PRAHAAR : பயங்கரவாத எதிர்ப்பின் முகமூடியில் அதிகரிக்கப்படும் பாசிசத்தின் கண்காணிப்பு வளையம்

தீவிரவாதத்திற்கு எதிராக “ஜீரோ சகிப்புத்தன்மை” என்ற முழக்கத்துடன் ஒன்றிய அரசு அண்மையில் தேசிய பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கையை (PRAHAAR) அறிவித்திருக்கிறது. நிலம், நீர், வானம் என மூன்று வழிகளில் இந்தியாவின் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களுடன், இணையவழியில் தொடுக்கப்படும் தாக்குதல்களையும் எதிர்கொள்ளும் வகையில் இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

இந்தக் கொள்கையில் ஏழு முக்கிய அம்சங்கள் விளக்கப்பட்டுள்ளன:

  1. தீவிரவாதச் செயல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே அவற்றைத் தடுப்பது.
  2. தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும் போது உரிய நடவடிக்கை எடுப்பது.
  3. தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைப்பது.
  4. தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை வகுப்பது.
  5. பயங்கரவாதத்திற்கு சாதகமான சூழ்நிலைகளை அகற்றுவது.
  6. சர்வதேச அளவில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது.
  7. சமூக ரீதியில் பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது.

மேலோட்டமாகப் பார்க்கும்போது பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு எதிராகவும், மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்காகவும் ஒன்றிய அரசு இந்தக் கொள்கை முடிவுகளை எடுத்திருப்பதாகத் தோன்றும் வகையில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தக் கொள்கை முடிவுகளைச் சற்று ஆழமாகப் பரிசீலித்துப் பார்க்கும் போதுதான் இதனைப் பயன்படுத்தி எவ்வாறு சிறுபான்மையினர் மீதும், காவி பாசிசத்திற்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளின் மீதும் கண்காணிப்பையும், ஒடுக்குமுறையையும் அதிகரிக்க முடியும் என்பதும், பயங்கரவாதப் பீதியூட்டி, ஒட்டுமொத்த சமூகத்தையும் காவி பாசிஸ்டுகளின் அரசியலுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கும் நிறுவனங்களை எவ்வாறு உருவாக்குகிறார்கள் என்பதும் புலப்படுகிறது.

உதாரணத்திற்கு பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே அவற்றைத் தடுப்பது என்பதற்கு, இணைய வெளியில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்துவது, சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள், பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை அரசின் கொள்கை முடிவு வலியுறுத்துகிறது. கடந்த காலங்களில் இது எவ்வாறு அமலாகியிருக்கிறது என்பதைப் பார்த்தால்தான் இதன் உண்மையான அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். மத்திய கண்காணிப்பு அமைப்பு, தேசியப் புலனாய்வுக் கட்டமைப்பு (NATGRID), இணையவழி போக்குவரத்துப் பகுப்பாய்வு (NETRA) எனப் பல நூறு கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு அமைப்புகளை காவி பாசிச மோடி அரசானது தனக்கு எதிராகப் போராடும் ஜனநாயக சக்திகளைக் கண்டறிந்து முடக்குவதற்காகப் பயன்படுத்தியது.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் நாடு முழுவதும் வீரியமாக நடந்த போது அதனை ஒடுக்குவதற்கு சமூக ஊடக கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியதுடன், சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராகப் பேசியவர்கள், எழுதியவர்களைக் கண்டறிந்து வழக்குத் தொடுக்கவும் இந்தக் கண்காணிப்பு அமைப்புகளை ஒன்றிய அரசு பயன்படுத்தியது. சிஏஏ போராட்டங்களை ஒடுக்குவதற்காக காவி பாசிஸ்டுகள் நடத்திய தில்லி கலவரத்தின் போதும் மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மீதான ஒடுக்குமுறைக்கும் இந்தக் கண்காணிப்பு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டன.

மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தலைநகரை முற்றுகையிட்டுப் போராடிய போது, விவசாய தலைவர்களின் பலநூறு சமூக ஊடகக் கணக்குகளைக் கண்டறிந்து அவற்றை முடக்க வேண்டும் என ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களை ஒன்றிய அரசு கட்டாயப்படுத்தியது.

பீமா கொரேகான் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் மடிக்கணினி, கைப்பேசி ஆகியவற்றில் பெகாசஸ் என்ற இஸ்ரேலிய நாட்டு உளவு மென்பொருளை (Spyware) பயன்படுத்தி போலியான ஆவணங்களை ஒன்றிய அரசு பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமன்றி எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தி வயர் பத்திரிகையின் நிருபர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையினர் உரிமைகளுக்காக போராடுபவர்கள், தேர்தல் அதிகாரிகள், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், எனப் பலரும் பெகாசஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி கண்காணிக்கப்பட்டது அம்பலமானது.

இதன் மூலம் தீவிரவாதத்தடுப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புகளை காவி பாசிச மோடி அரசானது, சிறுபான்மையினரை ஒடுக்குவதற்கு, அரசியல் எதிரிகளை வழிக்குக் கொண்டுவருவதற்கு, போராடும் ஜனநாயக சக்திகளை நசுக்குவதற்கு, தனக்குக் கீழ் வேலை பார்க்கும் அதிகாரிகளை வேவு பார்ப்பதற்குப் பயன்படுத்தியது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் இந்தக் குற்றங்களுக்கு ஒன்றிய அரசு பதிலளிக்காமல் புறந்தள்ளியது.

தற்போது மீண்டும் தீவிரவாத எதிர்ப்பு என்ற அதே பழைய கதையைக் கையில் எடுத்துக் கொண்டு கண்காணிப்பு அமைப்புகளை மேலும் தீவிரப்படுத்தும், நவீனப்படுத்தும் வேலையில் ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறது.

தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான சட்டப்பூர்வ வழிமுறைகளை வகுப்பதாகக் கூறியிருக்கிறார்கள். சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (ஊபா) என்ற பெயரில் மிகக் கொடூரமான ஆள்தூக்கிச் சட்டத்தை வைத்துக் கொண்டு நியாயமாக நடப்பதாக நாடகமாடுகிறார்கள். யாரை வேண்டுமானாலும், எவ்வித முகாந்திரமும் இல்லாமல், தீவிரவாத முத்திரை குத்திக் கைது செய்ய இந்த ஊபா சட்டம் வழி செய்கிறது. இந்தச் சட்டத்தில் கைது செய்யப்படுபவர்களை ஒன்றிய அரசு விரும்பினால் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் சிறையிலேயே வைத்திருக்கலாம். தில்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள உமர் காலித் உள்ளிட்டவர்கள் மீதான வழக்கில் இதுவரை விசாரணையே தொடங்கப்படவில்லை. இருந்தும் ஆறு ஆண்டுகளாக அவர்கள் சிறையிலேயே அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பிணை வழங்க உச்சநீதிமன்றம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதற்கு முன்னர் பீமா கொரேகான் வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்குப் பிணை வழங்காமல் பல ஆண்டுகள் அவர்களை ஒன்றிய அரசு சிறையில் அடைத்தது. பேராசிரியர் சாய்பாபா, ஸ்டான் பாதிரியார் என இருவருக்கும் சிறையில் அடிப்படை மனிதாபிமான உதவிகள் கூட வழங்காமல், பிணையும் கொடுக்காமல், விசாரணைக் கைதிகளாகவே அவர்களை ஒன்றிய அரசு சாகடித்தது. இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டு தான் மனிதாபிமானத்தோடு நியாயமாக நடப்பதாக தீவிரவாத எதிர்ப்புக் கொள்கையில் நாடகமாடுகிறது.

பயங்கரவாதிகளுக்குச் சாதகமான சூழ்நிலைகளை அகற்றுவது என்ற பெயரில், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி, வேலைவாய்ப்பை உருவாக்கிவிட்டால் இளைஞர்கள் தீவிரவாதத்தை நோக்கி ஈர்க்கப்படுவதைத் தடுத்துவிடலாம் என்று இவர்கள் கூறுகிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் வளர்வதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்ற இந்து பாசிச பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் பயங்கரவாதிகளுக்குச் சாதகமான சூழ்நிலைகளை அகற்றுவது என்பதன் உண்மையான அர்த்தம். நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை நடைமுறைப்படுத்திக் கொண்டு தீவிரவாதத்தைத் தடுப்பதாக கதையளந்து கொண்டிருக்கிறார்கள்.

மோடி-அமித் ஷா கும்பல் ஒன்றியத்தில் ஆட்சியில் அமர்ந்த பிறகு முஸ்லிம்கள் மீது குறிவைத்து நடத்தப்படும் பாசிசத் தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகின்றன. நாடு முழுவதும் பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. பசுக் குண்டர்கள் நடத்தி வரும் பயங்கரவாதப் படுகொலைகள்; பாஜக ஆட்சியிலுள்ள மாநிலங்களில் அன்றாடம் ஏவிவிடப்படும் காவி பாசிசம்; முஸ்லிம் மக்களின் மத வழிபாட்டு உரிமை பறிப்பு; முஸ்லிம்கள் மீதான பொருளாதாரத் தாக்குதல்கள்; அவர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் தகர்க்கப்படுதல்; ஊபா போன்ற கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி நிரந்தரமாக சிறையில் அடைப்பது; இந்துப் பண்டிகைகளின் போது ஊர்வலம் என்ற பெயரில் காவிக் குண்டர்கள் நடத்தும் அட்டூழியங்கள்; பொதுவெளியில் ரம்ஜான் தொழுகையை நடத்துவதற்குக் கூட அனுமதி மறுத்து அவர்களின் வழிபாட்டு உரிமையைப் பறிப்பது; வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தினால் போலீசைக் கொண்டு கைது செய்து தண்டிப்பது என முஸ்லிம்கள் அன்றாடம் வதைக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இஸ்லாமியர்கள் சொந்த நாட்டிலேயே இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தப்படுகிறார்கள். இது முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பையும் ஆத்திரத்தையும் கிளறிவிட்டுள்ளது. இந்தியா மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், மதிப்பும் தகர்ந்து போய் வருகிறது. இதுதான் பயங்கரவாதம் வளர்வதற்கான சூழல். இதனைக் களைய வேண்டும் என்றால் இந்து மத வெறி பாசிஸ்டுகளின் அட்டூழியத்தை நிறுத்த வேண்டும். ஆனால் அதனைத் தொடர்ந்து கொண்டே இஸ்லாமிய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுத்து அவர்களை பயங்கரவாத இயக்கங்களின் பக்கம் போகாமல் தடுத்துவிடலாம் எனக் கூறுகிறார்கள்.

மொத்தத்தில் மோடி அரசு கொண்டு வந்திருக்கும் இந்தப் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை என்பது காவி பாசிஸ்டுகள் தங்களது அரசியல் இலாபத்திற்காக இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரத்தைத் தொடரவும், அவர்களை எதிர்த்து யாரும் போராடினால் அவர்களைக் கண்காணித்து ஒடுக்கவும் பயன்படும் ஆயுதமே அன்றி வேறில்லை. இன்று இந்த ஆயுதத்தைச் சிறுபான்மையினர் மீதும் ஜனநாயக சக்திகள் மீதும் ஏவிவிடும் இந்து மத வெறிப் பாசிச மோடி அரசு, நாளை உழைக்கும் மக்கள் அவர்களுக்கு எதிராகப் போராடும் போது இதே ஆயுதத்தை உழைக்கும் மக்கள் மீதும் பயன்படுத்தும் என்பது நிச்சயம். எனவே, இந்தக் கொள்கையை வெறும் அரசியல் ஆவணமாகப் பார்க்காமல், காவி பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.

  • அறிவு

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன