இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி

இணையவழிக் கல்வி : கல்வியை தனியார்மயமாக்கும் காவி கார்ப்பரேட்டுகளின் சதி

புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிதல்களை மோடி அரசு 2017ம் ஆண்டில் அறிவித்தபோது அதில் கல்வி தனியார்மயத்தின் முக்கிய அம்சமாக புகுத்தப்பட்டதுதான் மூக்ஸ் (Massive open online course), இதன் படி நம் நாட்டின் உயர்கல்வித் துறையில் கல்லூரிப் பாடங்களை இணையவழியில் கற்பிக்கும் திட்டம் கொண்டுவரப்பட்டு, புதிய கல்விக்கொள்கை முழுவதுமாக எழுதப்பட்டிராத அன்றைய சூழலிலேயே, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் சார்பில் ஸ்வயம் (SWAYAM) என்ற இணையதளம் 2017ம் ஆண்டே உருவாக்கப்பட்டது.

2021ம் ஆண்டில் கொரோனா நோய்ப்பரவல் தீவிரமாக இருந்தபோது கல்லூரிகள் இயங்க இயலாமல் இருந்த காரணத்தால் கல்லூரி மாணவர்கள் தங்களது பாடங்களை இணையவழியில் இந்த ஸ்வயம் (SWAYAM) இணையதளம் மூலமாக படித்துக் கொள்ளலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு (யூ.ஜி.சி.) அறிவித்தது.

இதன் மூலம் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களுடைய மொத்த பாடங்களுக்கான தரமதிப்பீடுகளில் (credit) 40 சதவிதத்தை, அதாவது இளநிலை வேதியியல் படிக்கும் மாணவர், மொத்தமாக மூன்றாண்டுகளில் படிக்கும் 32 பாடங்களுக்கு 146 தரமதிப்பீடுகள் எனக் கொண்டால், அதில் 40 சதவிகித பாடங்களை அதாவது 14 பாடங்களை ஸ்வயம் இணையதளம் மூலமாகவே படித்துக் கொள்ளலாம்.

 

 

கொரோனா பரவலின் காரணமாக கல்லூரிகள் இயங்காத சூழலில் மாற்று ஏற்பாடாக கொண்டுவரப்பட்ட வசதி என்பதால் ஸ்வயம் மற்றும் பிற இணையதளங்களில் வழியாக பாடங்களைப் படிக்க மத்திய அரசு அறிவுறுத்தியது. ஆனால் கொரோனா கட்டுக்குள் வந்து பள்ளி/கல்லூரிகள் இயல்பு நிலைக்கு வந்து விட்ட நிலையில் ஸ்வயம் திட்டத்தினை நிரந்திரமாக்கும் நோக்கத்தோடு தற்போது புதிய அறிவிப்பு ஒன்றிணை யூஜிசி வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் ஜூன் 3 ம் தேதி பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுக்கு யூஜிசியின் செயலாளர் ராஜ்னீஷ் ஜெயின் எழுதியுள்ள கடிதத்தில் ’ஸ்வயம் தளத்தில் பல்வேறு வகையான பாடங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் இதில் மாணர்கள் சேர்ந்து படிப்பதற்கான வழிகளைப் பல்கலைக்கழகங்கள் மாணவர்களுக்கு உருவாக்கித் தரவேண்டும் என்றும் கூறியுள்ளார். கூடவே ஸ்வயம் தொடர்பாக மாணவர்களிடம் யூஜிசி நடத்தியுள்ள கணக்கெடுப்பின் முடிவுகளை குறிப்பிட்டு, பெரும்பான்மை மாணவர்கள் ஸ்வயம் வழியாக பாடங்களைப் படித்து தேர்வெழுதி மதிப்பெண்களை credit transfer செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்புமாறு அக்கடிதத்தில் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை சாதகமாக்கிக் கொண்டு ஸ்வயம் தளம் மூலம் இணைய வழியில் உயர்கல்வி படிப்புகளைத் திணித்து வந்த ஆட்சியாளர்கள் தற்போது அதனை நிரந்தரமாக்குவதற்கு சில புள்ளி விவரங்களைக் மேற்கோள் காட்டி ‘மாணவர்கள் விருப்பம் தெரிவிப்பதாக’ கதையளக்கின்றனர். credit transfer செய்வது பற்றி ஸ்வயம் தளம் வழியாக யூஜிசி எடுத்த கணக்கெடுப்பே முதலில் நகைப்பிற்குறியது. இக்கணக்கெடுப்பில் கலந்து கொண்ட 332 பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 16128 மாணவர்களில் 11670 மாணவர்கள் credit transfer க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். AISHE 2019-20 அறிக்கையின் படி இந்தியாவில் மொத்தம் 1050 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் 3.85 கோடி மாணவர்கள் உயர்கல்வி படிக்கின்றனர். இவர்களில் யூஜிசி கூறும் 11670 பேர் என்பது மிகவும் சொற்ப எண்ணிக்கையாகும். அதாவது உயர்கல்விப் படிக்கும் மொத்த மாணவர்களில் வெறும் 0.03 சதவிகித மாணவர்களை காரணம் காட்டி உயர்கல்விப் படிக்கும் பலகோடி மாணவர்களை இணையவழியில் படிப்பதற்கான சதி வேலையை யூஜிசி செய்துள்ளது. மேலும் இத்திட்டத்தினால் ஆயிரக்கனக்கான பேராசிரியர்கள் வேலையிழப்பதற்கு வாய்ப்புக்கள் உள்ளதென்பதால் பேராசிரியர் சங்கங்கள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

 

 

இணைய வழி கற்பித்தல் முறையானது பள்ளி/கல்லூரி மாணவர்களின் கற்றல் திறனை வெகுவாக பாதிப்படையச் செய்துள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் கற்றல்-கற்பித்தல் தொடர்பாக வந்துள்ள பல அறிக்கைகள் (NSSO report, USDIE report, Azim premji University report) இதனை உறுதி செய்துள்ளன. இணையவழியிலான கற்றல்-கற்பித்தலின் வழியே வசதிபடைத்தவர்களே கல்வி பெற முடிகிறதென்றும் சமுதாய-பொருளாதார நிலையில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற-விவசாய பின்புலத்திலிருந்து வரக்கூடிய மாணவர்களால் கல்வியைச் சரிவர தொடர முடியவில்லை என்றும் இவ்வறிக்கைகள் கூறுகின்றன.

அதேவேளையில் இணைய அடிப்படையிலான கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களின் (Edutech) அபரீத வளர்ச்சியும் அதில் ஏராளமாக அந்நிய நேரடி முதலீடுகள் குவிவதும் இக்காலகட்டத்தில் நடந்துள்ளது. உதாரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட கல்வி தொழில்நுட்ப நிறுவனங்கள் கடந்த இரண்டாண்டுகளில் தோன்றியுள்ளன. கொரோனா உச்சத்திலிருந்த 2021 ம் ஆண்டில் மட்டும் 32250 கோடி கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஆகாஷ், ஆலன், டைம் போன்ற முன்னணியான நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை அந்நிய முதலீட்டாளர்கள் வாங்கியுள்ளனர்.

NIRF ல் முதல் 100 இடங்களுக்குள் வந்த உயர்கல்வி நிறுவனங்கள் (IIT, SRM, VIT, மத்திய, மாநில பல்க்லைக்கழகங்கள்) இணையவழியில் பட்டப்படிப்புகளை வழங்க யூஜிசி ஏற்கனவே அனுமதித்துள்ளது. சமீபத்தில் 900 க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இணைய வழியில் பட்டப்படிப்புகளை வழங்கலாம் என அறிவித்துள்ளது. அரசு மற்றும் தானியார் பல்கலைக்கழகங்கள் பெருநிறுவனங்களுடன் சேர்ந்து திறன்சார்ந்த வகுப்புகளையும் பட்டயப்படிப்புகளையும் வழங்க ஆரம்பித்துள்ளன. அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த தனியார் கல்வி தொழில் நுட்பநிறுவனங்கள் மற்றும் அரசுசார அமைப்புகளை மாநில அரசுகள் அனுமதித்துள்ளன. கல்வி தொழில் நுட்பநிறுவனங்கள் சாதகமாகவே மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டுதல்களும் உள்ளன. இந்நடவடிக்கைகள் அனைத்துமே தேசிய கல்விக் கொள்கை-2020 ன் பரிந்துரைகளாகும்.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவது மற்றும் 2030 க்குள் உயர்கல்வியில் 50 சதவிகிதத்தை GER இலக்கை அடைவது போன்ற காரணங்களை முன்வைத்து இணையவழி கற்றல் கற்பித்தலை மத்திய மாநில அரசுகள் முன்தள்ளுகின்றன. இதன் மூலம் கல்விதுறையில் உள்ள சிக்கல்களை சரிசெய்ய முடியும் என்ற தோற்றத்தையும் உருவாக்குகின்றனர். ஆனால் ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரிசெய்வது ஆய்வகம்-உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது இணையக் கட்டமைப்பை உருவாக்குவது போன்றவற்றில் மத்திய-மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்துவதில்லை. கடந்த எட்டாண்டுகளாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவானது படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. அதனை தனியார் கல்வி நிறுவனங்களும் அந்நிய முதலீடுகளும் கொண்டும் நிரப்பப்படுகிறது.

 

 

கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசினால் முன்தள்ளப்பட்ட இணையவழி கற்றல் கற்பித்தல் முறையினால் மாணவர்கள் கல்விபெறுவதில் ஏற்றதாழ்வை அதிகப்படுத்தியுள்ளது என அரசின் அறிக்கையே கூறுகையில் சொற்ப சதவிக மாணவர்களை காரணம் காட்டி உயர்கல்வியில் இணையவழியிலான படிப்புகளை முன்தள்ளுவதற்கான காரணம் என்ன? வெளிநாட்டு கல்வி மற்றும் நிதிமூலதன நிறுவனங்கள், தனியார் கல்வி நிறுவனங்களின் லாபத்திற்கானதேயன்றி வேறென்ன இருக்கமுடியும்.

தரமானக் கல்வியைத் தருகிறோம் வேலைவாய்ப்புக்கான கல்வியைத் தருகிறோம் என்று கூறி மொத்த உயர்கல்வியையும் நிதி மூலதனங்களின் பிடிக்குள் கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஸ்வயம் தளம் வழியிலான 40 சதவிகித credit transfer என்ற திட்டமும். கற்றல்-கற்பித்தல் முறைகளில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதென்பது வரவேற்கதக்கதே. அதேவேளையில் தொழில்நுட்பங்களைக் காரணம் காட்டி மொத்தக் கல்வியையும் கடைச்சராக்காகுவதும் நிதி மூலதனங்களிடம் ஒப்படைப்பதும் தடுத்து நிறுத்தப்படவேண்டிய ஒன்றாகும். எனவே இத்திட்டத்திற்கெதிராக கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மாணவர் சங்கங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.

– அழகு

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன