உயர்நீதிமன்ற மொழியாக தமிழை ஏற்க மறுக்கும் உச்ச நீதிமன்றமும் அதன் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஒன்றிய அரசும்

 

 

சமஸ்கிருதம் தேவ பாஷை, அதிலிருந்து தோன்றிய இந்தி தேசிய பாஷை, ஆனால் தமிழ் உட்பட மற்ற இந்திய மொழிகள் அனைத்தும் சூத்திர, நீஷ பாஷைகள் என மொழியிலும் கூட ஏற்றத்தாழ்வு கற்பித்து ஒடுக்கியது பார்ப்பனியம். தமிழ் மொழியில் பேசினால் தீட்டாகிவிடும், மீண்டும் குளிக்க வேண்டும், என்ற காரணத்தால் மாலை குளியலுக்குப் பிறகு சமஸ்கிருதத்தில் மட்டுமே பேசுவாராம் செத்துப்போன பழைய சங்கராச்சாரி சந்திரசேகரானந்தா. இதனை “இந்து மதம் எங்கே போகிறது” என்ற நூலில் பதிவு செய்திருக்கிறார் அக்னிஹோத்திரம் இராமானுச தாத்தாச்சாரி.

தமிழுக்கெதிரான பார்ப்பனியத்தின் இந்த மனோநிலை, பார்ப்பனிய சித்தாந்தம் கோலோச்சும் நீதித்துறையிலும் நிறம்பியிருக்கிறது. தமிழ்நாட்டு உயர்நீதி மன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், நீதிமன்ற அலுவல்களையும், தீர்ப்புகளையும் தமிழில் கொடுக்க வேண்டும் என்பது நம் மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். ஆனால் இந்த கோரிக்கை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.

பொதுவெளியில் மேடை போட்டுப் பேசும் ‘தேசிய’ தலைவர்கள், வழக்காடு மொழியாக தமிழை மாற்ற ஆதரவு தெரிவித்துப் பேசுவதும், அதற்கான கோரிக்கையை மாநில அரசு முறையாகக் கொடுக்கும்போது ஒன்றிய அரசு நிராகரிப்பதும் தொடர்ந்து நடக்கிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் புதுதில்லியில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய மோடி, உள்ளூர் மொழிகள் வழக்காடு மொழியாக இருக்கும் பட்சத்தில்  மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும் நீதித்துறையின் சேவைகளை மக்கள் எளிதாக புரிந்து கொள்வதற்கு இது உதவிடும் என்றும் பேசியுள்ளார்.

அதற்கு முன்னர் 2018-ம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு வந்த அமித்ஷாவும் கூட தமிழ்நாட்டு உயர்நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்திட ஆதரவு தெரிவிப்போம் எனக் கூறியிருந்தார்.

ஆனால் இப்படி இவர்கள் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்கத் தயாராக உள்ளது போல பொதுவெளியில் பேசினாலும், தமிழகத்தில் இருந்து அதற்கான முன்னெடுப்புகள் வரும்போதெல்லாம் சட்டத்தையும், நீதிமன்றங்களையும் காட்டி கைகழுவி விடுவதுதான் வாடிக்கையாக இருந்து வருகிறது.

2018-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரி ராஜ்யசபா உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

அதில் தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே புறக்கணித்து விட்டதால் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது எனக் கூறியிருந்தார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க கோரி தமிழக சட்டசபையில் 2006-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. அப்போதைய ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் அறிவுரையைக் கேட்டு தமிழக அரசின் தீர்மானத்தை அனுப்பி வைத்தது. 11.10.2012 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் முழுமையான கூட்டத்தில் அந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக பயன்படுத்துவது என்ற தமிழக அரசின் தீர்மானத்தை ஏற்க முடியாது என அக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதனை மேற்கோள் காட்டி தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் கூறிவிட்டார்.

ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 348 (1) படி உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவைகளின் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்திலேயே இருக்கவேண்டும் எனக் கூறினாலும், ஒரு மாநிலத்தின் ஆளுநர் உரிய முறையில் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அந்தந்த மாநில மொழிகளிலேயே உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகப் பயன்படுத்தலாம் என அதே 348-வது பிரிவின் உட்பிரிவு 2 தெளிவாக கூறுகிறது.

அதேபோல் 1963-ல் கொண்டுவரப்பட்ட இந்திய ஆட்சி மொழிச்சட்டத்தில் மாநில மொழிகளை உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக பயன்படுத்துவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டங்களின் படி இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அனைத்தும் தத்தமது எல்லைக்கு உட்பட்ட உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகத் தங்களது தாய்மொழி இருக்க வேண்டும் என சட்டம் இயற்றி அதற்கு ஜனாதிபதியிடம் ஒப்புதல் வாங்கினால் போதும்.

அப்படி இயற்றப்படும் சட்டத்திற்கு ஒப்புதலோ மறுப்போ தெரிவிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்குத்தான் இருக்கிறது. அந்த கோரிக்கையை நிராகரிப்பதற்கு உச்சநீதிமன்றத்துக்கு எந்தவொரு அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டமோ, இந்திய ஆட்சிமொழிச் சட்டமோ வழங்கவில்லை. எனவே ஒன்றிய அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவுரையைப் பெறவேண்டிய தேவையே இல்லை.

உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்த, இந்திய அரசியலமைப்புச் சட்டமும், இந்திய ஆட்சிமொழிச் சட்டமும் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தித்தான் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழியை அதாவது இந்தியை வழக்காடு மொழியாக பயன்படுத்த அனுமதிபெற்றுள்ளன.

ஆனால் அதனைத் தொடர்ந்து 2000-தில் மேற்குவங்க மாநிலம் வங்க மொழியை வழக்காடு மொழியாக்க கோரிய போதும், 2007-ல் தமிழ்நாடும், அதன்பிறகு குஜராத், சட்டீஸ்கர் மாநிலங்களும், 2014-ல் கர்நாடகமும் இதே கோரிக்கையை முன்வைத்த போது, அவை உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பப்பட்டு ஒன்றிய அரசால் நிராகரிக்கப்பட்டது.

அதே சமயம் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்க முன்னர் கூறிய நான்கு மாநிலங்களும் கோரியபோது அது உச்சநீதிமன்றத்தின் ஆலோசனைக்கு அனுப்பப்படவில்லை. ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அவை சட்டமாகி நடைமுறைக்கு வந்துவிட்டது. அதாவது உயர்நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக இந்தி இருக்கலாம் ஆனால் பிற மாநில மொழிகள் இருக்க முடியாது என்ற ஒன்றிய அரசுகளின் நிலைப்பாட்டை இது வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

மத்தியில் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருக்கும் பாஜக, தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்க வேண்டுமென நினைத்தால் தமிழக அரசின் சட்ட மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று உடனடியாக அதனை அமுலுக்கு கொண்டுவர முடியும். ஆனால் அப்படிச் செய்யாமல் உச்சநீதிமன்றத்தின் பின்னால்போய் ஒளிந்துகொள்கிறது.

தமிழின் பெருமை குறித்து ஆளுநர் ரவி மேடைக்கு மேடை வாய்கிழிய பேசினாலும், தமிழர்களின் நீண்டநாள் கோரிக்கையான இந்த சட்டம் குறித்து மட்டும் மூச்சு விடமாட்டார். ஏனென்றால் இந்தி சமஸ்கிருதத்தின் பெருமையை தமிழர்கள் ஏற்றுக் கூழைக் கும்பிடு போடவேண்டும் என்பதுதான் அவர்களது உண்மையான நோக்கம், அதற்குத்தான் தமிழின் பெருமையைப் பாடுகின்றனரேயொழிய தமிழின் மீதும் தமிழர்களின் மீதுமான உணமையான அக்கறையிலிருந்தல்ல.

  • அறிவு

செய்தி ஆதாரம்:

“The Constitution of India is not What it is” – Dr. Justice A.K.Rajan

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன