இம் என்றால் கைது உம் என்றால் சிறை என்று அரசின் ஒடுக்குமுறைக் குறித்து பரவலாக சொல்வதுண்டு. ஆனால் மோடி-அமித்ஷா கும்பலோ ஒருபடி மேலே சென்று தங்களது கருத்துக்களை ஏற்றுகொள்ளவில்லை என்றாலே NSA, UAPA போன்ற மிகக்கடுமையான சட்டங்களை கொண்டு ஒடுக்கி வருகிறது.
நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர், 2018 லிருந்து 2020 வரையிலான இரண்டு ஆண்டுகளில் மட்டும் UAPA சட்டத்தின் கீழ் 4960 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அதில் 149 பேரின் குற்றம் மட்டுமே நிருபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார். அதாவது கைது செய்யப்பட்டவர்களில் 97 சதவிக பேர் குற்றம் நிருபிக்கப்படாமல் இரண்டாண்டுகளாக சிறையில் உள்ளனர். குறிப்பாக கைது செய்யப்பட்டவர்களில் 53 சதவிகிதம் பேர் இளைஞர்கள்(18-30 வயதுக்கு உட்பட்டவர்கள்) இதில் அதிகமானோர் உத்திரப்பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சார்ந்தவர்கள். இதிலிருந்தே இந்த கைதுகளுக்கு பின்னால் இருக்கின்ற மோடி-அமித்ஷா கும்பலின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளமுடியும். கடந்த ஐந்து வருடங்களில் UAPA ல் கைது செய்யப்பட்டவர்களின் ஆண்டு வாரியான விவரங்களையும் இணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆண்டு | பதியப்பட்ட வழக்குகள் | கைது செய்யப்பட்டவர்கள் | குற்றம் நிருபிக்கப்பட்டவர்கள் | வழக்கிலிருந்து விடுதலை ஆனவர்கள் |
2016 | 922 | 3047 | 24 | 19 |
2017 | 901 | 4098 | 39 | 42 |
2018 | 1182 | 4862 | 35 | 117 |
2019 | 1226 | 5645 | 34 | 92 |
2020 | 796 | 6482 | 80 | 116 |
5027 | 24134 | 212 | 386 |
R.S.US.Q.NO. 383 For 20.07.2022
ஒவ்வொரு ஆண்டும் UAPA ல் கைது செய்யப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மற்ற வழக்குகள் போல் இல்லாமல் UAPAல் கைது செய்யப்பட்டவர்களுக்கு எளிதாக பிணையில் வெளிவர முடியாது. ஆகையால் கடந்து ஐந்து ஆண்டுகளில் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களில் மிகப்பெரும்பான்மையினர் (97.5%) பிணை கிடைக்காமல் சிறையில் உள்ளனர். பல வழக்குகளில் இன்னும் trail கூட ஆரம்பிக்கவில்லை.
தேச ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிரான நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்றுக் கூறி 1967 ல் UAPA சட்டம் கொண்டுவரப்பட்டது. பிறகு இஸ்லாமிய பயங்கரவாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதாகக் கூறி 2008 மற்றும் 2012ல் சட்டத்திருத்தத்தினை காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்தது. 2019ல் மோடி-அமித்ஷா கும்பலானது தனது பாசிச ஒடுக்குமுறைக்காக என்.ஐ.ஏ.க்கு அதிக அதிகாரத்தை கொடுப்பது தனிநபர்களையும் தீவிரவாதிகள் என்று முத்திரைக் குத்தி கைது செய்வது உள்ளிட்ட சில திருத்தங்களையும் சேர்த்து UAPA சட்டத்தினை மிகவும் கடுமையாக்கியுள்ளது. முதலில் பிரிவினைவாதத் தடைச் சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்ட UAPA சட்டத்திற்குள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்புகள் சேர்க்கப்பட்டன. இப்போது தனிநபர்களையும் பயங்கரவாதிகள் என்று அறிவிப்பதற்கான திருத்தம் என UAPA சட்டத்தின் கோரபற்கள் கூர்மையாக்கப்பட்டுள்ளது.
மோடி-அமித்ஷா பாசிச கும்பல் இச்சட்டத்தினைக் கொண்டு கார்பரேட்களுக்கான திட்டங்களை எதிர்ப்பவர்களையும் இந்துத்துவா செயல்திட்டத்திற்கு எதிராக இருப்பவர்களையும் மாவோயிஸ்ட்கள் மற்றும் தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர்கள் என முத்திரை குத்தி கைது செய்து சிறையிலடைத்து வருகிறது.
பீமாகொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 16 பேர், டெல்லி சிஏஏ போராட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள உமர்காலித் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் அகில் கோகாய் சமூக செயற்பாட்டாளர்கள், உ.பி-ஹத்ராஸ் சிறுமி கற்பழிப்பு, கொரோனா மரணங்கள் மற்றும் உ.பி.- ஆதித்தியநாத்தின் காட்டாச்சி ஆகியவற்றை அம்பலப்படுத்தியதற்காக கைது செய்யப்பட்டுள்ள பல பத்திரிக்கையாளர்கள், திரிபுராவில் வி எச் பி அரங்கேற்றிய கலவரத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக 102 பேர் மீது வழக்கு, சமீபத்தில் ஜார்கண்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ரூபேஸ் குமார் கைது, தீவிரவாதி என்று ஜம்மு-கஷ்மீர் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பல அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் என UAPA கைது பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
அன்று காலனிய இந்தியாவை சுரண்டுவதற்காக மிகக்கடுமையான சட்டங்களை கொண்டு வந்தது பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம். ஆனால் இன்றைய மறுகாலனியாக்க இந்தியாவிலோ தங்களது ஏகாதிபத்திய எஜமானர்கள் மற்றும் தரகு முதலாளிகளின் சுரண்டல்களுக்காவும் இந்து-இந்தி-இந்தியா திட்டத்திற்காவும் UAPA என்ற மிகக் கொடுமையான சட்டத்தினைக் கொண்டு பாசிசத்தினை அரங்கேற்றி வருகிறது மோடி-அமித்ஷா கும்பல்.
- அழகு