மார்ச் 08 : சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தை
உயர்த்திப் பிடிப்போம்!
உழைப்புச் சுரண்டல்—குடும்ப அடிமைத் தளைகள்
பாலியல் சுரண்டல்களுக்கு அடிப்படையான
முதலாளித்துத்தைத் தூக்கியெறிவோம்!
உடனடியாக நமது கண்களுக்குத் தெரியாத பல்வேறு விதமான வறுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தற்கால முதலாளித்துவ சமுதாயம் தனக்குள் மூடிமறைத்துள்ளது. சாதாரண நேரங்களில் கூட, ஏழை நகரமக்கள், கைவினைஞர்கள், தொழிலாளிகள், ஊழியர்கள் மற்றும் சிறு அலுவலர்கள் போன்ற சிதறிக் கிடக்கும் குடும்பங்கள் தமது வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாமல் மிகமோசமான வறுமையில் வாடுகின்றனர். அத்தகைய குடும்பங்களில் “குடும்ப அடிமைகளாக” (domestic slaves) கோடிக் கணக்கான பெண்கள் வாழ்கிறார்கள் (உண்மையைச் சொன்னால் உயிர் பிழைத்திருக்கிறார்கள்). தங்கள் சொந்த உழைப்பைத் தவிர பிற எல்லாவற்றையும் “சேமித்து”, தினந்தோறும் கடுமையாகப் பாடுபட்டுக் கிடைக்கும் சில்லறைக் காசுகளைக் கொண்டு தம் குடும்பத்தின் உணவு, உடை போன்ற தேவைகளை ஈடுசெய்யப் போராடுகிறார்கள்.
இத்தகைய பெண்களைத்தான் முதலாளிகள் மிகவும் விருப்பமுடன் வீட்டு வேலை செய்பவர்களாக (home-workers) பணியமர்த்துகிறார்கள். ஒரு துண்டு ரொட்டிக்காக (a crust of bread), தமக்காகவும் தங்கள் குடும்பத்திற்காகவும் “கூடுதலாகக் கொஞ்சம் சம்பாதிக்க” மிகக் குறைந்த கூலிக்கு இவர்கள் தயாராக இருக்கிறார்கள். அனைத்து நாட்டு முதலாளிகளும் (பண்டைய அடிமை உரிமையாளர்களையும், இடைக்கால நிலப்பிரபுக்களையும் போலவே) எண்ணற்ற காமக்கிழத்திகளை (concubines) மிகவும் “நியாயமான” விலையில் தங்களுக்குத் தேடிக்கொள்வதும் இந்தப் பெண்களுக்கு இடையில்தான்.
விபச்சாரம் குறித்து எவ்வளவுதான் “தார்மீகக் கோபம்” (99 சதவீத விசயங்களில் இது பாசாங்குத்தனமானது) காட்டினாலும், இந்தப் “பெண் உடமை” வணிகத்திற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது; கூலி-அடிமைமுறை (wage-slavery) இருக்கும் வரை, விபச்சாரமும் தவிர்க்க முடியாமல் இருக்கும். மனித சமூகங்களின் வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட மற்றும் சுரண்டப்பட்ட வகுப்புகள் அனைத்தும், தங்களை ஒடுக்குபவர்களுக்கு, முதலாவதாக, தங்கள் ஊதியம் பெறாத உழைப்பையும், இரண்டாவதாக, “எஜமானர்களுக்கு” காமக்கிழத்திகளாகத் தங்கள் பெண்களையும் விட்டுக்கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன (இந்தக் கட்டாயத்தில்தான் அவர்களின் சுரண்டல் அடங்கியுள்ளது).
அடிமைச் சமுதாயமோ, நிலப்பிரபுத்துவச் சமுதாயமோ, முதலாளித்துவமோ — அனைத்தும் இந்த விசயத்தில் ஒன்றுதான். இந்தச் சுரண்டல் முறையின் வடிவங்கள்தான் மாறியுள்ளனவே ஒழிய, இச்சுரண்டல் அப்படியேதான் நீடிக்கிறது.
லெனின், 1913
பொருளாதார ஏற்றத்தாழ்வுடனும், அதன் விளைவாக சமூக ஏற்றத்தாழ்வுடனும் சம்பிரதாயமான சமத்துவத்தை முதலாளித்துவம் இணைக்கிறது. இது முதலாளித்துவத்தின் [அதற்கு முந்தைய சமுதாயங்களில் இல்லாத] முக்கியமானதொரு வேறுபாடாகும். இதை முதலாளித்துவ ஆதரவாளர்களும், தாராளவாதிகளும் பச்சையாக மூடிமறைக்கிறார்கள். மேலும், குட்டி முதலாளித்துவ ஜனநாயகவாதிகளோ இதைப் புரிந்துகொள்வதில்லை. …
ஆனால், முதலாளித்துவத்தால் இச்சட்டரீதியான சமத்துவத்தைப் பொறுத்தவரையில் கூட (சட்டத்தின் முன் சமத்துவம் என்பது உண்டுகொழுத்தவனுக்கும் பசித்திருப்பவனுக்கும் இடையிலான “சமத்துவம்”, சொத்துடைமையாளருக்கும் சொத்தற்றவருக்கும் இடையிலான “சமத்துவம்”) முரணற்றதாக இருக்க முடியாது. இந்த முரணின் மிகக்கொடிய வெளிப்பாடுகளில் ஒன்று, ஆணுடன் ஒப்பிடுகையில் பெண்ணின் தாழ்ந்த நிலையாகும். எந்த ஒரு முதலாளித்துவ அரசும் — மிகவும் முற்போக்கான, ஜனநாயக குடியரசும் கூட — [பெண்களுக்கு] முழுமையான சம உரிமைகளைக் கொண்டுவரவில்லை.
ஆனால், ரசிய சோவியத் குடியரசு, பெண்களின் சட்டப்பூர்வமான நிலையில் இருந்த சமத்துவமின்மையின் ஒவ்வொரு தடயத்தையும், எந்த விதிவிலக்கும் இல்லாமல், உடனடியாகத் துடைத்தெறிந்து, சட்டங்களில் பெண்ணுக்கு முழுமையான சமத்துவத்தை உறுதி செய்தது.
பெண்ணின் சட்டப்பூர்வ நிலையைக் கொண்டுதான் கலாச்சாரத்தின் நிலையை மிகச்சிறப்பாக வகைப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இந்தக் கூற்றில், ஆழமான உண்மையின் சிறு துளியொன்று உள்ளது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தால், சோசலிச அரசால் மட்டுமே உயர்ந்த கலாச்சர மட்டத்தை அடைய முடியும்; அடையவும் முடிந்தது. எனவே, முதல் சோவியத் குடியரசின் உருவாக்கமும் (அதன் உறுதிப்படுத்தலும்), அதனுடன் கூடவே இணைந்து கம்யூனிச அகிலமும், உழைக்கும் மகளிர் இயக்கத்திற்கு ஒரு புதிய, இணையற்ற, சக்திவாய்ந்த உந்துதலை அளிக்கிறது.
ஏனெனில், முதலாளித்துவத்தின் கீழ், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி நாம் பேசும்போது, துல்லியமாகக் கூறினால் சோவியத் அமைப்புதான், சோவியத் அமைப்பு மட்டுமே தான், ஜனநாயகத்தை உறுதிசெய்தது. இது தொழிலாளி வர்க்கத்தின், ஏழை விவசாயிகளின் நிலைமையால் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பெண்களின் நிலைமையால் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சோவியத் அமைப்பு என்பது வர்க்கங்களை ஒழிப்பதற்கான, பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்திற்கான இறுதியான, தீர்மானகரமான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நம்மைப் பொறுத்தவரை, முதலாளித்துவத்தின் கீழ் ஒடுக்கப்பட்டவர்களுக்கான ஜனநாயகம், ஒடுக்கப்பட்ட பாலினத்தவருக்கான ஜனநாயகம் உட்பட, எதுவுமே அரைகுறையானதுதான்.
உழைக்கும் மகளிர் இயக்கம், வெறும் சட்ட ரீதியிலான சம்பிரதாயமான சமத்துவத்திற்காக அல்லாமல், பெண்களின் பொருளாதார மற்றும் சமூக சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. பெண்களை சமூக உற்பத்தியில் ஈடுபடுத்துவதும், அவர்களை “குடும்பத்தின் அடிமைத்தனத்திலிருந்து” விடுவிப்பதும், சமையலறை, குழந்தை வளர்ப்பு என்ற நிரந்தரமான, பிரத்தியேகமான சூழலுக்குள் அவர்களை மழுங்கடிக்கும், இழிவுபடுத்தும் பணியிலிருந்து அவர்களை விடுவிப்பதுமே தற்போது இதன் முதன்மையான பணியாகும்.
இது சமூக அமைப்புமுறையையும் அதன் மரபுகளையும் தீவிரமாக மறுவடிவமைப்பு செய்யக்கோரும் ஒரு நீண்ட போராட்டமாகும். ஆனால், இந்தப் போராட்டம் கம்யூனிசத்தின் முழுமையான வெற்றியுடன் முடிவடையும்.
லெனின்
மார்ச் 04, 1920
