தொழிலாளர் விரோத சட்டத் திருத்தங்களின் மூலம் உழைக்கும் பெண்களை ஒட்டச் சுரண்ட எத்தனிக்கும் மோடி அரசாங்கத்தை தூக்கியெறிய சூளுரைப்போம்!

மோடி அரசாங்கம் சமீபத்தில் கொண்டு வந்த நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு மூலம் பாலினப் பாகுபாடின்றி ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் உட்பட அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்வது, குறிப்பாக பெண்களுக்கு இரவு நேரங்களில் பணிபுரியும் வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான பணி சூழலை உறுதி செய்வது போன்றவை பலன்களாகப் பட்டியலிடப்படுகின்றன.

இப்படி சொல்வதன் மூலம், பெண்கள் முன்னேற்றத்திற்கு முழு மூச்சாக மோடி அரசாங்கம்  செயல்பட்டு வருவதாக மோதி மீடியாக்களும், ஆளும் வர்க்கங்களும் (முதலாளிகள்) சேர்ந்து கொண்டு ஒரு தோற்றத்தை உருவாக்கி வருகிறாது. உண்மையில் இந்த நான்கு சட்டத் தொகுப்புகளின் மூலம் பெண் தொழிலாளர்களின் வாழ்வில் தேனாறும் பாலாறும் ஓடப்போவதில்லை என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

தொழிலாளர்கள் பல ஆண்டுகளாகப்  போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் குழி தோண்டிப் புதைத்துவிட்டு இந்த நான்கு சட்டத் தொகுப்பின் மூலம் பெண் தொழிலாளர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்டுவதற்காகவும், முதலாளித்துவ இலாப வெறிக்கு தீனி போடுவதற்காகவும் ஏற்கனவே உள்ள சட்டங்களை முற்றிலுமாக எடுத்து விட்டும், தொழிலாளர்களை கூடுதலாக சுரண்டும் வகையில் சில சட்டங்களை மாற்றியும் இந்த நான்கு சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்திருக்கிறது மோடி அரசாங்கம். சுருங்கச் சொன்னால், கடந்த 150 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்து விட்டு, முதலாளிகளின் சுரண்டலுக்காக மட்டுமே கொண்டு வரப்படும் இச்சட்டத் திருத்தத்தை அப்படியே திருப்பி தொழிலாளர்களின் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்தப் போவதாக காவி பாசிஸ்டுகள் கதையளந்து வருகிறார்கள்.   

அவர்கள் கூறி வரும் பொய்களையும், சுரண்டலின் அபாயத்தையும் தெரிந்து கொள்வதன் மூலம் பாசிச மோடி அரசாங்கம் அமல்படுத்தத் துடிக்கும் இந்த நான்கு தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்பிற்கு எதிராகப் போராடி முறியடிக்க முடியும் என நம்புகின்றோம்.

பெண் தொழிலாளர்களின் உழைப்பு சக்தியை சுரண்டும் ஊதியத் தொகுப்பு:

நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்வதாக கூறிக் கொள்ளும் ஊதியத் தொகுப்பு பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் பெண்களை தொழிலாளர்கள் என்று வரையறுப்பதில் இருந்தே விலக்கி வைக்கிறது.

பெண்கள் அதிகமாக வேலை பார்க்கும் பிரிவான துணை செவிலியர்கள், ஆஷாஅங்கன்வாடி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், பசு சகி, வங்கி சகி, பெட் சகி, ட்ரோன் திதி, போஜன் மாதா போன்றவற்றில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஊதியத் தொகுப்பின் அடிப்படையில் இனிமேல் தொழிலாளர்கள் என்ற வரையறையில் இருந்து நீக்கியிருக்கிறது மோடி அரசாங்கத்தின் ஊதியத் தொகுப்பு.

சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட எட்டு மணி நேர வேலை நேரத்தை உற்பத்திக்கான அவசரநிலை என்ற போர்வையில் பன்னிரெண்டு மணி நேரமாக மாற்றப்பட்டிருக்கிறது. எட்டு மணி நேரத்திலேயே குறைந்த கூலியில் சுரண்டப்படும் பெண் தொழிலாளர்கள் இத்திருத்தத்தின் மூலம் கூடுதலாக 4 மணி நேரம் சுரண்டப்படுவார்கள்.

தற்போது பெண் தொழிலாளர்கள் 8 – 10 மணி நேரம் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து விட்டு பின்னர் தங்களது வீட்டு வேலைகளை ஒரு மனைவியாகவோ, தாயாகவோ, மகளாகவோ செயவதற்காக வீட்டிலிருந்து அலுவலகத்திற்கும், அலுவலகத்திலிருந்து வீட்டுக்குமாக தினமும் ஓடுகிறார்கள்.

மேலும் தங்களது குழந்தைகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் பொழுது அவர்களால் வீட்டில் இருக்க முடிவதில்லை. இதனால் பெரும்பாலான குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக குழந்தைகளுக்கு மனச் சோர்வுகள் ஏற்படுகின்றன. குடும்பத்தை அடிப்படையாக கொண்ட இந்திய சமூக அமைப்பில் பல மணி நேர அலுவலக வேலையும், அது உருவாக்கும் சோர்வும் குடும்பப் பராமரிப்பு வேலையையும், குடும்பத்தோடு செலவிடும் நேரத்தையும் சாத்தியமற்றதாக ஆக்குகிறது.

முதலாளித்துவ இலாப வெறி எனும் சக்கரத்தின் சுழலில் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களான  குழந்தைகளும், முதியோர்களும்  பணியிடத்தில் இணைக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள்.  முதலாளித்துவத்தின் இந்த இரட்டை சுரண்டல் தன்மை பெண் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தற்போதுள்ள 8 – 10 மணி நேர உழைப்பு சுரண்டலின் நிலைமையே இப்படி இருக்கும் பொழுது உழைப்புச் சுரண்டலை தீவிரப்படுத்தும் வகையில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்திருப்பது பெண் தொழிலாளர்களின் தலையில் இடியை இறக்கியிருக்கிறது என்று சொன்னால் மிகையில்லை.

ஒரு தொழிலாளியின் குறைந்த பட்ச ஊதியமானது அவரது குடும்பத்திற்குத் தேவையான உணவு, உடைகள் போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. இதில் உணவைப் பொறுத்தவரையில் ஒரு குடும்ப உறுப்பினர்களின் அளவானது 2 பெரியவர்கள் + 2 குழந்தைகள் என மோடி அரசாங்கம் நிர்ணயித்திருக்கிறது.

ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் தனக்கு தேவையான உணவை உட்கொள்வதற்கு ஒரு கலோரி அலகு தேவைப்படுவதாகவும், அதுவே பெண் என்றால் 0.8 கலோரி அலகு எனவும், இரண்டு குழந்தைகளுக்கு 0.6 + 0.6 கலோரி அலகு எனவும் மோடி அரசாங்கம் நிர்ணயித்திருக்கிறது.

ஒரு பெண் தொழிலாளி எட்டு முதல் பன்னிரெண்டு மணி நேரம் ஆலையிலோ, அலுவலகத்திலோ வேலைப் பார்த்து விட்டு தனது குடும்ப வேலையைப் பார்ப்பதற்கு குறைந்த பட்சம் நான்கு மணி நேர உழைப்பில் ஈடுபடுகிறார். இதன்படி அப்பெண் தொழிலாளிக்கு அதிகளவு கலோரி அலகு உணவு தேவைப்படும் என்பதே உண்மை. ஆனால் மோடி அரசாங்கமோ, ஆண்களை விட பெண்களுக்கு 0.2 கலோரி அலகு குறைவாக இருக்க வேண்டும் என நிர்ணயித்துள்ளது. இதிலிருந்தே பெண்களின் முன்னேற்றத்தில் மோடி அரசாங்கத்தின் கண்ணோட்டத்தை நாம் புரிந்து கொள்ள் முடியும். மோடி அரசாங்கம் நிர்ணயித்துள்ள இந்த கலோரி அலகை எடுத்துக் கொள்ள, ஒவ்வொரு பெண் தொழிலாளர்களும் நிறுவனத்திலும், வீட்டிலும் பத்து மணி நேரத்திற்கு மிகாமல் உழைக்க வேண்டும்

குழந்தைகளுக்கு வெறுமனே 0.6 கலோரி அலகு உணவு போதுமானது என்பதன் மூலம் அவர்களை வெறுமனே பெற்றோர்களை சார்ந்து வாழ்பவர்கள் எனக் கணக்கிடுகிறது.  குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியடைய இந்த 0.6 கலோரி அலகு என்பது தேவையானதை விட குறைவானதே என அனைவரும் புரிந்து கொள்ளலாம். குழந்தைகளின் வளர்ச்சி, அவர்கள் தான் இந்நாட்டின் எதிர்காலத் தொழிலாளர்கள் போன்றவற்றை இச்சட்டத்திருத்தம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

மேலும் ஊதியத் தொகுப்பின் படி வேலைகளை (1) திறனான (2) அரை திறனான (3) திறனற்ற (4) அதிக திறனான வேலைகள் என வகைப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவின் அடிப்படையிலே தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்களின் ஊதியத்தை திறனற்ற வேலை எனப் பிரித்து முதலாளிகள், பெண் தொழிலாளிகளின் உழைப்புச் சக்தியை ஒட்டச் சுரண்டுவதற்கு இத்தொகுப்பு வழிவகை செய்கிறது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழிலாளர் படிவத்தில் நிறுவன முதலாளி அல்லது உரிமையாளரின் பெயர் இருக்கும் அதே சமயத்தில் அந்நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் தொழிலாளிக்கு ஒரு அடையாள எண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இப்புதிய படிவம் மூலம் ஒரு தொழிலாளர் ஆணா அல்லது பெண்ணா என குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.  

சம ஊதியச் சட்டத்தை (1976) நீர்த்து போகச் செய்யும் வகையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பதவி உயர்வுகள், பயிற்சி, இடமாற்றங்கள் போன்றவற்றில் பாலின சமத்துவங்கள் நீக்கப்பட்டுள்ளன. மேலும் பாலின அடிப்படையிலான என்ற சொல்லே ஆண்- பெண் என்று மாற்றப்பட்டுள்ளன. 

புதிய ஊதியத் தொகுப்பில் ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான தொழில்நுட்பக் குழுவில் தொழிலாளர்கள் அமைப்புகளிலிருந்து பிரதிநிதிகள் இடம்பெற மாட்டார்கள் என்றும். இக்குழுவில் பெண் உறுப்பினர்கள் இடம் பெறுவது கட்டாயம் இல்லை எனவும் இத்தொகுப்பு கூறுகிறது.

இதுமட்டுமில்லாமல் குறைந்தப்பட்ச ஊதியங்களுக்கான ஆலோசனைக் குழுவும், பெண்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான குழுவும் ஒரே குழுவாக இணைக்கப்பட்டுள்ளன. இக்குழுவில் சரிபாதி உறுப்பினர்கள் பெண்களாக இருக்க வேண்டும் என்பதை மாற்றி மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருந்தால் போதும் என மாற்றியிருக்கிறது இத்தொகுப்பு.

தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த தொகுப்பு:

இத்தொகுப்பிலிருக்கும் சட்டங்கள் அனைத்தும் வீட்டு வேலை செய்யும் பெண் தொழிலாளர்களுக்கு கிடையாது, பொருந்தாது என்கிறது மோடி அரசாங்கம்.

பெண் தொழிலாளர்களை இரவு நேரப் பணிக்கு அவர்களின் ஒப்புதலுடன் அமர்த்துவதற்கு வழிவகை செய்யும் இத்தொகுப்போ, அவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்தை வழங்குவது முதலாளிகளின் கடமை என்பதலிருந்து விலக்கு அளிக்கிறது.

தொழிற்சாலைகள் சட்டத்தின் கீழ் இருந்த குழந்தைகள் காப்பகங்கள் தொடர்பாக பல சுகாதார விதிகள் முன்பு அமலில் இருந்தன. அவையாவும் தற்போதைய தொகுப்பில் கைவிடப்பட்டுள்ளன.

இதற்கு முன்பிருந்த தோட்டத் தொழிலாளர் சட்டத்தின் படி (1951) நிர்வாகமே தோட்டத் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகள், வீட்டு வசதி வாரியம், உணவு பொருட்களை வழங்க வேண்டும். ஆனால் இப்புதிய தொகுப்பில் இச்சட்டம் இரத்து செய்யப்பட்டு நிர்வாகத்திற்கு  மேற்கூறிய பொறுப்புகளிலிருந்து விலக்கு அளிப்பதோடு அப்பகுதி பஞ்சாயத்துக்களுக்கு இப்பொறுப்புகளை மடை மாற்றும் வேலை செய்யப்பட்டுள்ளது.

இத்தொகுப்பின் கீழ் பணியிடங்களில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சட்டம் குறிப்பிட்ட வரம்பிற்குள்ளே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அமைப்பு சார் துறையில் கூட பெண் தொழிலாளர்களுக்கென பாதுகாப்பான சூழல் மறுக்கப்படுகிறது.

சுரங்கத் தொழில், வேதிப் பொருட்கள் போன்ற ஆபத்து நிறைந்த பணிகளில் ஈடுபடும் அனைத்து நிறுவனங்களும் பெண்களை வேலைக்கு அமர்த்தலாம் என இத்தொகுப்பு கூறுகிறது. இதுபோன்ற நிறுவனங்களில் ஒரு பாதுகாப்பு குழுவையும், ஐநூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்களை கொண்ட நிறுவனத்தில் பாதுகாப்பு குழுவுடன் கூடிய அதிகாரியையும் நியமிக்க வேண்டும் என தொழிற்சாலைகள் சட்டம் (1948) கீழ் உத்திரவாதமளிக்கப்பட்ட ஆணையை இத்தொகுப்பு கிடப்பில் போட்டுள்ளது. இதனால் எந்த பாதுகாப்பு குழுவையும் அமைக்க வேண்டிய அவசியமில்லை. குழு அமைக்காவிட்டாலும் நிர்வாகத்திற்கென தண்டனை விதிகள் எதுவும் இல்லை.

இதற்கு முன்பிருந்த தொழிலாளர் சட்டத்தின் படி எந்த ஒரு நிறுவனத்தினுடைய வேலை நிலைமைகளை தொழிலாளர் ஆய்வாளர் நிர்வாகத்திற்கு அறிவிக்காமலேயே ஆய்வு செய்ய முடியும். ஆனால் புதிய ஊதியத் தொகுப்பின் படி புதியதாக ஆய்வாளர் + மேம்பாட்டாளர் என்று அழைக்கப்படுவார்கள். ஒரு நிறுவனத்தை அறிவிக்கப்படாத நேரத்தில் ஆய்வு செய்யும் அதிகாரம் இச்சட்டத்தொகுப்பின் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு சர்வதேச தொழிலாளர் ஆணையத்தின் விதிமுறைகளையே மீறியிருக்கிறது. பெண் தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்யும் தொழிற்சாலைகளின் வேலை நிலைமைகளை கண்காணிக்கும் பொறுப்பை அரசு இச்சட்டத்திருத்தம் மூலம் கைவிட்டிருக்கிறது.

சமூகப் பாதுகாப்பு தொகுப்பு:

அமைப்பு சாரா துறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு, பணிக்கொடை, மகப்பேறு சலுகைகள், ஓய்வூதியம் போன்ற உரிமைகள்  கிடைப்பதில்லை. இத்துறையில் பணிபுரியும் தொழிலாளர்களில் வெறுமனே 6 விழுக்காடு மட்டுமே மேற்கூறிய உரிமைகளை பெறுகிறார்கள். இதிலும் இத்துறையில் பணிபுரியும் பெண்களின் விழுக்காடு குறைந்த அளவில் இருக்கிறது.

மகப்பேறு சலுகைச் சட்டம் (1961) என்ற பழைய சட்டத்தின் படியே முதல் இரண்டு குழந்தைகளுக்கான பிரசவ விடுப்பு 26 வாரம் என தொடர்வதோடு, மூன்றாவது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான பிரசவ விடுப்பு 12 வாரம் என மாற்றப்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் இத்தொகுப்பின் கீழ் குழந்தைகள் பராமரிப்பு வசதிகளை தொழிலாளர்கள் பெறுவதை தடுக்கும் நோக்கத்தில் ஒரு பாரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

பழைய சட்டத்தின் படி 50 தொழிலாளர்களை கொண்டிருக்கும் நிறுவனங்கள் ஒரு குழந்தை காப்பகத்தை அமைக்க வேண்டும் நிர்வாகத்தின் வளாகத்தில் அமைக்கப்படும் இக்காப்பகத்திற்கு தமது குழந்தையை பார்ப்பதற்கு தொழிலாளர்கள் நான்கு முறை செல்லலாம் என சட்டம் இருந்தது.

ஆனால் மோடி அரசாங்கத்தின் இப்புதிய தொகுப்பு 50 தொழிலாளர்கள் என்பதை 50 பெண் தொழிலாளர்கள் என்று மாற்றியிருக்கிறது. இத்திருத்தம் மூலம் நிர்வாகங்கள் அமைக்கும் குழந்தை காப்பகங்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். 50-க்கும் குறைவான பெண் தொழிலாளர்களைக் கொண்ட நிர்வாகத்தில் வேலை பார்க்கும் பெண் தொழிலாளர்களுக்கு தங்களது பணிநேரத்தின் போது குழந்தைகளை காப்பகத்தில் கொண்டு போய் விடுவது என்பது இல்லாமல் போகும்.

மேலும் நிறுவனங்கள் தனித்தனியாக தமது வளாகத்திற்குள் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க தேவையில்லை எனவும், பல நிறுவனங்கள் கூட்டுச் சேர்ந்தோ அல்லது அரசு அங்கன்வாடி மையம் மூலமாகவோ குழந்தை காப்பகத்தை அமைத்துக் கொள்ளலாம் என இத்தொகுப்பு கூறுகிறது.

தொழிற்துறை உறவுகள் தொகுப்பு:

பாசிச மோடி அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் சட்டத் தொகுப்புகளிலேயே மிகவும் அபாயகரமான தொழிலாளர் விரோத சரத்துகள் நிறைந்த சட்டத் தொகுப்பு எதுவென்றால் அது தொழிற்துறை உறவுகள் தொகுப்புதான். ஏனென்றால் தொழிலாளர்களது சங்கம் அமைக்கும் உரிமை, போராடும் உரிமை உள்ளிட்ட எல்லா உரிமைகளையும் பறிப்பதற்காகவே இந்தச் சட்டத்தொகுப்பு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பெண்களின் உழைப்பு மற்றும் உரிமைகள் மீது கவனம் செலுத்தும் அமைப்புகள், பெண்களின் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் உட்பட பலவற்றை இத்தொகுப்பு கட்டுப்படுத்துகிறது. தொழிலாளர் சட்டத்தில் ஏற்பட்டுள்ள இந்த அடிப்படை மாற்றங்கள் அனைத்துத் துறை தொழிலாளர்களின் போராட்டங்களின் உரிமைகளை கூட கட்டுப்படுத்துகின்றன.

பல்வேறு துறைகளில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்களை மோடி அரசாங்கத்தின் நான்கு சட்டத் தொகுப்பு தொழிலாளர்கள் என்ற வரையறைக்குள் கொண்டு வர மறுக்கிறது. இதனால் அவர்கள் நீதித்துறையின் மூலம் பெறப்படும் உதவி கூட கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இச்சூழலில் உலகளாவிய வேலை வாய்ப்பிற்கான பாலின இடைவெளி அறிக்கை 2024-இன் படி இந்தியாவின் தரவரிசை 156 நாடுகளில் 140 ஆகவும், பொருளாதாரம் மற்றும் சுகாதாரத்தில் பெண்களின் பங்கேற்பு 146 இல் 142 ஆகவும் இருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவையும், இந்தோனேசியாவையும் தவிர அனைத்து ஜி-20 நாடுகளும் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்களை அதிகரித்து வந்திருக்கின்றன.

இவை அனைத்தையும் வளர்ச்சி என்ற பெயரில் பாசிச மோடி அரசாங்கம் நியாயப்படுத்துகிறது. தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தையும் பறித்தால்தான் அந்நிய முதலீடு வந்து குவியும் என்கிறார்கள். ‘தொழில் செய்வதை எளிதாக்குதல்’ (Ease of Doing Business) என்ற பெயரில் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக்கும் வேலையை முன்னின்று நடத்துகிறார்கள்.

அன்றைய பிரிட்டிஷ் அரசின் கீழ் நம் நாடு அடிமைப்பட்டுக் கிடந்த போது நம் தொழிலாளர்கள் எவ்வித உரிமைகளும் இல்லாத கொத்தடிமைகளாக நடத்தப்பட்டார்கள். உரிமைகளுக்காகப் போராடிய நம் முன்னோர்களைப் போல வீரஞ்செறிந்த போராட்டங்களை மோடி அரசாங்கத்தின் தொழிலாளர் சட்டத் திருத்தங்களுக்கு எதிராக நடத்த வேண்டியிருக்கிறது.

ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளின் குலைநடுங்கச் செய்த நம் முன்னோடிகளின் வீரஞ்செறிந்த போராட்டப்பாதையை வரித்துக் கொண்டு ஆண்-பெண் தொழிலாளர்களாக இந்திய தொழிலாளி வர்க்கமென ஒரணியில் திரண்டு போராடினால், இந்தச் சட்டத்திருத்தங்களை மட்டுமல்ல நம் நாட்டைப் பீடித்திருக்கும் காவி-கார்ப்பரேட் பாசிசப் பேரிருளையும் கிழித்தெறிய முடியும்.

  • தாமிரபரணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன