பா.ஜ.க. கூட்டணியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்குக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு பா.இரஞ்சித்தின் அரசியலுக்கு முரணானதா?
நடக்கவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தல்களுக்கான நாடகங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. “உரிமைத் தொகை”, ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், கூப்பன் என வாக்குறுதிகளும் கூட்டணிப் பேரங்களும் சூடுபிடித்த வண்ணம் இருக்கின்றன. இவ்வேளையில் பகுஜன் சமாஜ் கட்சியில் (BSP) இருந்து உட்கட்சி மோதலால் பிரிந்த தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பாக, கடந்த வருடம் கூலிப்படையால் வெட்டிக் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி போட்டியிடுகிறார் என்ற செய்தி வெளியாகியது. இவர் பாசிச பாஜகவின் NDA கூட்டணி சார்பாக திரு.வி.க. நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
உழைக்கும் மக்கள் மீது ஓர் அப்பட்டமான காவி-கார்ப்பரேட் பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் ஏறித்தாக்கி வருகிறது. இன்று இவர்கள் தமிழ்நாட்டிலும் வேரூன்றிக் கிளைபரப்பி வரும் சூழலில், திமுக போன்ற சமரச சக்திகளையும் அம்பலப்படுத்தி, மக்கள் படையாகத் திரண்டு காவிகளைத் தெருவில் வீழ்த்த வேண்டிய கடமை நம் முன் இருக்கிறது. இந்தச் சூழலில் பொற்கொடியின் இந்தச் சந்தர்ப்பவாத, பிழைப்புவாத கூட்டணி காவிகளுக்கு வலுச்சேர்த்து, அரசியல் அரங்கில் பாஜகவை “கூட்டணி வைக்கத் தகுதியுள்ள மற்றொரு கட்சிதான்” என்ற கருத்தைச் சமூகத்தில் நிலைநிறுத்துகிறது.
முற்போக்கு அரங்கில் பொற்கொடியின் பாசிச அணிசேர்க்கைக்கு எதிர்ப்பு வந்த வண்ணம் இருந்தாலும், அடையாள அரசியலில் ஊறியுள்ள பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ‘ஒரு பாதிக்கப்பட்டவரை இப்படி அரசியல் விமர்சனம் செய்யாதீர்கள்’ என்று வாதிடுகின்றனர். இதை ஒரு தனிநபர் வைக்கும் கூட்டணியாகச் சுருக்கிப் பார்க்க முடியாது. ஒரு அரசியல் கட்சி வைக்கும் கூட்டணிகளும் கூட்டு நடவடிக்கைகளும் சமூகத்தில் மெய்யான விளைவுகளை ஏற்படுத்துகின்றன; அவ்வகையில் பொற்கொடியின் இந்த நடவடிக்கை சமூகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பலின் அரசியல் வளர்ச்சிக்கும், “இவர்களும் மற்றொரு கட்சிதான்” என்ற அங்கீகாரத்தையும் வழங்குகிறது. உண்மையில் காவிக் கும்பல் ஒரு தடை செய்யப்பட வேண்டிய பயங்கரவாதக் கும்பல், அதை மக்களுக்கு உணர்த்த வேண்டிய முதன்மைப் பணி இன்று நம் முன் உள்ளது. இதற்குத் திமுகவின் செயல்பாடுகளுமே தடையாக இருக்கிறது என்று நாம் அம்பலப்படுத்தி வரும் இந்தத் தருணத்தில் பொற்கொடியின் இந்தச் சந்தர்ப்பவாதத்தைச் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது.
மேலும் “ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி கிடைக்க இந்தக் கூட்டணி அவசியம்” என்று வாதிடுகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை ஒரு சாதிக் கொலையோ அரசியல் கொலையோ அல்ல என்பதே உண்மை. இருப்பினும் இவர்களின் ‘நீதிக்கான போராட்டம்’ என்ற வாதத்தை நேர்மறையாகப் பரிசீலிப்போம். கொல்கத்தா ஆர்.ஜி. கார் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் ரத்னா டேப்நாத் தற்போது பா.ஜ.க. சார்பாக மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கான காரணங்கள் என்ன என்பதைக் கண்டறிந்து அதற்கு எதிரான அரசியல் முழக்கங்கள் மூலம் முன்னேறுவதற்குப் பதிலாக, சனாதனத்தை ஏந்தி நிற்கும், பில்கிஸ் பானு சம்பவம் போன்ற கொடூரங்களை அரங்கேற்றிய பா.ஜ.க.வில் இணைவது என்பது பெண்களைப் பலிகொடுக்கும் நடவடிக்கையே. ரத்னா டேப்நாத் போன்ற தனிநபர்களுக்கே இது பொருந்தும் வேளையில், BSP-TN போன்ற அரசியல் கட்சிகளுக்கு ஏன் பொருந்தாது? ‘ஒரு தலித்தின் கொலைக்கு நீதி கோரி’ இந்துராஷ்டிரம் நிறுவத் துடிக்கும் பாஜக கும்பலுடன் கூட்டணி வைப்பதன் மூலம் பல தலித்துகளைக் காவு கொடுப்பதை நியாயப்படுத்துகிறார்களா? இன்றும் நாடு முழுவதும் தலித்துகளுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறையை மறக்கச் சொல்கிறார்களா? இக்கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் நழுவுவதன் மூலம், தலித்துகளின் நலனெல்லாம் இவர்களுக்கு அக்கறை இல்லை, இதுவெறும் சந்தர்ப்பவாத பிழைப்புவாத கூட்டணி என்பதே நிரூபணமாகிறது.
பொற்கொடிக்கு வாக்களிக்கக் கோரி அடையாள அரசியலின் ஊதுகுழல் இயக்குனர் பா.இரஞ்சித் களமிறங்கியது சமூக வலைதளங்களில் பெரும் “அதிர்வலைகளை” ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இரஞ்சித்தையும் நீலம் பண்பாட்டு மையத்தையும் சாதி ஒழிப்பின் தன்னிகரில்லாத் தலைவராகப் பார்த்துவந்த ரசிகர்கள் மத்தியில் முதல் முறையாகக் குழப்பம் தலையெடுத்துள்ளது. “ஹிந்துராஷ்டிரத்தை நிறுவத் துடிக்கும் பாஜக கூட்டணிக்கு வாக்குக் கேட்பதா?”, “சாதி ஒழிப்புப் பேசிவிட்டு இப்போது பாஜக கூட்டணியை வலுப்பெறச் செய்வதா?” என்று பல அப்பாவி இரஞ்சித் ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
அவர்களுக்கு நாம் சொல்ல விரும்புவதெல்லாம் இதுதான்: பா.இரஞ்சித்தின் அரசியலுக்கு முரணான முடிவு எதையும் அவர் எடுத்துவிடவில்லை; அடையாள அரசியலின் தர்க்கரீதியான முடிவு இதுதான்; எனவே, குழப்பமோ, பதற்றமோ கொள்ள வேண்டாம்!
கன்ஷிராம்-மாயாவதி வகையறா பெற்றெடுத்த BSP கட்சியின் பின்நவீனத்துவ தலித் அடையாள அரசியலையே இரஞ்சித் இதுவரை நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் தமிழ்நாட்டில் வேரூன்றச் செய்து வருகிறார். அந்த வகையில் இரஞ்சித்தின் பாஜக ஆதரவு நிலைப்பாடு இதுவரை அவர் பேசிவந்த அரசியலுக்கு முரண்பாடானது அல்ல, ஒத்திசைவானதே! உத்தரப்பிரதேசத்தில் BSP கட்சியின் வரலாற்றைத் திருப்பிப் பார்க்கும் எவருக்கும் இது விளங்கும். 1993 தேர்தலில் மாயாவதி முதல் முறை முதலமைச்சர் ஆனதே பாஜகவுடன் கூட்டணி வைத்துத்தான். தேர்தலுக்கு முன் அமைத்த சமாஜ்வாதி கட்சி கூட்டணியுடன் ஏற்பட்ட விரிசலைக் காரணம் காட்டிக் கல்யாண் சிங் தலைமையிலான பாஜகவுடன் கூட்டணி வைத்து மாயாவதியை முதலமைச்சர் பதவியைச் சுவைக்கச் செய்தார் “கிங்மேக்கர்” கன்ஷிராம். 136 நாட்கள் மட்டுமே நீடித்த இந்த ஆட்சிக்குப் பின்பு 1996-இல் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியில் முதலமைச்சர் ஆனார். 1991 பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏறித்தாக்கிய காவிபாசிசக் கும்பலுடன் தான் இந்தக் கூட்டணிகள் அரங்கேறின என்பதை வாசகர்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 1999-இல் வாஜ்பாய் அரசு கவிழ்வதற்கு முக்கிய காரணமாக அமைந்த மாயாவதி, மீண்டும் 2002-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்து உ.பி.யில் ஆட்சியமைத்தார்.
2002 குஜராத் கலவரத்தில் பாஜக ஆர்.எஸ்.எஸ்-இன் கோரத் தாண்டவத்தை உலகமே கண்டித்துக் கொண்டிருந்தபோது, மாயாவதி பாசிச மோடிக்கு ஆதரவாக குஜராத்தில் களமிறங்கியிருந்தார். “மோடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. ஒரு முதலமைச்சர், தனது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தக் கூடிய எந்தச் செயலையும் செய்ய மாட்டார்.” என்று பிரச்சாரம் செய்த மாயாவதி, பாஜக உத்தரப்பிரதேசத்தில் தனக்கு ஆதரவு அளித்ததால் குஜராத்தில் மோடிக்கு ஆதரவளிக்க வேண்டிய “தார்மீகப் பொறுப்பு” தனக்கு இருப்பதாக வாதிட்டார். BSP கட்சியின் யானை சின்னம் “வெறும் யானை மட்டுமல்ல, அது விநாயகரும் தான், விஷ்ணுவும் தான், மகேஷ்வரும் தான், பிரம்மாவும் தான்” என்று இந்துமதவெறியின் பீரங்கியாகவும் அவதாரம் எடுத்தார். இப்படித் தொடர் குட்டிக்கரணங்களுக்குப் பின்பு தற்போது வலுவிழந்த மாயாவதி பாஜக வெற்றியை உறுதி செய்ய வாக்குகளைப் பிரிக்கும் வேலையை முழுநேரமாகச் செய்து வருகிறார். அதிகாரத்தை அடைவதற்காக இவர்கள் அடித்த குட்டிக்கரணங்கள் சாதி ஒழிப்பிற்கும் வழிவகுக்கவில்லை; தலித்துகளின் நல்வாழ்விற்கும் வழிவகுக்கவில்லை. மாறாக இன்று உ.பி. இந்துராஷ்டிரத்தின் சோதனைச் சாலையாக மாறுவதற்கே வழிவகுத்துள்ளது. சாதியக் கட்டமைப்பைப் பாதுகாக்கவே உருவாக்கப்பட்ட இந்திய அரசு இயந்திரத்தை உடைத்தெறிய மக்களைத் திரட்டுவதற்குப் பதிலாக, இவர்கள் கட்சிக்காரர்கள் இந்த இயந்திரத்தில் அதிகாரங்களைச் சுவைக்கவும், சுரண்டி உண்டுகொழுக்கவும், அரசு பதவிகளில் அமர்ந்துகொண்டு அரசு சன்மானங்களைப் பொறுக்கித் தின்னவுமே மக்களை அடையாள அரசியலின் கீழ்த் திரட்டி வருகின்றனர்.
“பொற்கொடி வேறு வழியில்லாமல் பாஜக கூட்டணிக்குத் தள்ளப்படுகிறார்” என்று வாதிடுவோர் எவருக்கும் BSP-இன் இந்த வரலாறு தெரியாமல் இல்லை! புதிதாக அடையாள அரசியலுக்கு அறிமுகமான இளைஞர்களுக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் வசதியாக இவற்றை மறைக்கின்றனர். மாயாவதி வழிவந்த இரஞ்சித் நாளை நேரடியாக அண்ணாமலைக்கு ஓட்டுப் பொறுக்கக் களமிறங்கலாம், “பொற்கொடிக்கு சீட் கொடுத்ததால் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது” என்றும் வாதிடலாம்! இப்படி நடந்தாலும் வியப்பேதுமில்லை!!
திரு.வி.க. நகர் பகுதியில் இருக்கும் வன்னியர் ஓட்டுகளைப் பொறுக்க பொற்கொடி அன்புமணியைச் சென்று சந்தித்ததை இத்துடன் இணைத்துப் பார்க்கவும். மேலும் அன்புமணி நாளை பொற்கொடிக்காகப் பிரச்சாரத்திலும் களமிறங்குவார். பெரம்பூரில் உள்ள தலித் ஓட்டுகளைப் பொறுக்க பொற்கொடி களமிறக்கப்படுவார்; இதை “பொற்கொடிக்கு சீட் கொடுத்ததால் தார்மீகப் பொறுப்பு” என்று இவரின் ஆதரவாளர்களும் சந்தி சிரிக்க நியாயப்படுத்துவர். தலித்துகளுக்கு எதிராகக் கலவரம் செய்வதையே முழுநேர அரசியலாக வைத்திருக்கும் கட்சியுடனும் கூட்டுச் சேரலாம் என்ற இவர்களின் அப்பட்டமான பிழைப்புவாத அரசியல் அருவருக்கத்தக்கது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட.
ஆட்சி அதிகாரத்தை அடைவதற்காக எவருடனும் கூட்டு, பாஜக ஆர்.எஸ்.எஸ். உடனும் கூட்டு, என்பது அடையாள அரசியல்வாதிகள் தர்க்கரீதியாக வந்தடையும் முடிவு. அந்த வகையில் NDA கூட்டணியை ஆதரிப்பதன் மூலம் இரஞ்சித் அவர் இதுவரை பேசி வந்த அரசியலுக்கு முரணில்லாத ஓர் நிலைப்பாட்டைத்தான் எடுத்துள்ளார். தலித்துகளின் பிரதிநிதிகளாகத் தங்களை நிறுத்திக்கொள்ளும் இவர்கள், “தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணிகளை அமைப்பதைப் போல் எங்களுக்கும் உரிமை வேண்டும்” என்று வாதிடுகின்றனர். அப்படி வாதிடுவோர் தங்களுக்குச் சாதி ஒழிப்பெல்லாம் நோக்கமல்ல, திமுக அதிமுக போன்று ஓட்டுப் பொறுக்கி அதிகாரத்தைச் சுவைப்பதே நோக்கம் என்று வெளிப்படையாக அறிவித்தால் நலம்.
உண்மையில் இரஞ்சித் முன்வைக்கும் அடையாள அரசியல் சாதி ஒழிப்பிற்கானதல்ல, சாதி இறுக்கத்திற்கே வழிவகுக்கும்! வரலாற்று ரீதியாக அம்பலமாகி அழுகி நாறும் அடையாள அரசியலைத் தூக்கிப்பிடிப்பதும், சாதி ஒழிப்பிற்கும் தலித்துகளின் நல்வாழ்விற்கும் தீர்மானகரமான ஒரே வழியான வர்க்கப் போராட்டம் மற்றும் கம்யூனிசத்தின் மேல் தொடர்ச்சியாகச் சேற்றை வாரி அடிப்பதும் அறியாமையல்ல, அயோக்கியத்தனமே!
இப்படி வர்க்கப் போராட்டத்தை மழுங்கடிக்கும் அடையாள அரசியலைக் கடந்த பத்தாண்டுகளாகத் தான் தயாரிக்கும் படங்கள் மூலமும், மேடைகள் தோறும் பரப்பியும் இரஞ்சித் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். திராவிட கட்சிகளின் ஆட்சியில் அரசியல் நீக்கம் செய்யப்பட்ட இளைய தலைமுறையைச் சேர்ந்த இவர்கள், இரஞ்சித் எடுக்கும் “புரட்சிகர” படங்களினால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு அறிமுகமாகிப் பெரும்பாலும் சமூக வலைதளங்களிலிருந்து மட்டுமே அரசியல் நிகழ்வுகள் மற்றும் வரலாற்றை அறிந்து கொள்கின்றனர். இதனாலேயே ஏதோ ஒரு வகையில் அடையாள அரசியலை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு ஓட்டுக் கேட்பது, 2024 வேர்ச்சொல் நிகழ்ச்சியில் “தலித்துகளுக்கென்று தனிக் கட்சி வேண்டும், தனிப் பண்பாடு வேண்டும், தனிக் கோயில் வேண்டும்” என்று பேசுவது போன்ற தருணங்களில் அப்பட்டமான சாதிய அரசியலை முன்வைத்து அம்பலப்பட்டுப் போகிறார் இரஞ்சித். இந்தத் தருணங்களிலும் கூட இரஞ்சித்தின் ரசிகர் பட்டாளம் அவர் பேசும் அரசியலின் அயோக்கியத்தனத்தைப் பார்க்கத் தடுப்பது இரஞ்சித் மீது இருக்கும் கண்மூடித்தனமான ரசிகவெறியும் மயக்கமுமே ஆகும்! “இரஞ்சித் அண்ணா சொன்னது தப்பு இருக்காது, இவ்ளோ பண்றாரு, அவர் காரணம் இல்லாமல் சொல்ல மாட்டாரு” என்ற இவர்களின் மயக்கத்திற்கும் தவெக-வின் விஜய் ரசிகர்கள் “விஜய் அண்ணா கரூரில் தப்புப் பண்ணியிருக்க மாட்டார்”, “விஜய் அண்ணா வந்தால் போதும்” என்ற மயக்கத்திற்கும் பெரிதாக வேறுபாடு இல்லை. முற்போக்கு அணியில் நின்றுகொண்டு விஜய் ரசிகர்களை அரசியல் தெரியாத “தற்குறிகள்” என்று சாடும் இவர்கள், தாங்கள் ஏற்றுக்கொண்ட அரசியலை மறுபரிசீலனைக்கு உட்படுத்தத் தடுப்பது இரஞ்சித் மீது இருக்கும் மயக்கமே. பலருக்கு ரசிக மயக்கமாக இருப்பது சிலருக்குக் கண்மூடித்தனமான ரசிகவெறியாக மாறி “இரஞ்சித்தையும் நீலத்தையும் விமர்சிப்பவனெல்லாம் சாதி வெறியன்” என்று கோமாளித்தனத்திற்கும் இட்டுச் செல்கிறது.
இரஞ்சித்தின் அரசியலுக்கு இளைஞர்கள் பலியாவதற்கு மற்றொரு முக்கிய காரணம், இரஞ்சித்தை விமர்சிப்பவர்கள் பலர் கடந்த காலங்களில் பாஜகவுடனும், தற்போது சாதிவெறிச் சங்கங்களுடன் கூட்டணி அமைக்கும் திமுக கட்சியின் அணியில் இருப்பதாகும். ஆம், கடந்த காலங்களில் திமுக பாஜகவுடன் கூட்டணி வைத்ததும், சிபிஐ, சிபிஐஎம், விசிக என அனைவரும் சாதியக் கட்சிகளுடன் கூட்டணிகள் வைத்ததும், தற்போது “பாசிச எதிர்ப்பு” வேடத்தில் அதே சாதிக் கட்சிகளை அணி சேர்த்துள்ளதும் உண்மையே. இவை அனைத்தும் அப்பட்டமான பிழைப்புவாத, சந்தர்ப்பவாத கூட்டணிகளே! பாசிச எதிர்ப்பு நாடகமே! மக்கள் விரோத அரசியலே! இருப்பினும் “நீ மட்டும் ஒழுங்கா” என்ற சந்தர்ப்பவாத சுழலில் சிக்காமல், திமுக அணியை மறுக்கும் அதே நேரத்தில் தங்களின் அரசியலிலுள்ள பிழையை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய கடமை அவர்களுக்கே உண்டு.
மேலும், இதுவரை இரஞ்சித் அடையாள அரசியலைக் கடைவிரிக்கும் போதெல்லாம் அதை அம்பலப்படுத்தாமல் சந்தர்ப்பவாதமாக அமைதி காத்த புரட்சிகர, முற்போக்கு சக்திகளுக்கும் இந்த ரசிகவெறியின் வளர்ச்சியில் பொறுப்புண்டு. இதில் குறிப்பாக எமது அமைப்பிலிருந்து ஓடிப்போன அரசியலற்ற, சித்தாந்தமற்ற வினவுக் கும்பல், கோவன் தலைமையில் இயங்கும் திமுகவுக்கு வால்பிடிக்கும் “மக்கள் அதிகாரம்” கும்பல் இருவரையும் சுட்டிக்காட்டலாம். இளைஞர்கள் மத்தியில் இரஞ்சித்திற்கு இருக்கும் கண்மூடித்தனமான செல்வாக்கைக் கண்டு அஞ்சி நடுங்கும் இவர்கள், அதைக் கேள்வி எழுப்பி அம்பலப்படுத்தத் திராணியற்று நிற்கின்றனர். மார்க்சிய லெனினியவாதிகள் என்று மார்தட்டிக் கொள்ளும் இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? நீலம் பண்பாட்டின் அடையாள அரசியல் இளைஞர்கள் மத்தியில் ஆற்றும் மேலாதிக்கத்தை உடைக்கக் குறைந்தபட்ச முயற்சியையாவது செய்திருக்க வேண்டும், ஆனால் இவர்கள் இத்தனை நாட்கள் கள்ள மௌனம் சாதித்து வந்தனர்; இன்று இரஞ்சித் தானே அம்பலமாகும் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி விமர்சனம் என்ற பெயரில் சந்தர்ப்பவாதிகளாகச் செயல்படுகின்றனர்.
ஒருபுறம் கள்ள மௌனம் சாதிக்கும் வினவுக் கும்பல், மறுபுறம் தங்களின் “சிவப்பு அலை” கலைக்குழு மூலம் இரஞ்சித்தின் ஆசிபெற்ற “காஸ்ட் லெஸ் கலெக்டிவ்” பாடல்களை மேடைதோறும் பாடி இரஞ்சித்திற்கும் அவர் முன்வைக்கும் அடையாள அரசியலுக்கும் மறைமுகமாகப் பல்லக்குத் தூக்கி வருகின்றனர். வர்க்கப் போராட்டத்தின் மீது இளைஞர்கள் நம்பிக்கை பெறுவதையே பின்நவீனத்துவ அடையாள அரசியல் தடுக்கிறது. அதை விமர்சிக்காமல் மௌனம் சாதித்துவிட்டு, அதே பின்நவீனத்துவ வெளிச்சத்தில் அடையாள அரசியலை உணர்வுபூர்வமாகக் கலை வடிவில் கடத்தும் பாடல்களை மேடைதோறும் பாடுவதன் மூலம் இரஞ்சித் உருவாக்கிவைத்துள்ள அடையாள அரசியல் ‘அலை’யில் இவர்கள் ‘சிவப்பு’ பெயின்ட் அடிக்க முற்படுகின்றனர். இதற்குப் பெயர்தான் சிவப்பு அலையோ?
“எவ்வளவுக்கெவ்வளவு சோசலிஸ்ட் இயக்கம் ஒரு நாட்டில் இளமையாக இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு வீரியத்துடன் அது சோசலிஸ்ட் அல்லாத சித்தாந்தங்களை வேரூன்றச் செய்யும் முயற்சிகள் அனைத்தையும் எதிர்த்துப் போராட வேண்டும்” என்று லெனின் வழிகாட்டுகிறார். இவ்வாறு வெளிப்படையான அரசியல் போராட்டத்தை நடத்திப் புரட்சிக்கு மக்களைத் திரட்ட முடியும் என்ற லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாட்டை மறுக்கும் அரசியலற்ற போக்கையே இந்த நடவடிக்கைகள் காட்டுகின்றன.
- பார்த்திபன்

