தமிழ்நாடு பாஜகவின் ஓ.பி.சி பிரிவு மாநில செயலாளரான திருச்சி சூர்யா, அதே கட்சியின் சிறுபான்மையினர் பிரிவின் மாநிலத் தலைவரான டெய்சி சரணை அச்சில் ஏற்ற முடியாத ஆபாச வார்த்தைகளில் திட்டும் தொலைபேசி உரையாடல் பதிவு ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாக பரவிவருகிறது. அதை ஒட்டி பல்வேறு விவாதங்களும், கிளைக் கதைகளும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
சிறுபான்மை அணியில் நிர்வாகிகளுக்கான பதவிகளைப் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர்கள் இருவரும் இப்படி வரிந்துகட்டிக் கொண்டு சண்டையிட்டுள்ளனர்.
இதற்கு முன்னர் திமுகவின் பேச்சாளர் ஒருவர் பாஜகவின் பெண் நிர்வாகிகள் குறித்து ஆபாசமாகப் பேசிய போது “பெண்களை இழிவுபடுத்தினால் நாக்கிருக்காது, கை இருக்காது” என ஆவேசமாக பொங்கிய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, திருச்சி சூர்யா விவகாரத்தில், சம்பவத்தை விசாரித்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அதுவரை, திருச்சி சூர்யா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என்று அறிவுறுத்துவதாகவும் கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார்.
சூர்யா – டெய்சி சரண் விவகாரம் ஒருபுறம் நடக்க, இன்னொருபுறம் நடிகை காயத்ரி ரகுராம் பிரச்சனை வெளியாகியுள்ளது. பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் சமீபத்தில் பாஜகவில் இருந்து ஆறு மாத காலம் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
காயத்ரி ரகுராமிற்கும், பாஜகவின் அறிவுசார் பிரிவின் துணைத் தலைவராக உள்ள செல்வக்குமார் என்பவருக்கும் இடையே பதவிகளைப் பிரித்துக் கொள்வதில் ஏற்பட்ட மோதலே காயத்ரி ரகுராம் நீக்கப்பட்டதற்கான காரணம் எனக் கூறப்படுகிறது.
தற்போது காசியில் நடைபெற்றுவரும் தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சிப் பிரிவின் தலைவரான தன்னைப் புறக்கணித்ததற்காக நேரடியாக அண்ணாமலையைத் தாக்கி காயத்ரி ரகுராம் பதிவிட மோதல் முற்றி தெருவுக்கு வந்துவிட்டது.
இவர்களுக்கிடையிலான மோதல் சூர்யா – டெய்சி சரண் விவகாரம் போல தனிப்பட்ட தொலைபேசி உரையாடலாக இல்லாமல், பொது வெளியில் டிவிட்டர் தளத்தில் நடந்தது. காயத்ரி ரகுராமின் டிவிட்டர் கணக்கைக் குறிவைத்து தனது ட்ரோல் படையைக் களமிறக்கிய செல்வகுமார், 2000 முதல் 4000 டிவிட்டர் கணக்குகளைப் பயன்படுத்தி காயத்ரி ரகுராமின் டிவிட்டர் பக்கங்களை வசை மொழியால் நிரப்பிவிட்டார்.
“இவர்கள் எல்லாம் சேர்ந்து கோவை க்ரூப் என்று ஒரு குழு வைத்திருக்கிறார்கள். அவர்கள் நண்பர்களா, ஊழியர்களா என்று சொல்ல முடியாது. அவர்கள் ‘வார் ரூம்’ போல ஒன்றை நடத்துகிறார்கள். அங்கிருந்துதான் நான் குறிவைக்கப்பட்டேன்.” என்றும், சம்பளத்திற்கு வேலை செய்யும் ட்ரோல் படையை வைத்துக் கொண்டு தன்னைக் குறிவைத்துத் தாக்குவதாகவும் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
செல்வக்குமார் அண்ணாமலை அணியில் இருப்பவர் என்பதால் அவருக்குச் சாதகமாக காயத்ரி ரகுராம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் கட்சியிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பார்ப்பனரான காயத்ரி ரகுராம் மீதான நடவடிக்கை தமிழக பாஜகவில் மறைமுகமாக நடந்து வந்த சாதிச் சண்டையை வெளியே கொண்டுவந்துவிட்டது. “பாஜகவில் அறிவாளிகள் புத்திசாலிகள் இருக்க கூடாது என நினைக்கிறார்கள்” என மறைமுகமாக பார்ப்பனர்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பாஜக ஆதரவு விமர்சகரான எம்.குமார் என்பவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமன்றி “பாஜகவில் பிராமணர்கள் யாரும் முக்கிய பொறுப்புக்கு வரக்கூடாது என நினைக்கிறார் அண்ணாமலை. எந்தத் தவறும் செய்யாத ராகவனைப் போலவே என்னையும் திட்டமிட்டு வெளியேற்றியுள்ளனர். தேசபக்தி கொண்ட பிராமணர்களால் மட்டும் தான் பாஜகவிற்கு வாக்களிக்கவும் – உழைக்கவும் முடியும்” என்று காயத்ரி ரகுராம் பேட்டியளித்ததாக ஒரு செய்தி முன்னணி நாளிதழ்களின் இணையதளங்களில் வெளியாகியது. பின்னர் அதனை காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார்.
தமிழக பாஜகவில் பார்ப்பன கோஷ்டிக்கும் அதற்கு எதிரான மற்ற சாதியினரின் கோஷ்டிக்கும் இடையிலான சண்டை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அண்ணாமலை மாநிலத் தலைவராக பதவியேற்ற பிறகு பார்ப்பனத் தலைவர்கள் ஓரங்கட்டப்படுவதும், கே.டி.ராகவன் போன்றவர்கள் பொறிவைத்துப் பிடிக்கப்பட்டு விரட்டப்படுவதும் நடக்கிறது. திருச்சி சூர்யா விவகாரத்தில் கூட டெய்சி சரணுக்கு ஆதரவாக காயத்ரி ரகுராம் பேசிய போது, கே.டி.ராகவனின் மற்ற வீடியோக்களை வெளியிட்டுவிடுவோம் என செல்வக்குமார் தரப்பிலிருந்து டிவிட்டர் பக்கத்தில் மிரட்டல் விடப்படுகிறது.
தங்களது இருப்பு கேள்விக்குள்ளாவதால் திமுகவையும், அதன் கூட்டணிக் கட்சி தலைவர்களையும் கடுமையாக எதிர்ப்பதுடன், ‘திராவிடியன்ஸ்’ என்று அழைப்பது போன்ற சர்ச்சைகளைத் தொடர்ந்து உருவாக்கி, தங்களை ஊடக வெளிச்சத்தில் வைத்துக் கொள்ளும் நிலைக்கு பார்ப்பன கும்பல் தள்ளப்பட்டுள்ளது.
பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதைப் பயன்படுத்தி ஆதயமடைய கட்சியின் மாநில பிரிவுகளின் நிர்வாகி பதவிகளை தங்களுக்குள் பிரித்துக் கொள்வதில் இந்தக் கோஷ்டிகளிடையே ஏற்படும் முரண்பாடுகள்தான், மேற்குறிப்பிட்ட சண்டைகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருக்கிறது. தேசத்தின் முன்னேற்றத்திற்காக மோடி வளர்த்த தியாகத் தீயில் வார்த்தெடுக்கப்பட்ட கொள்கைக் குன்றுகளான பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்கள் கடந்த சில நாட்களாக நடத்திவரும் குழாயடிச் சண்டையில் அவர்களது தேசிய அரசியல் எனும் முகமூடி கழன்று பிழைப்புவாத அரசியல் பல்லிளிக்கிறது.
கட்டப்பஞ்சாயத்து ரவுடிகளையும், கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருள் கடத்தல், சிலை கடத்தல் மாபியா கும்பலையும், ஆணாதிக்கமும் சாதி வெறியும் ஊறிக் கிடக்கும் உதிரிகளையும் கொண்டு கட்சியைக் கட்டிவிட்டு தேச பக்தி பஜனை பாடி மக்களை ஏமாற்றுகின்றனர். ஆனால் ஓட்டுப்பொறுக்கும் அரசியலில் கொள்கையும் கிடையாது ஒரு வெங்காயமும் கிடையாது என்பதை மூடிமறைக்க முடியுமா? பாஜகவின் அரசியல் தேசிய அரசியல் அல்ல அது பிழைப்புவாத பொறுக்கி அரசியல்தான் என்பதை அதன் தலைவர்களே அம்பலப்படுத்துகிறார்கள்.
அறிவு