தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனத்திற்காக, பல்வேறு மாடல் ஐபோன்களை தமிழகத்தில் உள்ள ஶீபெரும்புதூரில் உள்ள அதன் தொழிற்சாலையில் உற்பத்தி செய்து வருகிறது. இதில் சுமார் 20,000 தொழிலாளர்கள் வரை பணிபுரிந்து வருகின்றனர். இதில் பெரும்பான்மையாக பெண் தொழிலாளர்களே உள்ளனர்.
இந்நிறுவனம் தற்போது தன்னுடைய ஆலை வளாகத்தில் சுமார் 60,000 பேர் தங்க கூடிய வகையில் விடுதிகள் அமைக்கவும் மற்றும் தனது ஆலை விரிவாக்கத்திற்கான கட்டிடங்களையும் கட்டி வருகிறது. முதல் கட்டமாக வரும் 10 மாதங்களில் 20000 தொழிலாளர்கள் தங்க கூடிய விடுதிகள் தயாராகிவிடும் என பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திற்கு கிடைத்த வெற்றி, சீனாவிலிருந்து பல கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளியேறி இந்தியாவில் தொழில் தொடங்கப் போகின்றன, இதனால் வேலைவாய்ப்பு பெருகும். இந்தியா அபார வளர்ச்சியடையும் என்று மோடி பக்தர்கள் கதையளக்கிறார்கள்.
இந்தச் செய்தியைக் கேட்டவுடன் உடனே பலருக்கும் 60,000 தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்குமானால் அது நல்லது தானே எனத் தோன்றலாம். ஆனால் சீனாவின் குவாங்சோ நகரில் பாக்ஸ்கானின் ஆலை வளாகத்தில் வேலைப்பார்க்கும் மூன்று இலட்சம் தொழிலாளர்களின் அடிமை வாழ்க்கையைப் பற்றியும், அவர்களை பாக்ஸ்கான் நிறுவனமும், சீன அரசும் எவ்வாறு ஒடுக்கிறது என்பது குறித்தும் அதற்கெதிராக அந்தத் தொழிலாளர்களின் போராட்டம் உயிர்த்தியாகம் பற்றியும் தெரிந்து கொண்டால் இந்தக் கொலைகார பாக்ஸ்கான் நிறுவனம் ஏன் தனது செயல்பாடுகளை சீனாவிலிருந்து இந்தியாவை நோக்கி நகர்த்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்
சீனாவின் பாக்ஸ்கான் தொழிற்சாலையில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை:
சீனாவின் குவாங்சோ, ஷென்சென் போன்ற நகரங்களில் உள்ள பாக்ஸ்கான் தொழிற்சாலையில் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் நியூயார்க் நகரின் தொழிற்சாலைகளில் இருந்த தொழிலாளி வர்க்கம் ஐரோப்பா, ஆசியா மற்றும் கரீபியன் நாடுகளில் இருந்து குடியேறியவர்களால் நிறைந்தது என்றால். சீனாவின் நகரங்களில் உள்ள தொழிலாளர்கள் பெரும்பாலும் அந்நாட்டின் கிராமப்புறங்களிலிருந்து குடியேறியவர்கள்.
இந்த தொழிலாளர்கள் தாங்கள் உயிர் வாழத் தேவையான குறைந்தபட்ச ஊதியத்தை பெறவே இன்றுவரை போராடி வருகின்றனர். சீன நகரங்களில் வாழ்க்கை நடத்த சராசரியாக மாதம் ஒன்றிற்கு 600 டாலர் வரை தேவைப்படும். ஆனால், பாக்ஸ்கான் நிறுவனம் இதில் பாதியைத்தான் கிட்டத்தட்ட 330 டாலரை தனது தொழிலாளர்களுக்கு ஊதியமாக கொடுக்கிறது. இதை வைத்துக் கொண்டு தொழிலாளர்கள் தனியாக வீடு எடுத்துத் தங்க முடியாது. எனவே தொழிலாளர்கள் பாக்ஸ்கான் நிறுவனத்தின் விடுதிகளிளை தேர்ந்தெடுக்கின்றனர்.
இவ்வாறு தொழிலாளர்கள் நிறுவனம் ஏற்படுத்தித் தரும் விடுதியில் தங்குவது அவர்களைச் சுரண்டுவதற்கு ஏதுவாக அமைகிறது. தொழிலாளர்களை பன்னிரெண்டு முதல் பதினான்கு மணி நேரம் வரை வேலை செய்ய நிறுவனம் கட்டாயப்படுத்துகிறது.
தொழிலாளர்கள் எப்போதும் நிறுவனத்தின் பாதுகாப்பு படைப்பிரிவின் கண்காணிப்பிலேயே வாழ்கின்றனர். அடுக்கு மாடி குடியிருப்பாக கட்டப்படும் தங்கும் விடுதிகளில் ஒரே அறையில் எட்டு முதல் பத்து தொழிலாளர்கள் தூங்குகிறார்கள்.
ஒரே பகுதியில் இருந்து வரும் தொழிலாளர்களோ அல்லது ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களோ விடுதிகளின் ஒரே அறையில் தங்க விடாமல் ஆலை நிர்வாகம் பார்த்துக் கொள்கிறது. திருமணமான ஆணும் பெண்ணும் பணியாற்றினால் அவர்களை ஒரே அறையில் தங்க நிர்வாகம் அனுமதிப்பதில்லை. பிற தொழிலாளர்களை அறைக்குள் கூட்டி வருவதற்கே பல கட்டுப்பாடுகளை நிர்வாகம் விதித்திருக்கிறது. சக தொழிலாளர்களிடம் நட்பு கொள்ளக் கூட வழியில்லாத நிலைமையில் சிறிய அறையில் கொத்தடிமைகளாக தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் விடுமுறை கிடையாது. ஒவ்வொரு இரண்டாவது வாரத்தில் ஒரு விடுமுறை அல்லது மாதத்திற்கு இரண்டு முறை விடுமுறை எடுக்கலாம். அவ்வளவுதான். இது போக சில நேரங்களில் தொழிலாளர்கள் பகல் இரவு என இரண்டு ஷிப்டிலும் வேலை செய்ய வேண்டியது இருக்கும். ஆலைக்குள் நுழைந்தவுடன் தொழிலாளர்கள் பன்னிரெண்டு மணிநேரத்தில் ஒவ்வொரு நொடியும் கசக்கி பிழியப்பட்டு விடுதிக்கு அனுப்பபடுகிறார்கள்.
பாக்ஸகான் நிறுவனத்தின் சுரண்டலினால் தொழிலாளர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி பல தொழிலாளர்கள் இந்த விடுதியிலிருந்து குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கிறது. தற்கொலை நிகழ்வுகளை தடுப்பதற்காக விடுதிகளில் சிறைச்சாலைகளில் இருப்பது போன்ற வலைகள் மற்றும் இரும்பு கம்பிகள் வைக்கப்பட்டுள்ளன.
இதுதான் சீனாவில் பாக்ஸ்கான் தொழிலாளர்களின் வாழ்நிலை. இப்படிப்பட்ட விடுதிகள் தான் ஶீபெரும்புதூரில் நம் நாட்டுப் பெண் தொழிலாளர்களுக்காக தயாராகி வருகிறது.
சமீப காலமாக சீனாவில், கொரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகமாகி வருகிறது. குவாங்சோ பாக்ஸ்கான் ஆலையில் மட்டும் 20,000 தொழிலாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் பாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை குறைக்க மறுத்து நோய்த்தோற்றால் பாதிக்கப்படாத தொழிலாளர்களை இன்னும் அதிக நேரம் உழைக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகிறது. பாக்ஸ்கானின் சுரண்டலை எதிர்த்து போராடும் தொழிலாளர்களை போலீசு கொண்டு ஒடுக்கி வருகிறது சீன அரசு. இவை எல்லாவற்றையும் தாக்கு பிடிக்க முடியாமல் தங்களுக்கு வேலையே வேண்டாம் என தொழிலாளர்கள் ஆலையை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்தியாவை பாக்ஸ்கான் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
மேக் இன் இந்தியா என்ற போர்வையில், தன்னுடைய கார்ப்பரேட் சேவைக்காக தொழிலாளர்களை நவீன கொத்தடிமைகளாக மாற்றும் பொருட்டு, இந்தியாவில் நடைமுறையில் இருந்து வந்த 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலன் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை இயற்றி, அதை செயல் வடிவமாக்கி வருகிறது மோடி அரசு. அது மட்டுமன்றி வெளிநாட்டிலிருந்து தொழில் தொடங்க வரும் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது.
இவ்வாறு ஒன்றிய அரசுதான் கார்ப்பரேட் முதலாளிகள் நலன்களைப் பாதுகாக்கிறது, தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசாவது தொழிலாளர்கள் பக்கம் நிற்கிறதா என்றால் இதே பாக்ஸ்கான் நிறுவனத்தின் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய பெண் தொழிலாளர்களை போலீசைக் கொண்டு ஒடுக்கி, தான் பொறுப்பேற்ற சிறிது நாட்களுக்குள்ளாகவே தனது கார்ப்பரேட் விசுவாசத்தை பறைசாற்றியது திமுக அரசு. இவற்றை வைத்துத்தான் தமிழகத்தை பாக்ஸ்கான் நிறுவனம் தேர்ந்தெடுத்துள்ளது.
கான்டிராக்ட் தொழிலாளர்கள், அதுவும் பெண்கள் என்றால் எந்த வகையிலும் சுரண்டலாம், எந்த விதிமீறலும் செய்யலாம் யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள் என்ற அடிப்படையிலேயே பாக்ஸ்கான் தன் உற்பத்தி தளத்தை இங்கு விரிவுபடுத்துகிறது. அதனை நாட்டின் வளர்ச்சி என்ற போர்வையில் நம்மை நம்ப வைக்க ஆளும்வர்க்கம் பிரச்சாரம் செய்கிறது .
- தாமிரபரணி
செய்தி ஆதாரம்