உலகப் பணக்காரர்கள் வரிசையில் 3-வது இடத்துக்கு முந்திய மோடியின் கூட்டாளி அதானி ஒரே நாளில் 7-வது இடத்துக்கு வந்துவிட்டார். கடந்த இரண்டு வருடத்தில் அதானி கும்பலின் சொத்து மதிப்பு 891% அளவிற்கு உயர்ந்துள்ளது எப்படி என்பது குறித்து ஒரு ஆழமான ஆய்வை கடந்த இரு வருடங்களாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
இதன் முடிவாக 2023 ஜனவரி 24 இல் வெளியிட்ட தனது ஆய்வறிக்கையில் அதானி கார்ப்பரேட் கும்பல் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவியுள்ளதாக பொதுவெளியில் அறிவித்துள்ளது.
இதன் விளைவு, அதானி பங்குகளின் மதிப்பு 4.17 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மளமளவென சரியத் தொடங்கியது. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் தனது ஆய்வில், “அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறூவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிகளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், இந்நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்களின் போலி நிறுவனங்கள் வரி ஏய்ப்பிலும் பண மோசடியிலும்” ஈடுபட்டுள்ளதைக் கண்டறிந்து அவற்றை அறிக்கையாகத் தயாரித்து பொதுவெளியில் அம்பலப்படுத்தியும்விட்டது.
இவை அனைத்தும் பொய்; உள்நோக்கம் கொண்டது என அதானி கும்பல் அலறியது. சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதற்கு பதிலளித்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் “அதானி குழுமம் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் அறிக்கையில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால், ஒன்றுக்குக்கூட அதானி பதிலளிக்கவில்லை” என்று அதானியின் கையாலாகாத்தனத்தைக் கிழித்துத் தொங்கவிட்டுள்ளது.
மேலும், “அமெரிக்க நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரலாம் வழக்குத் தொடர்ந்தால் அதானியின் முக்கியமான ஆவணங்களைப் பெற்றுத் தருமாறு நீதித் துறையிடம் கோருவோம்” என ‘ராஜா’ அதானியை நகரவிடாமல் ‘செக்’வைத்துவிட்டது.
அதானி கும்பல் தனது நிறுவன பங்குகளின் மதிப்பை போலியாக உயர்த்திக் காட்டி, பெரும் அளவில் கடனை வாங்கி சுருட்டிக் கொள்வதையும் இதன் மூலம் தனது சொத்து மதிப்பையும் இலட்சக்கணக்கான கோடிகளில் உயர்த்திக் கொள்வதையும் அதன் குறுகிய கால வளர்ச்சி நிரூபிக்கும் வண்ணம் உள்ளது.
38 போலி நிறுவனங்களை மொரிசியஸ் போன்ற தீவுகளில் உருவாக்கி வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்றும், இதன் மூலம், தனது முதலீட்டாளர்களை ஏமாற்றியதோடு, இந்திய அரசின் வரி வருவாயையும் அபகரித்துக் கொண்டதன் மூலமும் அதானியின் சொத்து மதிப்பு அபரிமிதமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பாக கரோனா காலகட்டத்தில் அவரது ஒருநாள் வருமானம் 1000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு முன்புவரை அதானியின் சொத்து மதிப்பு 73 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. கொரோனாவுக்குப் பின்பு 11 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதை ஒப்பிடும்போது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.
மேலும் தனது கூட்டாளியான மோடியைப் பயன்படுத்தி LIC ஐ தனது நிறுவன பங்குகளை கோடிக்கணக்கில் வாங்க வைத்திருப்பதும், SBI மூலம் கோடிக்கணக்கில் கடனைக் கொடுக்கவும் பரிந்துரைக்கும்படி செய்திருப்பதும் நடந்திருக்கலாம். இதற்குச் சான்றாக ஆஸ்திரேலிய சுரங்கத்தை ஏலம் எடுக்க அதானிக்கு எந்த நிதி நிறுவனமும் வங்கியும் கடன் கொடுக்க முன்வராத சூழலில் கூட்டாளி மோடிதான் SBI வங்கியில் இருந்து 6000 கோடி ரூபாய் அதானிக்குக் கடன் தருமாறு பரிந்துரைத்ததை மறைக்க முடியாது.
இருப்பினும் இதன் மூலம் மக்களின் சேமிப்புப் பணத்தை குறுக்கு வழியில் அதானி கும்பல் சுருட்டிக் கொண்டதை அவ்வளவு எளிதில் மறைத்துவிட முடியாது. ஆனாலும் நாடறிந்த இந்த மோசடியில் இருந்து தப்பிக்க தனது கூட்டாளியைப் பயன்படுத்தவும் செய்யலாம். கூட்டாளியும் தனது குஜராத் நண்பனை இம்மோசடியில் இருந்து மீட்டெடுக்கவும் செய்யலாம்.
இதில் எது நடந்தாலும் அதானி கும்பலுக்கு இழப்பில்லை. ஆனால், முதலீட்டாளர்களுக்கும் மக்கள் வரிப்பணத்திற்கும் சேமிப்புப் பணத்திற்கும் இழப்பு நிச்சயம்.
அதானி, அம்பானி, டாடா, பிர்லா, சிவ்நாடார் போன்ற கார்ப்பரேட் களவாணிகளினால் தொடரும் வரிஏய்ப்புக்கும் வங்கிக் கொள்ளைக்கும் அந்நிய செலவாணி மோசடிக்கும் பங்குச் சந்தை சூதாட்டத்துக்கும் அபரிமிதமான சுரண்டலுக்கும் இது ஒரு உரைகல்.
இதுபோன்ற மோசடிகள், தில்லுமுல்லுகள், ஏய்ப்புகள் அயோக்கியத்தனங்கள் இன்னும் வெளியில் வராமல் எவ்வளவு உள்ளது என்பது குறித்து வளர்ச்சி நாயகன் மோடிக்கும் கார்ப்பரேட் களவாணிகளுக்கு அடியாள் வேலை செய்யும் அதிகார வர்க்கத்திற்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், கார்ப்பரேட்டுகளின் களவானிகளுக்கு கச்சிதமாகக் கண்ணம் வைத்துத் தருவதே இவர்கள்தான். இதற்கான சிறந்த ஆதாரம், அதானி குழுமத்தின் பங்கு மோசடியால், ஏற்கனவே முதலீடு செய்த ரூ.77 ஆயிரம் கோடியில் ரூ. 23,500 கோடி LIC-க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதன் பங்கு மதிப்பும் ரூ.22500 கோடி சரிந்துள்ளது. இதற்கு பிறகும் அதானி குழுமத்தின் பங்கை ரூ. 300 கோடிக்கு LIC வாங்கப் போவதாக முடிவு செய்துள்ளதென்றால் அதிகார வர்க்கத்தின் அமோக ஆதரவே.
அமைச்சர்கள், அதிகார வர்க்கத்தினர் இவர்களை உலுக்கி (உரித்து) எடுத்தால் கார்ப்பரேட் களவானிகளின் அனைத்து தில்லுமுல்லுகளும், மோசடிகளும், அயோக்கியத் தனங்களும், பங்குச் சந்தை பிராடுகளும் பட்டவர்த்தனமாகும். இதற்கான தகுதியோ அருகதையோ துணிவோ நாடாளுமன்ற பன்றித் தொழுவ அரசியலுக்கு இல்லை. வீதிதோறும் அரங்கேற்றப்படும் மக்கள் எழுச்சி அரசியலுக்கு மட்டுமே உள்ளது.
ஆனால், இவை அரங்கேறாமல் காக்கவே காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளுக்குத் தேவை இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிர பிம்மாஸ்திரம். இந்து என்றால் இந்தி; இந்தி என்றால் இந்து என்பது மதத்தை மொழியோடும், மொழியை மதத்தோடும் இணைத்து பண்பாட்டு பிரதேசமாக இந்தியாவை உருவாக்குவதாகும். இதன் மூலம் வர்க்க அரசியலை, வர்க்கப் போராட்டத்தை, வர்க்க உணர்வை மழுங்கடித்து கார்ப்பரேட்டுகளுக்கு தங்கு தடையற்ற சுரண்டலுக்கும், மோசடிக்கும், அபரிமிதமான கொள்ளைக்கும் பாதை அமைத்துத் தருவதே காவிகளின் இலட்சியம். இவற்றை முறியடிப்பதற்கான போராட்டங்களை முன்னெடுப்பதே நமது இலட்சியம்.
மோகன்