புல்டோசர் – முஸ்லீம் வெறுப்பு இந்துதேச வெறி பிரச்சாரத்திற்கான ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் புதிய யுத்தி

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது

அப்பாவி முஸ்லீம்களை பொய் வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகளாக சந்தேகித்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரைமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது. 

புல்டோசர்களை நாம் நகரங்களில் பரவலாக பார்த்திருப்போம். கட்டடங்கள் கட்டுவதற்கும், சாலைகள் சீரமைப்பிற்கும் இதர உள்கட்டமைப்பு வேலைகளில் இந்த இயந்திரம் இன்றியமையாததாகவே உள்ளது. ஆனால் காவி பாசிஸ்டுகளைப் பொறுத்தவரை புல்டோசர் என்பது,  தன் சொந்த மக்களையே இரண்டாம் தரக் குடிமக்களாக்குவதற்கும் அவர்களின் வாழ்க்கையை அழிப்பதற்கான ஒரு அரசியல் உத்தியாகவே பயன்படுத்தப்படுவது தற்பொழுது இயல்பானதாகவே மாறியுள்ளது.

இங்கு நாம் குறிப்பிடுவது, கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக பாஜக ஆளும் மாநில மற்றும் ஒன்றிய அரசாங்கங்கள் சட்டவிதிமுறைகளை மீறியும் அராஜகத்துடனும்  முஸ்லீம் மக்களின் வீடுகளை இடிப்பதற்கும் அவர்களது கடைகள் உள்ளிட்ட இதர சொத்துக்களை அழிப்பதற்குமான ஒடுக்குமுறை கருவியாக புல்டோசரைப் பயன்படுத்தி வருவதைக் குறிப்பிடுகிறோம். 2019 லிருந்து 2023 வரை நடந்துள்ள குடியிருப்பு இடிப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளைவிட 379% அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கை கூறுகிறது. குறிப்பாக, இவற்றில் 44% முஸ்லீம் குடியிருப்புகளாக உள்ளது என்பதிலிருந்தே காவி பாசிஸ்டுகள் புல்டோசர் இராஜ்யம் நடத்தி வருவதை அறியலாம்.

* * * *

முகமது ஜவெத் பிரயாக்ராஜ் (அலகாபாத்) நகரத்தில் வசித்து வந்த ஒரு சமூக செயற்பட்டாளார். அவர், 27 மே 2022-இல் பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாதத்தில் முகமது நபி குறித்து இழிவான கருத்துக்கள் பேசியதைக் கண்டித்து, கான்பூரில் முஸ்லீம்கள் நடந்திய ஆர்ப்பாட்டத்தில், போலீஸ் முஸ்லீம்களை தாக்கியது. அதனை விமர்சித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் எழுதி இருந்தார். ஒரு வாரம் கழித்து அலகாபாத்தில் நடந்த  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஜவெத்தும் கலந்து கொண்டார். அன்று இரவே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக ஜவெத் உள்ளிட்ட பலரையும் போலீஸ் கைது செய்தது.

ஜவெத்தின் மீது மொத்தம் எட்டு கிரிமினல் வழக்குகளைப் பதிவு செய்தது ஆதித்யநாத் போலீஸ். அடுத்த ஒருசில நாட்களில் ஜவெத்தின் இரண்டு மாடி வீட்டை அலகாபாத் மாநகராட்சி புல்டோசரைக் கொண்டு இடித்து தரைமட்டமாக்கியது. ஜவெத் மீதான குற்றம் இன்னும் நிருபணமாகவில்லை, அவ்வாறு குற்றம் உறுதிசெய்யப்பட்டாலும் கூட குற்றத்திற்கு தண்டனையாக வீட்டைத் தரைமட்டமாக்கவேண்டும் என இந்தியச் சட்டத்தின் எந்தப் பிரிவுகளிலும் சொல்லப்படவில்லை. இடிப்பதற்கு முன்பு அலகாபாத் மாநகராட்சி நோட்டீஸ் கூட வழங்கவில்லை. இதற்கிடையில் இருபத்தியோரு மாதம் சிறை வாசத்திற்குப் பிறகு அலகாபாத் நீதிமன்றம் ஜவெத் குற்றமற்றவர் என்று பிணை வழங்கியது.

இடிக்கப்பட்ட முகமது ஜவெத்தின் வீடு

யோகியோ அல்லது மோடியோ, சட்டப்படி நுபுர் சர்மா மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு நேரெதிராக, அதற்கு கண்டனம் தெரிவித்த ஒருவரை, குறிப்பாக முஸ்லீம் என்பதால் அக்குடும்பத்தின் மொத்த உழைப்பால் உருவான வீட்டை தரைமட்டமாக்கி, அவர்களின் முதுகெழும்பை உடைத்து மீண்டெழும்ப முடியாமல் செய்திருக்கிறது காவி பாசிஸ்டான யோகி ஆதித்யநாத் அரசாங்கம். இவ்வாறு செய்வதற்கு பின்னால், முஸ்லீம் மக்களை அச்சுறுத்துவதும் அதனூடே இந்துதேச வெறியைப் பரப்புவதும் என்ற அரசியல் நோக்கம் உள்ளதென்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

இது இத்தோடு முடியவில்லை, சமீபத்தில் நடந்த தில்லி கார் குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக சந்தேகிக்கப்பட்ட மருத்துவரின் வீடு இடிக்கப்பட்டது. அதேபோல், புல்வாமா தாக்குதலில் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்ட எட்டு முஸ்லீம்களுடைய வீடுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.

கான்பூரிலிருந்து சமீபத்திய புல்மா வரைக்கும் அப்பாவி முஸ்லீம்களை பொய்வழக்குகளில் கைது செய்தோ அல்லது குற்றவாளிகள் என சந்தேகிதத்தாலோ அவர்களின் குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள் இதர சொத்துக்கள் புல்டோசர் கொண்டு தரமட்டமாக்குவது மோடி இந்தியாவின் புதிய இயல்பாக (New Normal) மாறியுள்ளது. 2024-இல் அம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட அறிக்கையில், பாஜக ஆளுகின்ற நான்கு மாநிலங்களில் மட்டும் புல்டோசரைக் கொண்டு 128 இடிப்பு நடவடிக்கைகள் நடத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.  

தொடரும்…….

மாணிக்கம்

செய்தி ஆதாரம்

https://www.article-14.com/post/the-house-that-parveen-fatima-built-how-the-spark-was-lit-for-anti-muslim-state-retribution-in-modi-s-india-695aea9344e5a 

https://article-14.com/post/how-a-hindu-monk-set-the-national-template-for-the-extralegal-use-of-bulldozers-as-punitive-action-against-muslims-696077589b627

 

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன