சமஸ்கிருதத்தை ஆட்சிமொழியாக மாற்றிடவே இந்தித் திணிப்பு

தங்களது இந்துராஷ்டிரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு காவி பாசிஸ்டுகள் ஒரு வரையறை வைத்திருக்கின்றனர். சாதி/வர்ணப் படிநிலையைக் கொண்ட சனாதனத்தை அடிப்படையாகக் கொண்ட ஆட்சிமுறை, வேதங்களின்  அடிப்படையில் நீதி பரிபாலனை, புராணங்களையும் இதிகாசங்களையும் உண்மையெனக் கற்பிக்கும் கல்விமுறை. இவை எல்லாவற்றையும் உள்ளடக்கிய பார்ப்பனியக் கலாச்சாரமே இந்தியா முழுமைக்குமான ஒரே கலாச்சாரம். இதுதான் காவிக் கும்பல் நிறுவத்துடிக்கும் இந்துராஷ்டிரத்துக்கான வரையரை.

ஆனால் பல்வேறு மொழி, இலக்கியம், வழிபாட்டு முறை, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள் உடைய பல தேசிய இனங்கள் உள்ள இந்தியாவில் இந்துராஷ்டிரத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதென்றால் காவிகள் முதலில் கபளிகரம் செய்ய வேண்டியது சமஸ்கிருதம் தவிர்த்த பிற மொழிகளைத் தான். இந்தியா பல தேசிய இனங்களையும், பன்மைத்துவத்துவத்தையும் கொண்டிருப்பது இந்துராஷ்டிரக் கனவிற்கு நேர் எதிராக இருக்கிறது.

அதே சமயம் முகலாயர்கள் ஆட்சியில் உருதுவும், பின்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் ஆங்கிலமும் அலுவல் மொழிகளாக இருந்ததால் இவ்விரு மொழிகளும் இன்றுவரை மக்களிடம் புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்த இரு மொழிகளையும் பயன்படுத்தி இந்தியா முழுமைக்கும் ஒரே கலாச்சாரத்தை, பார்ப்பனிய கலாச்சாரத்தை நிறுவ முடியாது.

காவி பாசிஸ்டுகள் தங்களது வாழ்க்கை நெறியாக கருதுகின்ற வேதங்களும், ஸ்மிருதிகளும் எந்த மொழியில் எழுதப்பட்டனவோ அந்த மொழியை, சமஸ்கிருதத்தை இந்துராஷ்டிரத்துக்கான ஆட்சி மொழியாக்குவதே காவிகளின் லட்சியமாகும்.

 

 

கடவுளிடம் பேசுவதற்கு மட்டுமல்ல ஆட்சி செய்வதற்கும் சமஸ்கிருதம்தான் அவர்கள் பயன்படுத்த விரும்பும் மொழி. முகலாயர் ஆட்சியில் உருது படித்தவர்களும், ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலம் படித்தவர்களும் உயர் பதவிகளையும், அதிகாரங்களையும் பெற்றதைப் போல இந்துராஷ்டிரத்தில் சமஸ்கிருதம் பயின்றவர்கள் மட்டுமே அரசுப் பதவிகளையும் அதிகாரங்களையும் பெற முடியும் என்ற நடைமுறையை உருவாக்க விரும்புகிறார்கள்.

அதனால் சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகள் அனைத்திற்கும் தாய். தமிழ், பெங்காலி, மராத்தி, பஞ்சாபி என அனைத்து மொழிகளும் சமஸ்கிருதத்தில் இருந்து பிறந்தவை எனத் தொடர்ந்து கூறிவருகிறார்கள். தமிழின் பழமை குறித்தோ, சமஸ்கிருதத்தின் தொடர்பில்லாமல் தனித்தியங்கக் கூடிய தன்மை தமிழுக்கு உண்டு என்பதையோ நாம் எவ்வளவு ஆதாரங்களுடன் எடுத்துக் கூறினாலும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. திராவிட மொழிக் குடும்பம் என்ற சொல்லைக் கேட்டாலே பதைபதைக்கிறார்கள்.

அதே சமயம் இன்றைய சூழலில், வழக்கிழந்து செத்த மொழியாகிவிட்ட, சமஸ்கிருதத்தை உடனடியாக அலுவல் மொழியாக அறிவிக்க இயலாது. ஆகவே தற்காலிக மாற்று மொழியாக இந்தியை முன்னிறுத்துகிறார்கள். படிப்படியாக சமஸ்கிருதத்தை வழக்கில் கொண்டு வரவேண்டும் என்பதும் பின்னர் இந்தியை எடுத்துவிட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தை புகுத்த வேண்டும் என்பதே அவர்களது நீண்ட நாள் திட்டம். அதிலும் கூட வடமாநிலங்களில் மக்கள் மத்தியில் புழக்கத்தில் உள்ள உருது மொழி கலந்த இந்துஸ்தானிக்கு பதிலாக, சமஸ்கிருத சொற்களைச் சார்ந்த உருது கலப்பில்லாத இந்தி மொழியையே காவிகள் திணிக்கிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் இரண்டாவது தலைவரும், அவர்களது “ஞான குரு”வுமாகிய கோல்வால்கர் எழுதி ஆங்கிலத்தில் பஞ்ச் ஆப் தாட்ஸ் (Bunch of thoughts) என்றும் தமிழில் “ஞானகங்கை” என்றும் வெளிவந்துள்ள நூலில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“இணைப்பு மொழி குறித்த பிரச்சனைக்கு தீர்வாக, சமஸ்கிருதம் அந்த இடத்தை அடையும் வரை, இந்தியை நமது வசதிக்காக பயன்படுத்திக் கொள்ள முன்னுரிமை கொடுக்க வேண்டும். இயற்கையாகவே, நாம் மற்ற எல்லா பாரதிய மொழிகளைப் போன்றே சமஸ்கிருதத்திலிருந்து உருவான, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற நவீன அறிவின் அனைத்துத் துறைகளிலும், தனது எதிர்கால வளர்ச்சிக்காக சமஸ்கிருதத்தை சார்ந்திருக்கிற இந்தி வடிவத்தை தேர்வு செய்ய வேண்டும்” என கோல்வால்கர் கூறுகிறார்.

இந்தித் திணிப்பு என்பதை நாம் ஒரு மொழியை நம் மீது திணிக்கிறார்கள் என்று மட்டும் சுருக்கிப் பார்க்க கூடாது. இந்தித் திணிப்பு என்பது பின்னாளில் சமஸ்கிருதத்தை தொடர்பு மொழியாகவும் அலுவல் மொழியாகவும் மாற்ற விரும்பும் காவி பாசிச கும்பலின் விரிவான இந்துராஷ்டிர திட்டத்தின் ஒரு அங்கமே. ஒன்றிய அரசின் திட்டங்களின் பெயர்களை சமஸ்கிருத பெயர்களாக மாற்றுவது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஒன்றிய அரசு விளம்பரங்களை சமஸ்கிருதத்தில் கொடுப்பது, வடமாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு சமஸ்கிருதப் பெயர்களை வைப்பது, அஞ்சல் துறை, வங்கிகள், இரயில்வே போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் அறிவிப்புப் பலகைகளை இந்திக்கு மாற்றுவது என அனைத்தும் சமஸ்கிருதத்தை அலுவல் மொழியாக மாற்றும் திட்டத்தின் அடிப்படையில்தான் செயல்படுத்துகிறார்கள். காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலமே காவிகளின் இத்தகைய முன்னெடுப்புகளை முறியடிக்க முடியும்.

  • அறிவு

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன