மாபெரும் சதி – பதிப்புரை!

1917, நவம்பர் 7‍ உலகைக் குலுக்கிய ரசியப் புரட்சி உதயமான நாள். இது சோவியத் சோசலிச பூமியை மட்டும் உருவாக்கவில்லை. காலனி நாட்டு மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு புது இரத்தம் பாய்ச்சியது. இரண்டாம் உலகப்போரின் போது பாசிசத்தை அடித்து நொறுக்கி, ஐரோப்பாவை விடுவித்தது. உலக மக்களை பாசிச இருளில் இருந்து காத்தது. உலகெங்கும் பாசிசக் குழுக்கள் அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் இன்றைய நிலைமையில், அதன் அடிப்பயையாக இருக்கும் ஏகாதிபத்திய‍ முதலாளித்துவ கட்டமைப்பின் நயவஞ்சக சூழ்ச்சியைப் புரிந்து கொள்வது அவசியமாகும். அவ்வகையில், மைக்கேல் சேயர்ஸ், அல்பர்ட் இ. கான் என்ற இரு அமெரிக்கர்கள் எழுதிய, 1992ஆம் ஆண்டு புதியஜனநாயகம் வெளியீட்டில் வந்த‌ ‘மாபெரும் சதி’ எனும் இந்நூல் நமக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தும்.

முன்னுரை:
உழைக்கும் மக்களுக்கு வர்க்க உணர்வு ஊட்டி விட்டால், வல்லரசுகளும் அவர்களுக்கு ஒரு தூசு.

அப்பப்பா! எத்தனை வகை பொய்ப் பிரச்சாரங்கள்!!
முன்னாள் சோசலிச நாடுகள் அப்பட்டமான முதலாளித்துவ நாடுகளாகி பிளவுபட்டுப் போனதால், குதூகலத்தில் இருக்கும் ஏகாதிபத்தியவாதிகளும் அவர்தம் அடிவருடிகளும் செய்கின்ற பித்தலாட்டப் பிரச்சாரங்கள் தான் எத்தனை வகை!

கம்யூனிசம் மனிதனின் சிந்தனையை சிறைப்படுத்து கிறது; மனிதனை நாசப் படுகுழியில் தள்ளுகிறது. ஸ்டாலின் மகா கொடுங்கோலன் கம்யூனிசம் மரணப் படுக்கையில் வீழ்ந்து விட்டது; முதலாளித்துவமே மனித குலத்தின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் என்பது நிரூபணமாகி விட்டது…இவையே இந்தப் பிரச்சாரங்களின் கருப் பொருளாகும்.

ஆனால் பேராசையும் கொலைத் தாகமும் யுத்த வெறியும் பாசிசமும், மனித வாழ்வைச் சூறையாடுவதும், சிந்தனையை சிறை வைக்க அல்ல, சீழே பிடிக்க வைப்பதும் ஏகாதிபத்தியங்கள் தான்; தனியுடமை சித்தாந்தம்தான். சோசலிசம் தான் மனிதனின் சிந்தனை ஆற்றலையும் உழைப்புத் திறனையும் பன்மடங்கு கட்டவிழ்த்துவிடுகிறது; மார்க்சியம்-லெனினியமே அதன் இயங்கு சக்தி என்ற உண்மைகளை இவ்வரிய நூல் தெளிவாக நிரூபிக்கின்றது.

உலகத்திற்கு சமாதானத்தையும் ஜனநாயகத்தையும் போதிக்கின்ற அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும், இளம் சோசலிச சோவியத் யூனியனை ஒழித்துக் கட்ட என்னென்ன அக்கிரமங்களிலும் இழிதகைமை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்கள் என்பதை புட்டு புட்டு வைக்கிறது கிடைத்தற்கரிய இச்சிறிய நூல்.

ஓர் அயோக்கியனின் அகராதியில் உள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் ஏகாதிபத்திய சதிகாரர்கள் ஈடுபட்டனர்.

பத்திரிக்கையாளர், செஞ்சிலுவை சங்கத்தினர் என்ற முகாந்திரங்களில் ஒற்றர்களை சோவியத் நாட்டுக்குள் அனுப்பினார்கள். தூதரகங்கள் சதிக்கூடங்களாக மாற்றப்பட்டன. கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளேயே ஐந்தாம் படைக‌ளை உருவாக்கினார்கள். வதந்திகளைப் பரப்பிவிட்டு உள்நாட்டுக் கலகத்தைத் தூண்டினார்கள். பணத்தையும் பதவியையும் காட்டி கூலிப்படைகளை அமைத்து யுத்த பூமியாக்கினர். கலப்படம், கள்ளக்கடத்தல், பதுக்கல், போலி நோட்டுகளை புழங்க விடுதல் ஆகியவைகளை ஊட்டி வளர்த்தார்கள். திடீர் திடீர் என்று சீர்குலைவுகளைத் திட்டமிட்டு செய்தார்கள். பத்திரிகைகளிலும் வானொலியிலும் பச்சைப் பொய்களை உண்மைக் கதைகளாக உலவ விட்டனர். 

தங்களது பேராசை வெறியையும் ஆக்கிரமிப்பையும், திரைமறைவு சதிகளையும் கபட நாடகங்களையும் நியாயப்படுத்த ஏகாதிபத்திய சதிகாரர்கள் அள்ளித் தெளித்த அவதூறுப் பிரச்சாரங்கள் ஏராளம்!

இரும்புத் திரை நாடு! தீயவர்களின் சாம்ராஜ்யம்! பஞ்சத்தையும் பசியையும் மட்டுமேகம்யூனிசம் வழங்குகிறது! லெனின் ஒரு ஜெர்மன் ஏஜண்டு; சர்வாதிகாரி! மக்கள் மிருகங்களைப் போல பக்குவப்படுத்தப் படுகிறார்கள்! உலகத்திற்கே நாசத்தை விளைவிக்கும் சக்திகள் இப்படி அடுக்கடுக்கான அவதூறுப் பிரச்சாரங்கள் ஏராளம்! ஏராளம்!! இத்தனையும் உக்ரைனின் கோதுமை வயல்களையும் சைபீரியாவின் எண்ணெய் வளங்களையும் குறி வைத்து தான்.

ஆனால், இளம் சோசலிச சோவியத் அரசோ, ஏகாதிபத்தியங்கள் ஏவி விட்ட இந்த ஏவுகணைகளையெல்லாம் தூள் தூளாக்கியது. ஒன்றா, இரண்டா, பதினான்கு வல்லரசுகள் ஒன்று சேர்ந்து படையெடுத்து வந்தன. ஏற்கெனவே நான்காண்டுகளாய் யுத்தத்தில் ஈடுபட்டு களைத்துப் போன ஒரு நாடு, பஞ்சத்தாலும் பசியாலும் வாடி வதங்கிய மக்களைக் கொண்ட ஒரு நாடு, தொழிற்சாலை, நிலங்கள் ஆகிய உற்பத்திச் சாதனங்கள் எல்லாம் ஏகாதிபத்திய யுத்தத்தால் பாழடிக்கப்பட்ட ஒரு நாடு பாய்ந்து வந்த ஓநாய்களின் பகடுகளை உடைத்து நொறுக்கியது. 

இத்தனைக்குப் பின், ஐந்தாண்டுத் திட்டங்களில் இலக்கிற்கும் மேலாக தொழிலாளர்களும் விவசாயிகளும் உற்பத்தி செய்தார்கள். முணுமுணுப்பின்றி நாட்டுக்காக உற்சாகமாக உழைப்பில் ஈடுபட்டனர். டிராட்ஸ்கியவாதிகள், புகாரின்கள் போன்ற ஏகாதி பத்திய உள்நாட்டு ஏஜண்டுகள் செய்த சீர்குலைவு, பிளவு வேலைகளையும் முறியடித்தார்கள்.

இதனூடே, பாசிச இட்லரின் அல்லது பிற ஏகாதி பத்தியங்களின் இன்னுமொரு படையெடுப்பை எதிர்பார்த்து யுத்தத்திற்கு சோவியத் நாட்டைத் தயார் செய்தார்கள். ‘கிரெம்ளினைக் கைப்பற்றுவேன்’ என்ற கனவோடு; விரைந்த வெற்றி எனும் எதிர்பார்ப்போடு வந்த இட்லருடைய இராணுவத்தின் இடுப்பொடித்து, பெர்லின் வரை அவர்களை விரட்டிச் சென்று வெற்றிக்கொடி  நாட்டியது செஞ்சேனை!

ஆம்! பின் தங்கிய ஒரு விவசாய நாட்டின் பாமர மக்கள் தான், ஐரோப்பா கண்டத்திலேயே பொறுமைக்குப் பேர் போன நாட்டின் மக்கள் தான், இந்த சரித்திர சாதனையை நிகழ்த்தினார்கள்.
இந்தச் சாதனைகளை நிகழ்த்த அம்மக்களை இயக்கிய சக்தி எது?

கம்யூனிச சித்தாந்தமும், போல்ஷ்விக் கட்சித் தலைமையும், லெனின், ஸ்டாலின் ஆகிய தலைவர்களின்   அரும் பெரும் ஆற்றலும் அல்லவா அச்சக்தி! பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் உயர்த்திப் பிடித்ததினால் உருவானதுதான் அச்சக்தி!

‘ஏகாதிபத்தியங்கள் காகிதப் புலிகளே,’ ‘மக்கள், மக்கள் மட்டுமே வரலாற்றை உருவாக்குகிறார்கள்’ என்ற மாபெரும் வரலாற்று உண்மைகள் இங்கே நிரூபிக்கப்பட்டன.
உளவாளிகளும், கட்சிக்குள் ஒளிந்து இருந்த ஏஜண்டுகளும், குட்டி முதலாளித்துவ ஊசலாட்டக்காரர்களும் ஈவு இரக்கமின்றி ஒழித்துக் கட்டப்பட்டனர். அதனால்தான், உலக சோசலிச இயக்கத்தின் தளப் பிரதேசம் பாதுகாக்கப்பட்டது. அதனால் தான், உலகெங்கிலும் புரட்சிக் கனல் மூட்டப்பட்டது; ஏகாதிபத்திய காலனிய ஆதிக்கத்திற்கு சரியான அடி கொடுக்கப்பட்டது.

ஏகாதிபத்திய ஏஜண்டுகளிடமும் கட்சிக்குள் ஒளிந்திருந்த முதலாளித்துவப் பாதையாளர்களிடமும் இரக்கம் காட்டாததற்குத் தான் ஸ்டாலினை கொடுங்கோலன் என்று ஏகாதிபத்தியவாதிகளும் அவர்களது எடுபிடிகளும் சித்தரிக்கிறார்கள். ஆனால் அதற்காக நாம் பெருமைப் படுவோம்.

ஸ்டாலின் எப்பேர்ப்பட்ட மகா புருஷன் என்பதை, இந்நூலைப் படித்தவர்கள் நிச்சயம் உணருவார்கள். ஏனென்றால் ஏகாதிபத்தியத்தின் மாபெரும் சதியை முறியடித்து, இளம் சோசலிச நாட்டை பாதுகாத்து, வாலிபனாக வளர்த்தது அவரது தலைமையல்லவா?
அன்னா லூயி ஸ்ட்ராங் என்ற அம்மையார் எழுதிய ஸ்டாலின் சகாப்தம்’ என்ற நூலையும் சேர்த்துப் படிக்க வேண்டுமென்று வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.
மைக்கேல் சேயர்ஸ், அல்பர்ட் இ. கான் என்ற இரு அமெரிக்கர்கள் எழுதிய ‘மாபெரும் சதி’ எனும் இந்நூல் ஒரு மர்ம நாவல் போல விறுவிறுப்பாக செல்கிறது. ஆனால் இந்நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்கள் அனைத்தும் வரலாற்று உண்மைகளை அடிப்படையாகக் கொண்டவையே.

சோசலிசத்தைக் கட்டியமைப்பது எப்படிப்பட்ட கடுமையான பணி என்பதையும் அதற்குப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை எவ்வளவு கறாராக கையாள்வது அவசியம் என்பதையும் புரிந்து கொள்ள இந்த இரு நூல் களும் நிச்சயம் உதவும்!

புரட்சிகர வாழ்த்துக்கள்
இவண்,
மாநில அமைப்புக் கமிட்டி, ஜூலை , 1992
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்)
தமிழ்நாடு.

 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன