நிதி மூலதனங்களின் சூறையாடலுக்குத் திறந்து விடப்படும் இந்திய வங்கிகள்!
2008 இல் நடந்த சப்-பிரைம் நெருக்கடியை நாம் அறிவோம். அமெரிக்க அரசின் தலையீடற்ற சூதாட்டப் பொருளாதாரக் கொள்ளை; வங்கிகளின் கட்டுப்பாடற்ற ஊக வணிகச் சூறையாடல்; எல்லையில்லா தில்லுமுல்லு மோசடிகளின் காரணமாக அமெரிக்காவின் பெரிய வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும், பெரும் நிதி முதலீட்டுக் கழகங்களும் திவாலாயின. இப்பொருளாதார நெருக்கடியினால் அமெரிக்க மக்கள் சொந்த வீடுகளை இழந்தும் வேலைகளை இழந்தும் தற்கொலைகளுக்குத் தள்ளப்பட்டனர். உலகலாவிய வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என்பதைத் தாண்டி பிற நாடுகளின் வங்கிகளும் பெரும் நட்டத்தைச் சந்தித்தன.
இந்த நெருக்கடியினால் இந்திய வங்கிகள் பெருமளவு பாதிப்படையவில்லை. வங்கிகள் மீதான அரசின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படாததும், வங்கித் துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் பெருமளவு அனுமதிக்கப்படாததுமே இதற்குக் காரணமாகும். ஆனால், கடந்த இருபது வருடங்களில் நிலைமைகள் மாறியுள்ளன. சில இந்திய வங்கிகளை வெளிநாட்டு வங்கிகள் மற்றும் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் கையகப்படுத்தியுள்ளன. பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் அந்நிய முதலீடுகளும் அதிகரித்துள்ளன. வங்கிகள் மீதான அரசின் கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கடந்த ஒரு வருடத்தில் மட்டும், வேறெந்தத் துறையைக் காட்டிலும், அதிகளவு அந்நிய நேரடி முதலீடு (11 பில்லியன் டாலர்) வங்கிச் சேவைத் துறையில் மட்டும் குவிந்துள்ளது. உதாரணமாக,
செப்டம்பர் 23, 2025 இல் ஜப்பானின் இரண்டாவது பெரிய வங்கியான சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் (SMBC), யெஸ் வங்கியின் 25 சதவீதப் பங்குகளை 1.6 பில்லியன் டாலர் முதலீட்டில் வாங்கியுள்ளது.
அக்டோபர் 2 இல், அபுதாபியின் இன்டர்நேஷனல் ஹோல்டிங் கம்பெனி (IHC), சம்மான் கேபிட்டலின் (முன்னர் இண்டியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ்) கணிசமான பங்குகளை 1 பில்லியன் டாலர் முதலீட்டில் வாங்கியுள்ளது.
அக்டோபர் 10 இல், அமெரிக்காவைச் சேர்ந்த வார்பர்க் பிங்கஸ் என்ற தனியார் பங்கு நிறுவனம், IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் 10 சதவீதப் பங்குகளை 4,876 கோடிக்கு வாங்கியுள்ளது.
அக்டோபர் 18 இல் எமிரேட்ஸ் NBD, RBL வங்கியில் 60 சதவீதப் பங்குகளை 3 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
டிசம்பர் 22 இல் ஜப்பானின் மிகப்பெரிய வங்கியான MUFG வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 20 சதவீத பங்குகளை 4.4 பில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளது.
பிப்ரவரி 14, 2026 இல், அமெரிக்காவின் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான பைன் கேபிட்டல், மணப்புரம் ஃபைனான்ஸின் கூட்டுக் கட்டுப்பாட்டையும், அந்நிறுவனத்தின் 41.66 சதவீதம் வரையிலான பங்கு மற்றும் மாற்றத்தக்க பத்திரங்களையும் 484 மில்லியன் டாலர்களுக்குக் கையகப்படுத்தியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்குள் வங்கித் துறையில் பெரியளவு அந்நிய நேரடி முதலீடுகள் குவிவதற்குக் காரணம், தனியார் வங்கிகளில் செய்யப்படும் அந்நிய நேரடி முதலீடுகள் மீதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகளை மத்திய வங்கி செய்திருப்பதுதான்.
இந்தியாவிலுள்ள ஒரு தனியார் வங்கி, தனது மொத்த பங்கு மதிப்பில் 74 சதவிகிதப் பங்குகளை அந்நிய முதலீட்டாளர்களுக்கு விற்க மத்திய வங்கி ஒப்புதல் வழங்கியுள்ளது. அதாவது, அத்தனியார் வங்கியின் மொத்த பங்கில் 74 சதவிகித பங்குகள் வரை FDI, FII, FPI ஆகியவற்றின் மூலமாக வெளிநாட்டு நிதி நிறுவனங்களோ அல்லது வங்கிகளோ வாங்கிக்கொள்ளலாம். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மொத்த பங்குகளின் அளவில் 74 சதவிகித பங்குகளை வைத்துக்கொள்ளலாம் என்றாலும், ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் அதிகபட்சம் 15 சதவிகித பங்குகளுக்கு மேல் வாங்க முடியாது. அதாவது, ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு முதலீட்டாளரோ அல்லது நிதி நிறுவனமோ அனுமதிக்கப்பட்ட 74 சதவிகித பங்குகளையும் வாங்க முடியாது. அம்முதலீட்டாளர் அதிகபட்சம் 15 சதவிகித பங்குகளுக்கான தொகையை மட்டுமே அத்தனியார் வங்கியில் முதலீடாகச் செய்ய முடியும். மேலும், வங்கியின் தலைமை எடுக்கும் முடிவுகள் குறித்து ஓட்டளிப்பதற்கு, 74 சதவிகித முதலீடுகள் செய்யும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு மொத்தமாக 26 சதவிகிதம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 74 சதவிகித ஓட்டளிக்கும் அதிகாரம் உள்நாட்டு முதலீட்டாளர்களிடமே உள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள், இந்தியாவிலுள்ள தனியார் வங்கிகளை வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் நேரடியாகக் கட்டுப்படுத்துவதைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதாக மத்திய வங்கி கூறுகிறது.
இவ்விதிகளுக்கு மாறாக, 2018-19 இல் சிரியன் கத்தோலிக்க வங்கியின் 51 சதவிகித பங்குகளை கனடாவைச் சேர்ந்த பேர்பக்ஸ் நிதி நிறுவனம் வாங்கியது. 2020 இல் லட்சுமி விலாஸ் வங்கியின் பெரும்பான்மை பங்குகளை சிங்கப்பூரின் டிபிஎஸ் வாங்கியது. வெளிநாட்டு முதலீட்டாளர்களின் பங்கு 15 சதவிகிதத்தைத் தாண்டக்கூடாது என்ற விதிகளைத் தளர்த்தி, உள்நாட்டுத் தனியார் வங்கியின் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான பங்குகளில் ஒரு குறிப்பிட்ட வெளிநாட்டு நிறுவனம் முதலீடு செய்ய மத்திய வங்கி அனுமதித்தது. சிரியன் கத்தோலிக்க வங்கி மற்றும் லட்சுமி விலாஸ் வங்கிகள் மோசமான நிதி நிலைமைகளில் இருந்ததினால், அவற்றைச் சரிசெய்வதற்காக விதிகள் தளர்த்தப்பட்டதாக மத்திய வங்கி அப்போது காரணம் கூறியது.
தற்போது அத்தளர்வுகளை அனைத்துத் தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கும் அமல்படுத்தத் தொடங்கியுள்ளது. இதனால் மேலே சொல்லப்பட்டுள்ள யெஸ் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், IDFC First Bank போன்ற தனியார் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளரே 15 சதவிகிதத்திற்கு மேல் முதலீடுகளாகச் செய்துள்ளனர். இதன் காரணமாகவே கடந்த ஆறு மாதங்களுக்குள் 11 பில்லியன் டாலர் முதலீடுகள் உள்நாட்டுத் தனியார் வங்கிகளில் குவிந்துள்ளன. கூடவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாகவே தனியார் வங்கிகளைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிர்வாக மாற்றத்திற்கான விதிமுறைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக (RBI reviewing bank ownership structure) மத்திய வங்கியின் தலைவர் சஞ்சய் மல்கோத்ரா கூறுகிறார்.
பொதுத்துறை வங்கிகளில் அந்நிய முதலீட்டுக்கான உச்சவரம்பு 20 சதவிகிதமாக உள்ளது. அதை 49 சதவிகிதமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகளிலும் மோடி அரசு இறங்கியுள்ளதாகப் பத்திரிகைகள் கூறுகின்றன. இவை நமக்கு உணர்த்துவது ஒன்றைத்தான், இதுவரை ஓரளவிற்காவது வெளிநாட்டு நிதிச் சூதாட்டக் கும்பல்களின் நேரடியான கட்டுப்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய வங்கிகள், தற்போது அக்கும்பல்களின் சூறையாடலுக்குத் திறந்து விடப்பட்டிருக்கின்றன. எனவே, வங்கிகளிலுள்ள மக்களின் சேமிப்புகள் மற்றும் சொத்துக்கள் அனைத்தும் வெளிநாட்டு நிதிச் சூதாட்டக் கும்பல்களின் சூறையாடலுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளன. இதைச் செய்தவர் ‘தேசப்பற்றாளர்’ மோடி.
மோடி கும்பலும், மத்திய வங்கியும், தனியார்மய ஆதரவாளர்களும், “நாட்டின் வளர்ச்சிக்கு வங்கித் துறையில் அந்நிய முதலீட்டுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது அவசியம்” என்கின்றனர். “இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. 2047-இல் இந்தியா வளர்ந்த நாடாக வேண்டுமென்றால் 30 டிரிலியன் டாலர் உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் தொழில்துறைக்குப் போதிய கடனுதவிகளை இந்திய வங்கிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். ஆனால், கடந்த சில வருடங்களாக வங்கிகளில் மக்களின் சேமிப்பு அளவு குறைந்து வருகிறது. எனவே, இதனை ஈடுகட்ட, வெளிநாட்டு முதலீடுகளை வங்கித் துறையில் அனுமதிப்பது மற்றும் புதிய வங்கிகள் தொடங்குவதற்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது ஆகியவற்றின் மூலம் பெருமளவு நிதி திரட்ட முடியும். அதைக் கொண்டு தொழில் துறைக்குக் கடன் வழங்குவதும், வங்கிகளை மேம்படுத்தவும் முடியும்” என்று ஜோசியம் சொல்கின்றனர்.
2047-இல் இந்தியா வல்லரசு என்று மல்லாக்கப்படுத்திக் கொண்டு கனவு காண்பது ஒருபுறம் இருக்கட்டும், முதலில் தனியார்மய ஆதரவாளர்கள் சொல்வதைப் போல, வங்கிகளால் கடன் கொடுக்க முடியாததினால் தான் தொழில் முதலாளிகள் தொழில்துறையில் முதலீடு செய்ய முடியாமல் முடங்கிப் போயுள்ளனரா?
பணக்காரர்களுக்கான ஆடம்பரப் பொருள்கள் சார்ந்த உற்பத்தியைத் தாண்டி, பெரும்பான்மை மக்களின் அடிப்படைத் தேவைகளுக்கான பொருள் உற்பத்தியானது நீண்டகாலமாகவே தேக்க நிலையிலேயே உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அமல்படுத்தியது, கொரோனா காலத்தில் மோடியின் வெளிப்படையான கார்ப்பரேட் ஆதரவுப் பொருளாதார நடவடிக்கை ஆகியவற்றினால் சிறு-குறு தொழில்கள் அழிந்தும், வேலையிழப்புகள் அதிகரித்தும், உண்மை ஊதியம் அதிகரிக்காமலும் போனதன் விளைவாக மக்களின் வாங்கும் திறனும் தேக்கமடைந்துள்ளது. தங்களின் அத்தியாவசித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, இரத்தத்தை வேர்வையாக்கிச் சேமித்தவைகளையெல்லாம் விற்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில்தான், இந்தியத் தொழில் முதலாளிகளுக்கான வரிக் குறைப்பு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஈட்டும் வருவாய்க்கு வரித் தள்ளுபடி, வாராக் கடன் தள்ளுபடி, உற்பத்திக்கான நிதிச் சலுகைகள் என முதலாளிகளுக்கு வாரி இறைத்தது மோடி அரசாங்கம். இதன் மூலம் பல லட்சம் கோடிகள் லாபமடைந்துள்ள தொழில் முதலாளிகள், அதனை உள்நாட்டு உற்பத்தியில் முதலீடு செய்யாமல், உடனடி லாபத்திற்காகப் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்தும், வெளிநாடுகளில் முதலீடுகள் செய்தும் வருகின்றனர். மிருக வெறியுடன் (Animal Spirit) முதலீடு செய்யுங்கள், நாங்கள் இருக்கிறோம் என்று நிர்மலா சீதாராமனும் மோடியும் எவ்வளவு சொல்லியும், தொழில் முதலாளிகள் அதனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
இப்படி மக்களைப் போண்டியாக்கி, அப்பணத்தைக் கொண்டு முதலாளிகளை மஞ்சள் குளிப்பாட்டிய உண்மையை மறைத்து, வங்கியிடம் பணம் இல்லை, தொழிற்துறை எப்படி வளரும்? இந்தியா எப்படி வல்லரசாகும்? எனவே வங்கி முதலீடுகளின் மீதான கட்டுப்பாடுகளை நீக்குங்கள் என்று அடுத்தகட்ட சூறையாடலுக்காக நாடகமாடுகின்றனர் தனியார்மயத்தின் ஆதரவாளர்கள்.
வங்கிகளை வலுப்படுத்த வேண்டும் என்ற நேர்மையான நோக்கத்திலிருந்தா மோடி அரசும் மத்திய வங்கியும் அந்நிய முதலீடுகளுக்கான தளர்வுகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்? இல்லை என்பதே இதற்கான பதில். கடந்த சில வருடங்களாகவே குறைந்து கொண்டு வரும் நிகர அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவே வங்கிகளில் அந்நிய முதலீட்டுக்கான தளர்வுகளை மத்திய வங்கி செய்துள்ளது.
இந்தியாவின் நிகர அந்நிய நேரடி முதலீடு என்பது, இந்தியாவிற்குள் வரும் அந்நிய நேரடி முதலீட்டிலிருந்து, இந்தியாவிலிருந்து வெளியேறும் முதலீடுகளைக் கழித்த பிறகு கிடைக்கும் மதிப்பாகும். அதாவது, சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பணத்தை முதலீடு செய்யும் அதே வேளையில், வேறு சில வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் மூலதனத்தை இந்தியாவிலிருந்து வெளியே எடுக்கின்றனர். மேலும், இந்திய முதலீட்டாளர்கள் வெளிநாடுகளில் முதலீடும் செய்கின்றனர். இந்த உள்வரவுகள் மற்றும் வெளிவரவுகளைக் கழித்த பிறகு, நமக்கு நிகர அந்நிய நேரடி முதலீடு கிடைக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக, நிகர அந்நிய நேரடி முதலீடு கடுமையாகச் சரிவைச் சந்தித்து வருகிறது. 2014-15 இல் 30 பில்லியன் டாலராக இருந்த நிகர FDI, 2024-25 இல் 1 பில்லியன் டாலருக்கும் குறைவாகச் சரிந்துள்ளது. இந்தியாவிற்குள் வரும் மொத்த FDI கணிசமான அளவு அதிகரித்தாலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுவது அதிகரித்தும் (2019-20 இல் 25 சதவீதத்திலிருந்து 2024-25 இல் 64 சதவீதமாக) மற்றும் இந்திய முதலீட்டாளர்களின் வெளிநாட்டு முதலீடுகள் (2019-20 இல் 17 சதவீதத்திலிருந்து 2024-25 இல் 35 சதவீதமாக) உயர்ந்தும் உள்ளது. இவை இரண்டின் கூட்டுத்தொகை, இந்தியாவிற்குள் வரும் முதலீடுகளுக்கு நெருக்கமாக இருப்பதினால் நிகர FDI யின் அளவு சரிந்துள்ளது.
வங்கித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதன் மூலம் வங்கிச் சேவைத் துறையில் அந்நிய நேரடி முதலீடுகள் குவியும், இதனால் உடனடியாக நிகர FDI யின் அளவும் அதிகரிக்கும். இதன் மூலம் Current Account Deficit (இந்தியாவின் மொத்த ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் உள்ள பற்றாக்குறை) ஐச் சமாளிப்பதும், அந்நியச் செலாவணிக் கையிருப்பை அதிகரித்துக் கொள்வதும் முடியும். இந்நோக்கத்திற்காகவே வங்கிகள் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.
ஒவ்வொரு முறையும் நிதித் துறையானது அரசின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுவிக்கப்படும் போதெல்லாம், புதிய நிதி நெருக்கடிகள் உருவாகின்றன. அமெரிக்க நிதி அமைப்பின் தாராளமயமாக்கல் ஒரு அசாதாரணமான நிதிச் சூறையாடலுக்கு வழிவகுத்தது, அது 2008-ஆம் ஆண்டின் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சியில் முடிவடைந்து, உலகளாவிய பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியது. யெஸ் வங்கி, ஐஎல்&எஃப்எஸ் (IL&FS), டிஎஃப்ஹெச்எல் (DFHL) மற்றும் சமீபத்தில் இண்டஸ்இண்ட் வங்கியில் நடந்த கருவூல மோசடி போன்ற அரசு சாரா வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நிதி முறைகேடுகளுக்குப் பின்னால், தனியார் வங்கிகள் மீதான கட்டுப்பாட்டுத் தளர்வுகளே காரணமாக உள்ளன. தற்போது, இந்திய நிதித் துறையை முற்றிலுமாக அந்நிய முதலீடுகளுக்குத் திறந்து விடுவதன் மூலம், இந்திய மக்களின் சேமிப்புகளை அந்நிய நிதி ஆதிக்கக் கும்பல்களின் சூறையாடலுக்கான கதவை மோடி திறந்துவிட்டுள்ளார்.
- மாணிக்கம்

