12 மணிநேர வேலை. ஆப்பிள்-பாக்ஸ்கானுக்காக கசக்கி பிழியப்படபோகும் தொழிலாளர்கள்!

கர்நாடக மாநில பாஜக அரசு, பாக்ஸ்கான் நிறுவனத்திற்காக செய்துள்ள தொழிற்சாலை சட்டத்திருத்தத்தின் படி தொழிலாளர் வேலை நேரம் 9 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதல் வேலை(over time) நேரம் மூன்று மாதத்திற்கு 75 மணி நேரம் என்று இருந்ததை 145 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் பெண்களை இரவு நேர பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டுள்ளது.

 

 

ஜெனிபர் ஜெயதாஸ் ஆந்திரா மாநில சிரி சிட்டியில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்யும் 21 வயதான இளம் தொழிலாளி. செல்போன் பேட்டரி, ஆடியோ, சிம் கார்டு ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்று பரிசோதிப்பது இவரது வேலை. சிறிதும் ஓய்வில்லாத 8 மணிநேர வேலை முடிந்து வீட்டிற்கு வர ஒண்ணேகால் மணிநேர பயணம் செய்ய வேண்டும். ஏறத்தாழ ஒரு நாளைக்கு 11 மணிநேரம் ஜெனிபர் தன்னுடைய வேலைக்காக செலவிடுகிறார். ஜெனிபரின் மாத சம்பளம் 9000 ரூபாய். இதைக் கொண்டு தன்னுடைய கூரை வீட்டை சரிசெய்துவிட வேண்டும் என்பதும் திருமணத்திற்காக பணம் சேர்க்க வேண்டும் என்பதும் ஜெனிபரின் ஆசை. ஜெனிபரைப் போல ஏறத்தாழ 10000 க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இந்திய பாக்ஸ்கான் தொழிற்சாலையில் வேலை செய்கிறார்கள். பாக்ஸ்கான் தனது இரண்டாவது ஆலையை 2017 ல் சிரிபெரும்புதூரில் தொடங்கியது. தற்போது தனது மூன்றாவது ஆலையை கர்நாடகாவில் ஆரம்பிப்பதாக பாக்ஸ்கான் அறித்துள்ளது. ஆனால் இதற்காக கார்நாடகா மாநிலத் தொழிலாளி வர்க்கத்தினர் குறிப்பாக இளைங்ஞர்கள் கொடுக்கப் போகும் விலை மிக அதிகம்.

பாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் செல்போன்களை உற்பத்தி செய்யதற்கான தொழிற்சாலையை  கர்நாடகா மாநிலத்தில் அமைக்கப்போகிறது. இந்நிறுவனம் கார்நாடகாவில் தொழிற்சாலையை ஆரம்பிக்க அம்மாநில தொழிற்சாலைச் சட்டத்தில் திருத்தங்களை செய்துள்ளது கர்நாடக பாஜக அரசு. ஏற்கனவே இருந்த தொழிற்சாலை சட்டத்தினை திருத்தி தொழிற்சாலை சட்டம் 2023 என்பதை கர்நாடகா அரசு நிறைவேற்றியுள்ளது. அச்சட்டதிருத்தத்தின்படி தொழிலாளர் வேலை நேரம் 9 மணிநேரத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணிநேரம் என்று சொல்லப்பட்டிருந்தாலும் கூடுதல் வேலை நேரம் மூன்று மாதத்திற்கு 75 மணி நேரம் என்று இருந்ததை 145 மணிநேரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 மணி நேரத்திற்கு பிறகே உணவு இடைவேளை என்று மாற்றப்பட்டுள்ளது. மேலும் பெண்களை இரவு நேர பணிக்கு அமர்த்திக்கொள்ளலாம் என்ற திருத்தமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே பெய்ஜிங்க்-வாஷிங்டன் இடையே நடந்து வரும் வர்த்தகப் போரின் விளைவாய் சீனாவிலிருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுகிற சூழலில் இச்சட்டதிருத்தத்தின் மூலம் அந்நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்க வைக்க முடியும் எனவும் இதனால் அந்நியச் செலாவணி பெருகும் எனவும் கதையளக்கிறது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு.

ஆனால் இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டும் என்றால் சீனாவில் இருந்ததைப் போன்றே தொழிலாளர் சட்டங்கள் இந்தியாவில் இருந்தாக வேண்டும் என பாக்ஸ்கான் நிபந்தனை வைத்ததாகவும் இச்சட்டதிருத்தத்திற்காக ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் நிறுவனங்கள் நேரடியாகவே கர்நாடகா பாஜக அரசிடம் லாபி செய்ததாகவும் பத்திரிக்கைகள் கூறுகின்றன.

வேலை நேரத்தை அதிகரித்ததின் மூலம் குறைவான ஊதியத்தில் (ஏறத்தாழ 9 மணிநேரத்திற்கான ஊதியத்தில் அல்லது அதைவிட சிறிது அதிகமாக) முன்னைவிட அதிக அளவிலான உழைப்பை, அதாவது  உற்பத்தியை பெறமுடியும். கூடவே இச்சட்டதிருத்தத்தின் படி வாரத்தில் 4 நாட்கள் வேலை செய்தாலே போதும். தேவை இருந்தால் ஓவர் டைம் வைத்துக்கொள்ளலாம். இதன் மூலம் முதலாளிகள் தங்களது தொழிற்சாலை இயக்கச் செலவுகளை (Operating expenses) குறைத்துக் கொள்ள முடியும். இதன் விளைவாக முதலாளிகளினுடைய லாபம் முன்னைவிட பலமடங்கு அதிகரிக்கும். ஆனால் தொழிலாளியோ நாளென்றுக்கு 15 மணிநேரம் வேலைக்காக ஒதுக்க வேண்டும். இரவு, பகல், குடும்பம், நண்பர்கள், சமூகம் போன்ற எதைப் பற்றியும் அத்தொழிலாளி சிந்திக்கத் தேவையில்லை.. மிக அற்ப கூலியை வாங்கிக் கொண்டு பாக்ஸ்கான் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் ஆப்பிள் சொல்போனைப் பற்றியே வாழ்நாள் முழுமைக்கும் சிந்திக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். மார்க்ஸ் வார்த்தைகளில் சொல்வதென்றால் “நேரம்தான் மனிதனுடைய வளர்ச்சிக்கான பரப்பாகும். சுயேச்சையாகச் செலவழிப்பதற்குரிய நேரம் எவனிடம் இல்லையோ, உண்ணல், உறங்கல், முதலிய வெறும் உடல் தேவைகளுக்கான இடைக்காலம் தவிர எவனுடைய வாழ்நாள் முழுவதும் முதலாளிக்காக உழைப்பதில் மூழ்கிப் போய்விடுகிறதோ, அவன் சுமை மிருகத்திற்கும் கீழானவனாகிறான். அவன் பிறருக்குச் செல்வத்தை உற்பத்தி செய்யும் இயந்திரமாகி, உடல் சிதைந்து, பண்பற்ற உள்ளம் கொண்டவனாகிறான்.”     

பாக்ஸ்கான் நிறுவனத்தின் உழைப்புச் சுரண்டலும் அதன் விதிமீறல்களும் உலகம் அறிந்த விசயம். டிசம்பர் 2021 ல் சிரிபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலையில், நிறுவனத்தின் தங்கும் விடுதி ஒன்றில் வசிக்கும் 250க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள், நஞ்சான உணவை உட்கொண்டதால் பாதிக்கப்பட்டதையடுத்து போராட்டங்கள் தொடங்கின. தொழிற்சாலையின் தங்கும் விடுதியில் ஒரு அறையில் 6 முதல் 30 பெண்கள் வரை தங்கவைக்கப்படுவதாகவும் தொழிலாளர்கள் விடுதில் தரையில் தான் உறங்குவதாகவும் செய்திகள் வெளிவந்தன. கழிவறைகளில் தண்ணீர் இல்லை, உணவில் சில நேரங்களில் புழுக்கள் இருந்ததாகவும் பெண் தொழிலாளர்கள் புகார் அளித்திருந்தனர்.

சீனாவிலுள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் குறைந்த ஊதியம் மற்றும் மன அழுத்தம் நிறைந்த பணிச்சூழலினால் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தொழிற்சாலையிலேயே தற்கொலை செய்துள்ளனர். பாக்ஸ்கானைப் போன்றே ஆப்பிள் செல்போன் தயாரிக்கும் தாய்வானைச் சேர்ந்த நிறுவனமான விஸ்ட்ரானில் (பெங்களுரில் உள்ளது) ஆயிரக்கணக்கான ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் போராட்டங்கள் வெடித்தன. இந்த விதிமீறல்களுக்காக பாக்ஸ்கான் மீதோ அல்லது வெஸ்ட்ரான் மீதோ எந்த நடவடிக்கையும் மத்திய-மாநில அரசுகள் எடுக்கவில்லை. ஆனால் நியாயம் கேட்டு போராடிய தொழிலாளர்களை ஒடுக்கின.

பாக்ஸ்கானின் வளர்ச்சி மிக அபரிமிதமானது. தற்போது மோடி அரசின் சலுகைகளின் உதவியினால் வேதாந்தாவோடு சேர்ந்து சிப் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை குஜராத்தில் ஆரம்பிக்கப் போகிறது. ஆப்பிள்  உலகின் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் ஒன்று. தொழிலாளிகளை ஒட்டச் சுரண்டுவதும் தரகு முதலாளிகள்-பன்னாட்டு தொழிற்கழகங்கள்-நிதியாதிக்க கும்பல்களை ஊக்குவிப்பதுமே ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பலின் தொழிற்கொள்கை. அவர்களைப் பொறுத்தவரை இதுவே தேசபக்தி-தேசமுன்னேறம்.

வேலைநேர அதிகரிப்பு குறித்து மார்க்ஸ் கூறுகையில், “வேலை நாளை உழைப்பவனின் உடல் வலிமை இடங்கொடுக்கும் எல்லை வரையில் நீட்டுவது மூலதனத்தின் நிரந்தரமான போக்காகும். ஏனென்றால் அப்பொழுதுதான் அந்த அளவுக்கு உபரி உழைப்பும் அதன் விளைவாகக் கிடைக்கும் லாபமும் அதிகரிக்கும். மூலதனம் வேலை நாளை நீட்டுவதில் எவ்வளவு அதிகமாக வெற்றி பெறுகிறதோ, அவ்வளவு அதிகமாக அது பிறரின் உழைப்பை அபகரிக்கும்.”

தேசமுன்னேற்றம் என்ற போர்வையில் நிதி மூலதனத்திற்கு தரகு வேலை செய்வதைத்தான் ஆர் எஸ் எஸ்-பாஜக கும்பல் செய்துவருகிறது. இதற்காக தனது இந்துத்துவ வெறியை ஒரு கருவியாகப் பயன்படுத்துகிறது. கர்நாடகா பாஜக அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டதிருத்தத்திற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளன. மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளன. கர்நாடகாவைப் போன்றே தமிழ்நாட்டிலும் சட்டதிருத்தத்தினை கொண்டுவர வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் பாக்ஸ்கான் நிர்வாகம் கோரியுள்ளதாக செய்திகள் வருகின்றன. ‘தொழில் தொடங்குவதற்கான சாதகமான சூழல்’ என்ற காரணத்தைக் கூறி பிற மாநிலங்களும் 12 மணி நேர வேலை நேரம் என்ற சட்டதிருத்தத்தினை கொண்டு வருவார்கள். ஆகையால் தொழிலாளர்களை ஒட்டச் சுரண்டும் இக்கொடுமையான சட்டத்தினை முளையிலேயே வீழ்த்துவது மிக முக்கியமாகும்.

அழகு  

 

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன