“ஆதரிப்போம், நிர்பந்திப்போம்” என கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கும் கலைப்புவாதிகள்

கலைப்புவாதிகள் கூறுவதைப் போல திமுகவை நிர்ப்பந்திப்பதன் மூலம் அதனை பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்கச் செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டால் கூட, அந்த நிர்ப்பந்தத்தை எவ்வாறு உருவாக்க முடியும்? பாசிச எதிர்ப்பில் திமுகவின் ஊசலாட்டத்தனத்தை அம்பலப்படுத்தி அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பாசிசத்தின் உண்மையான கோர முகத்தையும், அது மிகப்பெரிய பலத்துடன் அதிகாரத்தைக் கபளிகரம் செய்யத் துடிப்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் மக்களைத் திரட்ட வேண்டும். பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்காவிட்டால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுவோம், தனிமைப்படுத்தப்படுவோம் என்ற நிலை இருந்தால் மட்டுமே திமுக காவி பாசிசத்தை எதிர்த்து நிற்கும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் வேளையில், அதிலும் குறிப்பாக இந்தத் தேர்தல் என்பது பாசிச சக்திகளுக்கும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக சித்தரிக்கப்படும் சூழலில், ஏற்கெனவே திமுகவை பாசிச எதிர்ப்பின் நம்பகமான சக்தியாகத் தேர்ந்தெடுத்துவிட்ட கோவன் காளியப்பன் தலைமையிலான கலைப்புவாத கும்பல், இந்தத் தேர்தலிலும் திமுகவை ஆதரிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி, தங்களது இணையதளத்தில் “மாற்றை முன்வைத்து திமுக கூட்டணியை நிர்ப்பந்திப்போம்! ஆதரிப்போம்!” என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளனர்.

இந்தக் கட்டுரையில் திமுக என்பது பாசிச எதிர்ப்பின் ஒரு நம்பகமான சக்தி என்றும், அதனைப் பயன்படுத்தி பாசிச சக்திகள் ஆட்சிக்கு வராமல் தடுத்துவிட முடியும் என்று கூறுகிறார்கள்.

“நாடு தழுவிய அளவில் பாசிச பாஜகவை தேர்தலில் வீழ்த்துவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் உருவாக்கியுள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவே இந்திய அளவில் பார்த்தால் ஒரு சிறிய கட்சிதான். ஏனென்றால் 2 கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சி என்ற அடிப்படையில் இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு சிறிய கட்சிதான். இருந்தபோதும் இந்தியா கூட்டணியில் திமுக குறைந்தபட்ச திட்டத்தை வைத்து பாசிச பாஜகவுக்கு எதிராக செயல்படும் கட்சிகளையும், சக்திகளையும் ஒன்றுதிரட்ட முடியும்; பாசிசத்திற்கு எதிராக களமாட முடியும் என்று நம்புபவர்கள், தமிழகத்தில் திமுகவை நிர்ப்பந்திப்போம் என்றால் மட்டும் இதெல்லாம் சாத்தியமா என்று அங்கலாய்க்கின்றனர்.” (மேற்படிக் கட்டுரை)

அதாவது, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளை திமுகவினால் ஒரு குறைந்தபட்ச திட்டத்தை வைத்துப் பாசிசத்திற்கு எதிராக களமாட ஒரணியில் திரட்ட முடியும் என்று கூறுகிறார்கள்.

திமுகவின் யோக்கியதையைப் பார்ப்பதற்கு முன்னர், இந்தியா கூட்டணியில் உள்ள பிற கட்சிகளின் பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டைப் பார்க்க வேண்டியிருக்கிறது. இந்த ஆண்டில் நடைபெற்ற பல்வேறு மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் இந்தியா கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் நடந்த குழாயடி சண்டைகளும், கூட்டணிக் கட்சியினரே ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிட்டதும், இதன் காரணமாக பாசிசம் பல இடங்களில் வெற்றி பெற்றதும் நம் கண்முன்னே இருக்கும் உதாரணங்கள்.

தில்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக காங்கிரசும், சிபிஐ, சிபிஎம் கட்சிகளும் போட்டியிட்டன. அதன் விளைவாக, பாஜகவிற்கு எதிரான ஓட்டுகள் பிரிந்து அதன் மூலம் பாஜக பல இடங்களில் வெற்றியும் பெற்றது.

பீகார் தேர்தலின் போது ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சிக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் ஒரு தொகுதியைக் கூட விட்டுக்கொடுக்க காங்கிரஸ் மறுத்துவிட்ட காரணத்தால் அவர்கள் தனியாகப் போட்டியிட்டு, பல இடங்களில் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி தோல்வியடைய காரணமாக இருந்தார்கள்.

தற்போதும் கூட நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும், திமுகவும், சிபிஎம் கட்சியும் பல இடங்களில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

இந்தக் கட்சிகள் எல்லாம் பாசிச எதிர்ப்பை வெறுமனே வாய்வார்த்தைக்குப் பயன்படுத்துகின்றனர். பாஜகவிற்கு எதிராக உள்ள ஓட்டுக்களைக் கவர்வதற்கும், தங்களது மாநிலத்தில் சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்கும் ஒரு வழியாக பாசிச எதிர்ப்பு என்ற முழக்கத்தை முன்வைக்கின்றனர். அதே சமயம் தங்களது அதிகாரமா, பாசிச எதிர்ப்பா என்ற நிலை வரும்போது அவர்கள் பாசிச எதிர்ப்பைக் கைவிட்டு தங்களது அதிகாரத்தைத் தக்கவைப்பதையே தேர்ந்தெடுக்கின்றனர்.

இதெல்லாம் கலைப்புவாத கும்பல் அறியாதது அல்ல. இருந்தும் இவர்கள் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளைத் திமுகவினால் ஒன்றுதிரட்ட முடியும் என கூறுகிறார்கள். ஒருவேளை தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே “வெற்றிகரமான தொகுதிப் பங்கீட்டை” முடித்த மு.க.ஸ்டாலினின் இராஜதந்திரத்தைப் பார்த்தபின், இதையே திமுகவினால் இந்திய அளவில் பாராளுமன்றத் தேர்தலிலும் சாதிக்க முடியும் என நம்பி இந்தக் கருத்துக்கு இவர்கள் வந்திருக்கக் கூடும்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை எதன் அடிப்படையில் முடித்திருக்கிறது? பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற அடிப்படையிலா, அல்லது தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதன் அடிப்படையிலா?

பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தால், ஒப்பீட்டளவில் பாஜகவிற்கு எதிராக நிற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், சிபிஐ, சிபிஎம் கட்சிக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால் நேற்றுவரை பாசிசத்தின் கூட்டாளியாக நின்ற தேமுதிகவை கடைசி நேரத்தில் குதிரைப் பேரம் நடத்தி கூட்டணியில் இணைத்ததும், தேர்தலுக்குப் பிறகு தொங்கு சட்டசபை அமைந்தால் பாஜகவின் அணிக்குத் தாவ தயாராக இருக்கும் அவர்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கியதும் எதற்காக?

ஒருவேளை தேர்தலுக்குப் பிறகு திமுகவிற்கு அறுதிப் பெரும்பாண்மை கிடைக்காமல் கூட்டணிக் கட்சிகளை நம்பியிருக்கும் நிலை ஏற்பட்டால், கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டுமே என்பதை மனதில் கொண்டுதான் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு குறைவான இடங்களையும், தேமுதிகவிற்கு அதிக இடங்களையும் கொடுத்திருக்கிறது. அதாவது பாசிசத்தை எதிர்ப்பதை விட தனது அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதை திமுக பிரதானமாகக் கருதுகிறது.

இன்றைக்கு பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறுவது தனக்குக் கூடுதல் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்பதாக மட்டுமே திமுக பாசிச எதிர்ப்பைக் கையில் எடுத்திருக்கிறது. நாளைக்கு பாசிசத்தை எதிர்ப்பது தனது இருத்தலுக்கே சவாலாகிவிடும் என்ற நிலை வரும்போது அது சமரசம் செய்துகொண்டு பாசிசத்தின் பக்கம் சாய்ந்துவிடும். திமுக எனும் முதலாளித்துவ வர்க்க கட்சி எப்போதுமே பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சக்திதான். இந்த ஊசலாடும் சக்தியை நம்பகமான சக்தியாகக் காட்டுவது சந்தர்ப்பவாதமன்றி வேறொன்றும் இல்லை.

திமுகவினால் பாசிச எதிர்ப்பில் மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்க முடியும் என்று கூறிவிட்டு, அடுத்தபடியாக, திமுக அவ்வாறு செயல்பட அதனை வெளியிலிருந்து நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும், தாங்கள் அவ்வாறு செய்யப்போகிறோம் என்றும் கூறுகிறார்கள்.

“திமுகவை நிர்ப்பந்திப்பது என்பது திமுகவிடம் கோரிக்கை மனுக்களை முன்வைத்து இப்படிப்பட்ட ஆட்சியை நடத்த வேண்டும் என்று கோருவது அல்ல. மாறாக, கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு புதிய ஜனநாயகம் அதன் தோழமை அமைப்புகள் முன்வைக்கின்ற குறைந்தபட்ச செயல் திட்டத்தை அமல்படுத்துவதற்குக் கீழிருந்து ஒரு மக்கள் எழுச்சியை உருவாக்குவதற்குப் பிரச்சாரம் செய்வது; அதன் மூலம் இந்தக் கட்சிகளுக்கு ஒரு நிர்ப்பந்தத்தை உருவாக்குவது என்பதுதான் அதன் பொருளே ஒழிய, கட்சிகளை நம்பி அவர்களுக்குக் கோரிக்கை வைப்பது என்று சுருக்கிப் புரிந்துகொண்டால் அது அவர்களின் அரசியல் பாமரத்தனமாகும்.” (மேற்படிக் கட்டுரை)

கலைப்புவாதிகள் கூறுவதைப் போல திமுகவை நிர்ப்பந்திப்பதன் மூலம் அதனை பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்கச் செய்ய முடியும் என்பதை ஏற்றுக்கொண்டால் கூட, அந்த நிர்ப்பந்தத்தை எவ்வாறு உருவாக்க முடியும்? பாசிச எதிர்ப்பில் திமுகவின் ஊசலாட்டத்தனத்தை அம்பலப்படுத்தி அதனை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். பாசிசத்தின் உண்மையான கோர முகத்தையும், அது மிகப்பெரிய பலத்துடன் அதிகாரத்தைக் கபளிகரம் செய்யத் துடிப்பதையும் மக்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். அதன் அடிப்படையில் மக்களைத் திரட்ட வேண்டும். பாசிச எதிர்ப்பில் ஊன்றி நிற்காவிட்டால் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டுவிடுவோம், தனிமைப்படுத்தப்படுவோம் என்ற நிலை இருந்தால் மட்டுமே திமுக காவி பாசிசத்தை எதிர்த்து நிற்கும்.

ஆனால் கலைப்புவாதிகள் இதனைச் செய்வதாகக் கூறவில்லை. அவர்கள் பாசிச எதிர்ப்பில் ஊசலாடும் சக்தியான திமுகவை நம்பகமான சக்தியாகவும், பாசிசத்தை வீழ்த்தக்கூடிய சக்தியாகவும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறார்கள். அத்துடன் பாசிசத்தை திமுகவினால் தடுத்து நிறுத்திவிட முடியும் என்றும், அதற்கு மக்கள் அக்கட்சிக்கு வாக்களித்தால் மட்டும் போதும் என்றும் கூறி, பாசிசத்தின் பயங்கர முகத்தைச் சுருக்கி, பாசிச அபாயத்தைக் குறைவாக மதிப்பிடுவதுடன் அதனைத் தேர்தல் மூலம் வீழ்த்திவிட முடியும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுக்கிறார்கள்.

அதாவது, பாசிசத்தை வீழ்த்துகின்ற வேலையைத் திமுக செய்துவிடும்; நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதற்கு வாக்களித்து அதிகாரத்தில் அமர்த்திவிட்டு, அதற்குப் பிறகு அதனை நிர்ப்பந்திக்கும் வகையில் மக்களைத் திரட்டுவது மட்டுமே என்று கூறுகிறார்கள். அதாவது கொக்கு தலையில் வெண்ணெய் வைக்கச் சொல்கிறார்கள்.

திமுகவை பாசிச எதிர்ப்பின் நம்பகமான சக்தி என்று கூறுவதற்கு முன்னர், கடந்த காலங்களில் திமுக எவ்வாறு பாசிசத்திற்குப் பணிந்து அதனுடன் சமரசமாகிப் போனது என்பதையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். 2022ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாணவி லாவண்யாவின் தற்கொலையை மையப்படுத்தி பாஜக, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட காவி பாசிச சக்திகள், மாணவியின் மரணத்திற்கு மதமாற்றம்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்தார்கள். மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரவேண்டும் என வெளிப்படையாகவே கூறினார்கள். திமுக அரசு காவிகளின் விஷப் பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தாமல் மௌனமாக வேடிக்கை பார்த்தது. தற்போது சிபிஐ விசாரணையில் மதமாற்றம் நடைபெறவில்லை என்பது நிரூபணமான பிறகும் கூட காவி பாசிச சக்திகளின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இவ்வாறு காவி பாசிஸ்டுகளின் பிரச்சாரத்திற்கு எவ்விதத் தடையும் ஏற்படுத்தாமல், காவி பாசிச சித்தாந்தத்தை மக்கள் மத்தியில் கொண்டுசேர்ப்பதை திமுக திருப்பரங்குன்றம் பிரச்சனை வரை அனுமதித்தே வந்துள்ளது. கலவரத்தைத் தூண்டும் காவி பாசிஸ்டுகளைக் கரிசனத்துடன் அணுகும் திமுக அரசின் போலீசு, தங்களது உரிமைகளுக்காகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது கொடூரமான அடக்குமுறையை ஏவிவிடத் தயங்குவதில்லை.

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டே அதன் திட்டங்கள் பலவற்றை, இல்லம் தேடிக் கல்வி, நம்ம ஸ்கூல் பவுண்டேஷன், எண்ணும் எழுத்தும், திறன் சார்ந்த கல்வி போன்ற பெயர்களில் திமுக அரசு அதனைக் கொல்லைப்புறமாக அமல்படுத்தி வருகிறது.

காவி கார்ப்பரேட் பாசிச சக்திகள், தங்களது எஜமானர்களின் நலனைப் பாதுகாப்பதற்காகக் கொண்டுவந்திருக்கும், தொழிலாளி வர்க்கத்தின் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டியிருக்கும் தொழிலாளர் நலச் சட்டத்திருத்தங்களை அமல்படுத்த மாட்டோம் என்று திமுக முழங்கவில்லை. மாறாக, தொழிற்சங்க உரிமை கோரிப் போராடும் சாம்சங் தொழிலாளர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. தனியார்மயத்திற்கு எதிராகப் போராடும் துப்புரவுப் பணியாளர்களை போலீசை விட்டு அடித்து விரட்டுகிறது. ஊதிய உயர்வு கோரிப் போராடும் இடைநிலை ஆசிரியர்களையும், செவிலியர்களையும் போலீசைக் கொண்டு துன்புறுத்துகிறது.

நாடு முழுவதும் காவி பாசிச சக்திகளின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தவும், சி.ஏ.ஏ., என்.ஆர்.சி.யை மறைமுகமாகப் புகுத்தவும் தேர்தல் ஆணையத்தின் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கும் எஸ்.ஐ.ஆர் எனும் தீவிர வாக்காளர் திருத்தத்தை எதிர்த்துப் போராடாமல், பாசிச சக்திகளுடன் திமுக சமரசம் செய்துகொண்டுள்ளது.

இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டுத்தான் திமுகவை நம்பகமான சக்தியாக மக்கள் முன்னர் கொண்டுசேர்க்க கலைப்புவாதிகள் துடிக்கின்றனர். திமுகவின் வாலாக மாறிநிற்கும் தங்களது சந்தர்ப்பவாதத்தை மறைக்க அதற்கு மார்க்சிய சாயத்தை வேறு அள்ளிப் பூசுகின்றனர்.

“மார்க்சிய லெனினிய இயக்கம் என்ற அடிப்படையில் தேர்தலை ஒரு போராட்ட வடிவமாக ஏன் பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றி பலமுறை, பல கோணங்களில் விளக்கிச் சொல்லிவிட்டோம்” (மேற்படிக் கட்டுரை)

என்று கூறுகிறார்கள். இன்றைக்கு மாற்றை முன்வைத்து நிர்ப்பந்திப்போம் ஆதரிப்போம் என்று கூறுகிறவர்கள் இதற்கு முன்னர் என்ன கூறிவந்தார்கள் என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது. கலைப்புவாதக் கும்பலின் அரசியல் தலைமை வெளியிட்டுள்ள செயல்தந்திர ஆவணத்தில்,

“…பாசிசத்தை வீழ்த்த… தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்துவோம், அதன்படி தற்போது நாம் முன்வைக்கும் ஐக்கிய முன்னணியின் செயல்திட்டத்தை ஏற்க முன்வரும் கட்சிகளை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வோம்” (கலைப்புவாதக் கும்பலின் செயல்தந்திர ஆவணம் பக்கம் 96)

என்று கூறியிருக்கிறார்கள். தேர்தலையும் ஒரு போராட்ட வடிவமாகப் பயன்படுத்துகின்றோம் எனக் கூறும்போது, இவர்களது செயல்தந்திர ஆவணத்தில் தாங்கள் முன்வைக்கும் ஐக்கிய முன்னணியின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் மட்டுமே தேர்தல் பிரச்சாரம் செய்வோம் எனக் கூறியுள்ளனர். ஆனால் அதனை மறைத்துவிட்டுத் தற்போது, திமுக காங்கிரஸ் உள்ளிட்ட முதலாளித்துவக் கட்சிகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை அளித்து, அவர்களை அதிகாரத்தில் அமர்த்திவிட்டுப் பிறகு தங்களது செயல்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவர்களை வெளியிலிருந்து நிர்ப்பந்திப்போம் என்று கூறுகின்றனர்.

கலைப்புவாதிகளின் இந்தச் சந்தர்ப்பவாத நிலைப்பாடு இன்று பிறந்ததல்ல. 2024 பாராளுமன்றத் தேர்தலின் போது, “பாசிச BJPயை தோற்கடிப்போம்… INDIAவை ஆதரிப்போம்” என்று கூறினார்கள். நாம் அப்போதும் அவர்களது நிலைப்பாட்டை விமர்சித்து எழுதியிருந்தோம். ஆனால் நாம் எழுப்பும் நியாயமான கேள்விகளுக்கு அவர்கள் என்றும் பதிலளித்ததில்லை.

திமுகவினை ஆதரிக்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டு அதற்குச் சித்தாந்த விளக்கம் கொடுக்க நினைப்பவர்களிடம் உண்மையான பரிசீலனையை எதிர்பார்க்க முடியாது. உண்மையிலேயே பாசிச எதிர்ப்பில் அக்கறை கொண்டுள்ளவர்கள், தி.மு.க., காங்கிரசின் பின்னால் போய் அதைச் செய்துவிட முடியும் என்று நிச்சயம் எண்ணமாட்டார்கள். அதேசமயம் சந்தர்ப்பவாதச் சகதியில் மூழ்கிக்கிடப்பவர்களின் செவிட்டுக் காதுகளுக்கு எவ்வளவு பெரிய முரசைக் கொண்டு முழங்கினாலும் நிச்சயம் கேட்கப்போவதில்லை.

  • செங்கனல் ஆசிரியர் குழு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன