உழைக்கும் வர்க்கத்தினரை கொலை செய்யும் இந்திய ஆளும் வர்க்கம்

2021-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தற்கொலைகளின் எண்ணிக்கையில் இரண்டில் ஒரு பங்கு விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் பிரிவினரே உள்ளனர். இதற்கு பிரதானக் காரணம் உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் மோசமான பொருளாதார நிலைமைகளே என்பது சொல்லாமலே விளங்கும். மறுபுறமோ இந்திய தரகு முதலாளிகள் மற்றும் ஏகாதிபத்திய நிதி/தொழில் நிறுவனங்களின் லாபம்/சொத்து மதிப்புகள் வரலாறு காணாத அளவிற்கு கடந்த சில வருடங்களாக உயர்ந்து வருகிறது.

தேசிய குற்ற ஆவண அறிக்கை (NCRB) கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் கடந்தாண்டு (2021) நடந்த குற்றங்கள், சாலை விபத்துக்கள் மற்றும் தற்கொலைகள் பற்றிய விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. அதில் கடந்தாண்டு பதிவாகியுள்ள 1,64,033 தற்கொலைகளில் 42,004 தற்கொலைகள், அதாவது மொத்த தற்கொலையில் 25.06 சதவிகித தற்கொலைகள், தினக்கூலி தொழிலாளர் பிரிவினரிடம் நடந்துள்ளது. கீழே உள்ள படத்தில் கடந்த எட்டாண்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலைகள் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

 

NCRB அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள சில முக்கிய விவரங்கள்:

2014 ல் 15,735 ஆக இருந்த தினக்கூலி தொழிலாளர்களின் தற்கொலை எண்ணிக்கை 2021 ல் 42,004 ஆக (260 சதவிகிதம் உயர்ந்து) உயர்ந்துள்ளது. 

2021 ல் விவசாயிகளின் தற்கொலை 10,881 ஆக பதிவாகி உள்ளது. இதில் 5,563 பேர் விவசாயத் தொழிலாளர்கள். 2019 ல் 4,324 இருந்த விவசாயத் தொழிலாளர்களின் தற்கொலை என்ணிக்கை 2020 ல் 5,098 ஆகவும் 2021 ல் 5,563 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஏழாண்டுகளில் 70000 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளதாக அறிக்கைக் கூறூகிறது.

 

 

2021 ல் சுயதொழில் பிரிவினரில் 20,231 பேர் தற்கொலை செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 17 சதவிகிதம் அதிகரித்துள்ளது. 

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குகிறேன் என்றார் பிரதமர் மோடி. ஆனால் அதற்கான சுவடே தெரியவில்லை. 70000 விவசாயிகள் தற்கொலையும் இந்திய விவசாயத்துறையில் கார்ப்பரேட்கள் நுழைந்திருப்பதும் தான் நடந்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் இங்கிலாந்தை பின்னுக்குத் தள்ளி ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியிருப்பதாக பெருமை கொள்கின்றனர் ஆளும் வர்க்கத்தினர். ஆனால், பொருளாதாரக் காரணங்களால் விவசாயிகள், தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் புரிவோர் என மொத்தமாக 73111 பேர் கடந்த ஆண்டில் மட்டும் தற்கொலை செய்துள்ளனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி விதிப்பு, கொரோனா பேரழிவு, விலைவாசி உயர்வு என மோடியின் மக்கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளினால் சிறுதொழில் அழிப்பும், விவசாயத்தை விட்டு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் வெளியேறுவதும் தொழிலாளர்கள் வேலையிழப்பும் / வேலை வாய்ப்பின்மைமையும் உழைக்கும் வர்க்கப் பிரிவினரின் தற்கொலைகளுமே அதிகரித்துள்ளது. கண்முன்னேத் துலக்கமாகத் தெரிகின்ற இந்த முதலாளித்துவ ஒடுக்கு முறையையும், அதைத் தாங்கி நிற்கின்ற காவி-கார்ப்பரேட் பாசிஸ்ட்டுகளையும் ஒழிப்பதே நம் முன்னுள்ள முக்கியக் கடமையாகும்.

அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன