இந்தி – சமஸ்கிருதத் திணிப்பை தகர்த்தெறிவோம்!
இந்து-இந்தி-இந்தியா என்ற இந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும்
காவி-கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்!
என்ற முழக்கத்தின் கீழ் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய தோழமை அமைப்புகள் கடந்த ஒரு மாத காலமாக தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு சென்றன. இதை ஒட்டி காவி கார்ப்பரேட் பாசிச கும்பலின் இந்தி சமஸ்கிருதத் திணிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பல பத்தாயிரம் பிரசுரங்கள் அச்சிடப்பட்டு மாநிலம் முழுவதும் மக்கள் மத்தியில் பரவலாக பிரச்சாரம் செய்யப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு இடங்களில் சுவரெழுத்து, சுவரொட்டி வாயிலாகவும் பிரச்சாரங்கள் கொண்டு செல்லப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஜனவரி 25, அன்று மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தில் திருச்சியில் கருத்தரங்கம் நடைபெற்றது.
முன்னதாக அன்று காலை திருச்சியில் உள்ள மொழிப்போர் தியாகிகளின் நினைவிடத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள், தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோர் நினைவு சமாதிகளுக்கு ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். இதில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருச்சி மண்டல தலைவர் தோழர். சுந்தரராசு அவர்கள் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செயலாளர் தோழர். முத்துக்குமார் அவர்கள் மாலை அணிவித்து மொழிப்போர் தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்து உரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து மாலையில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு புஜதொமு திருச்சி மண்டல தலைவர் தோழர்.சுந்தரராசு அவர்கள் தலைமை தாங்கினார். பின்னர் தலைமை உரையாற்றி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
முதலாவதாக “இந்திய பன்மொழிச் சூழலும் இந்தி ஆதிக்கமும்” என்ற தலைப்பில் ஊடாட்டம் ஆய்வுக்குழு உறுப்பினர் தோழர் தமிழ் காமராசன் அவர்கள் உரையாற்றினார். அதில் தமிழ்நாடு கண்ட மாபெரும் போராட்டம் இந்தி எதிர்ப்பு போராட்டமாகும். இப்போராட்டம் இந்திய அளவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இருந்த போதிலும் ஒன்றியத்தில் இருந்த எல்லா தேசியக் கட்சிகளும் தொடர்ந்து இதனைப் புறக்கணித்தும் வந்துள்ளது. வடக்கே நக்சல்பாரி போராட்டம் என்றால் தெற்கே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் என்று சொன்னால் மிகையாகாது. இந்தியா உலகத்தில் அதிக மொழிகள் (840 மொழிகள்) பேசப்படுகின்ற நிலமாக உள்ளது. இதில் ஒரு கணக்கெடுப்பின்படி 470 மொழிகள் நன்கு வளர்ந்துள்ள மொழிகள் எனக் குறிப்பிடுகிறது. இம்மொழிகளை எல்லாம் புறக்கணித்து விட்டு 8வது அட்டவணையில் குறைந்த அளவே மொழிகளை சேர்த்துள்ளது. குறிப்பாக நீண்ட காலமாக பேசப்படும் பழங்குடியினர் மொழிகளைப் புறக்கணித்துவிட்டு 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தியையும், சமஸ்கிருதத்தையும் சேர்த்துள்ளனர். முகலாயர் ஆட்சிக்கு பிறகு வந்த வெள்ளைக்காரர்கள் ஆட்சியில் உருது என்பது முஸ்லீம்களது மொழி எனவே தனக்கென்று ஒரு மொழி வேண்டும் என்பதற்காக, பார்ப்பனர்கள், இந்துஸ்தானியில் உருது இருப்பதால் அதனைப் புறக்கணித்துவிட்டு தேவநகரி எழுத்து மட்டும் இருக்க வேண்டும் எனக் கருதினர். எனவே 243-வது அட்டவணையில் இந்தியை வளர்க்க சமஸ்கிருதத்தில் இருந்துதான் வார்த்தைகளை எடுக்கவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. 1925-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இந்தி பிரச்சார சபாவை சென்னை மாகாணத்தில் தொடங்கியது. இந்தி அதிக மக்களால் பேசப்படுகின்ற மொழி என்று இன்றளவும் கதையளந்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் அன்று தெலுங்கும், வங்கமும் தான் அதிகம் பேசப்படும் மொழியாக இருந்தது. ஆனால் இந்தியை உயர்த்திப்பிடிக்க இந்திக்கு என்று ஒரு நாள் ‘இந்தி திவாஸ்’ ஒன்றிய அரசால் கடைபிடிக்கப்படுகிறது. பிற செம்மொழிகளுக்கு இப்படி ஒரு நாள் கிடையாது. எனவே உழைக்கும் மக்கள் இதனைப் புரிந்து கொண்டு இதற்கு எதிராகப் போராட வேண்டும். இந்தி எதிர்ப்பு வரலாறு நம்மிடம் இருக்கிறது. எனவே முன்னை விட அதிகமாக இந்தி திணிப்பை எதிர்த்துப் போராட வேண்டும் எனப் பேசினார்.
அவரைத் தொடர்ந்து இரண்டாவதாக, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் இந்தி சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகள் குறித்து மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தோழர் வாலாசா வல்லவன் அவர்கள் உரையாற்றினார். அதில் காங்கிரஸ் கட்சியிலும், கம்யூனிஸ்ட் கட்சியிலும் அதிகளவு பார்ப்பனர்தான் இருந்தார்கள். எனவே மார்க்ஸ்-ஏங்கல்ஸ் கருத்துக்களுக்கு மேலாக இவர்களது கருத்துக்களைத் திணித்தார்கள். பார்ப்பனர்கள் தங்களது பிள்ளைகளை 15 ஆண்டுகளுக்கு வேத பாடசாலைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அம்மாணவர்கள் படித்து முடித்து வரும்பொழுது அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வாங்குகிறார்கள். இந்தி வெறியர் வாஜ்பாய், ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளில் 500 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியை முன்தள்ள ஒன்றிய அரசு எல்லாத் திட்டங்களுக்கும் இந்தியில் பெயர் வைக்கிறது. அவர்கள் 32 பக்கங்களுக்கு இந்துராஷ்டிர சட்டம் என்ற ஒன்றை வைத்துள்ளனர். அதில் முஸ்லீம், கிருத்தவர்களுக்கு வாக்குரிமை கிடையாது, இந்திய அரசியலமைப்பு சட்டம் கிடையாது, கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் ஆகியவற்றில் எந்த முறையில் ஆட்சி நடந்ததோ அந்த வழியில் செயல்படுத்த வேண்டும் எனக் கோருகிறது. இதனை இனியாவது வீழ்த்துவோம் எனப் பேசினார்.
அடுத்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தோழர் முத்துக்குமார் தமிழுக்கு இன்னல்கள் வரும் போதெல்லாம் தமிழ்நாடு அதனை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டிருக்கிறது. அதேபோல் தமிழ் மொழியின் பெருமை குறித்து கவிஞர்கள் பாடியுள்ளனர். இப்படி தமிழகம் மட்டும் அல்ல மேற்கு வங்கத்திலும், கர்நாடகாவிலும் கூட நடைபெற்றுள்ளது.
இன்று மோடி ஆட்சியில் இந்தியை மட்டும் முன்னிறுத்தி அனைத்து திட்டங்களுக்கும் இந்தியிலேயே பெயர் வைக்கின்றனர். இது இந்தி திணிப்பு என்றாலும் சமஸ்கிருத திணிப்பு என்று தான் பார்க்கவேண்டும். இவர்களின் மூதாதையரான கோல்வால்கர் இந்தியாவில் சமஸ்கிருதத்தை நேரடியாக கொண்டுவர முடியாது எனவே அதற்கு இடைக்கட்டமாக இந்தியை ஏற்க செய்து பின்னர் சமஸ்கிருதத்தை கொண்டு வரவேண்டும் என ஞானகங்கை நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் உருது மொழி இருந்துவிடக் கூடாது என்பதற்காக உருது மொழி இஸ்லாமியர்களுடையது, தேவநகரி பார்ப்பனர்களுடையது என்று ஒரு மொழியை நமக்கானது இல்லை என்று மொழியின் மூலம் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தை அன்றே தொடங்கி விட்டனர்.
அதேபோல் செம்மொழிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதியில் அதிகளவு சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படுவதில் இருந்து இன்றளவும் சமஸ்கிருதத்திற்கு கொடுக்கப்படுகின்ற முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இந்தியாவிற்கென்று ஒரு மொழி வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் கூறிவந்துள்ளது. ஆனால் சோஷலிச இரஷ்யாவில் ரஷ்ய மொழியைக் கட்டாயப்படுத்தித் திணிக்க முயன்ற கறுப்பு நூற்றுவர்களுக்கு எதிராகவும், கருப்பு நூற்றுவர்களின் சர்வாதிகார அணுகுமுறைக்கு பதிலாக ‘பண்பட்ட’ அணுகுமுறையுடன் நாட்டின் ஒற்றுமையைக் காரணமாக காட்டி கட்டாய அலுவல் மொழி தேவை என்று வாதிட்ட தாராளவாதிகளுக்கு எதிராகவும் லெனின் எழுதியிருப்பதற்கு மாறாகவே பேசி வந்துள்ளனர்.
அதேபோல் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 341 – 351 சரத்துகள் இந்தி மொழியைப் பற்றி பேசுகிறது. குறிப்பாக 351வது சரத்தில் இந்தியை எப்படி வளர்ப்பது என்பதற்கு சமஸ்கிருதத்தில் இருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்படி அரசியல் சட்டம் சொல்வதை ஏற்றுக் கொண்டுதான் தி.மு.க உட்பட அனைத்து மாநில கட்சிகளும் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துள்ளன எனவே இவர்களால் எப்படி இதனை எதிர்த்து முறியடிக்க முடியும் என்பதனை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
இன்னும் சொல்லவேண்டுமானால் இந்திய அரசியமைப்பு சட்டம் 14, 15, 16 தீண்டாமையை எந்த விதத்திலும் காட்டக் கூடாது எனக் குறிப்பிடுகிறது. ஆனால் மொழியின் அடிப்படையில் காட்டக் கூடாது என்று குறிப்பிடப்பட வில்லை எனவே இச்சட்டத்தை ஏன் கொளுத்தக் கூடாது என்று பெரியார் கூறியுள்ளார்.
இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் ஒரு மோசடி என ஆனைமுத்து எழுதியுள்ளார்.
இப்படி உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை பாதுகாக்கும் பொருட்டு We should save the constitution என்றொரு கூட்டம் இன்று உள்ளது.
எனவே 1947-ல் நடந்தது பார்ப்பனர்களும், வெள்ளையர்களும் கூட்டுச் சேர்ந்து கொண்டு கொள்ளையடிப்பதற்கான ஒரு ஏற்பாடு தான்.
புதுக்கோட்டை வேங்கைவயலில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் தண்ணீரில் மனித மலத்தை கலந்ததைப்போல் அழகிய மொழி, அமுத மொழி தமிழில் சமஸ்கிருதத்தை கலந்துள்ளனர்.
இவை அனைத்திற்கும் அடிப்படை நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பதுதான். குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி பசுவைப் பாதுகாப்பது நாட்டிற்கு மிகவும் நல்லது என்றும் அதன் கோமியத்தைக் குடிப்பது உடல்நலத்திற்கு நல்லது என்றும் பேசியுள்ளார். இப்படி சட்டம் ஒருபுறம் ஜனநாயகத்தை மறுப்பதாகவும், அதனைப் பரிபாலிக்கும் நீதிபதிகள் சனாதனத்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும் இருப்பது மிகவும் ஆபத்தானது ஆகும்.
அடுத்ததாக இச்சட்டங்களை ஒழுங்கான முறையில் மாநில அரசுகள் கடைபிடித்து ஆட்சி நடத்துகிறார்களா என்பதை கண்கானித்து ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்தும் வேலைக்கென்றே நியமிக்கபட்ட ஆளுநருக்கு (Governor) எதிராக அனைத்து கட்சிகளும், அமைப்புகளும் ஆர்.என். ரவி என்ற ஆர்.எஸ்.எஸ் ரவியே வெளியேறு என்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
இங்கிலாந்து நாட்டில் இருந்த அதே முறையை அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகும் கடைபிடித்து வருகின்றனர். அடிமையாட்சியில் பயன்படுத்தப்பட்ட நியமன முறையை சுதந்திர ஆட்சியிலும் பயன்படுத்துவது ஒரு அவலம். எனவே இப்படியான ஒரு பதவி இருப்பதே அவமானம். இதில் வேறொரு ஆளுநரை நியமிக்கச் சொல்லி போராடுவது எப்படி மானத்தை காப்பதாகும்.
இந்திய அரசமைப்பு சட்டப்படியே ஒரு ஆளுநர் என்பவர் தமிழக அமைச்சரவை எழுதிக்கொடுப்பதை வாசிப்பது மட்டுமே அவரது பணியாகும். அதனை திருத்துவதற்கோ மாற்றம் செய்வதற்கோ அவருக்கு உரிமையில்லை. அப்படி சட்டத்திற்கு புறம்பான கருத்து இருந்தால் அதனைக் குறிப்பிட்டு அமைச்சரவைக்கு அனுப்ப வேண்டும். அந்த திருத்தத்திற்கு பிறகு கையொப்பம் இடலாம்.
ஆனால் ஆர்.என். ரவி கையொப்பம் போட்டுவிட்டு அதனை சட்டமன்றத்தில் படிக்கும் போது அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்ற பெயர்களையும், திராவிட மாடல் என்ற வார்த்தையையும் தவிர்த்துவிட்டு பேசியுள்ளார்.
அதேபோல் சனாதனம் தமிழகத்தில் இருந்துதான் உருவானது என்று ஒரு அப்பட்டமான பொய்யை தியாகராஜ உற்சவ விழாவில் பேசியுள்ளார்.
இப்படி தேசிய இனம், மொழி, வள்ளுவர் என அனைத்தையும் இழிவு படுத்துகின்ற வேலையைதான் தொடர்ந்து செய்து வருகிறார்
இப்பதவியை தேசிய இனங்களை ஒடுக்குவதற்கான ஒரு கருவியாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது என்பதே நிதர்சனமாக உள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கிறது. எனவே இச்சட்டங்கள் அனைத்தும் பாகுபாடுகளை கொண்டுள்ளது. உம். அலுவல் மொழியில் வழக்காடலாம் என்றுள்ளது. இதனை ஒன்றிய அரசு பெயரளவில் ஏற்றுக் கொண்டாலும் உச்சநீதி மன்றத்தைக் காரணம் காட்டி அவ்வாறு வழக்காட முடியாத நிலையே தொடர்கிறது. எனவே ஒன்றிய அரசின் நிலைப்பாடு சொல்லொன்றும், செயல்வேறாகவும் இருக்கிறது.
இதற்கு தீர்வாக எல்லா தேசிய இனங்களையும் சமமாக கருத வேண்டும். ஒன்றிய அரசு கூறுவது போல் ஒரு மொழியை மட்டும் அலுவல் மொழியாக வைத்தால் அம்மொழியைப் பேசுகின்ற தேசிய இனம்தான் உயர்ந்தது என்றாகிவிடும். வேலைவாய்ப்பின்மை காரணமாக பிற மாநிலத் தொழிலாளர்கள் நம் மாநிலத்திற்கும், நம் மாநிலத் தொழிலாளர்கள் பிற மாநிலங்களுக்கும் செல்கின்றனர். எனவே மொழிப்பாகுபாடு காட்டும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்-பாஜக கும்பலை விரட்டியடிக்க வேண்டும்.
சோஷலிச ரஷ்யாவில் கட்டாய அலுவல் மொழி தேவையில்லை என்றும், அவ்வாறு இருப்பது தவறு என்றும் கூறி எல்லா தேசிய இனங்களின் மொழிகளையும் அலுவல் மொழியாக கொண்டிருந்தனர். ஒருவேளை பிழைப்புக்காக பிற மொழி தேவையென்றால், தேவைப்படுவோர் படித்துக் கொள்வார்கள். அம்மொழிகளை நாம் திணிக்கத் தேவையில்லை என்றிருக்கிறது. அதிகளவில் பேசப்படுகின்ற இரஷ்ய மொழி உட்பட எந்த மொழியையும் திணிக்கக்கூடாது என்பது தான் ரஷ்யாவின் நிலைப்பாடு. எனவே பிற மொழிகளை இழிவுபடுத்தக் கூடாது அதேசமயம் இந்தியை வெறுக்கக்கூடாது. ஏனென்றால் கணிசமான உழைக்கும் மக்கள் இந்தியைப் பயன்படுத்துகின்றனர்.
ஒன்றிய அரசு நம்மையெல்லாம் ஒரே நாடு, ஒரே மொழி என்ற சுடுகாட்டிற்கு அழைத்துச்செல்கிறது. மொழிகளை அழிக்கிறது, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தை கார்ப்பரேட்டுகளுக்காக மாற்றுகிறது. கொஞ்சநஞ்ச தொழிலாளர் சட்டங்களையும் நான்கு சட்ட தொகுப்புகளாக மாற்றுகிறது, விவசாயத்தை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க விவசாயச் சட்டத்தை கொண்டு வருகிறது, இனிமேல் யாரும் வாழ முடியாது என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது ஜனநாயகம் என்பது துளியும் இல்லை என்று தோழர் முத்துக்குமார் உரையாற்றினார்.
அதையடுத்து கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த, திராவிட சிட்டி இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. அபி கவுடா இந்தியாவின் தெற்கில் கார்நாடகாவில் காவிரி பிரச்சினை, கேரளாவில் முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக ஒற்றுமையின்றி இருக்கிறோம். ஆனால் வடக்கில் இதுபோன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாததால் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதனைப் புரிந்துகொண்டு அனைவரும் ஒன்றினைந்து காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக போராட வேண்டும் என்றும் அதற்கு இந்தி திணிப்பு எதிர்பில் முன்னோடியாகவும், வழிகாட்டியாகவும் உள்ள தமிழ்நாடு இதனை முன்னெடுக்க வேண்டும் எனவும் பேசினார்.
இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – திருச்சி மண்டல பொதுச்செயலாளர் தோழர் ஆ.உத்திராபதி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இடையிடையேயும், இறுதியாகவும் மக்கள் அதிகாரம் இசைக் குழுவினரின் புரட்சிகரக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடல்கள் அனைத்தும் வந்திருந்த தோழர்கள் அனைவருக்கும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்தது.
நிகழ்ச்சியில் அமைப்புத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நண்பர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.