடாமல் கண்காணிக்கின்றனர். அசெம்பிளி லைனில் மெதுவாக வேலை செய்தால் இவர்கள் கண்டிப்பார்கள்.
  • உணவு இடைவேளையைத் தவிற பணிக்கு இடையே வேறு ஓய்வு நேரம் கிடையாது. தேநீர் இடைவேளை என்ற பேச்சே இல்லை.
  • குறைபாடுள்ள பொருட்களை உற்பத்தி செய்தால் தொழிலாளர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
  • தகுதி மதிப்பீட்டில் ‘D’ grade பெறும் தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்படுவார்கள்.

தொழிலாளர்கள் மீதான பாக்ஸ்கான் நிறுவனத்தின் சுரண்டல் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே போகிறது. இந்தச் சுரண்டலைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தின் குடியிருப்புகளில் இருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். தொழிலாளர்களின் தற்கொலைகளைத் தடுக்க குடியிருப்பு முழுவதையும் கம்பி வேலி போட்டு அடைத்துள்ளது பாக்ஸ்கான் நிர்வாகம்.

 

 

கொரோனா பெருந்தொற்று சீனாவில் பரவிய போது, தொழிலாளர்களின் உயிரை விட லாபம்தான் முக்கியம் என ஆலையை மூட மறுத்து தொழிலாளர்களை வேலை செய்ய நிர்பந்தித்தது பாக்ஸ்கான். அதனை எதிர்த்துப் போராடிய தொழிலாளர்களை ஒடுக்க போலீசையும் துணை இராணுவப் படைகளையும் இறக்கியது சீன அரசு.

இதுதான் பாக்ஸ்கான் முன்னிறுத்தும் சீன மாடல் தொழிலாளர் பாதுகாப்புச் சட்டதிருத்தம். தற்போது திமுகவின் திராவிட மாடல் அரசு கொண்டுவந்துள்ள சட்டதிருத்தங்களை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

  • நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலைக்கு அனுமதி.
  • வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கலாம். (தொழிற்சாலைகள் சட்டம் பிரிவு 51ல் திருத்தம்)
  • ஞாயிறு விடுமுறை தேவையில்லை (மேற்படி சட்டம் பிரிவு 52)
  • வேலைக்கு நடுவே இடைவேளை தேவையில்லை (பிரிவு 55)
  • ஓவர்டைமிற்கு இரட்டிப்பு சம்பளம்தர தேவையில்லை (பிரிவு 59)

இந்த சட்டதிருத்தங்கள் எல்லாம் சீன மாடல் தொழிலாளர் நலச் சட்டங்களை ஒத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. சீன மாடலில் எஞ்சியிருக்கும் சுரண்டல்களை அனுமதிக்கும் வகையில் ஒன்றிய பாஜக அரசு அனைத்து தொழிலாளர் நலச் சட்டங்களையும் தூக்கிவிட்டு 4 வழிகாட்டுதல் தொகுப்புகளைக் கொண்டுவந்திருக்கிறது. அந்த தொகுப்புகளை நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு தனது சட்டங்களைத் திருத்தி வருகிறது. எனவே மற்ற சட்ட திருத்தங்களும் கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கொண்டுவரப்படும்.

இங்கே இன்னும் ஒரு முக்கிய விசயம் இருக்கிறது. சட்டசபையில் பேசும் போது அமைச்சர் தங்கம் தென்னரசு “இந்த நெகிழ்வுத்தன்மையால் அதிக வேலைவாய்ப்புகள் குறிப்பாக பெண்களுக்கு அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.” என்று பேசியிருக்கிறார். இந்தியாவில் உள்ள பாக்ஸ்கான் நிறுவனத்தின் தொழிலாளர்களின் 72% பேர் பெண்கள். பெண் தொழிலாளர்கள் என்றால் சங்கம் சேர மாட்டார்கள், எவ்வித சுரண்டலையும் எதிர்த்துக் கேள்வி கேட்க மாட்டார்கள், ஒப்பீட்டளவில் பெண் தொழிலாளர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தால் போதும், அவர்களை எப்படி வேண்டுமானாலும் சுரண்டலாம் என்ற காரணத்தினால்தான் பாக்ஸ்கான், ஓலா போன்ற நிறுவனங்கள் தங்களது தொழிற்சாலைகள் முழுவதிலும் பெண்களைக் கொண்டு இயக்க விரும்புகின்றன. ஆனால் இதனையே ஏதோ பெரிய சாதனை போல அரசும் ஆளும் வர்க்கமும் சித்தரிக்கின்றன.   

இதில் தொழிற்சாலைகள் விதிமீறினால் திமுக அரசு பார்த்துக் கொண்டிருக்காது என வாய்ச்சவடால் வேறு அடிக்கிறார்கள். ஏற்கெனவே சட்டப்படி உள்ள உரிமைகளையே கூட வழங்க மறுக்கும் தொழிற்சாலைகளின் அடாவடியை எதிர்த்து பல ஆயிரம் தொழிலாளர்கள், தொழிலாளர் ஆணையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் நடையாய் நடந்து கொண்டிருக்கும் சூழலில், இருக்கின்ற சட்டங்களையும், முதலாளிகளுக்குச் சாதகமாக திருத்தினால், அனைத்து தொழிற்சாலைகளும் அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களைச் சுரண்டும் வேலையில் இறங்கும்.

 

 

சட்டமன்றத்தில் அமைச்சர் துரை முருகன் பேசும் போது, 8 மணி நேர வேலை என்பதில் திமுக அரசு நிச்சயம் மாற்றம் செய்யாது என்றும். தொழிலாளர்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் முதலமைச்சர் பார்த்துக் கொள்வார் என்று நம்பிக்கை இருக்கிறது. ஆகவே நீங்களும் அதை  நம்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார். தொழிலாளர் நலனில் திமுக அரசிற்கு இருக்கும் அக்கறையின் இலட்சணம் பாக்ஸ்கான் பெண் தொழிலாளர் போராட்டத்தின் போதே அம்பலப்பட்டுவிட்டது. சக தொழிலாளர்கள் நிர்வாகத்தின் அலட்சியத்தின் காரணமாக பாதிக்கப்பட்டு சாகும் நிலையில் கிடப்பதைக் காணச் சகிக்காது மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுத்த பெண் தொழிலாளர்களை மிரட்டிப் பணிய வைக்க, போலீசு, மாவட்ட நிர்வாகம், அமைச்சர்கள் என அத்தனை பேரையும் இறக்கி பாக்ஸ்கானைப் பாதுகாக்கும் வேலையை திமுக அரசு செய்ததை மறக்க முடியுமா. இவர்கள் தொழிலாளர் நலனைப் பாதுகாப்பதாக கூறுவதைத்தான் நம்ப முடியுமா?

இந்தச் சட்டத்திருத்தம் எல்லா தொழிற்சாலைகளுக்கும் பொருந்தாது ஒரு சில தொழிற்சாலைகளுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்படும் என்று இப்போது கூறுகிறார்கள். ஆனால் இது ஒரு ஏமாற்று வேலை. சட்டதிருத்தம் என்பது தொழிற்சாலைகள் சட்டத்தின் பிரிவுகளில் இருந்து ஒரு தொழிற்சாலைக்கோ, ஒரு தொழிற்பிரிவிற்கோ அல்லது தொழிற்சாலைகளின் குழுவிற்கோ விலக்களிக்க மாநில அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது. எனவே தற்போது ஒரு சில தொழிற்சாலைகளுக்கு மட்டும் விலக்களித்தாலும், பாக்ஸ்கானைத் தொடர்ந்து மற்ற நிறுவனங்களும் தொழிலாளர்களைச் சுரண்டுவதற்கு தங்களையும் அனுமதிக்க வேண்டும் என அரசை நிர்பந்தித்து விலக்கு பெற்றுக் கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

மொத்தத்தில் இந்தச் சட்டதிருத்தம் என்பது பாக்ஸ்கான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் இரத்தத்தை உறிஞ்சிக் குடிக்க வழி செய்யும் திமுக அரசு செய்திருக்கும் தரகு வேலையே அன்றி வேறில்லை. இதனை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும். இல்லையெனில் நாம் போராடிப் பெற்ற சலுகைகள் அனைத்தையும் இழப்பது மட்டுமன்றி, கொலைகார பாக்ஸ்கான் நிறுவனத்தின் ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சீனத் தொழிலாளர்களின் நிலைக்கு நாம் தள்ளப்படுவோம்.

  • அறிவு.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன