நீதிபதி கௌரியின் நியமனம் – அம்பலமாகும் கொலீஜியத்தின் உண்மை முகம்

ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்றக் கொலீஜியம் சமீபத்தில் பரிந்துரைத்தது. இப்பரிந்துரையானது நீதிபதிகள் நியமன விசயத்தில் மோடி அரசாங்கத்தின் அணுகுமுறையையும் கொலீஜியத்தின் ஒளிவுமறைவு தன்மையையும் அம்பலப்படுத்தியுள்ளது. முதன்முறையாக ஓரினச் சேர்க்கையாளர் ஒருவரை நீதிபதியாக்க பரிந்துரைதுத்ததிற்கான காரணங்களை கொலீஜியம் பொதுவெளியில் வெளியிட்டது. ஆனால் சிறுபான்மையினருக்கு எதிரான கருத்துக்களை வெளிப்படையாக பேசிவந்த ஒரு வழக்கறிஞரை  நீதிபதியாக பரிந்துரைத்தற்குப் பலத்த எதிர்ப்பு வந்தபோதும் தான் வழங்கிய ஒப்புதலுக்கான காரணங்களை கொலீஜியம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
“இந்தியாவை பொறுத்த வரையில், இஸ்லாமிய குழுக்களை விட கிறிஸ்தவ குழுக்கள் 
ஆபத்தானவை என்று கூற விரும்புகிறேன். மதமாற்றம், குறிப்பாக லவ் ஜிஹாத் சூழலில் 
இவ்விரண்டு மதங்களும் சமமாக ஆபத்தானவை.

"இஸ்லாமிய பயங்கரவாதம் பச்சை பயங்கரவாதம் என்றால், கிறிஸ்தவ பயங்கரவாதம் 
வெள்ளை பயங்கரவாதம்.

“கிறிஸ்துவப் பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடக்கூடாது. நடராஜப் பெருமானின் 
தோரணையை இயேசு கிறிஸ்துவின் பெயருடன் எவ்வாறு சமன்படுத்த முடியும்?

“மதச்சார்பின்மை, உலகமயமாக்கல், உலகளாவிய சந்தைப்படுத்தல் என்ற பெயரில் 
போலி மதச்சார்பின்மைவாதிகளின் தொடர்ச்சியான ஆட்சியில் இந்த நாட்டின் 
பழம் பெருமைகள் மற்றும் விழுமியங்கள் மீது பொறுமையாகவும், உறுதியாகவும் 
தொடர்ச்சியாகவும் நிகழ்த்தப்பட்ட ஆக்கிரமிப்பானது, அரசியலமைப்பு 
அளித்துள்ள சமத்துவம் என்ற வாக்குறுதியை கேலிக்குள்ளாக்கியுள்ளது.

“கிறிஸ்தவ ஆக்கிரமிப்புகளின் பட்டியல் முடிவடையவில்லை. 'கோயில் இருக்கும் 
இடத்தில் எல்லாம், பல தேவாலயங்கள் இருக்க வேண்டும்';என்பது அவர்களின் 
ஆக்ரோஷமான குறிக்கோள்."

மேற்கண்ட கருத்துக்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க  17 ஜனவரி 2023 அன்று கொலிஜியம் பரிந்துரைத்த வழக்கறிஞர் லட்சுமண சந்திர விக்டோரியா கவுரியின் கருத்துக்கள். கன்னியாகுமரியைச் சேர்ந்த இவர் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) உறுப்பினராவார். கவுரி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவர் 13 ஆண்டுகள் நீதிபதியாக பணியாற்ற முடியும். உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படவும் வாய்ப்புகள் உண்டு.

ஆனால் கௌரியோடு தவிர்த்து கொலீஜியம் பரிந்துரைத்த சௌரப் கிர்பால், ஜான் சத்யன் மற்றும் சோமசேகர் சுந்தரேசன் ஆகிய மூன்று நியமனப் பரிந்துரைகளையும் மோடி அரசு திருப்பி அனுப்பிவிட்டது.

மோடி அரசு மற்றும் கொலீஜியத்தின் அரசியல் சார்புத் தன்மை

நீதிபதிகள் தேர்தெடுப்பதில் வெளிப்படைத் தன்மையின்மை குறித்து கொலீஜியத்தின் மீது விமர்சனங்கள் இருப்பினும், கிர்பால் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் அவரின் துணை சுவிஸ் நாட்டைச் சேர்ந்தவர் என்ற காரணங்களைக் கூறி கிர்பாலை நீதிபதியாக்க ஒன்றிய அரசு மறுத்ததை எதிர்த்து கிர்பாலை நீதிபதியாக்க வேண்டும் என்பதற்கான காரணங்களை வெளிப்படையாக  கொலீஜியம் வெளியிட்டது. 

கொலிஜியத்தின் மூலமான நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை  அக்கண்டபிலிட்டி இல்லை என்று முன்பு குற்றம் சாட்டிய சட்ட அமைச்சர் ரிஜிஜு, கிர்பால் மற்றும் இருவரைப் பற்றி உளவுத்துறை மத்திய அரசுக்கு கொடுத்த விவரங்களை கொலீஜியம் வெளிப்படுத்தியதை “மிகவும் தீவிரமான விஷயம்”, “இதற்கு சரியான நேரத்தில் பதிலளிப்பேன்” என்றார்.

ஒரு நபரின் வேட்புமனுவை பரிசீலிக்கும் போது அரசாங்கமும் கொலீஜியமும் அரசியல் சார்பு மற்றும் கடந்த கால வரலாற்றை கருத்தில் கொள்வதாக சமீபத்திய கொலிஜியம் பதிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்த வழக்கறிஞர் ஜான் சத்யனையும் மோடி அரசு நிராகத்துள்ளது. அதற்கு காரணமாக, “பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும்” இரண்டு சமூக ஊடகப் பதிவுகளைக் காட்டியது.

 

 

ஜான் சத்யனை பற்றி உளவுத் துறை தனது அறிக்கையில், சத்யன் The Quint இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இரண்டாவது பதிவு, 2017-ல் மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவைப் பற்றியதாகும். அந்த  பதிவில் சத்யன் “அரசியல் துரோகத்தால் செய்யப்பட்ட கொலை” என்று குறிப்பிடப்பட்டதாகவும் உளவுத்துறை குறிப்பிட்டுள்ளது.

பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதியாக கொலீஜியம் பரிந்துரைத்த சுந்தரேசனையும் மோடி அரசு நிராகரித்துள்ளது. அவர் ஒரு “மிகவும் சார்புக் கருத்துடைய நபர்” என்றும் “அரசின் முக்கியமான கொள்கைகள், திட்டங்கள் குறித்து சமூக ஊடகங்களில் விமர்சித்துள்ளார்” என்ற காரணங்களை கூறி சுந்தரேசனை நீதிபதியாக்க மோடி அரசு மறுத்துள்ளது. மேலும் நீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ள பல விடயங்கள் குறித்து சுந்தரேசன் சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மோடி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுந்தரேசனின் விசயத்தில் கொலீஜியம் தனது பதிலில், “வேட்பாளரின் சமூக ஊடக வெளிப்பாடுகள் வலுவான கருத்தியல் சார்பு கொண்ட எந்தவொரு அரசியல் கட்சியுடனும் அவரது தொடர்பைக் குறிப்பிடுவதற்கான எந்தப் பொருளும் இல்லை” என்று கூறியது. ஆனால் கௌரியின் விசயத்தில் அவர் சிறுபான்மையினருக்கு எதிராவர் என்பது தெளிவாகத் தெரிகிறது.

கவுரிக்கான பரிந்துரையிலிருந்து, நீதிபதிகள் தேர்ந்தெடுப்பதற்கான கொலிஜியம் அமைப்பில் மாற்றங்கள் நடந்து வருவதாகவேத் தெரிகிறது. இந்தியாவின் சிறுபான்மையினருக்கு எதிரான சார்பு கொண்ட வழக்கறிஞர் ஒருவர் உயர் நீதிமன்ற வேட்பாளராக எப்படி அங்கீகரிக்கப்பட்டார் என்பதற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

பாரபட்சத்தின் கேள்வி

நீதிபதிகள் நியமனத்தில் அரசின் முரண்பாடான அணுகுமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. “அரசாங்கக் கொள்கையை விமர்சிக்கும் சில சமூக ஊடகப் பதிவுகளின் அடிப்படையில் சில வேட்பாளர்களின் தகுதி குறித்த கேள்வி எழுப்புப்படுகிறது, ஆனால் ஆளும் கட்சியுடன் வலுவான அரசியல் சார்பு கொண்ட வழக்கறிஞர்கள் எந்த தடையும் இல்லாமல் நீதிபதியாக முடிகிறது” என்று தி இந்துவின் தலையங்கம் கூறியது(26 ஜனவரி 2023).

உண்மையில், உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பலர், அரசாங்கம், ஆளும் கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்தின் மீதான தனது சார்புநிலையைக் வெளிக்காட்டியுள்ளனர், சிலர் மோடியைப் புகழ்ந்து பேசுகின்றனர்.

உதாரணமாக, உச்ச நீதிமன்ற நீதிபதி எம் ஆர் ஷா பிப்ரவரி 2021 இல் பிரதமரை “மிகவும் பிரபலமான, இனிமையான, துடிப்பான மற்றும் தொலைநோக்கு தலைவர்” என்று அழைத்தார்; 2018 இல் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தபோது, நீதிபதி ஷா மோடியை “மாடல் மற்றும் ஹீரோ” என்று அழைத்தார்.

முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா பிப்ரவரி 2020 இல் மோடியை “உலக அளவில் சிந்திக்கும் மற்றும் உள்நாட்டில் செயல்படும் பல்துறை மேதை(a versatile genius who thinks globally and acts locally)” என்று அழைத்தார்.

பிற நீதிபதிகளும் ஆளும் கட்சி மற்றும் அதன் சித்தாந்தத்தின் மீதான தங்களது சார்புநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். ஜனவரி 2018 இல், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கே டி தாமஸ், அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் ஆயுதப் படைகளுக்குப் பிறகு, பாரதீய ஜனதாவின் சித்தாந்த தலைமையான ஆர்எஸ்எஸ் தான் இந்தியாவைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று கூறினார்.

பாஜக சார்பாளர்களை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் நியமிப்பது இது முதல்முறையல்ல. கௌரிக்கு முன்பே பம்பாய் உயர் நீதிமன்ற நீதிபதி நீலா கோகலே (ஜனவரி 2023) நியமனம் செய்யப்பட்டார். இவர் வெளிப்படையாகவே மோடியை ஆதரிப்பவர்.

 

 

அரசியல்வாதிகளுக்காக குற்ற வழக்குகளில் ஆஜராவதினாலேயே  அவர் நீதிபதியாக இருக்க தகுதியற்றவர் என்று கூறமுடியாது. உதாரணமாக முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு யு லலித் உள்துறை அமைச்சர் அமித்ஷா வுக்காக சொரபுதின் சேக், துளசிராம் பிராஜாபதி கொலைவழக்கில் வாதாடியுள்ளார். ஆனால் நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் தங்களது சார்புகளை வெளிப்படையாக காட்டும்போது இவர்கள் கையாளும் வழக்கில் காட்டப்போகும் பாரபட்சமற்ற அனுகுமுறை மீது கேள்விகள் எழுகின்றன.

மேலும் மோடி அரசு உயர் நீதிமன்றங்களில் தனக்குச் சாதகமான நீதிபதிகளைப் பணியமர்த்தினாலும் பொதுவாக நீதிபதிகளின் நியமனத்தில் தங்களது கை ஓங்கி இருக்கவேண்டும் என்று  விரும்புவதாகவே தோன்றுகிறது.

 

தொடரும்……

 

மொழிபெயர்ப்பு

அழகு, மகேஷ்

https://article-14.com/post/-problem-of-christian-love-jihad-a-future-judge-s-bias-reveals-supreme-court-collegium-s-enduring-opacity-63d73360b1296

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன