இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026 தேதிக்குள் ஒட்டுமொத்தமாக ஒழித்துக் கட்டுவோம். அதன்பிறகு தண்டகாரண்யா பகுதியில் வாழும் பழங்குடியினரின் வாழ்வில் தேனாறும் பாலாறும் ஓடப்போவது உறுதி என மோடி, அமித்ஷா மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்னு தேசாய் ஆகியோர் மேடைதோறும் பேசி வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜக்தல்பூரில் நடைபெற்ற ஒலிம்பிக் நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, 2030-ஆம் ஆண்டு இறுதிக்குள் பழங்குடியினர் அதிகளவில் வாழும் ஏழு மாவட்டங்கள் இந்தியாவிலேயே மிகவும் முன்னேறிய மாவட்டங்களாக மாறும் என்று கூறியிருந்தார்.
ஆனால் ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க அரசுகள் கூட்டாக சேர்ந்து சத்தீஸ்கரின் தொழிற் கொள்கை என்ற பெயரில் செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காக கொண்டு வரப்படுகிறதேயன்றி பழங்குடி மக்களின் நலனுக்கானதல்ல என்பதை அவர்களின் கொள்கை முடிவுகளிலிருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.
இந்தியக் காடுகளின் வரையறைப்படி நாட்டிலுள்ள மொத்த காடுகளின் பரப்பளவான 8.27 இலட்சம் சதுர கி.மீட்டரில் சத்தீஸ்கரில் மட்டும் 55,812 சதுர கீ.மீட்டர் அளவில் காடுகள் பரந்து விரிந்திருக்கிறது. காடுகளின் மொத்தப் பரப்பளவில் மத்தியப்பிரதேசம் மற்றும் அருணாசலப்பிரதேசத்திற்கு அடுத்ததாக சத்தீஸ்கர் மாநிலம் தான் நாட்டிலேயே மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
கடந்த டிசம்பர் மாதத்தில் சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 ஏக்கர் பரப்பளவிலான காடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. இதில் பழங்குடி மக்களின் பொருளாதாரத் தேவைகளை ஈட்டித்தரும் மஹூவா, டெண்டு, சார் உள்ளிட்ட மரங்களும் அடங்கும். எனவே காடுகள் அழிக்கப்படுவதை எதிர்த்து அங்குள்ள பழங்குடி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
பழங்குடி மக்களின் போராட்டங்கள் உக்கிரமடைந்ததை அடுத்து, செய்தியாளர்கள் சந்திப்பை நடத்திய வனத்துறை அதிகாரி இரங்கநாதன் என்பவர், ஒன்றிய அரசு அனுமதியளித்த பிறகே மரங்கள் வெட்டப்படுகிறது. பிஜாப்பூர் மாவட்டத்தின் காடுகள் அழிக்கப்படுவது கார்ப்பரேட் சுரண்டலுக்கான ஒரு சிறிய நடவடிக்கை மட்டுமே. வரும் காலங்களில் சத்தீஸ்கரில் அமைய இருக்கும் இன்னும் பல சுரங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களும், இலட்சக்கணக்கான பழங்குடியினரின் வாழ்வும் பறிக்கப்பட இருக்கின்றன.
தற்போதைய பா.ஜ.க அரசு, முந்தைய காங்கிரசு ஆட்சியை விட கார்ப்பரேட் பகற்கொள்ளையை தீவிரப்படுத்துவதற்காக முனைப்புடன் செயலாற்றி வருகிறது. பழங்குடியினர் பெரும்பான்மையாக வாழும் சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதியை ஒரு புதிய தொழில் முதலீட்டு மையமாக, ஒன்றிய பா.ஜ.க அரசு முன்நிறுத்தி வருகிறது.
கடந்த பிப்ரவரி 2024-ஆம் ஆண்டில் மாநில பா.ஜ.க அரசால், சத்தீஸ்கர் தொழிற்துறை கொள்கை (2024-2030) அறிமுகப்படுத்தப்பட்டது. கார்ப்பரேட் முதலாளிகள் விரைவாகத் தொழில் தொடங்குவதற்கு ஒற்றைச் சாளர முறை, நிலங்கள் ஒதுக்கப்படுவதில் சலுகைகள் (பழங்குாடி மக்கள் வசிக்கும் நிலங்களை தாரை வார்ப்பது) தொழில் முதலீட்டிற்கான மானியம், வட்டிக்கான மானியம், மின்சார வரியிலிருந்து விலக்கு, சரக்கு மற்றும் சேவை வரிகளில் சலுகைகள் என்ற பெயரில் நாட்டு மக்களின் பணத்தை வாரி வாரி வழங்குவது. சுற்றுப்புற அனுமதி என்பதன் மூலம் சத்தீஸ்கரின் இயற்கை வளங்களை சூறையாட அனுமதி எனக் கார்ப்பரேட் முதலாளிகளுக்கான பல்வேறு சலுகைகள் இக்கொள்கை மூலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இப்புதிய தொழிற்கொள்கை மூலம் வரும் 2030-ஆம் ஆண்டிற்குள், சத்தீஸ்கரில் சுமார் 7.5 இலட்சம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அங்கு கார்ப்பரேட் முதலாளிகள் எளிதாக தொழில் தொடங்குவதற்காக கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் தொழிற்துறையில் சுமார் 350 சீர்திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.
மேலும் இத்தொழிற்கொள்கை மூலம் பஸ்தரில் இருக்கும் 88% பகுதிகளை தொழிற்பிரிவு – 3 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி சுற்றுலாத்துறையில் முதலீடு செய்பவர்கள் 45% மானியத்தை பெறமுடியும்.
கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காகவே இதுபோன்ற கொள்கைகள் அமல்படுத்துவதற்குப் பொருத்தமான சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்டு ஒன்றிய மாநில பா.ஜ.க அரசால் சத்தீஸ்கரில் வேகமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.
சத்தீஸ்கர் மாநில முதல்வர் விஷ்ணு தேசாய், கடந்த ஆகஸ்டு மாதத்தில் ஜப்பான், தென்கொரியா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பியவுடன், மேற்கண்ட நாடுகளின் கார்ப்பரேட் முதலாளிகளுடன் சத்தீஸ்கரில் தொழில் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக கூறியிருந்தார். மேலும் மோடியின் ஜப்பான் பயணத்தின் போது சுமார் 6 இலட்சம் கோடி ரூபாயை அடுத்த 10 ஆண்டுகளில் முதலீடு செய்வதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. அதில் ஜப்பான் கார்ப்பரேட் முதலாளிகள் அதிகளவிற்கு சத்தீஸ்கரில் முதலீடு செய்ய இருப்பதாக விஷ்ணு தேசாய் கூறியிருந்தார்.
சத்தீஸ்கரின் வளங்களை பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு மட்டுமல்லாமல், இந்தியத் தரகு முதலாளிகளின் கொள்ளைக்காகவும் சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக சமீபத்தில் சத்தீஸ்கர் மாநில அரசு, டெல்லி, அகமதாபாத் போன்ற நகரங்களில் சத்தீஸ்கர் முதலீட்டாளர்கள் இணைப்பு எனும் நிகழ்ச்சியையும் அதனோடு ரோடு ஷோவையும் நடத்தி முடிந்திருக்கிறது.
தில்லியில் நடைப்பெற்ற நிகழ்ச்சியை சத்தீஸ்கரின் சுற்றுலாத்துறை அமைச்சகமும் இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியும் (FICCI) இணைந்து நடத்தியிருக்கின்றன. இந்நிகழ்ச்சியில் சுமார் 6,826 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு ஈர்க்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் கூறியிருக்கிறார். மேலும் 1000 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு 30% முதலீட்டு மானியம் வழங்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார்.
கார்ப்பரேட் முதலாளிகள் தொழில் தொடங்குவதற்கானக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளன. ஒரு குறைக்கடத்தி தொழிற்சாலை தொடங்குவதற்கு 45 நாட்களிள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான சாலைகள், இரயில் போக்குவரத்துகள் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் விரைவாக அமைக்கப்பட்டு வருவதாகவும், மாவோயிஸ்டுகளை மார்ச் 31, 2026-ஆம் ஆண்டிற்குள் ஒழித்து விடுவோம் எனவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தொடர்ச்சியாக நம்பிக்கையூட்டி வருகிறார் அம்மாநில முதல்வர் விஷ்ணு தேசாய்.
சத்தீஸ்கர் மாநில பா.ஜ.க அரசும் இந்திய முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியும் “கார்ப்பரேட் முதலீடுகளை ஈர்ப்பதற்காக” இணைந்து செயல்படும் அதே வேளையில், திட்டங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்பாக அப்பகுதியில் வாழும் பழங்குடி மக்களிடம் கருத்துக்கேட்பதில்லை.
டோர்ணாபால் பகுதிகளிக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள ரிசர்வ் படை மற்றும் போலீசின் முகாம்கள்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி சத்தீஸ்கரில் மட்டும் 30.6% பழங்குடியினர் வசித்து வருகிறார்கள். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணை, பழங்குடியினருக்கு வழங்கும் உரிமைகள், அம்மக்களின் கிராம சபை அதிகாரம், பழங்குடியினரின் போராட்டம் என அனைத்தும் கார்ப்பரேட் சுரண்டலுக்காக புறந்தள்ளப்படுகின்றன.
கடந்த டிசம்பர் மாதம் சத்தீஸ்கர் சட்டமன்றத்தில் காங்கிரசு எம்.எல்.ஏக்கள் அம்மாநிலத்தில் தொடர்ந்து காடுகள் அழிக்கப்பட்டு வருவதற்கு எதிராக ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அப்பொழுது, பஸ்தர், தம்னார் பகுதிகளில் வேகமாகக் காடுகள் அழிக்கப்பட்டு வருவதாகவும், புதிய சுரங்கங்கள் தொடங்குவதற்கு போலியாக பொதுமக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றதாகவும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்ட 30 காங்கிரசு எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இப்படி அங்கு வாழும் பழங்குடியினருக்கும், மாநில சட்டமன்றத்திற்கும் தெரியாமலேயே இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு அதனடிப்படையில் பஸ்தரின் இயற்கை வளங்கள் கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழிவகை செய்துதரும் கையாளாக/தரகராக ஒன்றிய மற்றும் மாநில பா.ஜ.க அரசுகள் செயல்பட்டு வருகிறது. இதை தான் வளர்ச்சி என்று ஆளும் பா.ஜ.க அரசு கதையளக்கிறது.
கடந்த 2020-ஆம் ஆண்டின் நிலவரப்படி சத்தீஸ்கரில் இந்தியாவின் தகர இருப்புகளில் 36%, பாக்சைட் 20%, இரும்புத் தாது 19%, சுண்ணாம்புக் கற்கள் 6% மற்றும் வைரம் 4% ஆகியவை புதைந்து கிடக்கின்றன. சத்தீஸ்கரின் சுரங்க அமைச்சகத்தின் இணையத் தகவலின்படி பஸ்தர் மாவட்டத்தில் சுண்ணாம்புக் கற்கள் மற்றும் குவார்ட்ஸ், நாராயண்பூர் மற்றும் கான்கேர் மாவட்டத்தில் இரும்புத் தாது, சோண்டேஹியில் தங்கம், நர்ஹர்பூரில் கிரானைட், பாக்சைட், கோண்டகான் மாவட்டத்தில் கிரானைட் போன்ற கனிமங்கள் அதிகளவில் புதைந்துள்ளன. இதே போல தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா மாவட்டங்களில் பல்வேறு வகையான அரிய கனிமங்கள் கிடைக்கின்றன.
அம்மாநில அரசின் பொதுத்துறை நிறுவனமான நாகர்னார் என்ற இரும்பு நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரின் பல சுரங்கங்கள் மற்றும் ஆர்செலர் மிட்டலின் குழாய் இணைப்பு போன்றவை அதானிக்கு விற்கப்பட்டிருக்கின்றன. பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள 127 ஏக்கர் பழங்குடியினரின் நிலம் மகேந்திரா கோயங்கா என்ற சுரங்க முதலாளிகளால் ஆக்கிரமிக்கப்பட்டதை எதிர்த்து அப்பகுதி பழங்குடியினர் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இதையெல்லாம் மறைத்துவிட்டு ஆளும் பா.ஜ.க அரசின் திட்டங்கள் அனைத்தும் பழங்குடியினரின் நலன்களுக்கானது என்றார் அமித்ஷா.
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது என ஆளும் பா.ஜ.க அரசு அன்றாடம் கூறி வருகிறது. ஆனால் அங்கு அதிகரிக்கும் அரசுப்படை முகாம்களின் எண்ணிக்கையைப் பற்றி ஒருபோதும் நாட்டு மக்களுக்கு கூறுவதில்லை. தற்போதும் நாட்டிலேயே வேறு எந்த பகுதியிலும் இல்லாத அளவுக்கு பஸ்தரில் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஒன்பது சிவிலியன்களுக்கு ஒரு இராணுவத்தினர் என அரசுப்படைகள் தங்களது முகாம்களை அமைத்துள்ளன.
ஒன்றிய, மாநில அரசாங்கங்கள் அங்குள்ள பழங்குடி மக்களைத் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி அப்புறப்படுத்தி விட்டு நாட்டின் வளர்ச்சி, பழங்குடி மக்களின் வளர்ச்சி எனப் பேசித்திரிவதெல்லம் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்குத் தானே தவிர, பழங்குடி மக்களின் வளர்ச்சிக்கானதோ, நாட்டின் வளர்ச்சிக்கானதோ அல்ல.
– தாமிரபரணி





