இஸ்லாமிய பயங்கரவாதம் என மூச்சுக்கு முன்னூறுதரம் முழங்கும் காவிகளுக்கு, காவி பயங்கரவாதம் எனும் சொல் எட்டிக்காயாய் கசக்கிறது. நாடு முழுவதும் கலவரம் செய்து சிறுபான்மையினத்தவரைக் கொன்று குவித்தது மட்டுமல்லாது, திட்டமிட்ட குண்டுவெடிப்புகளையும் நிகழ்த்தி அப்பாவி மக்களைக் கொல்லும் வேலையிலும் காவி பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளனர் என்பது பலமுறை அம்பலமாகியுள்ளது. அதில் ஒன்றுதான் நாண்டெட் குண்டுவெடிப்பு.
2006 ஆண்டில் மராட்டிய மாநிலத்தின் நாண்டெட் நகரில், லக்ஷ்மன் குண்டய்யா ராஜ்கொண்டவார் என்பவரின் வீட்டில் ஒரு சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது, அவரது மகனும் அவரது மகனின் நண்பரும் கொல்லப்பட்டனர். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இது காவி பயங்கரவாதிகள் வெடிகுண்டு தயாரிக்கும் போது ஏற்பட்ட விபத்து என்றும், இதே கும்பல்தான் 2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் ஜல்னா, பூர்ணா மற்றும் பர்பானியில் உள்ள மசூதிகளில் நடந்த வெடிப்புகளை நடத்தியது என்றும், இது ஒரு பெரிய சதித்திட்டத்தின் பகுதி என்றும் அம்பலமானது.
இது குறித்து விசாரிக்க மராட்டிய அரசு, தீவிரவாத தடுப்புப் படை என்ற சிறப்பு போலீஸ் படையை அமைத்தது, பின்னர் அந்த வழக்கு மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு வழக்கு விசாரணை நாண்டெட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் யஷ்வந்த் ஷிண்டே என்ற முன்னாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் ஆகியவை இணைந்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்த திட்டமிட்ட பல கூட்டங்களில் தான் பங்கேற்றதாகவும், அதில் தற்போது விஷ்வ இந்து பரிஷத்தின் பொதுச் செயலாளராக உள்ள மிலிந்த் பரண்டேவும் கலந்து கொண்டதாகவும் கூறி, தன்னை நாண்டெட் குண்டுவெடிப்பு வழக்கில் சாட்சியாக விசாரிக்குமாறு கோரி நாண்டெட் மாவட்ட நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார்.
1990 ஆம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ்.சின் முழுநேரப் பணியாளராகப் பணியாற்றி வரும் ஷிண்டேவின் இந்த வாக்குமூலத்தில், 2003 ஆம் ஆண்டில், பரண்டேவின் வழிகாட்டுதலின் கீழ், அவர் மேலும் இருபது பேருடன் வெடிகுண்டு தயாரிப்பதில் பயிற்சி பெற்றதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து ஷிண்டேவின் வாக்குமுலம் குறித்து பதிலளிக்குமாறு இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடமும், வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.யிடமும் நீதிமன்றம் கூறியது. தற்போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள தனது பதிலில் ஷிண்டேவின் வாக்குமூலத்தை நீதிமன்றன் ஏற்க கூடாது என சி.பி.ஐ. கூறியுள்ளது.
ஷிண்டேவின் வாக்குமூலத்தில் உள்ளவை அனைத்தும் தாங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையிலும், மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படையினரின் விசாரணையிலும் உள்ளதைத் தாண்டி ஒன்றும் இல்லை, அதுமட்டுமன்றி வெடிகுண்டுத் தாக்குதல் நடந்து 16 ஆண்டுகள் ஆகியும் தங்களை அனுகாத ஷிண்டே தற்போது வந்து இவ்வாறு கூறுவதால் அவரை ஒரு சாட்சியாக இணைக்கக் கூடாது என சி.பி.ஐ. கூறியுள்ளது.
மேலும் தங்களது விசாரணையில் எந்த ஒரு இடத்திலும் யாரும் ஷிண்டேவின் பெயரைக் கூறவில்லை எனவும் எனவே அவர் சொல்வதை உண்மை என ஏற்க முடியாது என்றும் கூறியுள்ளது.
2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவந்த போது சி.பி.ஐ. இந்த குண்டுவெடிப்புகளுக்கு பயிற்சி அளித்த நிதிஉதவி அளித்த புரொபசர் தேவ் என்ற நபர் யாரெனத் தெரியவில்லை எனக் கூறித்தான் வழக்கை முடித்தது. மேலும் இது குறித்து வேறு ஏதேனும் புதிய தகவல்கள் கிடைத்தால் உடனே வழக்கு விசாரணையை மீண்டும் தொடர்வதாக உறுதியளித்தது.
ஆனால் ஷிண்டேவின் வாக்குமூலத்தில் சி.பி.ஐ. விசாரணையில் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறிக் கைவிடப்பட்ட புரொபசர் தேவ் என்பது விஷ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த ரவி தேவ் என்பவர்தான் என்றும் அவர்தான் தங்களுக்கு குண்டுவைக்க பயிற்சியளித்தார் என்றும் தெளிவாக கூறியுள்ளார். மேலும் அந்தப் பயிற்சியில் தன்னோடு பங்கேற்ற ராக்கேஷ் தாவ்டேவையும் அவர் அடையாளப்படுத்தியுள்ளார். இந்த தாவ்டே மீது மாலெகான் குண்டுவெடிப்பு வழக்கில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
இத்தனை இருந்தும் ஷிண்டேவின் வாக்குமூலத்தை நிராகரித்து அவரை விசாரிக்க கூடாது என சி.பி.ஐ. கூறுகிறது. ஒரு குற்றவாளியே வந்து தான் தான் குற்றம் செய்தேன் எனக் ஒப்புக்கொள்ளும் போதும் கூட சி.பி.ஐ. ஏற்க மறுத்து, தான் காவி பாசிசத்தின் விசுவாசமிக்க சேவகன் என வெளிப்படையாக அறிவிக்கிறது.
- அறிவு.
தகவல் உதவி : தி வயர்