ஸ்டெர்லைட் படுகொலை: அரங்கேறுகிறது கொலைக் குற்றவாளிகளை தப்புவிக்கும் நாடகம்.

நாம் வாழ்ந்துகொண்டிருப்பது சிலப்பதிகார‌ கண்ணகி வாழ்ந்த பாண்டிய அரசில் அல்ல, தான் செய்தது தவறென்று தெரிந்த உடனே மாண்டுபோக. நாம் இருப்பதோ ஜனநாயகத்தின் பேரில் பாசிச கரங்கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கிக் கொல்லும் காவி கார்ப்பரேட் அரசில். இதற்கு எவ்வகையான அறமோ, மக்கள் நலமோ கிடையாது.

ஸ்டெர்லைட் படுகொலை குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை சட்டசபையில் சமர்பிக்கப்படும் என்றும், அறிக்கையில் பரிந்துரைத்துள்ளபடி தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்குக் காரணமான 17 போலீசார் மீதும், 4 மாவட்ட அதிகாரிகள் மீதும் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான ஆணைகள் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பப்பட்டு அவை ஏற்கெனவே பரிசீலனையில் உள்ளன என்றும் சமீபத்தில் (29 ஆகஸ்டு 2022) நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு தெரிவிக்கப்பட்டிருக்கிறது..

தூத்துக்குடி படுகொலை என்பது ஸ்டெர்லைட் நிர்வாகமும், போலீசும், அரசும் இணைந்து திட்டமிட்டு நடத்தியதொரு படுகொலை. இதனை மூடி மறைத்து போலீசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் திறமையின்மையால் நடந்துவிட்ட நிகழ்வாக அதனை திசை திருப்புகிறது அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கை.

 

 

ஆணையத்தின் அறிக்கையில் கசிந்திருக்கும் விசயங்களைப் படித்தாலே துப்பாக்கி சூடு திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியும், அப்படியிருக்கையில் இதனைத் திட்டமிட்டு நடத்தியது யார், யாருடைய நலனுக்காக நடத்தப்பட்டது என்ற முக்கியமான கேள்விக்குள் விசாரணை ஆணையம் செல்லவில்லை. அனில் அகர்வாலை காப்பாற்றவே படுகொலைக்கான பொறுப்பு முழுவதும் போலீசின் தலையில் மட்டுமே சுமத்தப்பட்டுள்ளது.

தற்போது ஆணையத்தின் பரிந்துரையை அமுல்படுத்துகிறோம் என்ற பெயரில் பிரச்சனையை ஊற்றி மூடும் வேலையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இனி துறை சார்ந்த நடவடிக்கை என்ற பெயரில் 15 பேரைத் திட்டமிட்டு கொலை செய்த போலீசாருக்கும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கும் தற்காலிக பணீநீக்கம், அல்லது இடமாறுதல் போன்ற உச்சபட்ச தண்டணைகள் வழங்கப்படுவதுடன் இந்த நாடகம் முடித்துவைக்கப்படும். இதற்கு நம் கண்முன்னே எண்ணற்ற இரத்த சாட்சியங்கள் உள்ளன.

ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சியதிகாரத்தில் இருக்கும் போது, வாச்சாத்தி கிராம மக்கள் சந்தனமரக் கடத்தலில் ஈடுபடுவதாகவும், ஆற்றுப் படுகையில் சந்தனக் கட்டைகளைப் பதுக்கி வைத்திருப்பதாகவும்  கூறிக்கொண்டு, 1992 ஜூன் பத்தாம் நாள் வாச்சாத்தி பழங்குடி கிராமத்திற்கு நூற்றுக்கணக்கில் வந்திறங்கினர், போலீசு, வனத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளும் ஊழியர்களும். அதிகார போதையும் காமவெறியும் தலைக்கேற காட்டுமிராண்டித்தனமாகப் பாய்ந்து, பெற்ற தாய்மார்கள் கண்முன்பாகவே 13 வயது பள்ளிச் சிறுமி உட்பட 18 இளம்பெண்களை நிர்வாணப்படுத்திக் கும்பல் பாலியல் வன்முறை செய்தார்கள். ஆண்களில் பலர் உயிருக்கு அஞ்சி காடுகளுக்குள் ஓடி ஒளிந்து கொள்ள, கையில் சிக்கியவர்களையும் பெண்களையும் அடித்து நொறுக்கினார்கள்.  ஆடு, மாடு, கோழிகள் உட்பட அவர்களின் உடமைகளைக் கொள்ளையடித்ததோடு, உணவு தானியங்களைத் தீ வைத்துக் கொளுத்தியும், குடிநீர்க் கிணற்றில் மண்ணெண்ணெயைக் கொட்டியும் போலீசு ரௌடிகள் நாசப்படுத்தினர். இக்கோரச் சம்பவம் நடந்து பதினைந்து நாட்களுக்குப் பிறகே வெளி உலகுக்குத் தெரியவந்தது.

 

 

ஆனால் இந்த காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு காரணம் வேறு. தருமபுரி மாவட்ட அரூர் பகுதி காட்டிலாக்கா அதிகாரிகளே 60டன் எடையுள்ள சந்தனமரங்களை (1992ல் அதன் மதிப்பு ஒன்றரைக்கோடி) சட்டவிரோதமாக வெட்டி, பின்னாளில் கடத்துவதற்காக அரூர் பகுதியில் பதுக்கிவைத்துள்ளனர். மொரப்பூர் பகுதி காட்டிலாக்கவின் வழக்கமான சோதனையில் இவ்விசயம் மாட்டிக்கொண்டது. இதில் அரூர் காட்டிலாக்கா போலீசுதான் அதைச் செய்துள்ளது என அம்பலமாகிப்போன சூழ்நிலையில் அதை மறைப்பதற்காக நடத்தப்பட்டதே இந்த கொடும் வன்முறை. சந்தனமரக் கட்டை கடத்தலில் மாஃபியாக்களுடன்  இந்த அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் வைத்துள்ள கள்ளக்கூட்டை மறைப்பதற்கே இந்த மக்கள் மீது இத்தகைய கொடூர வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது.

ஆனால் வாச்சாத்தி மக்கள் மீது தாக்குதல் நடவடிக்கைக்கு உத்திரவிட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் போலீசு அதிகாரிகள் தண்டனை ஏதுமின்றித் தப்பித்துக் கொண்டார்கள். வாச்சாத்தி குற்றவாளிகள் 19 ஆண்டு காலம் சுதந்திரமாக இருந்ததோடு, மேலும் மேல்முறையீடு என்று தண்டனையின்றித் தப்பித்து வாழ்கிறார்கள். இதில் 54 பேர் குற்றமிழைத்துவிட்டு தண்டைனையின்றி வாழ்ந்து, இயல்பாக செத்தும் போய்விட்டார்கள்.

அடுத்து 1999ல் கருணாநிதியின் திமுக ஆட்சியதிகாரத்தில் இருக்கும்போது, மாஞ்சோலைத் தேயிலை எஸ்டேட் முதலாளிக்கு தனது எஜமான விசுவாசத்தை காட்ட மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுக்கப்போன போது அவர்கள் மீது நெல்லையில் குவிக்கப்பட்ட போலீசு அதிரடிப்படை, கொலை வெறிபிடித்த கூலிப்படையாக மாறித் தாக்குதல் நடத்திய‌து..

வானை நோக்கிச் சுட்ட போலீசு அதிரடிப்படை, பேரணியினர் மீது கண்ணீர்ப் புகை, குண்டு வீச்சு, தடியடி, கல்வீச்சு நடத்தி நெல்லை தாமிரபரணி ஆற்றில் தள்ளி, மிருகத்தனமாகப் படுகொலைகளைச் செய்திருக்கிறது. ஆற்றுக்குள் தள்ளப்பட்டவர்களை விடாது அடித்து நொறுக்கும்படி உயர் போலீசு அதிகாரி உத்திரவிட்டிருக்கிறார். கரையேற முயன்ற பெண்கள், முதியவர்களை விடாது தாக்கி அவர்களை மீண்டும் ஆற்றுக்குள் தள்ளியதோடு, வெளியே வீசப்பட்ட இரண்டு வயதுக் குழந்தையையும் மீண்டும் ஆற்றுக்குள் தூக்கி வீசியிருக்கிறான் ஒரு போலீசு வெறிநாய்.

 

 

போலீசின் வெறியாட்டத்தை படம் பிடித்த தினமணி நிருபரை அடித்து மிதித்து, காமிராவையும் உடைத்த தோடு, ஆற்றில் தத்தளித்த பெண்களைக் காப்பாற்ற முயன்ற நிருபர்களை மிரட்டி விரட்டியிருக்கிறது போலீசு அதிரடிப்படை. இவ்வளவையும் அறங்கேற்றியபின், அதற்கு ஒரு விசாரணைக் கமிசனையும் வைத்து, போராட்டத்தை கலைக்க முற்பட்டபோது மக்கள் தாங்களாகவே தாமிரபரணி ஆற்றில் விழுந்து செத்தனர் என்று வழக்கை இழுத்து மூடியது அன்றைய திமுக‌ அரசு.

இது போன்ற எண்ணற்ற அரசபயங்கரவாத தாக்குதல்களை தமிழ்நாடும், இந்தியாவும் கண்டுள்ளது. போலீசு நிலையக் கொட்டடிக் கொலையோ, வாச்சாத்தி – சின்னாம்பதி போன்ற பெருந்திரள் பாலியல் வன்கொடுமையோ, மாஞ்சோலை போன்ற பெருந்திரள் படுகொலையோ,  எந்தவொரு கிரிமினல் குற்றமானாலும் அதற்கு வக்காலத்து வாங்கி, அதிகாரிகள் – போலிசைக் காப்பாற்றுவதே ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதேபோல ஆட்சியாளர்களின் இலஞ்ச – ஊழல் – அதிகார முறைகேடுகளில் உடந்தையாக இருந்து, பங்கு பெறுவதே அதிகாரிகள் – போலீசின் வாடிக்கையாக உள்ளது. இந்தக் கூட்டணிதான் தனது கார்ப்பரேட் எஜமான விசுவாசத்திற்காக தொழிலாளர்களையும், போராடும் பெருந்திரள் மக்களையும் படுகொலை செய்துவருகிறது.

இம்மாதிரியான மக்கள்விரோத நடவடிக்கையினை மூடிமறைக்க அமைக்கப்படுவதுதான் இந்த விசாரணை ஆணையம் என்பது. இதன் வேலை இதுகாரும் நடந்தேறிய மக்கள் விரோத கொடுஞ்செயல்களுக்கும் ஆளும் அரசுக்கும், அதன் கார்ப்பரேட் எஜமானனுக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. தவறிழைத்த அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்று பரிந்துரைத்து தண்டனையிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதைத்தான் அவை இன்றுவரை செய்து வருகின்றன.

இது போன்ற வழக்குகளில் போலீசு மற்றும் அரசு அதிகாரிகள் மீதான தண்டனை என்பது கேலிக்கூத்தாகவே இருக்கும். குற்றம் நடந்து விசாரணை முடியவே பல ஆண்டுகாலம் ஆகும். அதன் பிறகு தண்டணை வழங்கும் முன், பல பதவி உயர்வுகளைப் பெற்று மேலதிகாரியாகவோ, மேல்முறையீடு மூலம் தண்டனையிலிருந்து தப்பிப்பவராகவோ அல்லது ஓய்வு பெற்றவராகவோ அல்லது இயற்கை மரணம் அடைந்தவராகவோ இருப்பர். இதுதான் வரலாறு. இதுதான் ஸ்டெர்லைட் படுகொலை வழக்கிலும் நடந்துவருகிறது.

ஸ்டெர்லைட் நிர்வாகத்திற்கும், அன்றைய எடப்பாடி அரசுக்கும் துப்பாக்கிச் சூட்டில் தொடர்புள்ளது என்று ஆணையம் கூறியிருந்தால் என்னவாகும்?, தனது எஜமானன் அனில் அகர்வாலுக்காக எடப்பாடி-மோடி கும்பல் போலீஸ் அடியாட்படையைக் கொண்டு நடத்தியப் படுகொலை என்பது அம்பலமாகும். அதுமட்டுமின்றி, இந்தியாவில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக மக்களின் தீர்மானகரமான, ஒருங்கிணைக்கப்பட்ட‌ போராட்டங்கள் எங்கு நடந்தாலும் அதை சுட்டு வீழ்த்துவோம் என்பதற்கான ஒரு மாதிரி செயல் வடிவம் தான் இந்த தூத்துக்குடி மாடல் என்பதும் அம்பலமாகும்.

அத்தகைய விசயங்கள் நடந்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசும், விசாரணை ஆணையங்களும் கண்ணும் கருத்துமாக செயல்பட்டுவருகிறது. நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் மிகக் கவனமாக அனில் அகர்வால், அன்றைய அதிமுக-பாஜக உள்ளிட்ட அரசின் தொடர்புகள் பற்றி எந்தவித விசாரணைக்கும் போகவில்லை.

 

மோடி அகர்வால் கூட்டணி
மோடி அகர்வால் கூட்டணி

நாம் வாழ்ந்து கொண்டிருப்பது சிலப்பதிகார‌ கண்ணகி வாழ்ந்த பாண்டிய அரசில் அல்ல, தான் செய்தது தவறென்று தெரிந்த உடனே மாண்டுபோக. நாம் இருப்பதோ ஜனநாயகத்தின் பேரில் பாசிச கரங்கொண்டு மக்களை அடக்கி ஒடுக்கி கொல்லும் காவி கார்ப்பரேட் அரசில். இதற்கு எவ்வகையான அறமோ, மக்கள் நலமோ கிடையாது. இது மக்களுக்கான அரசு அல்ல, கார்ப்பரேட் நலனுக்கானது. போபால் படுகொலை, ஸ்டெர்லைட் படுகொலை, ஆபரேசன் பசுமைவேட்டை, வடகிழக்கு மாநில மற்றும் காஷ்மீரத்து மக்கள் மீதான தொடர்ச்சியான இராணுவ வேட்டை போன்ற எண்ணிலடங்கா உள்நாட்டுப்போரை ஏவி தன் சொந்த மக்களை படுகொலை செய்யும் கொலைகார அரசு என்பதையே மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறது.

இந்த அரசமைப்புக்குள் இருந்துகொண்டு குற்றவாளிகளை சட்டபூர்வமான வழிகளில் தண்டிப்பது சாத்தியமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது. நமக்கிருப்பது ஒரே வழிதான், பிரெஞ்சுப் புரட்சியின் கில்லெட்டின்களிலும், இரண்டாம் உலகப்போரின் முடிவில் ஜெர்மனியில் அளிக்கப்பட்ட நூரம்பர்க் விசாரணை தீர்ப்புகளிலிருந்தும் கண்டெடுப்பதே ஆகும். 

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன