பல்கலைக்கழக ஊழலைப் பயன்படுத்தி தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் காவி பாசிசம்

தமிழக ஆளுநர் ரவியோ வெளிப்படையாகவே இந்துத்துவ அரசியலை ஆதரித்துப் பேசியும் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கழக/கல்லூரி நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுத்தும் வருகிறார். ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டவர்களையும் தங்களது ஆதரவாளர்களையுமே துணைவேந்தராக நியமித்து வருகிறார். புரோகித் காலத்திலேயே இப்போக்குகள் ஆரம்பித்திருந்தாலும் ரவி ஆளுநரான பிறகு இப்போக்குகள் துலக்கமாகத் தெரிய ஆரம்பித்துள்ளன.

தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் பல கோடிகளுக்கு விற்கப்பட்டதாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியிருப்பது விவாதப்பொருளாகியுள்ளது. தற்போது பாஞ்சாப் மாநில ஆளுநராக உள்ள பன்வாரிலால் புரோகித் அம்மாநில வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் சத்பீர் சிங் கோசலை அம்மாநில அரசு நியமித்ததை விமர்சித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய புரோகித் “அரசியல் சட்டம் என் கையில் உள்ளது. எனக்கு யாரும் உத்தரவிட முடியாது…….. மேலும், நான் பஞ்சாப் ஆளுனராக நியமிக்கப்படுவதற்கு முன்பு தமிழகத்தில் 4 ஆண்டுகள் 20 பல்கலைகழகங்களுக்கு வேந்தராக இருந்துள்ளேன். அந்த காலகட்டத்தில், சட்டப்படி 27 துணைவேந்தர்களை நியமித்துள்ளேன். அப்போது தமிழகத்தின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. துணைவேந்தர் பதவி ரூ40 கோடி முதல் 50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.” என்று பேசியுள்ளார்.

 

 

புரோகித்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ள அப்போதைய கல்வி அமைச்சர் அன்பழகன் “துணைவேந்தர்கள் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது என்பதால் அதில் தவறுகள் ஏதேனும் நடந்திருந்தால் அதற்கு அவரே முழு பொறுப்பு. பதிவிக்காக பணம் கைமாறியிருந்தாலும் அது ஆளுநரையே சாரும்.” என்று பத்திரிக்கயாளர் சந்திப்பில் பேசியுள்ளார். ஆளுநர் நியமனத்தில் தான் பணம் ஏதும் வாங்கவில்லை என்று முன்னாள் அமைச்சர் சொல்வதை பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆய்வு மாணவர் கூட ஒப்புகொள்ளமாட்டார். உயர்கல்வியில் ஊழல்-முறைகேடுகளுக்கு பிரதானக் காரணமே தனியார்மயம் தான். உயர்கல்வியில் தனியார்மயத்தை இன்னும் தீவிரப்படுத்தி தேசியக் கல்விக் கொள்கையின் மூலம் மொத்த உயர்கல்வியையும் நிதிமூலதனத்திடம் ஒப்படைப்பதற்கு தீவிரமாக வேலை செய்துவரும் ஆர்எஸ்எஸ்–பிஜேபி கும்பலின் ஏஜெண்டியான புரோகித் பல்கலைககழக ஊழலைக் குறித்து பேசியிருப்பது ஆடு நனைகிறதென்று ஓநாய் வருந்துவதைப் போல உள்நோக்கம் கொண்டதாகவே தெரிகிறது.

 

 

 உயர்கல்வியில் தனியார்மயம் புகுத்திய பிறகு அதில்  அரசியல் தலையீடுகள் மற்றும் ஊழல்-முறைகேடுகள் என்பது மிகவும் சகஜமான ஒன்றாக மாறியுள்ளது. இதற்கு, பெரியார் பல்கலைக்கழகம், மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல அரசு பல்கலைக்கழகங்களில் பேராசிரியர் பணிநியமனங்களில் நடந்துள்ள ஊழல்-முறைகேடுகள், செமஸ்டர் தேர்வு விடைத்தாள் சரிபார்த்தலில்  பல நூறு கோடி ஊழல், அரசு கலைக்கல்லூரிகளில் தகுதியற்றவர்களை பேராசிரியர்களாக பணியமர்த்தில் ஊழல், பாலிடெக்னிக் தேர்வு முறைகேடுகள், கௌரவ விரிவுரையாளர்கள் நியமனத்தில் ஊழல், பேராசிரியர் தகுத்தேர்வான  கொடுத்து SLET தேர்வில் ஊழல், பச்சையப்பன் கல்லூரிகளுக்கு பேராசியர் நியமனங்களில் நடந்துள்ள ஊழல், பேராசிரியர்கள் பணியிடமாற்ற ஊழல், எடப்பாடி ஆட்சிகாலத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பதினொறு கோடி ஊழல் நடந்திருப்பதாக சமீபத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் என பல உதாரணங்களைத் தரலாம்.

பொதுவாக இவ்வூழல் முறைகேடுகள் அனைத்தும் ஒரே பேட்டனில் நடந்தவையல்ல. ஒவ்வொரு ஊழலைப் பற்றியும் ஒரு துப்பறியும் நாவலே எழுதலாம். அந்த அளவிற்கு இரகசியங்கள், இரகசியப் பணப்பரிமாற்றங்கள், தற்கொலை & மிரட்டல்கள், கைதுகள், வழக்குகள் என கிரிமினல்மயமானவை. வாசகர்களின் புரிதலுக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் நியமனத்தில் கடைபிடித்து வந்த ஊழல்-முறைகேடுகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே தருகிறோம்.  

“உதாரணத்திற்கு வரலாற்றுத் துறையில் சுப்பன் என்ற நபர் தனக்கு உதவிப் பேராசிரியர் பணி வேண்டும் என்று அங்குப் பணியாற்றும் மன்னன் என்ற புரோக்கரை நாடினால் அவர் சுப்பன் பெயருக்கு பணியாணையின் நகலைத் தருவார். அப்போது அவர் அந்தப் பணிக்கான மொத்தத் தொகையில் பாதித் தொகையைக் (ரூ. 20 லட்சம்) கொடுக்க வேண்டும். மீதித் தொகையை செலுத்திய பின்னர் அந்தப் பணியின் அசல் ஆணையை மன்னன் சுப்பனிடம் கொடுப்பார்.

ஒருவேளை சுப்பனால் பணம் திரட்ட இயலாமல் தான் ஏற்கனவே செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறவிரும்பினால் மன்னன் ரூ. 20 லட்சத்தில் ரூ. 5 லட்சத்தை எடுத்துக் கொண்டு மீதம் ரூ. 15 லட்சத்தைத் திருப்பிக் கொடுப்பார்.

சுப்பன் முழுத்தொகையும் வட்டிக்குக் கடன்பெற்று கொடுத்து அந்த வேலையை வாங்கிவிட்டால் வட்டியிலிருந்து விடுபடுவதற்கும் அவர்கள் ஒரு வழிமுறையைப் பின்பற்றினர். அங்குப் பணிக்குச் சேர்ந்த சுப்பனுக்கு அங்குச் செயல்படுகின்ற தேசிய வங்கியில் தனிநபர் கடன் விரைவாகக் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதற்கு அந்த புரோக்கர் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் துணைபுரியும்.

சுப்பன் வங்கியில் தனிநபர் கடன்பெற்று வட்டிக்கு வாங்கிய கடனை அடைத்துவிடலாம். வேலையை விற்பது, அந்த விலையை தான் பெற்றுக்கொண்டு அதில் ஈடுபட்ட புரோக்கருக்கு உரிய கமிஷனை கொடுத்தல், வட்டிக்குப் பணம் திரட்டி வேலையை வாங்கும் நபருக்கு வட்டிக்காரனின் வட்டித் தொல்லையிலிருந்து நிவாரணம் செய்வதற்காக அங்குள்ள வங்கியில் தனிநபர் கடனுக்கு ஏற்பாடு செய்தல். என இது அங்கு ஒரு முறையான ஊழலாக நடந்து வந்தது.

இந்த வியாபரத்தில் சம்பாதித்தவர் செட்டியார் மட்டுமல்ல புரோக்கர்களான பேராசிரியர்களும் ஊழியர்களும் கூட கோடிகளில் சம்பாதித்தார்கள். புரோக்கர்கள் பலரும் கோடிஸ்வரர்களான கதைகள் நிறைய உண்டு. அவர்கள் சொத்துக்களை பாண்டிச்சேரி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் குவித்துள்ளனர். செட்டியார் வேலையை விற்றார் என்றால் அது தவறு என்று தெரிந்தே வாங்கினர் பணியாளர்கள். வேலை வாங்கிய பணியாளர்கள் குற்றம் என்றும் தெரிந்தும் வேலையையும் பட்டங்களையும் விற்பதற்கு புரோக்கர்களாகச் செயல்பட்டனர்.  செட்டியார் சீரழிவைச் செய்தார் என்றால் அந்தச் சீரழிவை சமூகமயமாக்கியவர்கள் அங்கு வேலை வாங்கியவர்கள்.

 

 

உயர்கல்வித் துறையில் மட்டுமின்றி பணிநியமன முறையில் பெரும் சீழ் பிடித்த ஊழல் முறையை தொடங்கிவைத்தவர் செட்டியார் என்றால் அதற்கு நியாயவுரிமையைப் பெற்றுக் கொடுத்து சமூகத் தூண்களாகச் செயல்பட்டது அங்குப் பணியாற்றிய பேராசிரியர்களும் பணியாளர்களும் ஆவர். எந்தவிதத்திலும் வேலைவாங்கிய பணியாளர்கள் அப்பாவிகள் அல்ல அவர்கள் குற்றவாளிகள்.”

இவ்வூழல்களில் தனிநபர்களை மட்டுமே குற்றவாளிகளாகவும் காரணகர்த்தாவாகவும் பத்திரிக்கைகள் முன்வைக்கின்றன. இவற்றில் பேராசிரியர்கள்-அதிகாரிகள்-அமைச்சர்கள்-தனியார் கல்வி முதலாளிகளின் கூட்டு உள்ளதை திட்டமிட்டு மறைத்து விடுகின்றனர். உயர்கல்வித் துறையில் தனியார்மயக் கொள்கைகள் அமலாக்கத்திற்கு பிறகே இவ்வூழல்களின் எண்ணிக்கை அதிகரித்ததுள்ளதையும் அதன் பரிணாமம் விரிவடைந்துள்ளதையும் நாம் பார்க்கமுடியும். இதன் விளைவாக 2010 க்குப்பிறகு பல்கலைக்கழகங்களின் உயர்பதவிகள் மற்றும் பேராசிரியர்கள் பணிநியமனங்களில் ஊழல் என்பது ஒருங்கிணைந்த முறையில் ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் உச்சமாக பன்னீர்-எடப்பாடி ஆட்சிகாலத்தில் உயர்கல்வித்துறையில் ஊழல்-முறைகேடுகள் கொடிகட்டிப் பறந்தன. பேராசிரியர்கள் நியமனங்கள் மட்டுமில்லாது உயர்கல்வியின் ஒவ்வொரு பகுதியுமே ஊழல்-முறைகேடுகளால் புரையோடிக் கிடக்கின்றன. இதனை புரிந்து கொள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் பணிகளை புரிந்து கொள்வது அவசியம்.  

ஒவ்வொரு பல்கலைக்கழகமும் தனக்கு கீழே நூறுக்கும் மேற்பட்ட கல்லூரிகளை இணைப்புக் கல்லூரிகளாகக் கொண்டுள்ளன. உதாரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 160 கலை அறிவியல் கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 450 பெறியியல் கல்லூரிகளும் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் 100 க்கும் மேற்பட்ட பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளும் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் பல சட்டக் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் பெரும்பான்மையானவை தனியார் கல்லூரிகள். இக்கல்லூரிகளனைத்தும் அந்தந்த பல்கலைக்கழகங்களால் முறைப்படுத்தப்படுகின்றன. 

உதாரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் 450 இணைப்புக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம் வகுப்பது, பருவத் தேர்வுகளைத் நடத்துவது, ஒவ்வொரு ஆண்டும் கல்லூரிகளை ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்குவது, புதிய பாடப்பிரிவுகள் தொடங்குவதற்கும் அதில் மாணவர் சேர்க்கைக்கும் ஒப்புதல் வழங்குவது ஆகியவற்றை பல்கலைகழகமே செய்கிறது.

பெரும்பான்மையான தனியார் கல்லூரிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடப்பதில்லை. தனியார் கல்லூரிகளில் போதிய கல்வித்தகுதி இல்லாத ஆசிரியர்கள் நியமனம், மிகக் குறைவான ஆசிரியர்கள் ஊதியம், அரசு நிர்ணயித்ததை விட அதிக கல்விக் கட்டணம் மற்றும் கேப்பிடேசன் வசூலிப்பது, ஆய்வக வசதிகள் இல்லாமல் இருப்பது என்பதெல்லாம் சகஜமாகியுள்ளது. இவற்றைக் கண்காணிக்க வேண்டிய அதிகாரமும் பொறுப்பும் கொண்ட பல்கலைக்கழக நிர்வாகமோ தனியார் கல்லூரிகளோடு சேர்ந்து கொண்டு இம்முறைகேடுகளுக்கு துணைபோகின்றனர். இதற்காக  தனியார் கல்லூரிகளின் கூட்டமைப்புகள் துணைவேந்தர் பதவிக்கு போட்டியிடுபவர்களுக்கு பல கோடிகள் நிதியுதவி செய்கின்றனர். இத்துணைவேந்தர்களே பல்கலைக்கழகப் பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு இயக்குநர், இணைப்புக் கல்லூரிகளுக்கான இயக்குநர் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தின் பல்வேறு உயர் பொறுப்புகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதினால் ஊழலானது பல்கலைக்கழகத்தின் மேலிருந்து கீழாக கடத்தப்படுகிறது.

இதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தையே உதாரணமாகக் கூறலாம். நடப்புக் கல்வியாண்டு மாணவர் சேர்க்கையை ஒட்டி அண்ணா பல்கலைக்கழகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள 450 இணைப்புக் கல்லூரிகளை ஆய்வு செய்து  அறிக்கை வெளியிட்டது. அதையொட்டி நாம் எழுதியக் கட்டுரையில் கீழ்கண்டவாறு எழுதியிருந்தோம். 

கடந்த மே-ஜூன் மாதம் தனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 467 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகம், 350 கல்லூரிகள் முழுமையான கட்டமைப்பு வசதிகளின்றி இருப்பதாகக் கூறியுள்ளது. குறிப்பாக 225 தனியார் கல்லூரிகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான குறைபாடுகள் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.  அக்கல்லூரிகளில்  தேவையைவிட குறைந்த ஆசிரியர்களே பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் சில கல்லூரிகளில் தரமான ஆய்வக வசதிகள் கூட இல்லை என்றும்  23 கல்லூரிகளில் விதிமுறைகள் மீறப்பட்டு தகுதியற்றவர்கள் முதல்வர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கைக் கூறுகிறது. அறிக்கை கூறுகிறது. இதன் விளைவாக பொறியியல் மாணவர்களின் கற்றல் வெளிப்பாடுகள்(learning outcomes) வெகுவாக குறைந்துள்ளதாக அவர்களின் அறிக்கையே கூறுகிறது.

இதுதான் தமிழகத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகளின் லட்சம். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலைதான் தொடர்கிறது. ஆனால் அண்ணா பல்கலைக்கழகம் இக்கல்லூரிகளின் மீது கடுமையான நடவடிக்கைகள் எதுவும் எடுப்பதில்லை. பல்கலைக்கழகம்-தமிழக உயர்கல்வித்துறை-கல்விக் கொள்ளையர் களின் இந்த கூட்டு ஒவ்வொரு ஆண்டும் பல நூறு கோடிகளை மாணவர்களிடமிருந்து கல்விச்சேவை என்ற போர்வையில் பகற்கொள்ளையைடித்து வருகிறது.

இப்போக்கு ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது. தனியார் கல்லூரிகளின் நிர்வாகங்கள் பல்வேறு வழிகளில் தங்கள் செய்யும் முறைகேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்கின்றனர்.  

2019 ல் சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புகல்லூரிகள் பணிபுரியும் பேராசிரியர்களில் 30 சதவிகிதம் பேர் யுஜிசி நிர்ணயித்தக் கல்வித்த்குதி இல்லாதவர்கள் என்ற செய்தி வெளியானது. சில மாதங்களுக்கு முன்பு, தமிழகத்தில் உள்ள தனியார் சுயநிதி கல்லூரிகளில் துணைப் பாடங்களை நடத்துவதற்கு ஆசிரியர்களை நியமிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இத்தறுகள் பல்கலைக்கழகங்களுக்குத் தெரியாமல் நடப்பதில்லை. அவர்களின் உதவியோடுதான் நடக்கிறது. இதனால்தான் துணைவேந்தர்களின் நியமனங்களில் பலகோடிகள் கைமாறுகின்றன.  

தனியார்மய-தாராளமயப் போக்குகளின் போக்குகளின் விளைவாக சமூக அக்கறையற்ற, உயர்கல்வி குறித்த எவ்வித அடிப்படையும் தெரியாத, துறைசார்ந்த திறமையற்ற ஒரு கணிசமான எண்ணிக்கைக் கொண்ட கூட்டம் ஊழல்-முறைகேடுகளினால் உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாக பணியமர்த்தப்பட்டிருப்பதும் பல்கலைக்கழகங்களின் உயர்பதவிகளில் இருப்பதும் நடந்துள்ளது. இவர்கள்தான் இவ்வூழல்-முறைகேடுகளின் சமூகத் தூண்கள். இதன் விளைவாக உயர்கல்வியின் தரம் குறைந்ததோடு மட்டுமில்லாது மொத்த உயர்கல்வியுமே சீரழிவை நோக்கி பயணிக்கிறது என்பதே உண்மை.

* * * * *

தனியார்மயத்தின் விளைவான இச்சீரழிவிற்கு வெறும் அரசியல்வாதிகளின் ஊழல் மட்டுமே காரணம் எனக் காட்டி பிரச்சாரம் செய்கிறது ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல். இதன் மூலம் தங்களுடைய காவி-கார்பரேட் திட்டங்களைக் கவர்னரின் மூலமாக உயர்கல்வியில் திணிக்கின்ற வேலைகளுக்கு பொதுவெளியில் ஆதரவையும் திரட்டுகிறது. இச்சூழலைப் பயன்படுத்திக் கொண்டு பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் உள்ளிட்ட உயர்பதவிகளில் ஆர்எஸ்எஸ்-பிஜேபி ஆதரவாளர்களையே நியமித்து வருகின்றனர். இது குறித்து வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா கடந்த மாதம் ஸ்க்ரொல் இணையத்தளத்தில் எழுதியிருந்த கட்டுரையில்,

புகழ்பெற்ற ஐஐடி ஒன்றின் (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) இயக்குநரைக் கடந்த மாதத்தில் சந்தித்தேன். மிகச் சிறந்த விஞ்ஞானி என்பதுடன் அவர் திறமையான நிர்வாகியும் ஆவார். இப்போது எட்டு ஐஐடிகள் இயக்குநர்களே நியமிக்கப்படாமல் இயங்கும் தகவலை அவர் தெரிவித்தார். ஒவ்வொரு நிறுவனத்திலும் இதற்கு முன்னர் இயக்குநராக இருந்தவரின் பதவிக்காலம் முடிந்துவிட்டது, அடுத்தவரைத் தேர்ந்தெடுக்க ஆள்தெரிவுக் குழுவும் நியமிக்கப்பட்டுவிட்டது, ஆனால் ஒன்றுக்குக்கூட குழு தெரிவு செய்தவரின் பெயரை ஒன்றிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்குக் காரணம் குழுக்கள் தெரிவு செய்த நபர்கள் நியமிக்கப்படத் தகுதியானவர்கள்தானா என்பதை ‘நாக்பூர்’ (ஆர்எஸ்எஸ் தலைமையகம்) சரிபார்த்துக்கொண்டிருப்பதுதான்!

என்று எழுதியுள்ளார்.

மத்திய கல்வி நிறுவனமோ அல்லது மாநில பல்கலைக்கழகமோ எதுவாக இருப்பினும் உயர் பதவிகளில் தங்களது ஆதரவாளர்களை நியமிப்பதில் முனைப்புடன் உள்ளது காவி கும்பல். இதனால் கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், தமிழ்நாடு போன்ற பிஜேபி ஆளாத மாநிலங்களில் துணைவேந்தர் நியமனங்களில் அரசுக்கும் கவர்னருக்கும் இடையே மோதல் போக்குகள் உருவாகியுள்ளன. கவர்னர்களின் வாயிலாக மாநில உயர்கல்வி நிறுவனங்களை ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் கைபற்ற முயற்சிப்பதே இம்மோதல்களுக்கான  பிரதானக் காரணமாகும்.

தமிழக ஆளுநர் ரவியோ வெளிப்படையாகவே இந்துத்துவ அரசியலை ஆதரித்துப் பேசியும் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்த பல்கலைக்கழக/கல்லூரி நிர்வாகங்களுக்கு அழுத்தம் கொடுத்தும் வருகிறார். ஆர் எஸ் எஸ்-பிஜேபி கும்பல் திட்டங்களுக்கு ஒப்புக்கொண்டவர்களையும் தங்களது ஆதரவாளர்களையுமே துணைவேந்தராக நியமித்து வருகிறார். புரோகித் காலத்திலேயே இப்போக்குகள் ஆரம்பித்திருந்தாலும் ரவி ஆளுநரான பிறகு இப்போக்குகள் துலக்கமாகத் தெரிய ஆரம்பித்துள்ளன. ஆளுநர் திணித்து வரும் மக்கள் விரோத தேசியக் கல்விக் கொள்கை குறித்து இப்பேராசிரியர்கள் முச்சு விடுவதில்லை.

 

 

உயர்கல்வித்துறையில் ஊழல் என்று காவிக்கூட்டம் நீலிக்கண்ணீர் வடிப்பதின் நோக்கமே அதனை சரிசெய்யவேண்டும் என்பதல்ல. மாறாக ஊழலைக் காரணம் காட்டி உயர்கல்வியை கைப்பற்றுவதே இவர்களின் நோக்கமாகு.  இதற்கு தனியார்மய-தாராளமய-உலகமயக் கொள்கைகள் உருவாக்கியுள்ள நெருக்கடிகள்/சீரழிவுகள் ஆர்எஸ்எஸ்–பிஜேபி கும்பல்  தங்களது காவி-கார்பரேட் திட்டங்களை அமல்படுத்துவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

முன்னேறிவரும் காவி-கார்பரேட் பாசிசத்தை அம்பலப்படுத்துவதில் அறிவுசார் பிரிவினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. குறிப்பாக உயர்கல்வித் துறையில் அமல்படுத்தப்பட்டுவரும் காவி-கார்பரேட் திட்டங்களை முறியடிப்பது மிகவும் அவசிமாகும் இதற்கு ஜனநாயக-முற்போக்கு சிந்தனைக் கொண்ட பேராசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் இணைந்து காவி-கார்பரேட் பிடியிலிருந்து பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகளை மீட்பது உடனடியாக செய்யவேண்டிய பணியாகும். 

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன