பசுக்களை காப்பாற்றுவதாக கூறி விவசாயிகளைப் பலியிடும் உ.பி. அரசு

உத்தரபிரதேசத்தில் 2017ல் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற அம்மாநிலத்தின் மாடுகளும் ஒரு முக்கிய காரணம். அவ்வாண்டின் தேர்தல் அறிக்கையில்  பசுக்களைப் பாதுகாப்போம், பசுவின் புனிதத்தை பாதுகாப்பதற்கு கோசாலைகளை அமைப்போம் என்று பா.ஜ.க  விவசாயிகளிடம் வாக்குறுதி கொடுத்தது.

ஆட்சிக்கு வந்த பின்பு பசு வதை தடை உத்தரவு, மாட்டிறைச்சிக்கு தடை என  பாஜக  சட்டம் இயற்றியது. மறுபுறம் பாஜகவின் பசுக்குண்டர்களோ பசுமாடுகளை வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு எடுத்துச் செல்பவர்களைத் தாக்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விவசாயிகளை அச்சுறுத்தி கறவை முடிந்த மாடுகளையும் உழவுக்கு உதவாத மாடுகளையும், விற்பதை கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தடுத்து வருகின்றனர்.  

கறவை முடிந்த, உழவுக்கு உதவாத மாடுகளால் விவசாயிகளுக்கு எந்த வித வருமானமும் வரப்போவதில்லை. பால் கொடுக்காத மாடுகளை வைத்துக்கொண்டு விவசாயிகள் என்ன செய்வது? இந்த மாடுகளை தினந்தோறும் பராமரிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் நிதிச்சுமையாக ஆகிவிடுவதால் இம்மாடுகளை தெருவில் விடும் நிலைக்கு விவசாயிகள் ஆளாகின்றனர்.  2019ஆம் ஆண்டில் மட்டும் உ.பியின் கிராமப்புறங்களின் தெருமாடுகளின் சதவீதம் 117 மடங்கு அதிகரித்துள்ளன.  யோகி அரசு மாட்டிறைச்சிக்கு தடைவிதித்ததால் கடந்த ஐந்து ஆண்டுகளில் உபியின் கிராமங்களில் இலட்சக்கணக்கான மாடுகள் தெருவில் அலைந்து திரிகின்றன.

 

பராமரிக்க முடியாத காரணத்தால் விவசாயிகளால் கைவிடப்படும் இம்மாடுகளால் விவசாயிகளுக்கு பிரச்சினை முடிந்த பாடில்லை.  இம்மாடுகளால் விவசாயிகளின் துயரம் இன்னும் அதிகமாகியிருக்கவே செய்கின்றது என்கின்றனர் உ.பி.யின் சம்பல் பகுதி விவசாயிகள்.

விவசாயிகளால் கைவிடப்படும் இம் மாடுகளுக்கு சரியான உணவும் தங்குமிடமும் கிடைப்பதில்லை.  இதனால் தெருவில் அலையும் மாடுகள் தீனிக்கு வழியின்றி கூட்டம் கூட்டமாக சென்று பயிர்களை மேய்ந்து வயல்களை நாசம் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன. அறுவடைக்கு தயாராகும் பயிர்கள் இம்மாடுகளினால் நாசமாகும் போது விவசாயிகளின் உழைப்பு, பயிர்களுக்கு போட்ட முதல் வீணாகுவதோடு கடன் வாங்கும் நிலைக்கு ஆளாகின்றனர் விவசாயிகள்.   

இவ்வாறு சம்பல் பகுதி விவசாயிகள்  படும் துன்பங்களை பற்றி சமீபத்தில் மெயின்ஸ்டீரிம் என்ற இணையதளம் ஒரு புகைப்படக் கட்டுரையை வெளியிட்டிருந்தது. அதை இங்கு வெளியிடுகிறோம்.

“தெருமாடுகளிடம் இருந்து பயிரை பாதுகாக்க நாங்கள் பல வழிகளை மேற்கொள்கிறோம். ஆனால் எதுவும் பயன் அளிப்பதில்லை. மாடுகளை வயலில் இருந்து விரட்டியடிக்க நாங்கள் இரவு முழுவதும் கண் விழிக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் ஒரு விவசாயி.

 

இரவு பகலாக ஷிப்ட் முறையில், தெருவில் அலையும் மாடுகளிடமிருந்து பயிர்களை பாதுகாக்க ஒரு வயலில் அமைக்கப்பட்ட கூடாரம்.

விவசாயிகள் குளிர்காலங்களில் கூட வீட்டில் இருக்க முடியாது வயல்களை இரவு பகலாக மாறி மாறி, மாடுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றும்,  தெருவில் திரியும் மாடுகள், அதிக விபத்துகளை ஏற்படுத்துவதாகவும், அதுவும் காலை மூடுபனி காரணமாக கிராமங்களில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.

விவசாயிகளின் வாழ்வாதாரம் அவர்களின் பயிர்களின் பாதுகாப்பை மட்டுமே சார்ந்து உள்ளதால் தெருமாடுகளிடம் இருந்து பயிர்களை பாதுகாக்க வயல்களுக்கு கம்பிகள் மற்றும் வேலிகளை பயன்படுத்துகின்றனர். இவ்வாறு வேலிகள் அமைக்க கூட கடன் வாங்க வேண்டிய நிலையில் விவசாயிகள் உள்ளனர். தெருவில் திரியும் மாடுகளோ இப்படி போடப்படும் வேலிகளை தாண்டி பயிர்களை நாசமாக்கி விட்டுச் செல்கின்றன. தங்களின் ஆறுமாத உழைப்பினால் விளைந்த பயிர் தெருமாடுகளுக்கு இரையாகும் போது விவசாயிகள் கோமாதா என வாலை தொட்டு கும்பிடுவதில்லை. மாடுகள் வந்தாலே கம்பால் அடித்து விரட்டவும், கல்லை கொண்டு எறியவும், கெட்ட வார்த்தையில் திட்டவும் ஆரம்பித்துவிடுகின்றனர். 

 

வேலியின் கம்பிகளில் தெருவில் திரியும் மாடுகளின் ரோமங்கள் சிக்கியிருக்கும் புகைப்படம்

யோகி அரசு எங்களுக்கு கோசாலை கட்டி தருவதாக வாக்குறுதியளித்தது. ஆனால் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள். நாங்கள் பசுவின் புனிதத்திற்காக கோசாலையை கேட்கவில்லை. இந்த தெருமாடுகள் எங்கள் பயிரை மேயாமல் இருப்பதற்காக அவைகளுக்கு ஒரு இருப்பிடம் வேண்டும் என்பதற்காகத் தான் கேட்கிறோம் என்கிறார்கள் விவசாயிகள்.

 

உ.பியின் சம்பல் பகுதியில் கோசாலைக்கு ஒதுக்கப்பட்ட நிலம். பசுக்களுக்கு கோசாலை அமைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வெறுமையாக நிற்கிறது.

 

யோகி அரசின் அறிக்கையின் படி 2017 முதல் 2020 வரை சுமார் 764 கோடி ரூபாய் கோசாலை அமைப்பதற்காக செலவிடப்பட்டுள்ளதாகவும், 2021-22ல் கோசாலைகளை பராமரிக்க 390 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் கூறுகிறது. ஆனால் இந்த பகுதியில் எந்த கோசாலையையும் காணவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

பசுக்கள் மீது அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை. கிராமத்தின் நடுவிலேயே கோவிலின் முன்பு,  மாடுகள் இறந்து கிடக்கின்றன. அதிகாரிகளிடமும் போலீசாரிடமும்  புகார் தெரிவித்தும் இறந்த மாடுகளை அப்புறப்படுத்தவில்லை என்கின்றனர் கிராம மக்கள்.

 

தெருவில் அலையும் ஒரு மாடு செத்து கிடக்கும் காட்சி. முப்பத்து முக்கோடி தேவர்கள் குடியிருக்கும் கோமாதா செத்துப் போனால், இந்திய சமூகத்தின் சாதிக்கொடுங்கோன்மை கால்நடைத்துறை அதிகாரிகளையும்  போக்குவரத்து போலீசையும் அதை அப்புறப்படுத்த அனுப்பி வைத்து விடுமா என்ன?

யோகி அரசு எங்களை முட்டாளாக்கிவிட்டது. அவர்கள் விவசாயிகளின் துயரங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை.  மாடுகள் தினந்தோறும் ஏதோ ஒரு விபத்து காரணமாக இறக்கின்றன. இவ்விபத்துக்களை தடுப்பதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் விவசாயிகள். விபத்தில் அடிபட்டு செத்துப்போகும் மாடுகள் தொடர்பான பிரச்சினை  தங்களுடையது இல்லை என்று உபியின் அரசுத்துறைகள் ஒன்றை மற்றொன்று கையைக் காட்டி தப்பித்துக்கொள்கின்றன.

 

சம்பல் பகுதியில் தெருவில் அலையும் மாடுகள் அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்வில் இடையூறு செய்வது வாடிக்கையாகிவிட்டது.

 

சம்பல் பகுதியில் மாடுகள் உணவுக்கு வழியின்றி நீரிலும், குப்பை கூளங்களிலும் பரிதாபமாக செத்து கிடக்க்கின்றன. . இவ்வாறு செத்து கிடக்கும் மாடுகளை இப்பகுதியின்  தெரு நாய்கள்  உணவுக்காக கடிக்கும் காட்சி.

கோசாலைகள் வந்தால் தெருவில் அலைந்து திரியும் மாடுகளினால் தங்கள் பயிர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என இப்பகுதி நம்புகின்றனர்.ஆனால் கோசாலைகளில் மாடுகள் சரியான பராமரிப்பு இன்றி புண் வந்து அழுகி புழுத்து பல மாடுகள் செத்து போகின்றன. மாட்டிறைச்சி கூடங்களில் மாடுகள் சித்திரவதைக்கு  உட்படாமல் கொல்லப்படுகின்றன. இம்மாட்டிறைச்சி கூடங்களில் விற்கப்படும் மாடுகள் இறந்த பின்பும் சமூகத்திற்கு பயன்படுகின்றது. பசியினால் குப்பைக்கூளங்களில் செத்துப்போகும் தெருமாடுகளும், கோசாலைகளில் செத்து போகும் மாடுகளும் சமூகத்தை பிளவுப்படுத்தும் ஒரு கருவியாக தான் காவிக் கும்பலால் பயன்படுத்தப்படுகிறது. பசுவின் புனிதம் என்பதை பாஜக ஓட்டுப் பொறுக்குவதற்கும், அதன் காவி பாசிசத்தை நிறுவுவதற்கும் தான் பயன்படுத்திக் கொள்கிறது என்பதை இந்து விவசாயிகள் உணர வேண்டிய தருணமிது.

  • தாமிரபரணி

செய்தி ஆதாரம் மற்றும் புகைப்படங்கள்: http://mainstreamweekly.net/article12975.html

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன