தமிழகத்திலும் பரவுது பாசிச பயங்கரவாதம்
தேர்தல்பாதை உதவாது! தெருவில் இறங்கிப் போராடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
2026 தேர்தல் நாடகங்கள் அரங்கேறத் தொடங்கிவிட்டன. இலவசத் திட்டங்கள், பரிசுப் பொருட்கள், ஓட்டுக்குப் பணம், வாக்குறுதிகள் என சகல ஓட்டுக் கட்சிகளும் மக்களை ஏய்க்க முழுவீச்சுடன் களத்தில் இறங்கிவிட்டன.
எல்லாக் கட்சிகளும் கார்ப்பரேட் சேவர்களே என்றாலும், பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமை, பத்திரிக்கைச் சுதந்திரம், தேர்தல் என இருக்கும் அரைகுறை ஜனநாயக உரிமைகளையும் ஒழித்துவிட்டு, முதலாளிகளின் அப்பட்டமான சுரண்டலையும் சர்வாதிகாரத்தையும் நிறுவுவதே ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான காவி பாசிசக் கும்பலின் இலட்சியமாகும்! அக்கும்பல் நிறுவத் துடிக்கும் “இந்து ராஷ்டிரம்” எதிர்க் கட்சிகளுக்கும் இசுலாமியர்களுக்கும் மட்டுமல்ல, கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கே எதிரானதாகும்!
காவிகள் என்றதும் அண்ணாமலை, தமிழிசை, நயினார் நாகேந்திரன் போன்ற கோமாளிகள்தான் என்றே தமிழ் மக்களாகிய நாம் கருதுகிறோம். உண்மையில் இக்கும்பல் ஹிட்லரின் நாஜிப் படைபோல, பாசிசக் கொள்கையில் ஊறிப்போனதொரு படையாகும்; இசுலாமியருக்கு எதிராக மட்டுமல்ல, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகள், ஜனநாகவாத சக்திகளுக்கு எதிராகவும், மொத்த உழைக்கும் மக்களுக்கே எதிராகவும், முதலாளிகளின் கார்ப்பரேட் கொள்ளைக்கு ஆதரவாகவும் ஆயுதமேந்தி இயங்கும் இரகசிய, அரை இரகசிய பயங்கரவாத அமைப்பாகும்! அரசு நிறுவனங்கள், இராணுவம், நீதிமன்றங்களில் ஊடுருவுவது; தேர்தல் வெற்றிகள் இவையனைத்தையும் விட இப்படைதான் பாசிசத்தின் பிரதான ஆயுதமாகும்.
தமிழகத்தில் வேகமாகப் பரவும் பாசிச பயங்கரவாதம்!
வட இந்தியாதான் காவிகளின் கோட்டை என்பதை உடைத்தெறிந்து, தென்னிந்தியாவிலும், பெரியார் மண்ணான தமிழகத்திலும் பாசிச சக்திகள் வேகமாக வளர்ந்து வருகின்றன. தமிழ்நாட்டில், 2010-இல் வெறும் 1000-ஆக இருந்த “ஷாகா” என்னும் மதவெறியூட்டும் தினசரி வகுப்புகள், தற்போது 3,000-க்கும் மேல் அதிகரித்துள்ளன. இவையன்றி, ஆயிரக்கணக்கான மாதாந்திர, வாராந்திர வகுப்புகளையும் ஆர்.எஸ்.எஸ். நடத்துகிறது. ஆ.எஸ்.எஸ்.ஸுக்கும் தமக்கும் தொடர்பில்லை என்று கூறிக்கொண்டு, சுமார் 17-க்கும் மேற்பட்ட பதிலி அமைப்புகள் (proxies) தமிழகத்தில் இயங்குகின்றன. சமீபத்தில், மதுரையின் திருப்பாலை பகுதியில் ஒரு தனியார் பள்ளியில், யோகா வகுப்பு என்ற முகாந்திரத்தில் இளைஞர்களுக்குத் துப்பாக்கிப் பயிற்சி அளித்துள்ளதும்; துப்பாக்கிச் சத்தம் கேட்டு மக்கள் பலமுறை புகாரளித்தும் கண்டுகொள்ளாமல் தி.மு.க. அரசின் போலிசே அதற்கு உடந்தையாக இருந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது. நாளை மக்கள் தமது உரிமைகளுக்காகப் போராடினால், இந்து வெறியூட்டப்பட்ட இந்த பயங்கரவாதப் படையைத்தான் பாசிசம் ஏவிவிடும்!!
இக்கும்பல் தனக்கான படையை மட்டும் கட்டவில்லை; நாடெங்கும் செய்ததைப் போன்றே, தமிழ்நாட்டிலும் கணிசமான மக்களை தன்பக்கம் அணிதிரட்டத் தீவிரமாக முயன்று வருகிறது. விளக்கு பூஜை, ஆலயப் பாதுகாப்பு, கோயில்களை மீட்டெடுத்தல், யோகா வகுப்புகள், மதமாற்ற எதிர்ப்பு, நிவாரண உதவிகள் எனப் பல்வேறு முகாந்திரங்களில் மாநகரங்கள் முதல் குக்கிராமம் வரை ஊடுருவி வேர்பதித்து, கிளைபரப்பி விஷமரமாக வளர்ந்து வருகிறது. நேரடியாகப் பெரியாரையும் பகுத்தறிவுக் கொள்கையையும் எதிர்த்தால் எதிர்ப்புக் கிளம்புமென்பதை உணர்ந்துகொண்ட இக்கும்பல், சீமான் போன்ற முட்பொறுக்கிகளை ஏவி தாம் முன்னேறுவதற்கிருந்த தடைகளை அகற்றி வருகிறது. பா.ம.க. போன்ற ஆதிக்கசாதிவெறி அமைப்புகள் மட்டுமின்றி, ஜான்பாண்டியன், கிருஷ்ணசாமி போன்ற ‘தலித்’ அமைப்புகளிலும் ஊடுருவி, மக்களின் சாதிவெறியை ‘இந்துவெறியாக’ மாற்றி வருகிறது.
இவற்றின் ஒட்டுமொத்த விளைவுதான் சமீபத்தில் இலட்சக் கணக்கானோரைத் திரட்டி மதுரையில் ‘முருகன் மாநாட்டை’ நடத்தியதும்; அதைத் தொடர்ந்து ‘திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்குவோம்’ என வெளிப்படையாக மதவெறியைத் தூண்டி கலவரத்தை மூட்ட எத்தனித்ததும் ஆகும். தமிழகத்தில் முன்னெப்போதும் நிகழ்ந்திராத இம்மாற்றத்தை இந்தியாவே திரும்பிப் பார்த்தது. மேலும், தமிழ்நாட்டில் மட்டும் 175 இடங்களில் தேவாலயங்கள், மசூதிகளை இடித்து கோயில் கட்ட வேண்டுமென பகிரங்கமாக அறிவித்துள்ளது, காவிக் கும்பல்.
இதற்கு ஒத்திசைவாக, தமிழகத்தின் நீதிமன்றங்கள், அதிகார வர்க்கம், ஊடகங்கள் மட்டுமின்றி, பிற அரசியல் கட்சிகளிலும் கணிசமாக ஊடுருவியுள்ளது. எனவே, ‘பெரியார் மண்’ என வெற்றுப் பெருமைகொள்வதில் பயனில்லை; தமிழகம் இன்னொரு குஜராத்தாக மாறும் நாள் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கிறோம்!!
தி.மு.க.வின் ‘பாசிச எதிர்ப்பு’ நாடகம்!
இத்தகைய அபாயம் நாட்டையும் தமிழகத்தையும் சூழ்ந்திருப்பது குறித்து எந்தக் கட்சிகளும் வாய்திறப்பதில்லை அல்லது சம்பிரதாயமாக முனுமுனுக்கின்றன. “பா.ஜ.க.வை கொள்கை எதிரி” என்று குறிப்பிடும் விஜய், சீமான் போன்றோர் “தமிழகத்தில் பாசிசமாவது பாயசமாவது” என்கின்றனர். மறுபுறம், ‘2026 தேர்தல் ஒரு ஆரிய – திராவிடப் போர்’ என்றெல்லாம் கூறிக்கொள்ளும் தி.மு.க.வோ, இண்டியா கூட்டணிக் கட்சிகளோ, ஓட்டுக்காக பா.ஜ.க.வை எதிர்ப்பதுபோல நாடகமாடுகின்றன. உண்மையில் பாசிச எதிர்ப்புக்குத் துரோகமிழைக்கின்றன.
மதச்சார்பின்மை என்பது இவர்கள் முகமூடிதானே தவிர முகமல்ல! முத்தமிழ் முருகன் மாநாடு நடத்துவது; அதில் அர்ஜூன் சம்பத் போன்ற பாசிஸ்டுகளை மேடையேற்றிக் கூடிக் குலாவுவது என்று தன்னை ‘இந்துக்களின் காவலனாக’ காட்டிக் கொள்ள தி.மு.க. அரும்பாடுபடுகிறது. பாசிசம் உருவாக்கியுள்ள ‘இந்துமதவெறியை’ உடைத்தெறிய ஊக்கமாக எதிர்ப் பிரச்சாரம் செய்ய வேண்டுமென இவர்கள் சிந்திப்பதில்லை; மாறாக, அவ்வாறு செய்தால் ‘இந்துக்களின் ஓட்டு’ பறிபோய்விடுமோ என்றே அஞ்சுகிறார்கள். இந்நடவடிக்கைகள் காவிகள் மக்களிடம் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ ஒத்திசைவாகவே அமைந்துள்ளன.
பாசிஸ்டுகளைச் சட்டப்படிக்கூட இவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில்லை. உதாரணமாக, தஞ்சை மைக்கேல்பட்டி சிறுமி ‘தற்கொலையை’ ‘மதமாற்றக் கொலை’ என பா.ஜ.க. வெளிப்படையாகக் கலவரத்தைத் தூண்டியது. தற்போது ஒன்றிய அரசின் சி.பி.ஐ.யே ‘மதமாற்றம் இல்லை’ என்று கூறிவிட்டது. இத்தனைக்குப் பிறகும், கலவரத்தைத் தூண்டிய காவிகள் மீது தி.மு.க. கிரிமினல் நடவடிக்கை எடுக்கவேயில்லை. நேர்மாறாக, புரட்சிகர, ஜனநாயக சக்திகள் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரங்களை மேற்கொண்டால் அவற்றைத்தான் தி.மு.க. கடுமையாக ஒடுக்குகிறது. கூட்டணியில் உள்ள சி.பி.எம். கட்சியே ‘தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமெர்ஜென்சி உள்ளது’ என்கிறது. இதுதான் தி.மு.க.வின் பாசிச எதிர்ப்பு, ஜனநாயக முகம்!! மறுபுறமோ, காவிகள் எல்லா அட்டூழியங்களிலும் கலவரங்களிலும் ஈடுபட ‘சுதந்திரம்’ வழங்கப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள், ஆர்.எஸ்.எஸ். பேரணிகள், ஷாகாக்கள் போன்றவை முன்னெப்போதும் இல்லாத பரிமாணத்தில் நடப்பதே இதற்குச் சான்று!! உள்ளூர் தி.மு.க. தலைவர்கள், போலிசின் ஒத்துழைப்போடுதான் `பள்ளிகள், கல்லூரிகள், கோயில்களில் பெரும்பாலான மதவெறி வகுப்புகள் நடக்கின்றன.
இவ்வாறு தி.மு.க. பாசிசத்தின் பரவலுக்கு ஒத்திசைவாகச் செயல்படுவது, பாசிச எதிர்ப்பில் நாடகமாடி நீர்த்துப் போகச் செய்வது ஆகியவற்றின் மொத்த விளைவு என்னவென்றால், 2021-க்கு முன்பு மக்கள் மத்தியில் இருந்த பா.ஜ.க., மோடி எதிர்ப்பு கூட கணிசமாக மங்கிப் போயுள்ளதுதான்!
தேவை : கொள்கை ரீதியான மக்கள் படை!
அ.தி.மு.க. போன்றவை நேரடியாகவும் த.வெ.க., நாம் தமிழர் போன்றவை மறைமுகமாகவும் பாசிசத்தின் கூட்டாளிகளாக உள்ளனர். தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளும் பாசிச எதிர்ப்பில் நாடகமாடி துரோகமிழைக்கும் மண்குதிரைகளே! இவர்களில் யாரை நம்பி நாம் பாசிசத்தை வீழ்த்துவது?! மேலும், ஒன்றிய, மாநில ஆட்சியதிகாரங்களை மட்டும் நம்பி பாசிஸ்டுகள் இல்லை; ஆர்.எஸ்.எஸ். உருவாக்கியுள்ள பாசிசப் படையும் மக்கள் அடித்தளமும்தான் அவர்களின் பிரதான ஆயுதங்களாகும். இவற்றை எதிர்த்து முறியடிக்க எந்த ஓட்டுக் கட்சியிடமும் திட்டமோ, கண்ணோட்டமோ ஏதுமில்லை!
எனவே, இத்தகையதொரு கும்பலைத் தேர்தலில் ஓட்டுப் போட்டுத் தடுத்துவிடலாம், முறியடித்துவிடலாம் என்று கருதுவது மூட நம்பிக்கையாகும். நாட்டைச் சூழ்ந்துள்ள பேரபாயமான இக்கும்பலை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கியெறிய ஒரேவழி சாதி, மதம், இனம் கடந்து உழைக்கும் வர்க்கமாய் நாம் ஒன்றிணைவதே! இக்கும்பல் முன்வைக்கும் பாசிச அரசியலுக்கு நேரெதிரான, சமரசமற்ற, பாசிச எதிர்ப்புக் கொள்கையாலான மக்கள் படையொன்றைக் கட்டியமைப்பதே! அத்தகைய படையைக் கொண்டுதான் பாசிசத்தின் வளர்ச்சியையும் கலவரங்களையும் எதிர்கொள்ள முடியும். வேறு எளிமையான, குறுக்கு வழி ஏதுமில்லை!
- வடநாட்டில் மட்டுமல்ல, தமிழ்நாட்டிலும் வேகமாகப் பரவுது பாசிச நஞ்சு!
- ஓட்டுக் கட்சிகளின் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் பாசிச எதிர்ப்பில் மண்குதிரைகளே!
- பாசிச எதிர்ப்பு நாடகமாடி, துரோகமிழைக்கும் தி.மு.க., இண்டியா கூட்டணிக் கட்சிகளைப் புறந்தள்ளுவோம்!
- மக்கள் படையாய் அணிதிரள்வோம்! ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பலை விரட்டியடிப்போம்!
புரட்சிகர மக்கள் அதிகாரம் – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
