ஈரான் போர்: யாருடைய இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது, மக்களுடையதா, முதலாளிகளுடையதா?

இந்தப் போரானது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது, மனித உரிமைகளுக்கும் நெறிகளுக்கும் எதிரானது, என்பதுடன் இந்தியப் பொருளாதாரத்தையும், பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும், இந்தப் போர் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனத் தெரிந்தும் மோடி அரசு அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை. இந்தப் போரில் இந்தியா எந்தத் தரப்பிலும் சேராமல் நடுநிலை வகிப்பதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுத்துள்ள போரின் தாக்குதல் தற்போது நமது நாட்டு மக்களின் சமையலறை வரை எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்தப் போரின் காரணமாக ஏற்பட்டுள்ள எரிவாயு பற்றாக்குறை நாடு முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியிருக்கிறது. வீடுகளில் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் சமயல் எரிவாயுவின் விலை, சிலிண்டருக்கு 60 ரூபாய் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. உணவகங்களிலும், பிற வர்த்தக நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் வணிக சிலிண்டரின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், வணிக சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கேஸ் சிலிண்டர்கள் கிடைக்காததால் நாடு முழுவதும் ஹோட்டல்கள் மூடப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் 10,000 ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. பெங்களூரு, ஹைதிராபாத், மும்பை என எல்லா நகரங்களிலும் இதே நிலைதான். இந்த நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள், மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதிகளும் சிலிண்டர் தட்டுப்பாடால் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நேரடியாக பாதிக்கப்படும் நிலை உருவாகியிருக்கிறது.

அதுமட்டுமன்றி, வாகனங்களில் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயுவிற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஆட்டோ, டாக்ஸி உள்ளிட்ட மக்களின் போக்குவரத்துக்கான வாகனங்கள் பெட்ரோல் பங்குகளில் மணிக்கணக்காக காத்திருக்கின்றன.

இந்தப் போரின் தாக்கம் சென்னையோடு நின்றுவிடவில்லை, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அது வேறு வகையில் எதிரொலிக்கிறது. திருச்சி, தஞ்சை, மதுரை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு வேலை தேடிச் சென்றுள்ள பல இலட்சம் தொழிலாளர்களது குடும்பங்கள் தங்களது உறவுகளின் பாதுகாப்பை எண்ணி அச்சத்தில் உள்ளனர். அந்நாடுகளில் இருந்து அவர்கள் அனுப்பிவைக்கும் பணத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் இந்தக் குடும்பங்கள் அவர்கள் வேலை இழந்து திரும்பும் நிலை ஏற்பட்டால் நடுத்தெருவில் நிற்க வேண்டியிருக்கும்.

இந்நிலை தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, கேரளாவிலிருந்து உத்தர பிரதேசம் வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரு கோடி தொழிலாளர்கள் வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களது வேலைகளையும், பாதுகாப்பையும் இந்தப் போர் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படும் பணத்தின் மூலம் கிடைக்கும் அன்னியச் செலாவணியில் 40% வளைகுடா நாடுகளில் இருந்து வருகின்றன. இந்தப் போரின் காரணமாக இது மிகப்பெரிய அளவில் குறையக்கூடும் என்பதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்கும்.

ஏன் இந்தப் போர்? எதற்காக இந்தத் தாக்குதல்?

கடந்த பிப்ரவரி மாத இறுதியில், அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தன. ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கிறது என்று கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடுக்கும் வழக்கமான தாக்குதலாக அது இல்லை. ஈரானின் உச்சபட்சத் தலைமையைக் குறிவைத்து நடத்தப்பட்ட படுகொலை அது. ஈரானின் உச்சத் தலைவர் அயதொல்லா அலி கமேனி, ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரி, பாதுகாப்பு அமைச்சர், தேசிய பாதுகாப்பு மன்றத்தின் செயலாளர், புரட்சிகரப் படையின் தலைமைத் தளபதி என ஈரானின் மிக முக்கிய தலைவர்கள் அனைவரும் ஒரே தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் அத்துடன் நிற்கவில்லை, தொடர்ந்து அந்நாட்டு நகரங்களின் மீது, பொது மக்களின் மீதும் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குவதைத் தொடர்ந்தார்கள். ஈரானின் மினாப் நகரில் ஒரு பள்ளி மீது குண்டு வீசப்பட்டது. அங்கே படித்துக் கொண்டிருந்த 175 சிறுமிகள் அதில் எரிந்து சாம்பலானார்கள். அதற்கடுத்து ஈரானின் 9 மருத்துவமனைகள் குண்டு வீசித் தகர்க்கப்பட்டன. காசாவில் நடந்ததை நினைவுபடுத்தும் விதமாக, மருத்துவமனைகள் கூட பாதுகாப்பான இடங்கள் இல்லை என்று நிரூபிக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. ஈரான் நகரங்களின் மின்சார கட்டமைப்பையும், மக்களின் குடிநீருக்கான கட்டமைப்புகளையும் தகர்க்கும் வகையில் அவற்றின் மீது குறிவைத்து ஏவுகணைகள் வீசப்படுகின்றன. இதன் மூலம் பல இலட்சம் ஈரானிய மக்கள் உணவும், தண்ணீரும் இல்லாமல் பரிதவிக்கும் நிலையை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஏற்படுத்தியிருக்கின்றன.

அப்பாவிக் குழந்தைகளை அவர்கள், படிக்கும் பள்ளியின் மீது குண்டு வீசிப் படுகொலை செய்வதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மீது குண்டுவீசுவதும் போர் அல்ல போர்க்க் குற்றம். அப்பட்டமான மனித உரிமை மீறல், படுகொலை. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் என்ன சொல்கின்றன? இந்தப் போருக்கான சூழலை ஈரான்தான் உருவாக்கியது, தற்போது வளைகுடா நாடுகளின் மீது தாக்குதல் தொடுப்பதன் மூலம் போரை ஈராந்தான் நீட்டித்துக் கொண்டிருக்கிறது என ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் பழி போடுகின்றன.

ஈரானின் மினாப் நகரில் பள்ளி மீது அமெரிக்க இராணுவம் குண்டு வீசியதில் கொல்லப்பட்ட 175 சிறுமிகளைப் புதைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள்.

ஆனால் இந்தத் தாக்குதல் ஆரம்பமாகும் முன்னறே, அமெரிக்கா தனது படைகளை வளைகுடா நாடுகள் முழுவதும் நிறுத்தியிருந்தது. ஜோர்டான், குவைத், பஹ்ரைன், சிரியா, கத்தார், சவுதி அரேபியா, துருக்கி, ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் என அனைத்து நாடுகளிலும் அமெரிக்க இராணுவத் தளங்கள் உள்ளன. தன்னை அமெரிக்கா தாக்கினால், இந்த இராணுவத் தளங்கள் அனைத்தையும் தாக்குவோம் என்று ஈரான் பலமுறை எச்சரித்திருந்தது. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தவில்லை. அவர்களுக்குப் போர் வேண்டும். அவர்களுக்கு மேற்கு ஆசியாவின் முழுக் கட்டுப்பாடு வேண்டும்.

இது வெறுமனே ஈரான் என்ற ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. உலகளாவிய அமெரிக்க ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரு பெரிய முயற்சியின் ஒரு பகுதிதான் இது.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, பிப்ரவரி 14-ஆம் தேதி மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பேசியதைப் பார்த்தாலே இது தெளிவாகப் புரியும். அந்த மாநாட்டில் ஐரோப்பிய காலனியாதிக்கத்தின் மகிமையைப் போற்றி அவர் பேசினார். “கொலம்பஸ் காலத்திலிருந்து 1945 வரை மேற்கத்திய நாடுகள் விரிவடைந்துகொண்டே இருந்தன. ஆனால் 1945-க்குப் பிறகு, கம்யூனிஸ்ட் புரட்சிகளாலும், காலனி எதிர்ப்புப் போராட்டங்களாலும் அவை சுருங்கத் தொடங்கின” என்று அவர் வருத்தப்பட்டார். ஐரோப்பா மீண்டும் அமெரிக்காவுடன் இணைந்து “மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கத்தை” மீண்டும் நிறுவ வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அதே குரல்தான் இன்று ஈரான் மீதான தாக்குதலிலும் ஒலிக்கிறது. வெனிசுவேலாவின் அதிபரைக் கடத்தியதும், கியூபாவுக்கு எரிபொருள் தடை விதித்ததும், ஈரான் மீதான இந்தத் தாக்குதலும் அந்தக் கொள்கையின் வெவ்வேறு முகங்களே.

சர்வதேசச் சட்டத்தின்படி, ஒரு நாட்டின் தலைமையைப் படுகொலை செய்வது, ஒரு நாட்டின் மீது போர் தொடுப்பது என்பது நியூரம்பெர்க் போர்க் குற்ற விசாரணையில் வரையறுக்கப்பட்ட “ஆக்கிரமிப்புப் போர்” (war of aggression) என்ற குற்றத்தின் கீழ் வரும். தன்மீதான ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராகத் தன்னை தற்காத்துக் கொள்ளும் உரிமை ஈரானுக்கு உண்டு.

ஆனால் மேற்கத்திய ஊடகங்கள் இந்தத் தாக்குதலை, இந்தப் படுகொலையைக் கொண்டாடுகின்றன. பிபிசி, நியூயார்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் அனைத்தும் கமேனியின் மறைவை “ஈரானின் இரும்புப் பிடி முடிவுக்கு வந்தது” என்றெல்லாம் கொண்டாடின. ஒரு நாட்டுத் தலைவரைப் படுகொலை செய்வது சட்டத்திற்குப் புறம்பானது என்று எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை.

மாறாக, ஈரான் பதிலடி கொடுத்ததும், பிரான்சும், ஜெர்மனியும், பிரிட்டனும் உடனே கூச்சலிடத் தொடங்கின. “ஈரானின் பொறுப்பற்ற தாக்குதல்களைக் கண்டித்து, அதன் ஏவுகணைத் தாக்குதல் திறனை அழிக்க நடவடிக்கை எடுப்போம்” என்று அறிவித்தன. அமெரிக்காவின் பங்காளிகளாக இந்தப் போரில் கலந்துகொள்ள அந்நாடுகள் துடிக்கின்றன.

அதேசமயம் ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அமெரிக்காவின் பக்கம் நிற்கவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் இந்தப் படுகொலை நடந்த மறுதினமே தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஸ்பெயின், அமெரிக்காவின் நேட்டோ கூட்டாளி அந்த நாடு. அமெரிக்காவுடன் இருதரப்பு இராணுவ ஒப்பந்தம் கொண்ட நாடு. அமெரிக்காவின் இராணுவத் தளங்கள் ஸ்பெயினின் ரோட்டா மற்றும் மோரோன் நகரங்களில் இயங்குகின்றன. ஆனால் ஈரான் மீதான இந்தத் தாக்குதலை ஸ்பெயின் கண்டித்தது. அத்துடன் நிற்காமல், தன் நாட்டில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இந்தப் போருக்குப் பயன்படுத்தவும் ஸ்பெயின் அனுமதிக்க மறுத்துவிட்டது.

இதனால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்க உத்தரவிட்டுள்ளேன்” என்று மிரட்டல் விடுத்தார். “நாங்கள் விரும்பினால் அவர்களின் தளங்களைப் பயன்படுத்த முடியும். யாரும் எங்களைத் தடுக்க முடியாது” என்றும் அகந்தையாகப் பேசினார்.

அதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், “இந்த மோதல், இலட்சக்கணக்கான மக்களின் தலைவிதியுடன் விளையாடுவதற்குச் சமம்… யாரோ ஒருவரின் பழிவாங்கலுக்குப் பயந்து, உலகத்துக்குக் கெடுதலான ஒரு செயலிலும், நமது மதிப்புகளுக்கும் நலன்களுக்கும் எதிரான எந்தவொரு செயலிலும் நாங்கள் கூட்டுச் சேர மாட்டோம்” என்று அறிவித்தார்.

“இப்படித்தான் மனிதகுலத்தின் பெரும் பேரழிவுகள் ஆரம்பமாகின்றன. ஸ்பெயின் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நான்கு வார்த்தைகளில் சொல்லிவிடலாம்: எங்களுக்குப் போர் வேண்டவே வேண்டாம்” என்று முழங்கினார். பாலஸ்தீனத்தின் காசா நகரின் மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போரின் போதும் ஸ்பெயின் நாடு இதே நிலைப்பாட்டை எடுத்தது, அதனைக் கண்டித்தது என்பது இங்கே நிச்சயம் குறிப்பிடப்பட வேண்டும்.

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

ஸ்பெயின் அமெரிக்காவைக் கண்டித்தது.. ஆனால் இந்தியா என்ன செய்தது?

இந்தியாவிற்கு இருப்பதைப் போன்றே ஸ்பெயின் நாட்டிற்கும் அமெரிக்காவின் அழுத்தம் இருக்கிறது. இந்தியாவைப் போன்றே ஸ்பெயினும் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்கிறது. சொல்லப்போனால் ஸ்பெயினை விட மிகப்பெரிய நாடு இந்தியா. ஸ்பெயினை விட வலிமையான பொருளாதாரம், உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு இந்தியா என நமது ஆட்சியாளர்கள் மார்தட்டுகின்றனர். ஆனால் இந்தியா இந்த விசயத்தில் என்ன செய்தது?

ஈரானின் தலைமையைப் படுகொலை செய்ததைக் கண்டித்ததா? இல்லை. பள்ளிச் சிறுமிகள் 175 பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்ததா? இல்லை. ஒன்பது மருத்துவமனைகள் தகர்க்கப்பட்டதைக் கண்டித்ததா? இல்லை. இந்தியக் கடற்படையின் கப்பற்பயிற்சியில் கலந்துகொண்டு திரும்பிய ஈரானியக் கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்ததா? அதுவும் இல்லை.

மாறாக, இந்தப் போர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, நம் நாட்டின் பிரதமர் மோடி இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார். போர் வரப்போகிறது என்று உலகமே அறிந்திருந்த ஒரு தருணத்தில், நம் பிரதமர் இஸ்ரேலுக்குச் சென்று அந்நாட்டுப் பிரதமர் நெதன்யாகுவைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். அங்கு இராணுவ கூட்டுறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இந்த ஒப்பந்தம் வெறும் சம்பிரதாயமானது அல்ல. பாதுகாப்பு, தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்பு, வர்த்தகம், இஸ்ரேலுக்கு இந்தியத் தொழிலாளர்களை அனுப்புவது என பல துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் ஒப்பந்தம் அது.

போர் தொடங்கிய பின்னர், இந்த ஒப்பந்தத்தைப் பற்றி நெதன்யாகு பகிரங்கமாகப் பேசினார். தனது “பெரிய நண்பர்” மோடிக்கும், இந்தியாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். இந்தியா “உறுதியாக இஸ்ரேலுடன் நிற்கிறது” என்று மோடி தெரிவித்ததாகவும் அவர் கூறினார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை ஆரத் தழுவி நிற்கும் நரேந்திர மோடி

இதனை மெய்ப்பிக்கும் விதமாக, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்த போது அதனைக் கண்டிக்காமல் இந்தியா மௌனம் காத்தது. கண்டிக்கவில்லை என்பதுடன், அந்நாட்டின் உச்சத் தலைவர் கொல்லப்பட்டதற்கு இந்தியா இரங்கல் கூடத் தெரிவிக்கவில்லை. ஈரானியத் தலைமைப் படுகொலை செய்யப்பட்ட பின்னர், உலகம் முழுவதும் உள்ள ஈரானியத் தூதரகங்களில் இரங்கல் புத்தகங்கள் வைக்கப்பட்டன. அதில் கையெழுத்திட்டு இரங்கல் தெரிவிக்க உலக நாடுகளின் தூதர்கள் அழைக்கப்பட்டனர்.

ஆனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், உலகம் முழுவதும் உள்ள இந்தியத் தூதர்களுக்கு ஒரு ரகசிய உத்தரவை அனுப்பியது. தில்லியின் அனுமதி பெறாமல், எந்த இந்தியத் தூதரும் ஈரானியத் தூதரகங்களில் வைக்கப்பட்ட இரங்கல் புத்தகங்களில் கையெழுத்திடக் கூடாது என்று அந்த உத்தரவில் கண்டிப்பாகச் சொல்லப்பட்டிருந்தது.

இப்படியாக, ஈரானின் தலைமை படுகொலை செய்யப்பட்டதற்கு இரங்கல் தெரிவிப்பதையே இந்திய அரசு தடுத்தது. ஐந்து நாட்களுக்குப் பின்னர், நாடாளுமன்றத்திலும் பொதுவெளியிலும் கடும் கண்டனங்கள் எழுந்த பின்னரே, ஒரு இணை அமைச்சர் ஈரானியத் தூதரகத்திற்குச் சென்று இரங்கல் தெரிவித்தார்.

இதே நேரத்தில், இந்தியக் கடற்படையின் கப்பற்பயிற்சியில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த ஈரானியக் கப்பல் ஐஆர்ஐஎஸ் டெனா, அந்தப் பயிற்சியை முடித்துவிட்டு ஈரான் திரும்பிக்கொண்டிருந்தது. இந்தியக் கடற்படையினர் அந்தக் கப்பலுக்குச் சென்று, அதன் பணியாளர்களுடன் கலந்துரையாடியிருந்தனர். இருதரப்பு கடற்படைகளும் இணைந்து பயிற்சி மேற்கொண்டிருந்தன.

ஆனால் இலங்கைக் கடற்கரையில், அந்தக் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அதனை மூழ்கடித்தது. அதில் பயணம் செய்த ஈரானிய மாலுமிகள் பலர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் விருந்தினராக வந்து, இந்தியக் கடற்படையுடன் பயிற்சி மேற்கொண்டுவிட்டுத் திரும்பிக்கொண்டிருந்த ஒரு கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.

அந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தியக் கடற்படை வெளியிட்ட அறிக்கையில், தாக்குதல் நடத்தப்பட்டதையே குறிப்பிடவில்லை. மாலுமிகள் கொல்லப்பட்டதற்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. எதுவுமே நடக்காதது போல் இந்தியா மௌனம் காத்தது.

இந்தப் போரானது சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பானது, மனித உரிமைகளுக்கும் நெறிகளுக்கும் எதிரானது, என்பதுடன் இந்தியப் பொருளாதாரத்தையும், பல கோடி இந்தியர்களின் வாழ்வாதாரத்தையும், இந்தப் போர் மிகப்பெரிய அளவில் பாதிக்கும் எனத் தெரிந்தும் மோடி அரசு அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்க்கவில்லை, கண்டிக்கவில்லை.

இந்தப் போரில் இந்தியா எந்தத் தரப்பிலும் சேராமல் நடுநிலை வகிப்பதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால் இந்திய அரசின் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்த்தால் இந்தியா, அமெரிக்காவின் பக்கம் நிற்கிறது என்பது தெளிவாகத் தெரியும்.

இந்தப் போரினால் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகள் என்ன?

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதி (50%) ஹார்முஸ் நீரிணை வழியாகவே வருகிறது. நம் நாடு இறக்குமதி செய்யும் இயற்கை எரிவாயுவில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக, சமையல் எரிவாயுவில் (LPG) 50% க்கும் அதிகமாக அதே பாதை வழியாகத்தான் வருகின்றன. போர் நீடித்தால், இந்த ஆற்றல் விநியோகமே தடைப்படும் அபாயம் உள்ளது. எண்ணெய் இல்லாமல், எரிவாயு இல்லாமல் இந்தியப் பொருளாதாரமே செயலிழந்து போகும்.

இதனுடன் சேர்த்து, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஒரு கோடி இந்தியர்கள் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 50 பில்லியன் டாலர்களை (ஏறக்குறைய 50,000 கோடி ரூபாய்) இந்தியாவுக்கு அனுப்புகிறார்கள். இது நேரடி அந்நிய முதலீட்டை (FDI) விட இரண்டு மடங்கு அதிகம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் மொத்தப் பணத்தில் 40% வளைகுடா நாடுகளில் இருந்து வருகிறது.

இந்தப் போரினால் அந்தப் பணப்புழக்கம் தடைபட்டால், கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, உத்தரப் பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களின் கிராமப் பொருளாதாரங்கள் நொறுங்கும். வீடுகள் கட்டுவது நின்று போகும், சிறு வணிகங்கள் மூடப்படும், குழந்தைகளுக்கான பள்ளிக் கட்டணம் கூட கட்ட முடியாத நிலை ஏற்படும்.

இந்தப் போரின் காரணமாக இந்திய பொருளாதாரம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கியிருக்கிறது. இந்திய அரசு, சர்வதேச அளவில் உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை உயர்வை நுகர்வோருக்கு மாற்றினால், பணவீக்கம் வெடித்துவிடும். ஏற்கெனவே விலைவாசி உயர்வால் வாடும் சாமானியர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். இந்த விலை உயர்வை அரசே ஏற்க வேண்டுமென்றால், பெட்ரோல் மீதான வரிகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அப்படிக் குறைத்தால் அரசின் வருவாய் சரியும். வருவாய் குறைந்தால், அரசு செலவினங்களைக் குறைக்க நேரிடும். அதாவது, வேலைவாய்ப்புத் திட்டங்கள், மானியங்கள், உள்கட்டமைப்பு முதலீடுகள் அனைத்தும் பாதிக்கப்படும்.

அத்துடன் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த நேரிடும். அதிக வட்டி விகிதங்கள் தொழில்துறையைத் தேக்கநிலைக்குத் தள்ளும். கடன் வாங்க முடியாமல், முதலீடு செய்ய முடியாமல், உற்பத்தி குறையும்.

அது மட்டுமன்றி அந்நியச் செலாவணிக் கையிருப்பிலும் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். இந்தியாவிடம் பெரிய அளவில் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு (forex reserves) இருப்பதாக நமது ஆட்சியாளர்கள் பெருமையாகச் சொல்கிறார்கள். ஆனால் இதன் உண்மைத்தன்மை வேறு.

இந்தக் கையிருப்பு ஏற்றுமதி உபரியால் கட்டப்பட்டதல்ல. மாறாக, வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் முதலீடுகளால் கட்டப்பட்டது. அதாவது, வெளிநாட்டவர் இந்தியாவில் முதலீடு செய்த பணம்தான் இந்தக் கையிருப்பாகக் காட்டப்படுகிறது. இந்த முதலீடுகள் நிலையற்றவை. நெருக்கடி வந்தால் இவை பறந்து போகும்.

அதைவிடப் பெரிய உண்மை: இந்தியாவின் வெளிநாட்டுக் கடன்கள் இந்தக் கையிருப்பைவிட அதிகம். அதாவது, நம்மிடம் இருப்பதாகச் சொல்லப்படும் கையிருப்பு, உண்மையில் வேறொருவருக்குச் சொந்தமானது.

1990-91 வளைகுடாப் போரின் அனுபவம்

1990-91 வளைகுடாப் போர், இந்தியாவின் தீவிரமான நிதி நெருக்கடிக்கு வழிவகுத்தது. அந்நியச் செலாவணிக் கையிருப்பை காலி செய்ததன் காரணமாக, அந்த நெருக்கடிதான் இந்தியாவை சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) கையேந்தச் செய்தது. அப்போது ஆட்சியாளர்கள் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் கொண்டு வந்த திட்டங்கள், இந்தியப் பொருளாதாரத்தை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்குத் திறந்து விட்டன. தனியார்மயம் தாராளமயம் உலகமயம் என்ற இந்த நவீன தாராளவாதக் கொள்கைகளின் மூலம் ஏகாதிபத்தியங்களின் வேட்டைக் காடாக இந்தியா மாற்றப்பட்டதற்கு ஒரு வகையில் வளைகுடாப் போர் வழிவகுத்துக் கொடுத்தது.

இப்போது அதே நிலை மீண்டும் ஏற்படலாம். ஆனால் இந்த முறை, இந்திய அரசு சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இன்னும் அதிக சலுகைகளை வழங்க வேண்டியிருக்கும். புதிய துறைகளைத் திறப்பது, நாட்டின் சொத்துக்களை விற்பது, என மேலும் பல சலுகைகளை அள்ளிக் கொடுக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு நெருக்கடியிலும் இந்தியப் பொருளாதாரம் மேலும் மேலும் அந்நியர்களின் சுரண்டலுக்காகத் திறக்கப்படுகிறது, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கருணையை நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது.

இந்தியா பாதுகாப்பாக உள்ளது என்று மோடி கூறுகிறார். எந்த “இந்தியா” பாதுகாப்பாக உள்ளது?

ஈரான் போர் சம்பந்தமாக மோடி அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளின் காரணமாக இந்தியா பாதுகாப்பாக உள்ளதாக ஆளும்வர்க்கம் பிரச்சாரம் செய்கிறது. ஆனால் நாம் இதுவரை பார்த்த தரவுகள் அனைத்தும் ஆளும் வர்க்கத்தின் இந்தக் கூற்றுக்கும், மிகப்பெரிய அளவில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நடைமுறை உண்மைக்கும் முரண்பாடு உள்ளதைத் தெளிவாக காட்டுகின்றன.

அப்படி இருந்தும் ஏன் இந்தியா பாதுகாப்பாக இருக்கிறது என்று ஆளும் வர்க்கம் மீண்டும் மீண்டும் உறுதியளிக்கிறது. ஏனென்றால் அவர்கள் கூறும் இந்தியா என்பது கோடிக்கணக்கான மக்கள் அல்ல. அவர்களுக்கு இந்தியா என்பது இந்த நாட்டின் தரகு முதலாளிகள்தான்.

அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனும், இஸ்ரேலுடனும் கைகோர்த்துள்ள இந்தியப் பெரு முதலாளிகள், இந்தப் போரினால் பயனடைகிறார்கள். பாதுகாப்பு ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒப்பந்தங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் என அவர்களின் இலாபம் பெருகுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம், பிரதமர் மோடி இஸ்ரேலுக்குச் சென்றபோது, இரு நாடுகளுக்கும் இடையே 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. இவை வெறும் சம்பிரதாய ஆவணங்கள் அல்ல. பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI), இணையப் பாதுகாப்பு (cybersecurity), குவாண்டம் கம்ப்யூட்டிங், விண்வெளி, விவசாயம், மீன்வளம், நிதிச் சேவைகள் என பல துறைகளை உள்ளடக்கிய ஒப்பந்தங்கள் அவை.

இந்த ஒப்பந்தங்கள் மூலம் இணையப் பாதுகாப்பு, உளவுத்துறை, செயற்கை நுண்ணறிவு ஆகிய துறைகளில் இஸ்ரேலுக்குத் தேவையான தளவாடங்களை இந்திய முதலாளிகள் உற்பத்தி செய்யவிருக்கிறார்கள். இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனமான சி.எம். கம்போசிட் மெட்டீரியல்ஸ், இந்தியாவின் பெரிய தொழில்துறை உற்பத்தி நிறுவனத்துடன் (வேறு யாருமல்ல அதானிதான்) இணைந்து விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளுக்கான மேம்பட்ட கலவைப் பொருட்களை (advanced composite components) இந்தியாவில் தயாரிப்பதாக அறிவித்திருக்கிறது.

இந்த உறவு “சிறப்பு மூலோபாய கூட்டாண்மை” (Special Strategic Partnership) என்று அறிவிக்கப்பட்டது. அதாவது, இந்தியாவும் இஸ்ரேலும் இனி வெறும் வர்த்தகப் பங்காளிகள் மட்டுமல்ல; அவை முழு அரசியல், இராணுவ, தொழில்நுட்பக் கூட்டணியில் இணைந்துவிட்டன. இதன் மூலம் இந்தியப் பெருமுதலாளிகள் மிகப்பெரிய அளவில் இலாபமடைய இருக்கிறார்கள்.

இந்திய-இஸ்ரேல் முதலாளிகளின் கூட்டமைப்பு

2023 அக்டோபருக்குப் பிறகு, இஸ்ரேல் காசாவில் நடத்திய இன அழிப்புப் போரின் போதும், இந்திய நிறுவனங்கள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஏற்றுமதி செய்தன. காசாவில் இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்திய செயற்கை நுண்ணறிவு (AI) ஆயுதங்கள், அதானி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.

இந்திய-இஸ்ரேல் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) பேரவையின் நான்காவது கூட்டம் 2025 நவம்பரில் இஸ்ரேலில் நடைபெற்றது. இந்தப் பேரவையில் இந்தியாவின் மிகப்பெரிய தொழிலதிபர்கள் பங்கேற்றனர். அந்தப் பேரவையில் இரு நாட்டு உறவுகளையும் மேம்படுத்துவதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏனென்றால் இவர்கள்தான் இந்த உறவுகளை வலுப்படுத்துவதன் மூலம் நேரடியாகப் பயனடைகிறார்கள்.

அமெரிக்காவுடன் இந்தியா சமீபத்தில் செய்து கொண்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்தின் மூலமும் இந்திய முதலாளிகள் மிகப்பெரிய அளவில் இலாபமடைய இருக்கின்றனர். அமெரிக்காவுடனான வர்த்தகத்தில், இந்தியா 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருட்களை இறக்குமதி செய்யவிருப்பதாக அமெரிக்க வெள்ளை மாளிகையின் அறிக்கை கூறுகிறது. இதில் எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், நிலக்கரி மற்றும் பிற பொருட்கள் அடங்கும். 500 பில்லியன் டாலர் இறக்குமதி என்பது இந்தியப் பெருமுதலாளிகளை உலகப் பணக்காரர்களின் வரிசையில் முன்னிலை வகிக்கச் செய்யும் என்பதால் அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த அவர்கள் பெரிதும் விரும்புகிறார்கள்.

இவை அனைத்தும் சேர்ந்து நமக்கு ஒரு தெளிவான சித்திரத்தைக் காட்டுகின்றன: இந்திய ஆளும் வர்க்கமும், பெரு முதலாளிகளும் அமெரிக்க -இஸ்ரேல் கூட்டணியுடன் இந்தியப் பொருளாதாரத்தை இணைத்துள்ளனர். பாதுகாப்பு ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒப்பந்தங்கள், வர்த்தக ஒப்பந்தங்கள் என ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் இந்தக் கூட்டணியில் கையெழுத்தாகியுள்ளன. இந்தப் போரில் அமெரிக்காவின் பக்கம் இந்தியா நிற்பதன் மூலம் இவர்கள்தான் மிகப்பெரிய அளவில் பலனடைந்துள்ளனர்.

இவர்களின் இலாபத்துக்காக, இந்திய மக்கள் விலைவாசி உயர்வையும், எரிவாயு தட்டுப்பாட்டையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. கடன் வாங்கி  வளைகுடா நாடுகளுக்கு வேலைதேடிச் சென்றவர்களின் குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டியுள்ளது. பெரும் முதலாளிகள் இலாபத்தில் கொழிக்க மக்கள் வேதனையை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.

  • அறிவு

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன