நாடு அதிகாரம் மாற்றமடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது; இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 நாளை அமிருத பெருவிழாவாக நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட வேண்டும் என்று நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டது மோடிக்கும்பல்.
ஆனால், இந்தியா அதிகாரம் மாற்றமடைந்த இந்த 75 ஆண்டுகளில் பல்வேறு தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ளது, இந்திய தரகு முதலாளிகள் உலக பணக்கார பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். ஆனால் மக்களின் வாழ்வாதாரமோ 45 ஆண்டுளாக இல்லாத அளவுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சிறு,குறு தொழில்கள் அழிந்து அன்றாடம் வாழ்க்கையை நடத்துவதற்கே போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆனால் இதை மறைக்கும் விதமாக மனுதர்மத்தின்படியான இந்து ராஷ்ட்டிர ஆட்சியை நிலைநாட்ட பல முனைகளில் ஆர்எஸ்எஸ்-பிஜேபி சங் பரிவார் கும்பல் செயல்பட்டுவருகிறது. அதுதான் இப்போது தேசிய கல்வி கொள்கை எனும் பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே நிலவிய பொருளாதார நெருக்கடி மற்றும் அதை தொடர்ந்து கொரானா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி முதலியவை காரணமாக குழந்தை தொழிலாளர்களின் எண்ணிக்கையும், குழந்தை திருமணங்களும் நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் குழந்தை தொழிலாளர்களை மீட்டு அவர்களுக்கு கல்வி அளித்து பராமரிக்கும் நோக்கோடு 1986-ல் அமைக்கப்பட்ட தேசிய குழந்தை தொழிலாளர் திட்டத்தை (ராஷ்டிரீய பால் ஸ்ரம் பரியோஜனா) கடந்த மார்ச் மாதம் ஒன்றிய பாஜக அரசு கைவிட்டுவிட்டது.
இத்திட்டமானது 100% உதவியுடன் மாநில தொழிலாளர் துறையின் மேற்பார்வையில், மாவட்ட ஆட்சியரை தலைவராக கொண்டு இயங்கி வந்ததது.
இந்த நோக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மோடி அரசு கடந்த மார்ச் மாதத்தோடு இத்திட்டத்தை நிறுத்தி விட்டு, ‘’சமக்ர சிக்ஷாஅபியான்’’ எனப்படும் முழுமையான கல்வித் திட்டத்துடன் அதை இணைத்து விட்டதாக அறிவித்துள்ளது.
ஒன்றிய அரசு, கடந்த மே 2018 தான் சமக்ர சிக் ஷா அபியான் என்ற முழுமையான கல்வி திட்டத்தை தொடங்கியது, இத்திட்டத்தோடு, சர்வ சிக் ஷா அபியான் , ராஷ்டிரீய மத்யமிக் சிக் ஷா எனப்படும் இடைநிலை கல்வியின் தரத்தை உயர்த்த கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் இணைத்துவிட்டது. ஆதனால், அதற்கான மானியங்கள் நிறுத்தப்பட்ட பிறகு குழந்தை தொழிலாளர்களை மீட்பதும் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் 59 மாவட்டங்களிலும், குறிப்பாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் மொத்தம் 223 மையங்கள் இயங்கி வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் திட்டப்பணிகளில் ஈடுபட்டவர்கள் அளித்த தவகலின் படி இந்த மையங்கள் மூடப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இத்திட்டத்தின்படி, மீட்கப்பட்ட ஒரு குழுந்தைக்கு மாதம் ரூ 150 என வழங்கப்பட்டு வந்த உதவித்தொகையானது 2017 ஆம் ஆண்டு ரூ 400 ஆக உயர்த்தப்பட்டது. இதன் பிறகு இந்த உதவித்தொகை பெரும்பாலானோர்க்கு கொடுக்கப்படாமல் அந்த மையங்கள் முறையாக செயல்படாமல் இருந்து இப்போது மூடப்பட்டு வருகின்றன.
இந்த குழுந்தை தொழிலாளர்களின் வாழ்வு கேள்வி குறியாகி அதன் எண்ணிக்கை இனி அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, புதிய தேசிய கல்வி கொள்கை 2020 என்பது, அப்பன் தொழிலையே பிள்ளைகள் செய்ய வேண்டும் என்று குலக்கல்வியை போதிப்பதாக உள்ள நிலையில் அதை நிறைவேற்றும் ஒரு வடிவமாக இனி இந்த பிஞ்சுக்குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டு குழந்தை தொழிலாளர்களாக தெருக்களில் வீசப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
யூனிசெப் நிறுவனம் கடந்த ஆண்டு சமர்பித்த ஆய்வறிக்கையின் படி, உலக அளவில் குழந்தை தொழிலாளர்கள் எண்ணிக்கை 16 கோடியாக உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் 2011 ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2001-2011க்கும் இடைபட்ட பத்து ஆண்டுகளில் 26 லட்சம் குழந்தைகள் குழந்தை தொழிலாளர்கள் அதிகரித்துள்ளனர் இப்படி பட்ட நிலையில் இந்த மையங்களை மூடி குழந்தைகளை நட்டாற்றில் தள்ளியுள்ளது மோடி அரசு. பசுக்களை வைத்து மதவெறி அரசியல் செய்து வரும் மோடி அரசு, பசு பாதுகாப்பு மையங்களை நிறுவி வருகின்றது. ஆனால், நூற்றுக்கணக்கான குழந்தை தொழிலாளர் மீட்பு மையங்களை மூடி, லட்சக்கணக்கான குழந்தை தொழிலாளர்களை மரணக்குழியில் தள்ளுகிறது.
மக்களுக்கு இலவசங்கள் கூடாது என பேசிவரும் மோடி அரசு, மக்களுக்கு கொடுக்கப்படும், சலுகைகள், மானியங்கள், ஏழைகளுக்கு கொடுக்கப்படும் முதியோர் ஓய்வூதிய பலன்கள் என அனைத்தையும் மெல்ல மெல்ல நிறுத்தி வருகிறது. அதே நேரத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி வாரி வழங்குகிறது.
இந்த காவி–கார்ப்பரேட் பாசிச நடவடிக்கையை முறியடிக்காமல் குழந்தை தொழிலாளர்களையோ, முதியோர்களையோ மற்ற உழைக்கும் பிரிவு மக்களையோ பாதுகாக்க முடியாது.
-கவி.