புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் : அம்பலமாகும் இந்தியா கூட்டணியின் பாசிச எதிர்ப்பு நாடகம்!

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்காக நடைபெற்ற பேரங்கள் புதுச்சேரியில் சந்தி சிரிக்கின்றன. அங்கு இந்தியா கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என மக்களே குழம்பும் அளவிற்கு அவர்களின் பாசிச எதிர்ப்பு நாடகம் அம்பலப்பட்டு போய் நிற்கிறது.

தேர்தல் மூலம் பாசிசத்தை வீழ்த்த முடியும் என மார்தட்டும் இந்தியா கூட்டணி கட்சிகள் தமிழ்நாட்டில் தயங்கி தயங்கி ஒரு வழியாக கை கோர்த்துக் கொண்டுள்ளன. தமது கூட்டணிக் கட்சிகளுக்கிடையான தொகுதி பங்கீட்டுப் பேரங்களை முடித்துக் கொண்டு தேர்தல் களத்தில் பாசிசத்தை வீழ்த்த புறப்பட்டு விட்டார்கள்.

இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே பாசிசத்தை வீழ்த்துவதற்கான குறைந்த பட்ச வேலைத் திட்டமும், ஒற்றுமையும் கிடையாது என்பதை இதற்கு முன்னர் நடைப்பெற்ற பல மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நிருபித்திருக்கின்றன. ஆனாலும் தங்களால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும் என மக்களை மீண்டும் நம்பச் சொல்கிறார்கள். இந்தியா கூட்டணிக் கட்சிகளின் பாசிச எதிர்ப்பு சாயம் வெளுத்து போய் வருகிறது என்பதற்கு புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் ஒரு துலக்கமான எடுத்துக்காட்டாகும்.

இதுவரை தமிழ்நாட்டுடன் சேர்ந்தே தேர்தலை எதிர்கொண்ட புதுச்சேரிக்கு இந்த முறை அந்த ‘மாபெரும் ஜனநாயகத் திருவிழா’ சற்று முன்கூட்டியே நடத்தப்படுகிறது. பா.ஜ.க 10 தொகுதிகளிலும், ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் 16, அதிமுக 2, ல.ஜ.க-விற்கு 2 என முடிவாகி மொத்தமுள்ள 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது.

ஆனால் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான இடங்களை ஒதுக்குவதற்காக நடைபெற்ற பேரங்கள் புதுச்சேரியில் சந்தி சிரிக்கின்றன. அங்கு இந்தியா கூட்டணி இருக்கிறதா, இல்லையா? என மக்களே குழம்பும் அளவிற்கு அவர்களின் பாசிச எதிர்ப்பு நாடகம் அம்பலப்பட்டு போய் நிற்கிறது.

அங்கு இந்தியா கூட்டணி கட்சிகளின் பேரங்கள் சுமார் 20 நாட்களுக்கும் மேலாக நடைப்பெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக காங்கிரசு 16 தொகுதிகளில் ஒன்றை சி.பி.ஐக்கும், தி.மு.க 14 தொகுதிகளில் ஒன்றை வி.சி.க-வுக்கும் கொடுக்கலாம் என்றனர்.

ஆனால் வி.சி.க-விற்கும், சி.பி.ஐ-யிக்கும் தான் எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறோம் என்பது கூட கடைசி வரை தெளிவாகத் தெரியவில்லை. காங்கிரசு கட்சியோ 16 தொகுதிகளுக்கு மேல் வேண்டும் என முரண்டு பிடித்தது.

இதனால் வேட்பு மனுத் தாக்கல் செய்யும் கடைசி நாள் வரையில் இந்தியா கூட்டணியின் தொகுதி பேரங்களில் உடன்பாடு எட்டப்படவில்லை. காங்கிரசு கட்சி தன்னிச்சையாக தாம் விரும்பிய 22 தொகுதிகளிலும், சி.பி.ஐ 1, சி.பி.எம் 2, வி.சி.க 3 தொகுதிகளிலும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளன.

இதனால் பாசிசத்தை எதிர்க்கிறோம் என புறப்பட்ட சூரப்புலிகளான இந்தியா கூட்டணிக் கட்சிகள் சில தொகுதிகளில் ஒருவரையொருவர் எதிர்த்து தேர்தலில் போட்டியிடுகின்றனர். உதாரணமாக திருபுவனை (தனி) தொகுதியில் தி.மு.கவும் காங்கிரசும் தமது வேட்பாளர்களை தனித் தனியே அறிவித்துள்ளது. உழவர்கரை தொகுதியில் காங்கிரசு, வி.சி.க மற்றும் சி.பி.ஐ ஆகிய மூன்று இந்தியா கூட்டணி கட்சிகளும் தமது வேட்பாளர்களை தனித் தனியே நிற்க வைத்துள்ளது.

இதுமட்டுமில்லாமல் தேசிய ஜனநாயக் கூட்டணியின் பலம் வாய்ந்த வேட்பாளர்களை வீழ்த்துவதில் கூட இந்தியா கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படவில்லை. என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் முதல்வர் ரங்கசாமி போட்டியிடும் மங்கலம் தொகுதியில் கூட தி.மு.கவும் காங்கிரசும் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுகின்றனர்.

காலாப்பட்டு, காரைக்கால் (தெற்கு) போன்ற தொகுதிகளில் பா.ஜ.கவிற்கு எதிராக தி.மு.கவும், காங்கிரசும் தனித்தனியே போட்டியிடுகிறது. பா.ஜ.க மாநிலத் தலைவரான வி.பி.ராமலிங்கம் போட்டியிடும் தொகுதியான ராஜ்பவனிலும் தி.மு.கவும் காங்கிரசும் தனியாக போட்டியிடுகிறார்கள்.

இது போன்ற இந்தியா கூட்டணியின் சட்டமன்ற தேர்தல் யுக்தி (friendly fight) புதுச்சேரியிலிருந்து மட்டும் தொடங்கவில்லை. இதற்கு முன்பு நடைப்பெற்ற பிகார், தில்லி, ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களிலிருந்தும் உதாரணங்களைக் கூற முடியும்

சமீபத்தில் நடந்து முடிந்த பிகாருக்கான சட்டமன்றத் தேர்தலில் பாசிச பா.ஜ.கவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்கு பதிலாக இந்தியா கூட்டணியினர் தங்களுக்குள்ளேயே மோதிக் கொண்டனர். இதனால் பா.ஜ.க – நிதிஷ் கூட்டணி அங்கு எளிதில் வெற்றியும் பெற்றது.

புதுச்சேரியில் நடைபெற்றது போல தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யாமலேயே இந்தியா கூட்டணிக் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்தன. அங்குள்ள 12 தொகுதிகளில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரசு, இடதுசாரிகள் உள்ளிட்டோர் தங்களுக்குள் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிட்டனர்.

இதுமட்டுமில்லாமல் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை கூட அறிவிக்காமல் காங்கிரசு கட்சி இழுத்தடித்து வந்தது. காங்கிரசு மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சிகளின் மாநில நிர்வாகிகளின் குழாயடிச் சண்டை மக்கள் மத்தியில் அம்பலமாகி வந்தன. பிகாரில் இந்தியா கூட்டணியின் குழப்பங்கள் தீவிரமடையவே, ஒரு கட்டத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது

அப்போதைய நிதிஷ்க்கு இருந்த எதிர்ப்பை பயன்படுத்த முடியாமலும், எஸ்.ஐ.ஆரின் பாதகங்களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த திராணியில்லாமலும், தொகுதிகளைப் பிரித்துக் கொள்வதில் முடிவுகள் எட்டப்படாமல் இழுபறியிலேயே மூழ்கிப் போயிருந்தது இந்தியா கூட்டணி. இதனால் அங்கு தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறுவதற்கு தாங்களாகவே வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பாசிச எதிர்ப்பு நிலைப்பாட்டை கொண்டிருக்கும் சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் வி.சி.க போன்ற கட்சிகள், தங்களுக்கு முன்பை விட அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என திமுகவிடம் கேட்டு வந்தனர். ஆனால் அவர்கள் கேட்ட தொகுதிகளை ஒதுக்காமல் குறைந்த தொகுதிகளையே தி.மு.க ஒதுக்கியிருக்கிறது. பாசிச எதிர்ப்பில் இதுவரை ஒரு துரும்பைக் கூட கிள்ளாத தேமுதிக-விற்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியதிலிருந்தே தி.மு.கவின் பாசிச எதிர்ப்பு நாடகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். மேலும், தேர்தல் முடிந்த பின்னர் தே.மு.தி.க, மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்குமா! என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது.

கேரளாவிலோ இந்தியா கூட்டணியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. காங்கிரசு தலைவர் ராகுல், சி.பி.எம் கட்சி பா.ஜ.கவோடு மறைமுகமாக நட்பை பேணி வருகிறது என்று தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். கேரள முதல்வர் விஜயனோ, காங்கிரசை பா.ஜ.கவின் பி டீம் என்கிறார்.

இவ்வாறு சட்டமன்றத் தேர்தல்களில் பாசிச பா.ஜ.க-வின் காவி-கார்ப்பரேட் பாசிசத்தை எதிர்த்து வீச்சான பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல திராணியில்லாத இந்தியா கூட்டணி, பா.ஜ.கவின் வெற்றிக்கே வழி ஏற்படுத்திக் கொடுக்கிறது.

வயல் நண்டுகள் போல ஒன்றின் காலை மற்றொன்று பிடித்து இழுக்கும் கொள்கை, கோட்பாடற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து பாசிச பா.ஜ.கவை வீழ்த்தும் என்பதை இனியும் நம்பினால் அது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானதாகும். இதற்கு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் ஒரு துலக்கமான சாட்சியாக இருக்கிறது.

இது தேர்தலில் பங்கெடுக்கும் கட்சிகள் எல்லாம் ஊசலாடும் சக்திகள் என்பதையும், அது எப்போது வேண்டுமானாலும் தான் பெயரலவில் கூறிகொள்ளும் கொள்கைகளுக்கு எதிராக செயல்படும் என்பதையும் மக்கள் தங்கள் சொந்த அனுபவத்தின் மூலம் உணர்ந்து வருகிறார்கள். இந்தியா கூட்டணியும் மக்களுக்கு இதையே மீண்டும் மீண்டும் உணர்த்தியும் வருகிறது.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன