மக்கள் அதிகாரம் – பத்திரிக்கைச் செய்தி! (06-11-2022)
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, பத்திரிக்கையாளர்களே,
கடந்த 28.6.2022 அன்று நக்சல்பாரி புரட்சியாளர் தோழர். கணேசன் (எ) அன்பழகன் அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக திருச்சியில் இறந்தார். இதனை தொடர்ந்து தோழர். அன்பழகன் அவர்கள் மக்களோடு அதிகமாக பழகி வாழ்ந்த பென்னாகரம் பகுதியில் நல்லடக்கத்தை செய்வது என முடிவு செய்து பென்னாகரம் வட்டம், திருவள்ளுவர் நகரில் உள்ள பொது சுடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தோழரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் 05.11.2022 அன்று இரண்டு அடி அகலம் மூன்று அடி உயரம் கொண்ட அவரது பிறப்பு இறப்பு தேதி பொறிக்கப்பட்ட நினைவு கல் ஒன்றை வைத்து சிறிய சமாதியாக கட்டினோம். இதனை அறிந்த பென்னாகரம் காவல்துறை அன்று மாலையே சமாதியை படம் பிடித்து எடுத்துச் சென்றார்கள். இதன்பிறகு காவல் ஆய்வாளர், காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவலர்கள் கும்பலாக வந்து இடத்தை பார்த்தனர். பிறகு அனுமதி இல்லாமல் எவ்வாறு கட்டினீர்கள் என்று அங்கிருந்த தோழர்களிடத்தில் கேட்க சுடுகாட்டில் பலரும் கல்லறைகளை கட்டி உள்ளனர், அதுபோல் இங்கு உடல் அடக்கம் செய்யப்பட்ட தோழர். கணேசன் என்கிற அன்பழகனுக்கும் நினைவாக ஒரு சிறிய சமாதி கட்டி உள்ளோம் என்று பேசினோம். காவல்துறையோ இந்த கல்வெட்டில் மா.லெ என்று உள்ளது, நக்சல்பாரி என்று உள்ளது, ஆகையால் இது பிரச்சினையை ஏற்படுத்தும் நீங்கள் பரிசீலித்துவிட்டு நாளை எங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறி சென்றனர். ஆனால் அன்று இரவே பென்னாகரம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் ஆய்வாளர், கியூ பிரிவு போலீசார் அன்பு, மோகன், எஸ்பி பிரான்ஞ் போலீசார் சிவகுமார், கிராம நிர்வாக அலுவலர் பிரியா, உட்பட .முப்பதுக்கும் மேற்பட்டோர் கும்பலாக வந்து இரவு சுமார் 2 மணி அளவில் சமாதியை இடித்து தள்ளிவிட்டு அந்த இடத்தில் இருந்த பெயர் பொறிக்கப்பட்ட கல்லை அகற்றி எடுத்து சென்றனர்.
தோழர் கணேசன் (எ) அன்பழகன் கல்வெட்டில் நக்சல்பாரி புரட்சியாளர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதான் காரணம் என்று இரவு 11 மணிக்கு பென்னாகரம் விருந்தினர் மாளிகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஓர் அவசர கூட்டத்தை நடத்தி அந்த கூட்டத்தில் வருவாய் துறை, காவல்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அனைத்து பிரிவினர்களையும் இணைத்து பேசி விடிவதற்குள் அந்த சமாதியை இடித்து தள்ள வேண்டும் என திட்டமிட்டு முடிவு செய்து இடித்தி தள்ளி உள்ளனர். இது முற்றிலும். ஜனநாயகம் அற்றதன்மை. இந்திய நாட்டில் ஒருவர் எதை பின்பற்றுகிறார் என்பதை வைத்து, அவர் குற்றவாளி என நாம் தீர்மானித்து விட முடியாது என உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் இருந்தபோதும் அதை சுட்டிக்காட்டியும் அவை காதில் போட்டுக் கொள்ளாமல் சமாதியை இடிப்பது மட்டுமே நோக்கமாகக் கொண்டு அனைத்து அரசு அதிகாரிகளும் செயல்பட்டனர்.
எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாமல் ஒரு சுமூகமான நிலை இருக்கும் போது சுடுகாட்டில் தோழர். கணேசன் என்கிற அன்பழகனின் சமாதி பிரச்சனை ஏற்படுத்தும் என்பது நகைப்புக்குரியதாக உள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. தோழர். கணேசன் (எ) அன்பழகன் தன் வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணிப்பு தியாகத்தோடு வாழ்ந்து மடிந்த தோழர். தன்னுடைய இளமை காலங்களிலே பெரிய படிப்புகளை படித்திருந்தும் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு அந்த படிப்பறிவை பயன்படுத்தாமல் சமூகத்திற்காக வாழ்ந்து மடிவது சரியானது, என்ற கண்ணோட்டத்தோடு செயல்பட்ட தோழர். அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் புரட்சிகர அரசியல் மற்றும் அதன் அமைப்புகள் மேலோங்கி வளர்வதற்கும் மக்களிடத்திலே செல்வாக்கு பெறுவதற்கும் தோழரின் வேலை என்பது அளப்பறியது என்பது உண்மை. ஆகவே தோழர். கணேசன் (எ) அன்பழகன் சமாதியை கட்டினால், அது ஆளும் வர்க்கத்திற்கு எரிச்சலையும் அச்சத்தையும் ஊட்டுகிறது” அந்த வகையில் அங்கே சமாதி இருக்கக் கூடாது என்கிற வகையில் இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. சாதாரண ஒரு சிறிய விஷயத்தை கூட ஒரு பெரும் பிரச்சனையாக்கி நமது உரிமையை பறிக்கும் இந்த ஜனநாயக விரோத தன்மையை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது. அதேபோல் தோழர். கணேசன் (எ) அன்பழகன் சமாதியை இடித்து, கல்வெட்டை எடுத்துச் சென்றவர்கள் மீது, ஜனநாயக உரிமை பறித்தல், சமூகத்தில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துதல், மக்களிடம் அச்சமூட்டி பீதியை உருவாக்குதல், சாதாரண சமயங்களில் சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துதல் பொய் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டு கலவர பீதி ஊட்டுதல், போன்ற குற்றத்தை இழைத்துள்ளனர். மேற்குறிப்பிட்ட அதிகார துஷ்பிரயோகம் செய்த மாவட்ட அரசு நிர்வாகிகள் மீது தமிழக அரசு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு
தோழர். கோபிநாத்
மாநில இணைச்செயலாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
9790138614