ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா ஊரடங்கின்போதிருந்த நிலைமையை நினைவுபடுத்தி தற்போதைய சூழலை ஒப்பிட்டு பார்ப்போம். ஊரடங்கு பரந்துபட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் சேமிப்பையும் அழித்தது; இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் நகரங்களை விட்டு வெளியேறி தங்கள் கிராமங்களில் தஞ்சம் புகுந்தனர்; பலர் தங்கள் அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகக் கடன் வாங்கினர்; இலட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வி சீர்குலைக்கப்பட்டது; பலர் மருத்துவ வசதி பெறுவதற்கு போராடிக் கொண்டிருந்தனர்.
அதேகாலகட்டத்தில், இந்திய பங்குச் சந்தையின் வளர்ச்சி விண்ணை முட்டியது. தனியார் கார்ப்பரேட் முதலீடானது புதிய வளர்ச்சியின் (boom) விளிம்பிற்குச் சென்றுகொண்டிருந்ததாகச் சொல்லப்பட்டது. 2020 ஏப்ரல் மாதத்தில் மந்தமான நிலையில் இருந்த சென்செக்ஸ் (Sensex), டிசம்பரில் 70 சதவீதம் உயர்ந்திருந்தது. நிதித் திறனாய்வாளர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். மக்களின் நிலைமை அவலமாக இருந்த அதேநேரத்தில், பங்குச் சந்தை அபார வளர்ச்சி அடைந்ததை எப்படிப் புரிந்து கொள்வது?
நவதாராளமயத்தின் கண்ணோட்டத்தில் முதலீடு
கிரெடிட் சூயிஸின் முதன்மை இந்திய மூலயுக்த்தி வல்லுநரும், வணிக ஊடகங்களில் முக்கிய கருத்துரை வழங்குபவருமான நீலகண்ட மிஷ்ரா, டிசம்பர் 2020-இல் புளூம்பெர்க் குவிண்ட் பத்திரிக்கைக்கு (Bloomberg Quint) அளித்த பேட்டியில், பங்குச் சந்தையின் மீதான இந்த தலைக்கணம் கொண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.¹ தனியார் முதலீட்டைப் பற்றிய நவதாராளவாதப் பார்வையை வெளிப்படுத்தும் ஒரு மறைமுக வாக்குமூலமாகவே இப்பேட்டி அமைந்துள்ளது. (இந்த மிஷ்ரா பின்னர் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் நியமிக்கப்பட்டார்)
மிஷ்ராவின் மதிப்பீட்டின்படி ஊரடங்கால் இந்திய பொருளாதாரத்தில் ரூ.20 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது; இருந்தபோதிலும், “இந்த நட்டத்தில் 75 சதவீதம் நீடித்த தாக்கம் எதையும் ஏற்படுத்தவில்லை” என்கிறார்:
“இது ஒன்றும் பெரிய விசயமல்ல; கடந்து செல்லக்கூடிய ஒன்றுதான். மக்கள் எதைச் சம்பாதிக்கவில்லையோ, அதையே அவர்கள் நுகரவும் இல்லை; எனவே, இதனால் மிகக்குறைவான நீடித்த தாக்கங்களே ஏற்பட்டன” என்கிறார் மிஷ்ரா.
அவரது பார்வையில், வளர்ச்சியின் உந்துசக்தியாக இருப்பது பெரிய நிறுவனங்கள்தான்; எனவே, பொருளாதாரத்தின் எதிர்காலம் இந்த நிறுவனங்களின் வளர்ச்சியுடனேயே பிணைக்கப்பட்டுள்ளது. நாட்டின் எஞ்சிய பொருளாதாரம் மற்றும் அதைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டாலும், அதை பலிகொடுத்து பெருநிறுவனங்களின் வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும். இந்த பெரும் இந்திய நிறுவனங்கள் மேற்கொண்ட கடுமையான செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் “ஊரடங்கு ஏற்படுத்திய வலியை இந்தியாவின் அடித்தட்டு 30-40 சதவிகித தொழில்கள் மீதும் தனிநபர்கள் மீதும் தள்ளின. ஏற்றத்தாழ்வின் நோக்கில் இது ஒரு பேரழிவு தரும் விளைவாகும்; ஆனால், பொருளாதார வேகத்தின் நோக்கில் இதுவே உண்மையில் சாத்தியமான சிறந்த விளைவு ஆகும்” என்றார்.
ஆதலால், மிஸ்ராவின் கருத்துப்படி, ஊரடங்கானது வளர்ச்சிக்கு உகந்ததாகவே அமைந்தது. “இந்தியாவின் அதிகம் செலவழிக்கும் மேற்தட்டு 10-20 சதவீத நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் ஊரடங்கிலிருந்து சிறந்த நிதி இருப்பு நிலையுடன் (balance sheet) வெளியேறினர். ஏனென்றால், அவர்களின் வருமானம் பாதுகாக்கப்பட்ட நிலையில், அவர்களின் நுகர்வு கடுமையாக தடைப்பட்டது. மறுபுறம், அடித்தட்டில் உள்ள 50 சதவீத மக்களின் நிதி நிலைமையோ கடுமையாக மோசமடைந்தது. ஏனென்றால், அவர்கள் அடிப்படைத் தேவைகளுக்காக செலவு செய்ய வேண்டியிருந்த நிலைமையில், அவர்களின் வருமானனோ கடுமையாக பாதிக்கபட்டிருந்தது” என்றார் அவர். இவ்வாறு சேமிக்கப்பட்ட ‘10-20 சதவீத செல்வந்தர்களின் மிகை சேமிப்புதான் வருங்காலத்தில் முதலீட்டையும், நுகர்வையும் அதிகரித்து வளர்ச்சிக்கு இட்டுச் செல்லும்’ என்று அவர் வலியுறுத்தினார். “இந்த வகையில் ஊரடங்கு பொருளாதாரத்தை ஊக்குவித்தது” என்றார்.
பங்குச் சந்தைகள் மிஷ்ராவின் கருத்தையே பிரதிபலித்தன; பெரும் நிதிகள் உள்ளே பாய்ந்தது inflow of funds) பங்கு விலைகளை ஏகிறச் செய்தன.² முதலில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் அவர்களைத் தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்களும் பெரும் நிதியை பங்குச் சந்தையில் கொட்டினர்.
பிந்தைய காலத்தில், அரசின் அதிகாரப்பூர்வக் கொள்கையும் இந்த அடிப்படையிலேயே அமைந்தது. கொரோனாவை எதிர்கொள்ள (மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜி.டி.பி) சதவீதமாக) இந்தியா செலவிட்ட நிதியானது, முன்னேறிய நாடுகள் செய்த செலவை விட மிகக் குறைவாகவே இருந்தது. அதுமட்டுமின்றி, பிற BRICS நாடுகளின் செலவுகளை விடவும் குறைவாகவே இருந்தது. அரசாங்கம் தனது கிடங்கிலிருந்து தானியங்களை இலவசமாக விநியோகித்த போதிலும், பிற செலவீனங்களைச் செய்யாமல் கைகழுவிக் கொண்டது. பிற நாடுகளைப் போல [சந்தையில்] தேவையை (demand) ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்காமல், இந்தியாவோ வழங்கல்களை (supply) அதிகரிக்கும் நடவடிக்கைகளில் (அதாவது, தனியார் முதலீட்டைத் தூண்டுவதற்கான நடவடிக்கைகளில்) கவனம் செலுத்தியது. [அதாவது, மக்கள் கைகளில் பணம் செல்ல வழிவகை ஏற்படுத்தி சந்தையில் தேவையை உருவாக்குவதற்கு மாறாக, முதலாளிகள் கைகளில் பணம் செல்ல வழிவகை செய்து முதலீடுகளை அதிகரிக்கவே கவனம் செலுத்தியது] கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கையில் இது தனது தனிச்சிறப்பான பங்களிப்பு என மோடி அரசு கருதிக் கொண்டது.
விளக்கபடம் 15 : கொரோனாவை எதிர்கொள்ள நாடுகள் செலவழித்த நிதி
(ஒவ்வொரு நாட்டின் ஜி.டி.பி.யில் எத்தனை சதவீதம் என குறிக்கப்பட்டுள்ளது; ஜூலை 2021 வரையில்)
Source: International Monetary Fund, Database of Fiscal Policy Responses to Covid-19, October 2021. Data pertain to additional spending or foregone revenues.
மோடி அரசின் 2021-22 பொருளாதார ஆய்வறிக்கை இதைப் பின்வருமாறு வருணிக்கிறது:
“இந்தியாவின் நெருக்கடி மேலாண்மையின் (ஒரு) தனித்துவமான அம்சம் என்னவென்றால், அது முற்றாகத் தேவை மேலாண்மையை நம்பியிருக்காமல், வழங்கல் சார்ந்த சீர்திருத்தங்களுக்கு (supply side interventions) முக்கியத்துவம் கொடுத்தது என்பதே ஆகும். இந்த வழங்கல் சார்ந்த சீர்திருத்தங்களில் பல துறைகளில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியது, செயல்முறைகளை எளிமைப்படுத்தியது, பின்னோக்கிய வரி (retrospective tax, அதாவது கடந்த கால வனிக செயல்பாடுகலுக்கு தற்போது விதிக்கபடும் வரி) போன்ற பழைய சிக்கல்களை நீக்குதல், தனியார்மயமாக்கல், உற்பத்தி தொடர்பான ஊக்கத் தொகைகள் — போன்றவை அடங்கும்.”
கொரோனா காலத்தில் கடைபிடிக்கப்பட்ட கொள்கையானது ஒரு “V-வடிவ பொருளாதார மீட்சி”க்கு வழிவகுக்கும் என்று மோடி அரசு கதையளந்தது. அதாவது, ஊரடங்கால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட செங்குத்தான வீழ்ச்சி, அதற்குப் பின்னே செங்குத்தான வளர்ச்சியால் ஈடுசெய்யப்படும் என்று கூறியது.
நாட்டின் தேவையை பொறுத்தே கார்பரேட்களின் முதலீடு அமைகிறது
ஒருவகையில், கடந்த நான்கு ஆண்டுகள் மோடி அரசின் இந்த வாதத்தை [V வடிவ பொருளாதார மீட்சியை] சோதிக்கும் ஒரு இயற்கையான பரிசோதனைக் காலமாக அமைந்துள்ளன. ஏராளமான மறுக்கவியலாத ஆதரங்கள் நம் கண்முன்னே இருக்கின்றன. பெரும் முதலாளிகளுக்கு பணம் வடிவிலோ, சொத்துகள் வடிவிலோ அரசு எவ்வளவுதான் வாரி வழங்கினாலும், தங்கள் முதலீடுகள் இலாபத்தை ஈட்டும் என்று நம்பாத வரை முதலாளிகள் முதலீடு செய்ய மாட்டார்கள் என்பதே நிரூபனமாகியுள்ளது. எந்த அடித்தட்டு மக்களின் வருமானத்தின் வீழ்ச்சியை “சிறந்த சாத்தியமான விளைவு” என்று மிஷ்ரா கொண்டாடினாரோ அது கார்ப்பரேட் முதலீட்டிற்கு வழி வகுக்கவில்லை. உண்மையில், பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவை எவ்வளவு உள்ளது என்பதைப் பொறுத்துதான், உற்பத்தியை அதிகரிக்க கார்ப்பரேட்கள் முதலீடு செய்கின்றனவா இல்லையா என்பது தீர்மானிக்கப்படுகிறது.
இந்தியாவில் தேவையின் (demand) பிரச்சனை உள்ளது ஏன்? இந்தியாவில் வேண்டியவைக்கான (want) பற்றாக்குறை கிடையாது (மாறாக, ஆகப்பெரும்பாலான இந்திய உழைக்கும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களுக்கான வேண்டுதல் மிகப்பெருமளவில்தான் இருக்கிறது) ஆனால், அவ்வேண்டுதல்களை பூர்த்தி செய்யும் வாங்கும் சக்தி (purchasing power) மக்களிடம் இல்லை. பொருளாதாரத்தில் வேண்டுதலை (want) தேவையாக (demand) மாறச் செய்யும் காரணிதான் வாங்கும் சக்தியாகும்.
இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தில் உள்ள தேவை குறைபாடு, அதன் அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். நீண்டகாலமாக நீடித்து வரும் இந்த தேவைக் குறைபாடு, இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தின் தன்மையில் இருந்தே உருவாகிறது. அதாவது, அதன் உள்நாட்டு உற்பத்தி உறவுகள் மற்றும் ஏகாதிபத்யத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் உலகப் பொருளாதாரத்துடனான அதன் உறவுகள் ஆகியவற்றில் இருந்துதான் இப்பிரச்சனை உருவாகிறது. தேவையின் பற்றாக்குறையில் அடிப்படையான மாற்றம் நிகழ வேண்டுமென்றால், உற்பத்தி உறவுகள் மற்றும் சமூக ஒழுங்கில் ஒரு ஜனநாயக பூர்வ மாற்றம் தேவைப்படுகிறது. (இந்த தலைப்பு விரிவாக விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதை நாங்கள் இங்கே விவாதிக்கப் போவதில்லை) இத்தகைய மாற்றம் நடைபெறாத நிலையில், தேவையானது வளர்ச்சி குன்றியதாகவும் சிதைவுற்றதாகவுமே இருக்கும்.
இந்த வளர்ச்சி குன்றிய, சிதைவடைந்த (stunted and distorted) தேவையின் அடிப்படையிலும் கூட அவ்வப்போது (அசாதாரண நிகழ்வுகளால் தூண்டப்பட்டு) வளர்ச்சிகள் நிகழத்தான் செய்கின்றன. எடுத்துக்காட்டாக, 1980-களின் பிற்பகுதியில் பெருமளவிலான வெளிநாட்டு வணிகக் கடன்கள் இந்திய சந்தைக்குள் புகுந்தது; 1990-களின் நடுப்பகுதியில், ஆடம்பர பொருட்கள் உற்பத்தியின் குறுகியகால வளர்ச்சி; 2003-08 காலகட்டத்தில், வெளிநாட்டு மூலதனம் உள்ளே நுழைந்ததால் ஏற்பட்ட ஏற்றம் போன்றவற்றைக் கூறலாம். இறுதியாகக் குறிப்பிட்ட நிகழ்வு இந்தியாவின் வணிகப் பெருச்சாளிகளை ஆழமாகப் பாதித்தது. இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டில் ஏற்பட்ட பொருளாதார கொழிப்புதான் (boom) ‘இயல்பு நிலை’ என்று அவர்கள் தொடர்ந்து நினைத்துப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 2011-க்குப் பிறகு ஏற்பட்ட வீழ்ச்சியை ஒரு விதிவிலக்கான நிலை (aberration) என்றே கருதுகிறார்கள். ஆனால், உண்மையில் நிலைமையோ தலைகீழாக உள்ளது.
“ஏற்றுமதியால் உந்தப்படும் வளர்ச்சி” — ஒரு காணல் நீர்
ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் விளைவுகளை (Economic output) தேவையின் அடிப்படையில் வெவ்வேறாக பிரிக்கலாம்: தனியார் நுகர்வுத் தேவை, அரசாங்க நுகர்வுத் தேவை, தனியார் முதலீட்டுத் தேவை, அரசாங்க முதலீட்டுத் தேவை மற்றும் வெளிநாட்டுத் தேவை, அதாவது நிகர ஏற்றுமதிகள் (இறக்குமதியைக் கழித்த ஏற்றுமதி).
எனவே,
தனியார் நுகர்வு + அரசாங்க நுகர்வு + தனியார் முதலீடு + அரசாங்க முதலீடு + நிகர ஏற்றுமதிகள் = தேசிய வருமானம்.
மொத்த வளர்ச்சியின் உந்துசக்தியாக ஏற்றுமதியின் வளர்ச்சி அமையும் என்று மோடி அரசு பெரும் பந்தயமே கட்டியுள்ளது. 2014-இல், ‘மேக் இன் இந்தியா‘ திட்டத்தை அறிவித்தது; 2020-இல் கொரோனாவின் போது சீனாவை விட்டு வெளியேறப் போவதாக கூறப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க விரும்பிய மோடி அரசு அத்திட்டத்தை ‘ஆத்மநிர்பார் பாரத்‘ என மறுபெயரிட்டு அறிவித்தது. ஆத்மநிர்பார் ஊக்கத் தொகுப்பில் உற்பத்தி சார் ஊக்கத் திட்டங்கள் (Production Linked Incentives schemes) அடங்கும். இதன்மூலம் குறிப்பிட்ட சில தொழில்துறைகளில் (தற்போது 14 தொழில்துறைகள்) தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய உற்பத்தியாளர்களுக்கு அதிகரித்த விற்பனையின் அடிப்படையில் மானியங்கள் வழங்கப்படும். சர்வதேச அரங்கில் போட்டியிடும் வலிமை கொண்ட இந்தியப் பெரு நிறுவனங்கள் அல்லது குழுமங்களை (conglomerates) ‘தேசிய சாம்பியன்களாக’ முன்னிறுத்துவதே மோடி அரசின் நோக்கம்.
ஆனால், இந்தத் திட்டம் நிறைவேறவில்லை. கடந்த பத்தாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதிகள் உலக ஏற்றுமதியில் 1.6 — 1.8 சதவீதத்துக்கு இடையில் தேக்கமடைந்துள்ளன, மேலும், 2024-இல் இந்தப் பங்கு உண்மையில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய குழுமங்கள் சர்வதேசப் அளவில் போட்டியிட முனைவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை. எப்படியாயினும், சர்வதேச வணிகத்தைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற நிலைமை, இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையான அமெரிக்கா இந்தியாவின் மீது அசாதாரண அழுத்தம் கொடுப்பது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், ஏற்றுமதியானது இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியை உந்தித் தள்ளுவதற்கான வாய்ப்பு அரிதாகவே உள்ளது. அமெரிக்காவுடன் ஒரு வணிக ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டாலும், அமெரிக்காவுக்கான நிகர ஏற்றுமதிகள் குறையக்கூடும். ஏனெனில், ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் அமெரிக்காவிலிருந்து இந்தியாவின் இறக்குமதிகளை விரிவுபடுத்துவதாகும். நிகர ஏற்றுமதியில் ஏற்படும் இத்தகைய குறைப்பானது இந்திய பொருளாதாரத்தில் தேவையை மேலும் சுருக்கவே செய்யும்.³
ஒட்டுமொத்த தேவையை பலியிட்டு, கார்ப்பரேட் இலாபத்தை பெருக்க எடுக்கப்படும் முயற்சிகள்
ஆக, நிகர ஏற்றுமதி தனியார் முதலீட்டிற்கு ஒரு தூண்டுதலை வழங்காது. மேலும், நாம் ஏற்கனவே பார்த்ததுபோல், தனியார் நுகர்வு மந்தமாக உள்ளது. அதேநேரத்தில், எவ்வளவு நிதியைக் குவித்து வைத்திருந்த போதிலும், கார்ப்பரேட் துறையானது தாமாகவே முதலீட்டை அதிகரிக்காது. முதலாளிகள் எந்தவொரு பொருளாயதத் தேவையையும் (அவர்களின் சொந்த தேவையையோ அல்லது மக்களின் தேவையையோ) நிறைவேற்றுவதற்காக உற்பத்தி செய்வதில்லை; கார்ப்பரேட்டு உற்பத்தியின் நோக்கம் இலாபத்தைப் பெருக்கி அதன் மூலம் மூலதனத்தை திரட்டுவதே ஆகும். இதுதான் வெளிப்படையான, அப்பட்டமான உண்மையாகும். பொருளுற்பத்தியின் மூலம் மூலதனத்தை திரட்ட முடியாவிட்டால், அவர்கள் உற்பத்தியை நிறுத்திவிடுவார்கள். அதேபோல், எதையும் உற்பத்தி செய்யாமல் மூலதனத்தை திரட்ட முடியுமானால், அதைத்தான் அவர்கள் செய்வார்கள். மூலதனத் திரட்டலுக்கு உதவும் போது மட்டுமே அவர்கள் உற்பத்தியில் ஈடுபடுவார்கள். மேலும், உற்பத்தித் திறனை விரிவுபடுத்துவது மேன்மேலும் அதிக மூலதனத்தை திரட்ட உதவினால் மட்டுமே அவர்கள் ஆக்கப்பூர்வமான முதலீட்டை மேற்கொள்வார்கள்.
இந்தியாவின் பெரும் முதலாளிகள், உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கு போதுமான தேவை இல்லை என்று உணரும்போது, அவர்கள் மூலதன திரட்டலுக்கு பிற வழிகளைத் தேடுகின்றன. (குறிப்பாக ஊகவணிகம், நிலம் கையகப்படுத்துதல், தனியார்மயமாக்கல், அரசு மானியங்கள் (வரி சலுகைகள் உட்பட), உள்கட்டமைப்பு அல்லது ஆயுதங்கள் தொடர்பான அரசு கட்டுப்பாட்டுள்ள ஒப்பந்தங்கள் போன்றவை இதில் அடங்கும்) இவை அனைத்திலும், அவர்களின் சேவகனாக வேலை பார்க்கும் அரசின் பாத்திரம் முக்கியமானது. முக்கியமாக, இந்திய அரசியல் பொருளாதாரத்தின் கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டால், இவ்வழிமுறைகள் அனைத்தும் பொருளாதாரத்தின் பிற பகுதிகளையும் அதைச் சார்ந்திருக்கும் மக்களையும் இழப்பிற்கு ஆளாக்கி கார்ப்பரேட் தேவை என்ற ஒற்றை காரணியை ஊக்குவிக்கின்றன. அதாவது, நாட்டின் ஒட்டுமொத்தத் தேவையை பலிகொடுத்து, கார்ப்பரேட்டுகளின் இலாபத்தைப் பெருக்குகின்றன. இதற்கான சில எடுத்துக்காட்டுகளைக் கீழே காண்போம்.
1. அரசின் செலவீனத்தில் மாற்றம்: கார்ப்பரேட் துறைக்கான தேவையை நேரடியாக ஊக்குவிக்க, மத்திய அரசு தேசிய உற்பத்தியின் (GDP) சதவீதத்தில் அதன் மூலதனச் செலவீனத்தை (capital expenditure) (கட்டமைப்பு செலவுகள் உட்பட, எ.கா. நெடுஞ்சாலை கட்டுமானம் போன்றவை) அதிகரித்துள்ளது. இயல்பாக இது ஒரு சிறந்த நடவடிக்கையாகவே கருதப்படும்: எப்படியாயினும், மூலதனச் செலவீனம் நீடித்து நிலைக்கும் சொத்துக்களைத்தான் உருவாக்குகிறது. ஆனால் இதில் சூட்சுமம் என்னவென்றால், அரசு அதன் மொத்தச் செலவீனத்தை அதிகரிப்பதன் மூலம் மூலதனச் செலவீனத்தை அதிகரிக்கவில்லை. மாறாக, S&P மற்றும் Moody’s போன்ற சர்வதேச தர நிர்ணய நிறுவனங்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்காக, மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதத்தில் தனது ஒட்டுமொத்தச் செலவீனத்தை உண்மையில் குறைத்து வருகிறது. (மேலே கொடுக்கப்பட்ட சமன்பாட்டின் அடிப்படையில், அரசு நுகர்வு மற்றும் அரசு முதலீட்டின் கூட்டுத்தொகை சுருங்கி வருகிறது.)
மொத்தச் செலவீனத்தில் இந்தக் குறைப்பை அடையும் பொருட்டு, மத்திய அரசு மொத்த தேசிய உற்பத்தியின் சதவீதத்தில் ‘வருவாய்ச் செலவீனத்தை’ (revenue expenditure) கடுமையாகக் குறைத்துள்ளது. ஆனால், வருவாய்ச் செலவீனமே (சம்பளங்கள், நலத்திட்ட செலவீனங்கள், மானியங்கள் போன்ற வடிவங்களில்) மக்களின் கைகளில் நேரடியாக வந்தடையும் நிதியாகும். எனவே, மொத்த தேசிய உற்பத்தியின் ஒருபகுதியாக வருவாய்ச் செலவீனத்தின் குறைப்பதால் பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த தேவை மேன்மேலும் சுருங்குகிறது.
விளக்கப்படம் 16 : ஒன்றிய அரசின் செலவீனங்கள்/ஜி.டி.பி. விகிதங்கள்
Source: RBI, Handbook of Statistics 2024-25.
கார்ப்பரேட் துறைக்கு அதிகச் செலவீனமும், மக்களுக்குக் குறைந்த செலவீனமும் செய்யும் மத்திய அரசின் இந்தச் செலவீன முறைமையின் (expenditure pattern) விளைவுகள் உள்கட்டமைப்பு / கட்டுமானப் பொருட்களின் உற்பத்தி வளர்ச்சி விகிதத்திலும், நீடித்து உழைக்காத நுகர்வு பொருட்களின் (non-durable consumer goods) (சோப்பு, சலவைத் தூள், பற்பசை, தேயிலைத் தூள், உணவுப் பொருட்கள், மருந்துகள், காகிதம் போன்ற சாதாரண மக்கள் நுகர்வுப் பொருட்கள்) உற்பத்தி வளர்ச்சி விகிதத்திலும் பிரதிபலிக்கிறது, இதை விளக்கப்படம் 17-இல் காண்க. மக்கள் நுகர்வுப் பொருட்களின் உற்பத்தியானது, கட்டமைப்பு / கட்டுமானப் பொருட்களின் உற்பத்தியை விட அதிக வேலைவாய்ப்பை உருவாக்கக் கூடியது. எனவே இந்த வளர்ச்சி முறைமை (pattern of growth) தொழில்துறை வேலைவாய்ப்பின் (industrial employment) மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
விளக்கப்படம் 17 : கட்டமைப்பு / கட்டுமான பொருட்கள் உற்பத்தி vs நீடித்து உழைக்காத நுகர்வு பொருட்களின் உற்பத்தி (2020-21 = 100)
Source: Index of Industrial Production.
எந்த ஒரு அரசு செலவீனமும் குறைந்த அளவிலாவது தேவையை உருவாக்கும். ஆனால் அரசின் மூலதனச் செலவீனத்தின் முக்கிய பெறுநர் (உள்கட்டமைப்பு ஒப்பந்தங்களின் வடிவத்தில்) கார்ப்பரேட் துறையே ஆகும். தேவையில் வளர்ச்சி இல்லாதபோது, இத்தகைய அரசுச் செலவீனத்திலிருந்து அடையும் இலாபத்தை வெறுமனே பையில் போட்டுக்கொண்டு, உற்பத்தியை விரிவுபடுத்தாமல் இருப்பதே அறிவுடைமை என்று கார்ப்பரேட் நிறுவனங்கள் நினைக்கின்றனர். இதற்கு நேர்மாறாக, உழைக்கும் மக்களின் கைகளில் வந்து சேரும் முழு வருமானமும் செலவழிக்கப்படுகிறது; இது மேலும் தேவை வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது (அதாவது, ஒரு ‘தொடர் விளைவை’ (Multiplier effect) இது ஏற்படுத்துகிறது). எனவே, அரசுச் செலவீனம் வருவாய்ச் செலவீனத்திலிருந்து கார்ப்பரேட் துறைசார்ந்த மூலதனச் செலவீனத்திற்கு மாற்றப்படுவதானது, மொத்த அரசுச் செலவீனத்தில் மாற்றம் இல்லாத போதும், ஒட்டுமொத்த தேவையில் வீழ்ச்சிக்கே வழிவகுக்கிறது. மொத்த தேசிய உற்பத்தியின் (GDP) சதவீதத்தில் மொத்தச் செலவீனம் சுருங்கினால் இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கவே செய்யும்.
2. பிற உற்பத்தியாளர்களை வெளியேற்றுதல்: இரண்டாவதாக, சந்தை முழுவதுமாக தேக்கமடைந்தாலும் அல்லது சுருங்கினாலும், கார்ப்பரேட் துறையின் மேற்தட்டுப் பிரிவினர் தனது போட்டியாளர்களை துரத்தி அடித்து தனது சந்தையின் அளவை பராமரித்துக்கொள்ள முடிகிறது. இந்தவகையில், பெருமளவிலான சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களை ஒழித்துக் காட்டுவதற்கான அரசின் கொள்கை நடவடிக்கைகள் (2016-ல் பணமதிப்பிழப்பு, 2017-இல் ஜிஎஸ்டி வரி விதிப்பு, மற்றும் 2020-21-இல் கொரோனா ஊரடங்கு) கார்ப்பரேட் துறைக்கு பெரிதும் உதவியுள்ளன. 2022-இல் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு, ஐந்து கோடி ரூபாய்க்கும் குறைவான மூலதனம் உள்ள சிறிய நிறுவனங்களின் விற்பனை கொரோனாவிற்கு பிறகு 14 சதவீதம் சுருங்கியுள்ளது என மதிப்பிட்டது.⁴ அதன் பிறகு சிறு நிறுவனங்கள் ஓரளவு மீட்சி அடைந்துள்ளதாகத் தெரிந்தாலும் அந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட இழப்புகளின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை. 2015-16 — 2022-23-க்கும் இடையில் முறைசாரா உற்பத்தித் துறையில் பணிபுரியும் தொழிலாளர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 50 இலட்சம் குறைந்துள்ளது.⁵
கார்ப்பரேட் துறைக்குள்ளேயே ஒன்றுகுவிப்பு (concentration) அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் விரல் ஆச்சார்யா, ‘கார்ப்பரேட் துறைக்குள் அதிகரிக்கும் ஒன்றுகுவிப்பானது — குறிப்பாக ‘பெரும் 5’ குழுமங்களின் (முகேஷ் அம்பானி குழுமம், டாடா குழுமம், ஆதித்ய பிர்லா குழுமம், அதானி குழுமம் மற்றும் பார்டி டெலிகாம்) வளர்ந்துவரும் நிலைமையானது — அவர்கள் விருப்பத்திற்கு சரக்குகளின் விலையை உயர்த்துவதைச் சாத்தியமாக்கியுள்ளது’ என்றும், ‘இதன் மூலம் அக்குழுமங்களின் இலாபங்கள் கடுமையாக அதிகரித்துள்ளன’ என்றும் கூறுகிறார்.⁶
3. சுகாதாரம், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளை கார்ப்பரேட்டுகள் கையகப்படுத்துதல்: கார்ப்பரேட் தேவையை ஊக்குவிப்பதற்காக, குறிப்பிட்ட சில [அரசு] சேவைகளை கார்ப்பரேட்டுகள் கைப்பற்றுவதை அரசு திட்டமிட்டு ஊக்குவித்து வருகிறது, இது மக்களின் நுகர்வை நேரடியாக பாதிக்கிறது. கொரோனா ஊக்க மானிய தொகுப்பு, ‘சமூகத்தின் அடிப்படை வசதிகள்’ (கல்வி மற்றும் சுகாதாரம்) துறைகளில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்க மானியங்களை வாரி வழங்கியது. இத்தகைய சீர்திருத்தங்களின் விளைவாக கல்வி மற்றும் சுகாதாரத்துறை விரிவடையவில்லை. மாறாக, அச்சேவைகளை ஒரு பண்டமாக மாற்றி அதன் பெரும்பகுதியை தனியார் கார்ப்பரேட் துறையிடம் ஒப்படைப்பதே நோக்கமாகும். உதாரணமாக, மருத்துவமனைகளுக்கான தனியார்-அரசு கூட்டு திட்டத்தை (Public-Private Partnerships) எடுத்துக் கொள்ளலாம்:
“பொதுச் சுகாதார அமைப்பை வலுப்படுத்த பல பத்தாண்டுகளாக முதலீடு செய்து கட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கோடிகள் மதிப்புள்ள பொது மருத்துவமனைக் கட்டிடங்கள் மற்றும் பல லட்சம் கோடிகள் மதிப்புள்ள பொது நிலங்கள் இந்தியா முழுவதும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன அல்லது ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டு விட்டன. தனியார்-அரசு கூட்டு திட்டங்கள் (PPP) மூலம் மருத்துவமனைகளை மேம்பாடு செய்தல், மருத்துவக் கல்லூரிகளைக் கட்டுதல் என்ற போர்வையில் இது நடந்தேறுகிறது.
“தனியார் துறையுடன் கூட்டுச் சேரும் இந்தச் செயல்முறைக்கு 2017-இல் ஓர் உந்துதல் கிடைத்தது. உலக வங்கியின் ஆலோசனையின் படி, 300 அல்லது அதற்கும் குறைவான படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனைகளை இயக்குவதற்கும், PPP முறையில் மருத்துவக் கல்லூரிகளை நிறுவுவதற்கும் மத்திய அரசும் நிதி ஆயோக்கும் பரிந்துரைத்தன. 2020-இல், மத்திய அரசு அதன் ‘சாத்தியப்பாட்டு இடைவெளியை குறைக்க நிதி கொடுக்கும் திட்டத்தை’ (viability gap funding scheme) வெளியிட்டது, இதன் கீழ் தனியார் நிறுவனங்கள் கல்லூரிகளை நிறுவ மூலதனச் செலவில் 30%-40% மத்திய அரசு வழங்கும், மாநில அரசு மற்றொரு 30%-40% வழங்கும். மேலும், முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒவ்வொரு திட்டத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவிற்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசு தலா 25% வழங்க பரிந்துரைத்தது. டயாலிசிஸ் யூனிட்கள், இதய பராமரிப்பு மற்றும் புற்றுநோயியல் துறை மற்றும் நோயறிதல் மையங்களை இயக்க PPP-க்களை நிதி ஆயோக் ஊக்குவித்து வருகிறது, மேலும், இந்தியா முழுவதும் இத்தகைய PPP-களின் எண்ணிக்கையில் பிரம்மாண்டமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.”⁷
— என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் ஒரு ஆய்வு.
தனியார்மயமாக்கலினால், இலவச புறநோயாளிகள் ஆலோசனை மற்றும் நோயறிதல் சேவைகள் நிறுத்தப்படுகின்றன. இத்திட்டத்தின்படி, ஒரு சிறிய பகுதி படுக்கைகள் இலவசப் படுக்கைகளாக ஒதுக்கி வைக்கப்பட வேண்டும்; ஆனால் இது காகிதத்தில் மட்டுமே உள்ளது. எப்படியாயினும், பெரும்பான்மையானவை கட்டணப் படுக்கைகளாகவே இருக்கின்றன. இது தனிநபர்களின் மருத்துவச் செலவுகளை அதிகரிக்கிறது: கிராமப்புறங்களில், தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கும் செலவு அரசு மருத்துவமனைகளை விட ஆறு மடங்கு அதிகம்; நகர்ப்புறங்களிலோ எட்டு மடங்கு அதிகம்.⁸
இந்நடவடிக்கைகள் சில காலமாகவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் விளைவுகளும் வெளிப்படையாகவே தெரிகிறது. தாராளமயமாக்கல் காலத்தில், [ஒரு குடும்பம்] சுகாதாரத்திற்காக செலவிடும் மாதாந்திர செலவீனத்தின் பங்கு அதிகரித்துள்ளது. பெரிய-அளவு மாதிரியை கொண்ட குடும்ப கணக்கெடுப்பின் (large-sample household survey) தரவுகளை பயன்படுத்தி, 2014 — 2017-18-க்கும் இடையில் இந்திய குடும்பங்களின் சுகாதாரம் தொடர்பான செலவுகள் அவர்களின் ஒட்டுமொத்த செலவீனங்களை விட இரண்டு மடங்கு வேகமாக வளர்ந்துள்ளதை நிரூபிக்கிறது ஒரு சமீபத்திய ஆய்வு.⁹ இதன் விளைவாக, சுகாதாரம் தொடர்பான செலவுகளே மொத்த செலவீனங்களில் அதிகப் பங்கை வகிக்கிறது. மேலும், அதிகரித்து வரும் தனியார்மயமாக்கலினால், இந்த போக்கு மேன்மேலும் தீவிரமடைந்து வருகிறது.
கல்வித் துறையிலும் இதேபோன்ற தனியார்மயமாக்கல் நிகழ்ந்து வருகின்றது. பொது போக்குவரத்து தனியார் போக்குவரத்தால் (இரண்டு சக்கர வாகனங்கள் போன்றவை) மாற்றீடு செய்யப்படும் நிகழ்வானது அமைதியாக நடந்தேறி வருகிறது. கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்துக்கான ஒருங்கிணைந்த செலவுகள், ஆடை, படுக்கைகள் மற்றும் காலணிகளுக்கான செலவுகளை விட மூன்று மடங்கு அதிகமாக உள்ளதை விளக்கப்படம் 18 தெளிவாகக் காட்டுகிறது.¹⁰ தனியார்மயமாக்கப்பட்ட சேவைகளுக்கான செலவு வளரும்போது, அச்செலவீனங்கள் உழைக்கும் மக்களின் வருமானத்தின் ஒரு பெரிய பகுதியை முன்கூட்டிய விழுங்கிவிடுகிறது, இதனால் மக்கள் தொழிற்துறைப் பொருட்களை நுகர்வதற்காகச் செலவழிப்பது குறைகிறது. இது இத்தகைய பொருட்களுக்கான தேவையில் காணப்படும் தெளிவான தேக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
விளக்கப்படம் 18 : தனிநபர் மூலதன செலவீனங்களின் பங்காக வெவ்வேறு பொருட்களின் மீதான செலவீனங்கள்,2023-2024 (%)
Source: National Sample Survey, Household Consumption Expenditure Survey 2023-24.
4. நிலம் மற்றும் இயற்கை வளங்களைக் கைப்பற்றுதல்: பெரும் அளவிலான நிலங்களையும் அதிலிருக்கும் இயற்கை வளங்களையும் கார்ப்பரேட் துறையிடம் தாரைவார்க்க பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் கொரோனா ஊக்கத் தொகுப்பின் ஒரு பகுதியாக, நிலக்கரி மற்றும் கனிமங்களில் தனியார் முதலீட்டை தாராளமயப்படுத்தியது. அதாவது, எந்தப் பயன்பாட்டிற்காக நிலக்கரி பிரித்தெடுக்கப்படுகிறது என்பது தெரிவிக்காமலேயே முதலீடுகள் அனுமதிக்கப்படுகின்றன. சுற்றுச்சூழல் சட்டங்களில் பெரும் மாற்றங்களை மோடி அரசு செய்தது; இதுவரை சட்டத்திற்கு புறம்பான செயல்களாக இருந்தவையை சட்டபூர்வமாக்கும் வகையில், ஒரு திட்டம் ஆரம்பித்த அல்லது முடித்த பிறகு ஒப்புதல்கள் பெற்றால் போதும் என்று மாற்றம் செய்யப்பட்டது; மேலும், சுற்றுச்சூழல் ஒப்புதல்களுக்கு பொதுமக்களிடமிருந்து வரும் கேள்விகள் அல்லது எதிர்ப்புகளைத் தடுக்கும் வகையில் விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில், 2006-இன் வன உரிமைகள் சட்டத்தை செயலிழக்கச் செய்யும் வகையில் 1980-இன் வனப் பாதுகாப்பு சட்டத்தை திருத்தியது. அடிப்படையில் இதன்மூலம் வன நிலங்களை கார்ப்பரேட் கைப்பற்றுவதை எளிதாக்கியது மத்திய அரசு.¹¹ சத்தீஸ்கரின் ஹஸ்தேயோ வனத்தில் நிலக்கரி சுரங்கத்திற்காக அதானி நிலத்தைக் கையகப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களை மோடி அரசு முந்தியடித்துக்கொண்டு ஒப்புதல் அளித்தது. இந்த நடவடிக்கைகள் அனைத்தும் இப்பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குபவையாகும்.
செழிப்பான இயற்கை வளங்களைக் கொண்ட நாடுகள் குறைந்த வளர்ச்சியுடனும் அதிக வறுமையுடனும் காணப்படும் போக்கை ‘வளங்களின் மிகுதியால் சாபம்’ (‘resource curse’) என்ற சொற்றொடரால் குறிப்பிடுகின்றனர். இந்த போக்கை விளக்க பொருளியலாளர்கள் முன்வைக்கும் கோட்பாடுகள் ‘வளங்களின் சாபத்தை’ ஓர் இயற்கையான நிகழ்வு போலவோ அல்லது புவியியல் நிகழ்வு போலவோ சித்தரிக்கின்றன. ஆனால், உண்மையில் இது ஒரு சமூக நிகழ்ச்சிப் போக்காகும். அதாவது, உலகின் வளமிக்க பகுதிகளின் மீது தொழில்துறை வளர்ச்சியடைந்த நாடுகளின் காலனி அல்லது நவ-காலனி ஆதிக்கத்தையே இது பிரதிபலிக்கிறது. தங்களின் வளங்களை தங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலையை உண்டாக்குகிறது. உள்ளூர் மக்களை பின்தங்கிய நிலையிலும் வறுமையிலும் வைத்திருப்பது எந்த இயற்கையின் சாபமும் அல்ல; மாறாக, மேற்குறிப்பிட்ட வளர்ந்த [ஏகாதிபத்திய] நாடுகளின் ஆதிக்கப் போக்குதான். இவ்வாறு கொள்ளையடிக்கப்படும் பகுதிகளில் வளங்கள் விரைவில் தீர்ந்துபோகும்; சுற்றுசூழல் நிரந்தரமாக சேதப்படுத்தப்பட்டிருக்கும்; மேலும் உள்நாட்டு உற்பத்தி சக்திகள் உண்மையான வளர்ச்சி ஏதையும் அடைந்திருக்காது; உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடைவதற்கு பதிலாக சிதைவடையவும் கூடும்.
சான்றாக, இந்தியாவில் கனிம வளங்கள் செறிவுள்ள பகுதிகளே மிகவும் ஏழ்மையானவையாகவும் இருக்கின்றன. நாட்டிலேயே மிக அதிகமான தலைவீத (Mineral Value Per Capita) கனிமச் செல்வத்தைக் கொண்டுள்ளன சத்தீஸ்கர், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களே மிகக் குறைந்த மாதாந்திர தலைவீத செலவீனங்களையும் (Per Capita Expenditure) கொண்டுள்ளன (விளக்கப்படம் 19-ஐப் பார்க்கவும்). தாராளமயமாக்கல் காலத்தில், கனிம வளம் மிக்க மாநிலங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் இடையேயான வருமான அளவுகளில் இடைவெளி அகலமாகியுள்ளது. அதேநேரத்தில், கனிம வளம் மிக்க மாநிலங்களுக்குள் ஒரு சிறிய உயர்தட்டு வர்க்கம் பயனடைந்துள்ளது: பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோரின் வருமானங்களுக்கிடையேயான இடைவெளி அனைத்து மாநிலங்களிலும் அகலமாகியுள்ளது. ஆனால், இது கனிம வளம் மிக்க மாநிலங்களில் மிகவும் அதிக அளவில் நடந்தேறியுள்ளது.¹²
விளக்கப்படம் 19: பல்வேறு மாநிலங்களின் தனிநபர் மாதாந்திரச் செலவும், தலைவீத கனிமவள மதிப்பும் (2012)
Source: Economic Survey 2016-17, vol. I.
அமித் பதுரி வாதிடுவது போல், கார்ப்பரேட் நிறுவனங்களால் நிலம், வனம் மற்றும் இயற்கை வளங்கள் கைப்பற்றப்படுவதால், வேலைவாய்ப்பு குறைந்தாலும் பொருளாதார விளைவுகள் அதிகரிக்கக் கூடும். (கார்ப்பரேட் துறையில் ஒரு தொழிலாளிக்கு விளைவு (output per worker) விவசாயத்தில் ஒரு விவசாயியின் விளைவை விட 12 மடங்கு அதிகமாகும்) அதிக வாங்கும் சக்தி கொண்டவர்களின் தேவைக்கு ஏற்ப விளைவுகளின் கூறுகளே மாறுகின்றன; மேலும், செல்வத்தைக் குவிக்கும் நிகழ்வானது மேன்மேலும் விரைவுபடுத்தப்படுகிறது. உண்மையில், “உற்பத்தியிலிருந்து இலாபத்தை ஈட்டுவதை விட, குறைந்த காலத்தில் அதிக செல்வத்தைப் பெற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இது மிகவும் பயனுள்ள வழியைத் திறக்கிறது” என்கிறார், அவர்.¹³
அதேநேரத்தில், இந்தச் செயல்முறைகள் அனைத்தும் மக்களின் வாழ்வாதாரங்களை அழித்து, அவர்களின் நுகர்வை மேன்மேலும் சிதைக்கவே செய்கின்றன.
முடிவுரை
சுருங்கக் கூறினால், இந்தியப் பொருளாதாரம் நீண்ட காலமாக தேவை பற்றாக்குறை (lack of demand) எனும் அடிப்படைப் பிரச்சனையால் தத்தளித்து வருகிறது. தற்காலிக காரணிகள் காரணமாக ‘புத்தாக்கம் தரும் வளர்ச்சிகள்’ அவ்வப்போது ஏற்பட்டுள்ளன. அத்தகைய காலங்களில், உள்நாட்டு பெரும் முதலாளிகள் விரைவாக சொத்துக்களைக் குவித்துக் கொள்ள முடிந்தது. ஆனால், இந்த ‘வளர்ச்சிகள்’ ஓய்ந்த பிறகு, தேவை பற்றிய பிரச்சனை மீண்டும் முன்னுக்கு வந்துவிடுகிறது.
தேவைப் பிரச்சனைக்கு மற்றொரு தீர்வாக ஏற்றுமதி-சார்ந்த வளர்ச்சி முன்வைக்கப்பட்டது. இதன் உள்ளார்ந்த பிரச்சனைகளை நாம் ஒதுக்கிவைத்துவிட்டுப் பார்த்தாலும், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கான அரசாங்கங்களின் தொடர் முயற்சிகளின் விளைவுகள் மிகவும் மோசமாகவே உள்ளன. மேலும், தற்போதைய உலக நிலைமையில், இந்தியாவின் ஏற்றுமதிகள் அதன் வளர்ச்சியை இழுத்துச் செல்லப் போவதில்லை.
அத்தகைய சூழ்நிலையில், பெரும் முதலாளிகள், அரசு எப்படியாவது மூலதன திரட்டலுக்கு புத்துயிர் அளிக்க வேண்டும் என்று கோருகின்றனர். தனியார் நுகர்வு அல்லது தனியார் முதலீட்டைப் போலல்லாமல், அரசு அதன் செலவீனத்தை அதிகரிக்க முடியும். இந்த முடிவு அரசின் கையில்தான் உள்ளது. எனினும், ‘தாராளமயமாக்கல்’ மற்றும் உலகமயமாக்கல் காலத்தில், ‘அரசு அதிகம் செலவு செய்யக் கூடாது’ என்ற சர்வதேச நிதி மூலதனத்தின் கட்டளைகளால் அரசு செலவீனம் மேன்மேலும் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே நடக்கிறது.¹⁴ இது தேவைப் பிரச்சனையை தீர்க்கும் ஒரு வழியை மூடிவிடுகிறது. மேலும், வங்கிக் கடன் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் தேவையை அதிகரிக்க அரசின் முயற்சிகள் மிகக் குறைவான விளைவையே தருகின்றன, ஏனெனில், பெரும் முதலாளிகள் குறைவான கடன் தேவையையே கொண்டுள்ளனர். (ஏனெனில், கடன் வாங்கி உற்பத்தியை விரிவுபடுத்துவதில் எந்த இலாபமும் இல்லை என்று அவர்கள் பார்க்கிறார்கள்)
எனவே அரசு, பெரும் முதலாளிகள் மூலதனத்தைக் குவிக்கும் நடைமுறைக்கு உதவுவதற்காக, மக்களை வேட்டையாடும் நடவடிக்கைகளுக்குத் (நுண்கடன் நிறுவனங்கள் மூலம்) திரும்புகிறது. ஆனால், மக்களின் வருமானத்தை அரித்து, அவர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைப்பது அல்லது அழிப்பதன் மூலம், அரசு உண்மையில் தேவையை இன்னும் சுருங்கிய நிலைக்கே தள்ளுகிறது. இந்தச் செயல்முறையானது முரண்பாடுகள் நிறைந்ததாகும். தேவை மேன்மேலும் சுருங்கவே இது வழிவகுக்கிறது.
இதனால்தான், கார்ப்பரேட் துறையின் பைகளில் மலையளவு பணம் குவிந்துள்ளது; வங்கிகளும் மிதமிஞ்சிய நிதியை வைத்துக் கொண்டு முணகிக் கொண்டுள்ளன; ஆனால் அதேநேரத்தில், வளர்ச்சிக்கான இழுவை எந்திரம் (engine of growth) என்று கருதப்படும் முதலீடுகளோ நின்றுபோய்விட்டன.
000000000000
அடிக்குறிப்புகள்:
- Bloomberg Quint, “Covid-19 Pandemic’s Lasting Cost On Indian Economy Smaller Than Expected: Neelkanth Mishra”, December 18, 2020. https://www.bloombergquint.com/economy-finance/pandemics-lasting-cost-on-indian-economy-smaller-than-expected-neelkanth-mishra .
- இதன் பொருள், பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஒரு பொருளாதார மீட்சி நடக்கும் என்று உண்மையில் நம்பினார்கள் என்பது அவசியமில்லை. இதன் உண்மையான பொருள் என்னவென்றால், மற்ற முதலீட்டாளர்களின் சராசரி அபிப்பிராயம், முதலீட்டாளர்களின் சராசரி அபிப்பிராயம் ஒரு மீட்சியை எதிர்பார்க்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள் என்பதே. (See Keynes on “professional investors” in The General Theory of Employment, Interest and Money, Chapter 12.) .
- இதை விளக்குவதற்கு: ஒரு இந்திய நிறுவனம் மற்றொரு நாட்டிற்கு கூடுதலாக ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்யும் போது, அது இந்தியாவின் சந்தையை அந்த அளவிற்கு விரிவாக்குகிறது. ஆனால் ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவிற்கு கூடுதலாக ரூ. 1 கோடி மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தால், அது இந்திய உற்பத்தியாளர்களின் சந்தையை அந்த அளவிற்கு குறைக்கிறது. அமெரிக்காவுடன் பேரம் செய்யப்படும் வணிக ஒப்பந்தத்தின் விளைவாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதிகள் இந்திய சந்தையில் பெரிய பங்கைக் கைப்பற்றக்கூடும், இதனால் இந்திய உற்பத்தியாளர்களுக்கான தேவை சுருங்கும்.
- P. Bhandari and A. Chaudhary, HSBC Research, November 2022, cited in Viral Acharya, “India at 75: Replete with Contradictions, Brimming with Opportunities, Saddled with Challenges”, Brookings Papers on Economic Activity, March 2023. .
- National Sample Survey, 73rd Round, and Annual Survey of Unorganised Sector Enterprises, 2022-23. .
- Viral Acharya, op. cit. .
- Rema Nagarajan, “PPP = Transfer of hospitals built with public money into private hands”, Times of India, July 10, 2025. .
- Ibid. .
- பெயரளவு தனிநபர் செலவு, அதாவது பணவீக்கம் தள்ளுபடி செய்யப்படாத அடிப்படையில், கிராமப்புறங்களில் 53 சதவீதமும், நகர்புறங்களில் 41 சதவீதமும் அதிகரித்தது; ஆனால் கிராமப்புறங்களில் தனிநபர் சுகாதாரச் செலவு 97 சதவீதமும், நகர்புறங்களில் 93 சதவீதமும் உயர்ந்தது. இந்திரநீல் முகோபாத்யாய், மொன்டு போஸ் மற்றும் ராகுல் எஸ். ரெட்டி கடார்பேட்டா, “கான்டெஸ்டெட் கிளெய்ம்ஸ்: மேக்கிங் சென்ஸ் ஆஃப் தி டிக்லைன் இன் அவுட்-ஆஃப்-பாக்கெட் எக்ஸ்பெண்டிட்சர்”, எகனாமிக் அண்ட் பாலிட்டிகல் வீக்லி, செப்டம்பர் 6, 2025. Centre for Monitoring the Indian Economy (CMIE) நடத்திய Consumer Pyramids Household Survey (CPHS) யின் தரவுகளே இவை.
- National Sample Survey, Household Consumption Expenditure Survey 2023-24. As the survey methodology has changed from 2022-23 on, we are unable to compare expenditures over time. .
- Kanchi Kohli and Manju Menon, “Environmental regulation and post-Covid 19 economic recovery”, November 24, 2020, Heinrich Böll Stiftung, https://in.boell.org/en/2020/11/24/environmental-regulation-and-post-covid-19-economic-recovery .
- Economic Survey 2016-17, vol. I, p. 293. We do not, however, consider this ‘internal colonialism’, though some have argued this. Internal colonialism suggests that some other regions within India benefit at the expense of the colonised regions, which is not the case. The extraction of natural resources from underdeveloped regions benefits a small class domestically and international capital.
- Amit Bhaduri, “Danger Zones of High Economic Growth”, EPW, October 22, 2016. .
- The reasons international investors oppose an increase in Government spending need to be explained separately, but in essence, by suppressing domestic demand in India, international investors are able to capture the maximum gain from their investments here.








