காரல் மார்க்ஸ்க்குச் சிலை!
தொழிலாளர் உரிமைக்குக் கல்லறை!
இதுதான் திராவிட மாடல்!

முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடி எட்டு மணிநேர வேலை என்பதை தொழிலாளி வர்க்கம் உறுதிசெய்தது. ஆனால், வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திச் சட்டம் இயற்றிய முதல்வர் ஸ்டாலின், மே தினத்தன்று சிவப்புச் சட்டையை அணிந்து கொண்டு தன்னைத் தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலன் என்கிறார்.

ஜூன் – ஜூலை 2025 செங்கனல் இதழில் வெளியான கட்டுரையை மீள்பிரசுரம் செய்கிறோம்

உலகப் புகழ்பெற்ற தாய் நாவலில், பாவலும் அவனது தோழர்களும் தொழிற்சாலையை ஒட்டி அவர்கள் வசிக்கின்ற தொழிலாளர்களைத் திரட்டி மே தினப் பேரணியை நடத்தத் திட்டமிடுவர். ஜார் போலீசின் தீவிரமான கண்காணிப்பையும் மீறி மே தின ஏற்பாட்டு வேலைகள் தீவிரமாக நடக்கும். ஜாரைத் தூக்கியெறிய வேண்டும் என்ற முழக்கத்தோடு செங்கொடி ஏந்தி பாவல் முன்னே செல்ல மே தினப் பேரணி தொடங்கிய சிறிது நேரத்திலேயே பாவலும் அவனது தோழர்களும் ஜாரின் போலீசால் கைது செய்யப்படுவர்.

ரசியாவில், தொழிலாளர்கள் மத்தியில் மார்க்சிய சித்தாந்தம் பரவி வந்த காலக்கட்டம் அது. கடுமையான உழைப்புச் சுரண்டல், குறைந்த கூலி போன்றவற்றைக் கண்டிக்கின்ற முழக்கங்களோடு சேர்ந்து ஜார் ஆட்சியைத் தூக்கியெறிவது என்ற முழக்கங்களும் மே தினப் பேரணியில் முழக்கமிடப்பட்டன. இதனால் ஜார் அரசாங்கம் மே தின நடவடிக்கைகளைக் கடுமையாக ஒடுக்கியது.

இன்று காட்சியோ மாறுபட்டிருக்கிறது. முதலாளிகளின் பிரதிநிதிகளான ஆட்சியாளர்களே தங்களை தொழிலாளர்களின் பாதுகாவலனாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். புரட்சிகர மக்கள் அதிகாரத்தினர் நடத்தவிருந்த மே தினப் பேரணிக்கு திராவிட மாடல் போலீசு அனுமதி மறுத்தது. ஆனால், காரல் மார்க்சுக்குச் சிலை வைக்கப் போவதாக சட்டப் பேரவையில் ஸ்டாலின் அறிவிக்கிறார். தி.மு.க. தொழிற்சங்கமான தொ.மு.ச. ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்ச்சியில் சிவப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டு, தமிழ்நாட்டுத் தொழிலாளர்களின் பாதுகாவலன் என்று தன்னைத் தானே பிரகடனம் செய்து கொள்கிறார்.

பல பன்னாட்டு முதலாளிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கும் தி.மு.க. அரசாங்கம் அம்முதலாளிகளால் ஒட்டச் சுரண்டப்படும் தொழிலாளர்களுக்கு எப்படிப் பாதுகாவலனாக இருக்க முடியும்? நாகப் பாம்பும் சாகக்கூடாது தடியும் ஒடியக்கூடாது என்றால் எப்படி? தி.மு.க.-வின் இந்த இரட்டை வேடத்தை அம்பலப்படுத்துவார்கள் என்பதால்தான் புரட்சிகர மக்கள் அதிகாரத்திற்கு அனுமதி மறுப்பு.

தொ.மு.ச. ஏற்பாடு செய்திருந்த மே தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், “காரல் மார்க்ஸ் சிலை விரைவில் அமைக்கப்பட உள்ளது; தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகி வருகிறது. இதன் மூலமாகத் தொழிலாளர்களும் வளர்ந்து வருகின்றனர். எந்த முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தாலும், எந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், நான் முதலில் கேட்பது, ‘எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள்?’ என்றுதான்” என்று பேசினார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சி பெருகுகிறது என்று மார்தட்டிக்கொள்ளும் முதல்வர், முதலாளிகளின் இலாப வளர்ச்சிக்கேற்ற விகிதத்தில் தொழிலாளர்களின் சம்பளமும் அதிகரிக்கிறது என்று சொல்ல முடியுமா? குறைந்தபட்சம் பணவீக்கத்திற்குத் தகுந்த கூலியாவது தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் என்ற உத்திரவாதத்தையாவது தரமுடியுமா?

எவ்வளவு பேருக்கு வேலை தருவீர்கள்? என்று முதலாளிகளிடம் கேட்கும் முதல்வர் ஸ்டாலினால் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் வேலை பாதுகாப்பை உறுதி செய்வது கட்டாயம் என்பதையும் சேர்த்து முதலாளிகளிடம் ஒப்பந்தம் போடமுடியுமா?

தொழிலாளர் நல வாரியம் அமைத்தோம், வண்டி மற்றும் ஆட்டோ வாங்க மானியம் தருகிறோம், தொழிலாளர்களின் திருமணத்திற்கு நிதி உதவி செய்கிறோம் என்று தொழிலாளர்களுக்கான நலத் திட்டங்களைப் பெரும் சாதனை போல் பட்டியலிட்டுப் பேசும் முதல்வர் ஸ்டாலின், முதலாளிகளுக்குக் கொடுக்கப்படும் சலுகைகளைப் பற்றி மக்களிடம் பட்டியலிட்டுப் பேசுவாரா?

“பல லட்சம் கோடிகள்” அந்நிய முதலீடு, புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று விளம்பரப்படுத்திக் கொள்ளும் திராவிட மாடல் அரசாங்கம், அந்த ஒப்பந்தங்களில் முதலாளிகளுக்கு கொடுப்பதாக ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகளை என்னென்னவென்று மக்களுக்குச் சொல்லுமா?

ஃபோர்டு தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவதற்கு அந்நிறுவனத்திற்கு வழங்குவதாக ஒப்புக்கொண்ட சலுகைகள் என்னென்ன? ஃபாக்ஸ்கான் நிறுவனத்திற்கு வழங்கிய சலுகைகள் என்ன? தொழிலாளர்களின் போராட்டத்தை ஒடுக்கிய சாம்சங்குடன் திமுக அரசாங்கம் என்ன பேசியது? அதானியுடன் போடப்பட்ட ஒப்பந்தங்களின் விவரங்கள் என்ன? முதலாளிகளுக்காகக் கொடுக்கப்படும் சலுகைகளும் அவர்களுடனான பேச்சுவார்த்தை விவரங்கள் அனைத்தும் இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. அவையனைத்தும் வளர்ச்சி என்ற போர்வையில் நியாயப்படுத்தப்படுகின்றன.

புதிய தொழிற்சாலைகள் தமிழகத்தில் தொடங்குவதற்குப் பின்னால் ஏராளமான வரிச் சலுகைகள், முதலீட்டுக்கான கடன் உதவிகள், தங்குதடையற்ற மின்சாரம், குறைந்தது ஐந்து வருடங்களுக்குச் சலுகை விலையில் மின்சாரம், விவசாய நிலங்கள் கையகப்படுத்துதல், குறைந்த நிலவாடகை, தேவையான போக்குவரத்து கட்டமைப்புகள் ஏற்படுத்துவது, தொழிலாளர்களுக்குக் குறைந்த ஊதியம், தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்தமாட்டோம் என்ற உத்தரவாதம் போன்ற உறுதிமொழிகளை முதலாளிகளுக்குக் கொடுத்துத்தான் முதலீட்டை ஈர்க்கின்றனர். முதலாளிகள் அநியாயமாகப் பெறுகின்ற இச்சலுகைகள் அனைத்துமே மக்களுடைய வரிப்பணத்திலிருந்தே கொடுக்கப்படுகின்றன. மக்களுக்கு இழைக்கப்படும் இப்பெரும் அநீதி “வேலைவாய்ப்பு உருவாக்கம்” என்ற போர்வையில் நியாயப்படுத்தப்படுகிறது.

அப்படி என்றால், வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டாமா? படித்த இளைஞர்களுக்கு வேலை வேண்டாமா? வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. இவ்வளவு சலுகைகள் கொடுத்து முதலாளிகளைத் தொழில் தொடங்க சிவப்புக் கம்பளம் விரிக்கும் முதல்வர் ஸ்டாலினோ அல்லது மோடியோ சொந்த நாட்டு மக்களின் உண்மையான வளர்ச்சி என்ற நோக்கத்தில் இருந்து இதை செய்கிறார்களா? அல்லது தங்களுடைய முதலாளித்துவ / ஏகாதிபத்தியச் சேவையிலிருந்து செய்கிறார்களா? என்பதுதான் பிரதானமான கேள்வி.

மோடியோ அல்லது முதல்வர் ஸ்டாலினோ தருகின்ற சலுகைகளை விட இன்னும் அதிகமான சலுகைகளைப் பிற நாடுகள் (உதா. வியட்நாம், பங்களாதேஷ்) ஒப்புக்கொண்டால் முதலாளிகள் தங்களுடைய தொழிற்சாலை உற்பத்தியை அந்நாடுகளுக்கு மாற்றிவிடுவர். மறுகாலனியாக்கக் காலக்கட்டத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் தொழில்வளர்ச்சி என்பது மக்களையும் தொழிலாளர்களையும் முதலாளிகள் சுரண்டுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் எவ்வளவு தூரம் ஆட்சியாளர்கள் அனுமதிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அமைகிறது.

ஸ்டாலின் கூறுவதையே நாம் எடுத்துக் கொண்டால் கூட, இந்நிறுவனங்களால் தமிழகத்தில் எவ்வளவு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது? இந்நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சராசரி ஊதியம் எவ்வளவு? இந்த ஊதியம் பணவீக்கத்தை பொறுத்து அதிகரிக்கப்படுகிறதா? இத்தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுடைய சமூக மற்றும் வேலைப்பாதுகாப்பு மற்றும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படியாக வழங்கப்பட்டிருக்கின்ற உரிமைகள் பின்பற்றப்படுகின்றனவா? இல்லை என்பது உண்மை.

இந்தியாவில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் 2000-12-இல் 1.6 சதவீதமாகவும் 2012-19-இல் 0.0 சதவீதமாகவும் 2019-22-இல் 5.3 சதவீதமாகவும் இருந்ததாக அரசாங்க அறிக்கை கூறுகிறது. 5.3 சதவீத வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் கூட தொழில்துறையினால் உருவானதல்ல. நகரங்களில் வேலையின்மையால் மக்கள் விவசாயத்தை நோக்கிச் சென்றதால் விவசாயத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பினால் (8.9%) ஏற்பட்டதாகும். 25 வயதிற்குட்பட்ட படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 42% (2023). அதேபோல மாத ஊதியம் வாங்கக்கூடிய ஒரு தொழிலாளியின் உண்மை சம்பளம் (real earnings) 2012-2019-க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் 1.2% குறைந்திருக்கிறது. 2019-2022-க்கும் இடையில் ஒவ்வொரு ஆண்டும் 0.7% குறைந்திருக்கிறது.

மோடியோ அல்லது திராவிட மாடல் ஸ்டாலினோ, “தொழில் வளர்ச்சி” என்று எவ்வளவுதான் கூப்பாடு போட்டாலும், கடந்த 10 வருட காலமாக இந்தியாவில் பெரிய அளவிற்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை, தொழிலாளர்களின் உண்மை ஊதியம் அதிகரிக்கவுமில்லை என்பதை அரசாங்கப் புள்ளி விவரங்களே அம்பலப்படுத்துகின்றன.

கடந்த வருடம் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை திராவிட மாடல் அரசாங்கம் கையாண்ட விதத்தில் இருந்தே திமுக வின் தொழிலாளி வர்க்கப் ‘பாசத்தை’ நாம் புரிந்து கொள்ள முடியும்.

எட்டு மணிநேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க உரிமை ஆகியவற்றை முன்வைத்து ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் இந்திய நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக தொடர் போராட்டத்தை நடத்தினார். நிர்வாகத்தின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தொழிற்சங்கத்திற்கு ஒப்புதல் வழங்காமல் நீண்ட காலம் இழுத்தடித்தது, தி.மு.க. அரசாங்கம் போராட்டகின்ற தொழிலாளர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து கைது செய்வது, போராட்டப் பந்தலைக் கலைத்துத் தொழிலாளர்களை ஒன்று சேரவிடாமல் விரட்டியடித்தது. பேச்சுவார்த்தை என்ற பெயரில் சாம்சங் நிர்வாகத்தின் கையாட்கள் சிலரைக் கொண்டு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாக நாடகமாடியது. சாம்சங்கை காப்பாற்றுவதற்காக பல திமுக அமைச்சர்கள் களத்தில் இறக்கிவிட்டிருந்தார், ‘திராவிட மாடல் நாயகன்’ ஸ்டாலின். துணை முதல்வர் உதயநிதியோ “சாம்சங் ஒரு பன்னாட்டு நிறுவனம் என்பதால் அரசியல் கட்சி சார்ந்த சங்கத்தினை ஏற்க மறுக்கிறார்கள்” என சாம்சங் நிறுவனத்தின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்.

ஒரு புள்ளி விவரத்தின்படி, 2024-ஆம் நிதியாண்டில் சாம்சங் இந்திய நிறுவனத்தின் வருவாய் சுமார் 1,02,628 கோடி (12 பில்லியன் டாலர்). அதில் இலாபம் மட்டும் 8,188 கோடி. இது கடந்தாண்டு இலாபத்தை விட 137% அதிகம். மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கு திருபெரும்புதூரில் இயங்கும் தொழிற்சாலையிலிருந்து மட்டுமே வருகிறது. வருடத்திற்கு பல ஆயிரம் கோடி இலாபமீட்டும் ஒரு நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு வழங்கும் சராசரி சம்பளம் 25,000 ரூபாய். அதிகபட்சம் சம்பளமே வெறும் ரூ.30,000 தான். அதை ரூ.36,000 ஆக உயர்த்த வேண்டும் என்று தொழிலாளர்கள் போராடினர். கூடுதலாக ரூ.5,000 ஒரு தொழிலாளிக்கு ஏற்றினாலும் வருடத்திற்கு 12 கோடி ரூபாய்தான் செலவாகும். ஆனால், சாம்சங் நிர்வாகம் அதைக்கூட ஏற்க மறுத்து விட்டது.

“உபரி மதிப்பை அல்லது பண்டத்தின் மொத்த மதிப்பில் எப்பகுதியில் தொழிலாளியின் உபரி உழைப்பு அல்லது ஊதியம் தரப்படாத உழைப்பு செயல் ஆக்கப்பட்டு இருக்கிறதோ அப்பகுதியை நான் இலாபம் என்று அழைக்கிறேன்” என்றார் மார்க்ஸ்.

தொழிலாளர்களின் ஊதியத்தைக் குறைப்பது மற்றும் வேலை நேரத்தை அதிகரிப்பதன் மூலம் உபரி உழைப்பை அதிகரித்து இலாபத்தைப் பெருக்குவது முதலாளித்துவத்தின் அடிப்படை விதி. எனவேதான் இந்தியாவில் தொழில் தொடங்கும் பன்னாட்டு நிறுவனங்கள் (தமிழகத்திற்கும் பொருந்தும்) தொழிலாளர்களுக்கு மிகவும் சொற்பமான தொகையை ஊதியமாக வழங்குகின்றனர்.

முதலாளிகளுடைய கோரிக்கையின் அடிப்படையில்தான் 8 மணிநேர வேலை நேரத்தை 12 மணிநேரமாக உயர்த்தியது, மோடி அரசு. இதையே தமிழகத்திலும் திராவிட மாடல் அரசாங்கம் சட்ட திருத்தமாக கொண்டு வந்து குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றினர். கடும் எதிர்ப்புக்குப் பிறகு இது பின்வாங்கப்பட்டாலும், பல தொழிற்சாலைகளில் கொல்லைப்புற வழியாக, சட்டவிரோதமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. அதையொட்டிய விவாதத்தில் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு “நம் நாட்டை நோக்கி பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய வருகின்றன. அவை தமிழகத்துக்கு வரும்போது, குறிப்பாக மின்னணு தொழிற்சாலை வரும்போது, வேலை நேரங்களில் நெகிழ்வுத் தன்மையை எதிர்பார்க்கின்றன” என்று பன்னாட்டு முதலாளிகளுக்காக வாதாடினார்.

சாம்சங் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையான ஐந்தாயிரம் ரூபாய் ஊதிய உயர்வை அமல்படுத்த வேண்டும் என்று சாம்சங் நிறுவனத்திடம் முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கலாம். அல்லது இந்தியச் சட்டப்படி தொழிற்சங்கம் அமைப்பதும் எட்டு மணிநேர வேலை என்பதும் தொழிலாளர்களின் அடிப்படை உரிமை அதை விட்டுக் கொடுக்க முடியாது என்று பன்னாட்டு முதலாளிகளிடம் ஸ்டாலின் வாதாடியிருக்கலாம்; அவ்வாறு செய்யாமல் போராடுகின்ற தொழிலாளர்களைத் தனது போலீசை விட்டு அடித்து துன்புறுத்தியது. பன்னாட்டு முதலாளிகளுக்காக 12 மணி நேர வேலைநேரச் சட்டத் திருத்தத்தையும் கொண்டுவந்தது.

தி.மு.க. முதலாளிகள் / பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரிக்கிறது. அதேவேளையில் தொழிலாளர்கள் தங்களது அடிப்படை கோரிக்கைகளுக்காகப் போராடும்போது தனது போலீசைக் கொண்டு ஒடுக்குகிறது. இதுதான் தொழிலாளி வர்க்கத்தின் மீது திராவிட மாடல் அரசாங்கம் வெளிப்படுத்தும் நலனின் யோக்கியதை!

லெனின் மே தினத்தை “ரசிய மக்களின் அரசியல் விடுதலைக்கான அடக்கமுடியாத போராட்டத்திற்கும் பாட்டாளி வர்க்க மேம்பாட்டிற்கும், சோசலிசத்திற்கான வெளிப்படையான போராட்டத்திற்கும் மக்களை அணி திரளச் செய்வதற்கான ஒரு சந்தர்ப்பம்” என்றார். ஆனால், இங்கோ முதலாளிகளின் நலன்களுக்காக தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலன் என்று நாடகமாடும் ஒரு ஆளும்வர்க்க பிரதிநிதிக்குப் பின்னால் பலரும் வால் பிடிக்கின்றனர். தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்குக் கல்லறை எழுப்பிவிட்டு, காரல் மார்க்ஸ்க்கு சிலை வைக்கும் நாடகத்தைக் கூச்சமேயின்றிக் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

எட்டு மணிநேரம் வேலை, ஓய்வு, உறக்கம் என்ற கோரிக்கையைத் தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தை எதிர்த்துப் போராடிப் பெற்றதுதான் மே தினத்தின் சிறப்பு. ஆனால், முதலாளிகளின் இலாப பெருக்கத்திற்காக வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திச் சட்டம் இயற்றிய முதல்வர் ஸ்டாலின், மே தினத்தன்று சிவப்புச் சட்டை போட்டுக் கொண்டு கிக் (Zomoto, Swiggy, Linkit) தொழிலாளர்களுக்கு வண்டி வாங்க மானியம் கொடுத்ததை மேற்கோள் காட்டி, தன்னைத் தொழிலாளி வர்க்கத்தின் பாதுகாவலன் என்று அறிவித்துக் கொள்கிறார். ஆனால், சிவப்புச் சட்டைக்கு உள்ளே மறைந்திருக்கும் அவரின் இதயம் எப்பொழுதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் நலனுக்காகத் தான் துடிக்கிறது என்பதே எதார்த்தமான உண்மை.

செல்வம்

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன