பார் கவுன்சில் தேர்தல் – ஓட்டுக்கு துட்டு!
பொதுமக்கள், வழக்கறிஞர் உரிமைக்கு வேட்டு!!
பார் கவுன்சில் என்பது ஒரு தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்பு என்பதால் அரசாங்கம் இதன் மீது நேரடியாக அதிகாரம் செலுத்த இயலாது. வழக்கறிஞர்கள் மீதும் பார் கவுன்சில் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலும். நீதிமன்றமும், அரசாங்கமும் நேரடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இயலாது.
இது தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருந்தால் மட்டுமே வழக்கறிஞர் தொழில் சுதந்திரமானதாக இருக்க இயலும். வழக்கறிஞர்கள் அரசின் கட்டுப்பாட்டிலோ, நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலோ இருந்தால் அச்சமின்றி நீதிமன்றத்தில் வழக்கு நடத்த இயலாது. பொதுமக்கள் சார்பாக அரசு அலுவலகங்களிலோ, நிறுவனங்களிலோ சென்று அச்சமின்றி அவர்களுக்காக பேச இயலாது.
வழக்கறிஞர் தொழில் பொதுமக்கள் உரிமைகளோடு நேரடியாக தொடர்புடையது. பொதுமக்களின் உரிமைகளையே வழக்கறிஞர்கள் எடுத்துரைப்பதால் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படவே பார் கவுன்சில் தன்னாட்சி பெற்ற அமைப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்கள் உரிமைகளை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மூலமாகவே பெற இயலும் என்ற தன்மையில் தான் இந்திய நீதித்துறை கட்டமைப்பு உள்ளது.
பொதுமக்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய இடத்தில் இருக்கக்கூடிய வழக்கறிஞர்களை ஒழுங்குபடுத்தும் இந்த (தமிழக) பார் கவுன்சிலுக்குத்தான் 30.03.2026 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடக்கவிருக்கின்றது.
இங்கே வேட்பாளர்களும், வாக்காளர்களும் வழக்கறிஞர்கள் மட்டுமே…
நடைபெற இருக்கின்ற பார் கவுன்சில் தேர்தலுக்கு குறைந்தபட்சம் ஒரு ஓட்டுக்கு 5000 ரூபாய், மது, இன்பச் சுற்றுலா உள்ளிட்ட இன்னும் இன்னும் பல்வேறு வகையில் கையூட்டுகளை விநியோகிக்கிறார்கள் பெரும்பான்மையான வேட்பாளர்கள் — பணத்தை பெற்றுக் கொண்டும் இதர அனைத்தையும் அனுபவித்தும் வருகிறார்கள் ஏராளமான வாக்காளர்கள்…
பணத்திற்காக மட்டுமா வாக்களிக்கிறார்கள்?
தன் சாதிக்காரன், தன் மதத்துக்காரன், தன் ஊர்க்காரன் இதற்காகவும் வாக்களிக்க இருக்கிறார்கள்.
சாதி, மதம், ஊர் என்பதெல்லாம் ஒரு பார் கவுன்சில் உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்கான அளவுகோலா?
இது ஊழல், முறைகேடு, அயோக்கியத்தனம் இல்லையா?
வழக்கறிஞர்கள் ஊழல் மயப்பட்டவர்களாக இருந்தால் பொதுமக்கள் இவர்கள் மூலம் உரிமைகளை பெற இயலுமா?
இப்படி ஊழல் மயப்பட்ட ஒரு வழக்கறிஞர் தன் கட்சிக்காரருக்காக எவ்வாறு நேர்மையாக நடந்து கொள்வார்? இது வெறும் 5000 ரூபாய், ஒரு பாட்டில் மது, ஒரு இன்பச் சுற்றுலா, சுய சாதி, மதப்பற்று சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. அந்த குறிப்பிட்ட வழக்கறிஞரின் நேர்மை சம்பந்தப்பட்டது.
பொதுவாக வழக்கறிஞர்கள் தங்களை சமூகத்தில் மேம்பட்டவர்களாக கருதிக் கொள்கின்றனர்!!!! அவ்வாறு கருதி கொள்வதற்கும் துளியும் தகுதி இருக்கிறதா இப்படிப்பட்ட வழக்கறிஞர்களுக்கு?
சில வழக்கறிஞர் சங்கங்கள் மொத்தமாக தங்கள் சங்கத்தை விலை பேசி லஞ்சமும், வேட்பாளர்கள் செலவில் இன்பச் சுற்றுலாவும் சென்று வருகிறார்கள் என்பது அதைவிட வெட்கக்கேடு!
இவை அனைத்தும் இந்தத் தேர்தலில் மட்டும் நடப்பது அல்ல. தொடர்ந்து பல தேர்தல்களில் நடந்து வரும் முறைகேடுகள். அங்கொன்றும் இங்கொன்றுமாக இலை மறை காயாக இருந்து வந்த இந்த முறைகேடு இன்று பரவலாக்கப்பட்டு கூச்சமின்றி அது ஒரு உரிமையைப் போல பழக்கப்படுத்தப்பட்டுள்ளது.
இளம் வழக்கறிஞர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய மூத்த வழக்கறிஞர் சிலர் தங்கள் வாக்குகளுக்கு பணத்தைப் பெற்றுக் கொண்டு தங்கள் இளம் வழக்கறிஞர்களுக்கும் சேர்த்து பட்டுவாடா செய்யும் கேவலமான வேலையை செய்து வருகின்றனர். இளம் வழக்கறிஞர்களையும் இந்த முறைக்கேட்டிற்கு பழக்கப்படுத்துகின்றனர்! ஊர் ஊருக்கு ஒரு வழக்கறிஞரை ஏஜெண்டாகவும் வைத்துள்ளனர் சில வேட்பாளர்கள்.
பணம் செலவு செய்யாமல் தேர்தலை சந்திக்கும் வேட்பாளர் கேலிக்கு ஆளாக்கப்படும் நிலைதான் இன்று நிலவுகிறது. பொதுமக்கள் நலனுக்காக எவ்வளவு தியாகங்களை செய்த வழக்கறிஞர் சமூகம் இன்று இப்படிப்பட்ட ஊழலை சகித்துக் கொள்வதற்கு பழக்கப்பட்டிருக்கிறது!
வழக்கறிஞர் தொழிலில் இளம் வழக்கறிஞர்களுக்கு போதிய வருமானம் இல்லை என்று கூறி இந்த முறைகேட்டை நியாயப்படுத்துகிறார்கள் சிலர் அறிந்தும் அறியாமலும்! உலகமயமாக்கல் சூழலில் வழக்கறிஞர் தொழிலில் மட்டுமா வருமானம் இல்லை? நாடு முழுவதும் பலரும் வேலை இழந்து வருமானமின்றி துன்பப்படுகின்றனர்.
வேலையில்லை, வருமானம் இல்லை என்பதால் வழிப்பறியையும் கொள்ளையையும் நியாயப்படுத்த முடியுமா?
இந்த நெருக்கடியான சூழலை எதிர்கொண்டு இளம் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல வழக்கறிஞர்கள் தொழில் செய்து வருகின்றனர். நாம் அவர்களிடம் இருந்தல்லவா பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்!
வ.உ.சிதம்பரனாராகவும், அம்பேத்காராகவும் மாற வேண்டாம், ஊழல்வாதிகள் கொடுக்கும் எச்சில் காசுக்கு ஆசைப்பட வேண்டாம் என்று தான் கூறுகிறோம்.
கோடிக்கணக்கான பணம் செலவழித்து ஏன் பார் கவுன்சில் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்? இவர்கள் செலவு செய்த கோடிக்கணக்கான தொகையை எவ்வாறு மீட்டெடுப்பார்கள் என்று ஒரு கணமாவது சிந்திக்க வேண்டாமா?
உலகமயமாக்கல் சூழலில் பன்னாட்டு நிறுவனங்களின் வசதிக்காக நிறுவனங்கள் தொடர்புடைய பல வழக்குகள் நீதிமன்ற அதிகார வரம்பிலிருந்து பறிக்கப்பட்டுவிட்டது. இது வழக்கறிஞர் தொழிலை நேரடியாக பாதிக்கிறது.
பல கோடிகளைச் செலவு செய்து பார் கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுடைய பார் கவுன்சில் உறுப்பினர் பொறுப்பை பயன்படுத்தி நீதிபதிகள், காவல்துறையினர், அரசு உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு தங்களுடைய பதவி காலத்தில் பல கோடிகளை சம்பாதிக்கின்றனர். இந்தப் பின்னணியில் வழக்கறிஞர்கள் மீதும் ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுகின்றனர். பல கோடிகளை தொடர்ந்து சம்பாதிப்பதற்கு பார் கவுன்சில் உறுப்பினர் பதவியும் மீண்டும் தேவைப்படுகிறது. பார் கவுன்சில் உறுப்பினர்கள் தாங்கள் பல கோடிகளை சம்பாதிப்பதற்கு வழக்கறிஞர் உரிமைகளை அடகு வைப்பதற்கு துளியும் தயங்குவதில்லை.
இந்த நட்பு தொடர வேண்டும் என்பதற்காகவே
- 19.02.2009 தேதி ஈழப்பிரச்சனைக்காக தொடர்ந்து போராடிய வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வைத்து போலீஸாரால் தாக்கப்பட்டதற்கு நீதி கேட்டு வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டம் அப்போதைய பார் கவுன்சில் உறுப்பினர்களின் துணையோடு சதித்தனமாக முடித்து வைக்கப்பட்டது.
- வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் குரலை உயர்த்தி பேசினால் நீதிபதிகள் வழக்கறிஞர்களை தண்டிக்க இயலும் என்ற 34(1) விதி அப்போதைய பார் கவுன்சில் உறுப்பினர்களின் எதிர்ப்பின்றி கொண்டுவரப்பட்டது.
- இந்த விதியை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று JAAC-ன் தலைமையில் போராடிய போது போராட்டத்தை வழிநடத்திய வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளை சஸ்பெண்ட் செய்து அவர்களை பல்வேறு மாநிலங்களில் வைத்து விசாரிக்க பார் கவுன்சில் உத்தரவிட்டிருந்தது.
பார் கவுன்சில், வழக்கறிஞர் நலனுக்கு எதிராக செயல்பட்டதில் ஒரு சில உதாரணமே இவை.
வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தங்களுக்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்று பெரும்பாலான நீதிபதிகள் இன்றைய சூழலில் விரும்புகின்றனர். வழக்கறிஞர்கள் நீதிபதிகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க பழகிக் கொண்டால் நீதிபதிகள் என்ன நினைக்கிறார்களோ, அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்களோ அதுவே நீதியாக எழுதப்படும். இது நீதி பரிபாலனத்திற்கு கேடாய் விளையும். தரப்பினரில் யார் பக்கம் நியாயம் உள்ளது, சட்டம் என்ன கூறுகிறது என்பதை வழக்கறிஞர்கள் வாதிடும்போது மட்டுமே நீதிபதிகளுக்கு உண்மை புலப்படும். இது அனைத்து நீதிமன்றங்களுக்கும் பொருந்தும்.
ஆனால் இந்த போக்கு தவறு என்று ஒருபோதும் பார் கவுன்சில் வெளிப்படையாகவோ மறைமுகமாகவோ சுட்டிக்காட்டியதாக தெரியவில்லை ஒருபுறம் மத்திய அரசு பார் கவுன்சிலை கலைத்துவிட்டு நேரடியாக தன்னுடைய அதிகாரத்தின் கீழ் செயல்படக்கூடிய அமைப்பாக மாற்ற முயல்கிறது. மத்திய அரசும் அகில இந்திய பார் கவுன்சிலும் இணைந்து வெளிநாட்டு வழக்கறிஞர் குழுமங்களை இந்தியாவில் தொழில் செய்ய அனுமதிப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.
எந்த ஒரு கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தாமல் அனைத்து விசாரணை நீதிமன்றங்களிலும் இ-ஃபைலிங் முறையை திணிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இவை அனைத்தும் வழக்கறிஞர் தொழிலையும் பொது மக்களையும் நேரடியாக பாதிக்கக் கூடியவை.
மேலே குறிப்பிட்டுள்ளவற்றை எதிர்த்தாலோ, இவற்றிற்கு எதிராக கருத்து கூறினாலோ உயர் நீதிமன்றத்தையும், அரசையும் நேரடியாக பகைத்துக் கொள்ள வேண்டிய சூழல் வரலாம். இது தங்களுடைய சொந்த நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று பார் கவுன்சில் உறுப்பினர்கள் கருதலாம். இதனாலேயே பார் கவுன்சில் இவற்றை எதிர்க்காமல் மௌனமாகவும் இருந்துவிட்டு அடுத்த தேர்தலில் எதிர்ப்பின்றி எளிதாக வெற்றி பெறுவதற்கு வாக்காளர்களை ஊழல் மயப்படுத்துகிறார்கள். இதற்காகவே குற்றப் பின்னணி உள்ளவர்களையும் வழக்கறிஞராக்குகிறார்கள். வழக்கறிஞராக இருக்கும் போது குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களையும் பாதுகாக்கிறார்கள். இவர்கள் தனக்கு உதவிய பார் கவுன்சில் உறுப்பினரின் நிரந்தர வாக்காளராக இருப்பதோடு தேர்தலில் அவர்களுடைய ஏஜெண்டுகளாகவும் செயல்படுகின்றனர்.
பார் கவுன்சில் உறுப்பினர்களின் பொதுமக்கள் விரோத, வழக்கறிஞர்கள் விரோத போக்கை தட்டிக் கேட்க வேண்டும் என்றால் வாக்காளர்களாகிய வழக்கறிஞர்கள் கறை படியாதவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்கும் மதுவிற்கும், இன்பச் சுற்றுலாவிற்கும், சாதிக்கும், மதத்திற்கும், ஊர் பாசத்திலும், கட்சி பாசத்திலும் வாக்களிக்காதவர்களாக இருக்க வேண்டும். பணத்திற்கும் சாதிக்கும் ஓட்டு போட்டவர்களால் எவ்வாறு பார் கவுன்சிலுக்கு எதிராக பேச முடியும்? பணத்திற்காகவும், மதுவிற்காகவும், இன்பச் சுற்றுலாவிற்காகவும் ஓட்டு போடுவது பொதுமக்கள் உரிமையையும், தங்கள் சுயமரியாதையையும் அடகு வைப்பதாக உணரவில்லையா ஊழல் வழக்கறிஞர்களே?
இது வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல, நீதிமன்றமும் நீதி பரிபாலனமும் சம்பந்தப்பட்ட பிரச்சனை!
ஜனநாயக சிந்தனை கொண்ட வழக்கறிஞர்களும், வழக்கறிஞர் தொழிலை ஒழுங்காக நடத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட வழக்கறிஞர்கள் மட்டுமே சரி செய்யக்கூடிய பிரச்சனை அல்ல இது!!
🫵 ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும், பார் கவுன்சில் தேர்தலில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்தும், முறைகேடுகள் இன்றி பார் கவுன்சில் தேர்தலை நடத்த வலியுறுத்தியும் குரல் எழுப்ப வேண்டும்!!
வழக்கறிஞர்களே!!!
🫵இந்த ஊழல் வேட்பாளர்களை, ஊழல் வாக்காளர்களை வெளிப்படையாக கண்டிப்போம்!!!
🫵ஊழல் வேட்பாளர்களை பார்க்கும் இடமெல்லாம் விரட்டியடிப்போם!!!!
🫵ஜனநாயக சிந்தனை கொண்ட, பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட வழக்கறிஞர்களை இனம் கண்டு பார் கவுன்சில் உறுப்பினராக தேர்ந்தெடுத்து அனுப்பி வைப்போம்!!
🫵பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்ட வழக்கறிஞரால் மட்டுமே வழக்கறிஞர் தொழிலின் மீதும், நீதி பரிபாலனத்தின் மீதும் அக்கறை செலுத்த இயலும்!!!
🫵பொதுமக்கள் நலனும், வழக்கறிஞர் நலனும் வேறு வேறு அல்ல, பொதுமக்களும் வழக்கறிஞர்களும் ஒரே சமூகத்தால் உற்பத்தி செய்யப்பட்டவர்களே!
க.சிவராஜ பூபதி,
வழக்கறிஞர்,
நாகர்கோவில்
