மக்களால் புறந்தள்ளப்பட வேண்டியவர்கள் யார்?

மார்க்சியம், உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம், மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பைச் சிதைக்க வேண்டும் எனக் கூறும் தத்துவம். சாதியின் பெயரால் சக மனிதனை அடிமைக்கும் கீழாக அழுத்திவைக்கும் வர்ணாசிரம தர்மம்தான் பாரதிய தர்மம் என்றால் அதனை மார்க்சியம் சிதைக்கவே செய்யும்.

 

 

எதாவதொரு பிரச்சனையைக் கிளப்பிவிட்டு எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக தலைவர்களுடன் சரிக்கு சரியாக போட்டியிடுகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. ஒன்றிய அரசின் ஏஜெண்டாக தமிழ்நாட்டில் வந்தமர்ந்து கொண்டு, காவி பாசிச கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்கு வேலை செய்துவரும் ஆளுநர், வாய் திறந்தாலே தமிழையும் தமிழ்நாட்டு மக்களையும் இழிவுபடுத்தும் கருத்துக்கள் தான் வெளிவருகிறது. இதுவரை தமிழர்களை இழிவுபடுத்தியது போதாதென்று தற்போது உழைக்கும் வர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவத்தை உருவாக்கிய பேராசான் காரல் மார்க்சை இழிவுபடுத்தும் வேலையில் ஆளுநர் இறங்கியுள்ளார்.

ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தீன தயாள் உபாத்யாயா இருக்கை மூலம் உபாத்யாயாவின் நூல் ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடந்த வெளியீட்டு விழாவில் மார்க்சை இழிவுபடுத்திப் பேசியுள்ளார் ரவி.

“கார்ல் மார்க்ஸ் இந்தியாவின் சமூக கோட்பாடுகளைச் சிதைக்க வேண்டும் எனக் கட்டுரை எழுதியிருக்கிறார். கார்ல் மார்க்ஸின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது. இதனால் இன்று மார்க்சின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது” என்று பேசியிருக்கிறார்.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடியான ஜன சங்கத்தை நிறுவியவர்களில் ஒருவரும் அதன் முதல் தலைவரும் இந்து மதவெறி அரசியலுக்கு கொள்கை கோட்பாட்டு முகம் வழங்கியவருமான தீனதயாள் உபாத்யாயாவை உயர்த்திப் பிடிக்க மார்க்சை குறை கூறுகிறார் ஆளுநர்.

இந்தியாவின் சிந்தனை முறை டார்வின், மார்க்ஸ், லிங்கன், ரூசோ, ஆகியோரது கருத்துக்களால் சூழப்பட்டுள்ளது என்றும், மார்க்சையும், ரூசோவையும் படிப்பது காலனிய அடிமைத்தனத்தின் நீட்சி என்றும் கூறும் ரவி அதற்கு மாறாக பாரதிய தர்மத்தைப் படிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

காலனியாதிக்க காலகட்டத்திற்கு முன்பு இந்தியா பார்பனிய கொடுங்கோன்மையின் கீழ் வேத ஸ்மிருதிகளின் ஆதிகத்திக்கத்தின் கீழ் வருணாசிரம தர்மத்தின் அடிப்படையில், சாதிய படிநிலையில் நம் மக்களை ஆழ்த்திவைத்திருந்த பிற்போக்கு சமுதாயமாக இருந்தது.

உலக வரலாற்றில் முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூகங்களில் நிலவிய பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக முதலாளித்துவம் கிளர்ந்தெழுந்த போது விடுதலை, சமஉரிமை, ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்கள் உருவாகின. அதன் தொடர்ச்சியாக ஒட்டுமொத்த சமூகவிடுதலைக்கான தத்துவமாக மார்க்சியம் உருவானது.

காலனியாதிக்க காலகட்டத்தில் இந்திய பிற்போக்கு சமூகத்தின் சாதிய இருக்கங்களின் மேல் தட்டில் ஏற்பட்ட தளர்வுகளின் காரணமாகவும்,  மேற்கத்திய கல்வியின் காரணாமாகவும் மேற்குலகின் இந்த முற்போக்குக் கருத்துக்கள் இந்தியாவிற்குள் வந்தன.

கணவனின் சிதையில் மனைவியைத் தள்ளி கொடூரமாக கொலை செய்த “சதி” மூடத்தனத்திற்கு எதிராகவும், குழந்தைத் திருமண ஒழிப்பு போன்ற கொடூரமான பழக்கங்களுக்கு எதிராகவும் போராடிய. ராஜாராம் மோகன்ராய் போன்ற பல சீர்த்திருத்தவாதிகளை மேற்கத்திய சிந்தனை முறை இந்தியாவிற்குத் தந்தது.  

பிரிட்டன் காலனியாதிக்கத்திடம் டொமினியன் அந்தஸ்து கோரி காந்தியும் காங்கிரசும் மன்றாடிக் கொண்டிருந்த போது, பிரிட்டன் மகாராணியின் விசுவாசமிக்க சேவகனாக சவார்க்கர் அந்தமான் சிறையில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொண்டிருந்த போது, “முழுமையான சுதந்திரமே” தீர்வு, ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும், என முழங்கியதோடு மட்டுமல்லாமல் அதனைக் காங்கிரசே ஏற்றுக் கொள்ளும் படியான நிர்பந்தத்தைத் தோற்றுவித்த, விடுதலைப் போரின் விடிவெள்ளியான பகத் சிங்கை மார்க்சின் தத்துவமே இந்தியாவிற்குத் தந்தது.

முற்போக்கு, ஜனநாயகம், சோசலிசம் போன்ற கருத்துக்கள் ஆங்கிலேயே காலனிய காலகட்டத்தில் இந்தியாவிற்குள் வந்த காரணத்தை மட்டும் வைத்துக் கொண்டு அவற்றை பேசுவதை காலனிய அடிமை மனோபாவம் எனக் கூறிவிட முடியாது. இவையனைத்தும் காலனியாதிக்கத்தால் புகுத்தப்பட்டவை அல்ல. சொல்லப்போனால் காலனியாதிக்கத்திற்கு எதிர் விளைவையே இவை ஏற்படுத்தியிருக்கின்றன.

இவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு 2000 ஆண்டுகளாக நம்மைக் கவ்வியிருந்த பார்ப்பனியக் கொடுங்கோன்மையை பாரதிய தர்மம் என்ற பெயரில் நம்மீது மீண்டும் திணிக்கப் பார்க்கிறார் ஆர்.என்.ரவி.

மார்க்சியம், உலக பாட்டாளிவர்க்கத்தின் விடுதலைக்கான தத்துவம், மனிதனை மனிதன் சுரண்டும் சமூக அமைப்பைச் சிதைக்க வேண்டும் எனக் கூறும் தத்துவம். சாதியின் பெயரால் சக மனிதனை அடிமைக்கும் கீழாக அழுத்திவைக்கும் வர்ணாசிரம தர்மம்தான் பாரதிய தர்மம் என்றால் அதனை மார்க்சியம் சிதைக்கவே செய்யும். கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவைச் சிதைக்கவில்லை, இந்தியாவை பிற்போக்கு இருளில் அழுத்திவைத்திருந்த ஆர்.என்.ரவியின் மூதாதையர்களது சித்தாந்தத்தைத் தான் சிதைக்கிறது.

ஒடுக்குமுறையும், சுரண்டலும் நீடிக்கும் வரை மார்க்சின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கிறது, அதுவரை மார்க்சையும் மார்க்சியத்தையும் புறந்தள்ள முடியாது. அதேசமயம் தனது அகண்ட பாரத இந்துத்வக் கனவை நனவாக்கிடவும், பார்ப்பன-பனியா தரகு முதலாளிகளின் நலன் காத்திடவும், ஒன்றிய அரசைக் கைப்பற்றி அமர்ந்து கொண்டு, பாசிச சர்வாதிகார ஆட்சியை நிறுவத்துடிக்கும், காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் மக்களால் புறந்தள்ளப்படுவதைத் தடுக்க முடியாது.

  • அறிவு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன