டோலோ 650 மி.கி. மாத்திரையை அதிக அளவில் பரிந்துரைக்கும்படி மருத்துவர்களுக்கு ரூ 1000 கோடி வரை இலவசங்கள் என்ற பெயரில் இலஞ்சம் கொடுத்துள்ளது மைக்ரோ லேப்ஸ் என்ற நிறுவனம் என்ற செய்தி பரவலாகப் பேசப்படுவதை அறிவோம்.
அனைவரும் அறிந்த மேற்கண்ட இரகசியத்தை வருமான வரித்துறை புதியதாக கண்டுபிடித்துவிட்டதாக வானத்திற்கும் ,பூமிக்கும் குதிக்கிறது. நேரடி வரிகள் வாரியமோ (CBDT) இதை மாபெரும் குற்றமாக அணுகுகிறது. இலவசப் பொருட்களை இலஞ்சமாக, மருத்துவர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்திய மருந்துகள் – விற்பனை பிரதிநிதிகள் சங்கமோ உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்கிறது. இலவசங்கள் என்ற பெயரில் வழங்கப்படும் இலஞ்சகள் பற்றி ஒன்றும் தெரியாதவர்கள் போல “இது மிகவும் மோசமான விசயம்” என்று வழக்கை ஏற்றுக் கொண்ட நீதிமன்றமோ விசாரிக்க உத்திரவிட்டுள்ளது.
இலவசங்கள் என்ற பெயரில் மருத்துவர்களுக்கு இலஞ்சம் கொடுப்பதை மைக்ரோ லேப்ஸ், ஃபைசர் போன்ற பல்வேறு பன்னாட்டு, உள்நாட்டு மருத்துவ நிறுவனங்கள் அனைத்தும் அன்றிலிருந்து இன்றுவரை மேற்கொண்டுதான் வருகின்றன.
இவற்றைப் பற்றி ஒன்றும் தெரியாதது போல மேற்கண்ட அரசு நிறுவனங்களும், மருத்துவப் பிரதிநிதிகள் சங்கமும் நடிப்பதுதான் விந்தையாக உள்ளது.
இந்த மருத்துவ நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளையையும் அதற்கு வாய்க்கால் வெட்டித் தரும் மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் இலஞ்சங்களையும், இவர்கள் பரிந்துரைக்கும் தொகைக்கேற்ப அளிக்கப்படும் கமிசன்களையும் சொல்லிமாளாது. இதற்கு விகடனின் ‘போஸ்ட்மார்டம்’ என்ற சிறு பிரசுரமே சாட்சி.
இவையனைத்தும் மனசாட்சியுள்ள மருத்துவர்களுக்கும் தெரியும். இலஞ்சத்திலும் ஊழலிலும் ஊறித் திளைக்கும் அரசு நிறுவனங்களும் அறியும். மேலும், கல்வி, சுகாதாரம் போன்றவைகளைப் போல மருத்துவத்தையும் தனியார்மயமாக்கிவிட்டனர் என்பதையும் அறிவர்.
உண்மை இப்படி இருக்கும்பட்சத்தில் மேற்கண்ட அனைவரும் ஒன்றும் தெரியாதவர்கள் போல, காணாததைக் கண்டதைப் போல சொல்வது; குற்றம் சுமத்துவது; வழக்குத் தொடர்வது; ஆக மிக மோசமான விசயம் என்று நடிப்பதும், நாடகமாடுவதும்தான் அருவருப்பாக உள்ளது.
தனியார்மயம் என்ற பெயரில் உயிர்காக்கும் மருத்துவத்தை, இலாபத்தை மட்டுமே குறியாகக் (இலக்காகக்) கொண்டு செயல்படும், தனியார் முதலாளிகளிடம் தாரை வார்த்துவிட்டு, மனித உயிரைக் காக்கும் மருந்துகளின் பரிந்துரைகளுக்கு மட்டும் இலஞ்சம் தருவது மாபெரும் தவறு என்று குற்றம் சுமத்துவதும், வழக்குத் தொடர்வதும் பித்தலாட்டம் இல்லையா!
அடிப்படைத் தேவையான மருத்துவத்தை மக்களுக்கு ஆரோக்கியமான வகையில் வழங்க வேண்டியது அரசின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. இதைத் தெரிந்தே, மருத்துவத்தைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதை வாடிக்கையாக்கிவரும் இந்த கொலைகார அரசிடம், தண்டிக்கப்பட வேண்டிய அரசிடம் மருத்துவத் துறையில் நடக்கும் இலஞ்ச, இலாவண்யத்தைத் தடுக்கும்படிக் கோருவது பித்துக்குளித்தனம்.
இவற்றை உறுதிப்படுத்தும் வகையில்தான், அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் மலிவு விலையில் மருந்துகளைத் தயாரித்து வழங்கிவந்த IDPL போன்ற பொதுத்துறை நிறுவனங்களைப் படிப்படியாக ஒழித்து, தனியார் மருந்து நிறுவனங்களை கொழுக்க வைத்து வருகிறது.
இவை தயாரிக்கும் மருந்துகளின் விலையைக் கூட இவர்களே தீர்மானித்துக் கொள்ளும் உரிமையை [அம்பானி பெட்ரோல் விலையை நிர்ணயித்து தீர்மானித்துக் கொள்ளும் உரிமையைப் போல] வழங்கி அபரிமிதக் கொள்ளைக்கும் வழிவகுத்துத் தந்துள்ளது.
இதன்விளைவு காசு இல்லையென்றால் கல்விக் கண் பறிக்கப்படுவதுபோல, பணமில்லையென்றால் உயிரும் பறிக்கப்படும் என்பதை மேற்கண்ட நடவடிக்கைகள் மூலம் அரசு உணர்த்திவிட்டது.
இனி என்ன? முதலில் அரசின் பித்தலாட்டங்களை அப்படியே நம்புவதை நிறுத்துவோம். எதையும் கேள்விக்குட்படுத்தாமல் பரிசீலிக்காமல் அப்படியே ஏற்கும் நம்முடைய கண்ணோட்டத்தை விட்டொழிப்போம்.
தனியார்மயம், தாரளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க அரசின் கொள்கை என்ற பெயரில் மருத்துவத்தைத் தனியார்மயமாக்குவதைத் தடுத்து நிறுத்துவோம். இதை உக்கிரமாகச் செயல்படுத்தும் காவிகளின் தலைமையிலான அரசை முறியடிப்போம். இதற்கேற்ப மக்களை அணிதிரட்டுவது நம் முதல் கடமையாக உள்ளது!
மோகன்