ஒன்றிய தொலை தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ், பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு “ஒழுங்காக வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வீட்டுக்கு அனுப்பி விடுவேன்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளுடன் நடந்த அலோசனைக் கூட்டத்தில் “உங்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறதோ அதனை நீங்கள் செய்து முடிக்கவேண்டும். இல்லையென்றால் மூட்டையைக் கட்டுங்கள். சந்தேகமே வேண்டாம் இனி இதுபோன்ற முடிவுகள் தான் இங்கே சகஜம். சிறப்பாக வேலை செய் அல்லது ஒழிந்துபோ இது தான் இனி நடக்கும்” என்று கூறியுள்ளார்.
மேலும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் போன்றவற்றுடன் போட்டி போடும் அளவிற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளர்.
அது மட்டுமன்றி வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்கள் விருப்ப ஓய்வு பெற்றுச்சென்று விடுங்கள். அவ்வாறு செல்ல மறுப்பவர்களை 56j விதியைப் பயன்படுத்தி கட்டாய ஓய்வில் அனுப்பிவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் பி.எஸ்.என்.எல். நிறுவனம் நட்டத்தில் இயங்குவதற்கு அதன் ஊழியர்களே காரணம். அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அதிகம் திமிருடன் நடந்து கொள்வது மற்றும் ஒழுங்காக வேலை செய்யாமல் இருப்பது ஆகிய காரணங்களால் தான் வாடிக்கையாளர்கள் வேறு நிறுவனங்களை நாடிச் சென்று விட்டனர் என்று கூற வேண்டும்.
பொதுப்புத்தியில் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீது இருக்கும் ஒரு அபிப்ராயத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி கடந்த 8 ஆண்டுகளாக திட்டமிட்டு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தாங்கள் ஒழித்துக்கட்டி வருவதை அமைச்சர் மறைக்கப் பார்க்கிறார்.
5ஜி ஏலம் முடிவடைந்துள்ள நிலையில் அதில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் பங்கேற்காதது குறித்து வட இந்திய சமூக ஊடகங்களில் அந்நிறுவனத்தின் திறனின்மை குறித்து கேலிசெய்வது அதிகரித்துள்ளது. தனியார் நிறுவனங்கள் 5ஜி சேவையைக் கொடுக்க போட்டி போடும்போது பி.எஸ்.என்.எல். இன்னமும் 4ஜி சேவையைக்கூட வழங்க முடியவில்லை என்று பாமரத்தனமாகக் கேலி செய்கிறார்கள்.
அதையே அமைச்சர் வேறு வார்த்தைகளில் கூறி ஏமாற்றுகிறார். பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது நட்டத்தில் இயங்குவதற்கும், 4ஜி சேவையை வழங்க முடியாமல் முடங்கிக் கிடப்பதற்கும், இந்தக் காவிக் கும்பலின் கார்ப்பரேட் அடிமைத்தனம் தான் காரணம் என்பதை பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த செல்லப்பா அவர்கள் அரண் செய் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அம்பலப்படுத்தியுள்ளார்.
இந்தியாவில் 4ஜி தொழில்நுட்பம் 2016ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டே தனியார் நிறுவனங்கள் 4ஜி சேவையை வழங்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை பி.எஸ்.என்.எல். நிறுவனத்தினால் 4ஜி சேவையை வழங்க இயலவில்லை.
இதற்கு காரணம், எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் 4ஜி சேவையை வழங்க வேண்டும் என்றால், அதற்கு மூன்று உபகரணங்கள் (Components) தேவைப்படுகின்றன. ஒன்று அலைக்கற்றை, இரண்டாவது தொழில்நுட்பம் அதாவது சாதனங்கள், மூன்றாவது ஒரு லட்சம் தொலை தொடர்பு கோபுரங்கள்.
இதில் அலைக்கற்றை பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்கு 2019ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அடுத்தாக 4ஜி தொழில்நுட்ப சாதனங்களை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து மட்டுமே பி.எஸ்.என்.எல். வாங்க வேண்டும் என்று ஒன்றிய அரசு கட்டுபாடு விதித்தது. உள்நாட்டில் 4ஜி சாதனம் தயாரிப்பதற்கான நிறுவனங்கள் எதுவும் கிடையாது என்பது நகைமுரண்.
ஜியோ ஏர்டெல் போன்ற தனியார் நிறுவனங்கள் சீனா ஆஸ்திரேலியா என வெளிநாடுகளில் இருந்து தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து உடனடியாக 4ஜி சேவையைத் தொடங்கி விட்ட அன்றைய சூழலில். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்திடம் மட்டுமே சாதனம் வாங்க வேண்டும் என பி.எஸ்.என்.எல். நிர்பந்திக்கப்பட்டது.
2020 வரை எந்த இந்திய நிறுவனமும் 4ஜி சாதனங்களை உற்பத்தி செய்யும் திரண் கொண்டதாக இல்லாததால் 4ஜி சேவை தொடங்குவது குறித்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் கனவு கூட காண முடியவில்லை.
தற்போது டி.சி.எஸ். நிறுவனம் 4ஜி சாதனங்களை வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இருந்தாலும் அந்நிறுவனத்தால் சோதனை ஓட்டத்தைக் கூட ஒழுங்காக முடிக்க இயலவில்லை.
டி.சி.எஸ் நிறுவனம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்த பிறகே அவர்களிடம் சாதனங்களை வாங்கி ஒரு லட்சம் தொலைத்தொடர்பு கோபுரங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் நிறுவமுடியும். அதன் பிறகு தான் 4ஜி சேவையை வழங்கமுடியும்.
எனவே பி.எஸ்.என்.எல். நிறுவனம் எந்தக் காலத்திலும் 4ஜி சேவையை வழங்கிவிடக் கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டே இத்தனை தடைகளை இந்த காவி கார்ப்பரேட் பாசிச கும்பல் ஏற்படுத்தியுள்ளது.
2016ல் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடங்கப்பட்ட போதே 4ஜி சேவைக்கான அனுமதியுடன், அலைக்கற்றையுடன், வெளிநாட்டு நிறுவனங்களுடனான தொழில்நுட்ப கூட்டுடன் தொடங்கப்படுகிறது. அதேசமயம் அதன் வளர்ச்சிக்கு வழிவிடும் வகையில் பி.எஸ்.என்.எல். முடமாக்கப்படுகிறது.
இவ்வாறு தரகு-ஏகாதிபத்திய நிறுவனங்களுக்காக பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை முடக்கி அதனை திட்டமிட்டு நட்டத்தில் தள்ளியதை மூடி மறைத்துவிட்டு. இன்றைக்கும் கூட 5ஜி ஏலத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை பங்கேற்க விடாமல் மறைமுகமாக சதி செய்து தடுத்துவிட்டு ஊழியர்களை மிரட்டுகிறார் தொலை தொடர்புத்துறை அமைச்சர்.
– மதி
தகவல் ஆதாரம்: