இலத்தீன் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிறுவ வெனிசுலாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா

வெனிசுலாவைத் தாக்குவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல விசயங்களை அடைய நினைக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது. இந்தப் பிராந்தியத்தில் சீனா உருவாக்கியிருக்கும் உற்பத்தி விநியோகச் சங்கிலியை உடைத்து அந்த இடத்தில் அமெரிக்காவினை நிலைநிறுத்துவது, அதன் முதல் கட்டமாக வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இலத்தீன் அமெரிக்க நாடுகள் சீனவுடன் கொண்டிருக்கும் உறவுகளைத் துண்டிப்பது, பிராந்தியத்தில் உள்ள மற்ற இடதுசாரி அரசாங்கங்களை அச்சுறுத்துவது, அமெரிக்காவிற்கு எதிராக அந்நாடுகள் உருவாக்கிவரும் பிராந்திய ஒருங்கிணைப்புத் திட்டங்களை அழிப்பது.

சமீபத்தில் வெனிசுலா நாட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க இராணுவம் அந்நாட்டு அதிபர் மாதுரோவை கடத்தி அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. வெனிசுலா தலைநகர் காரகாசிற்குள் ஊடுருவிய அமெரிக்க படையினர் அந்நகரின் மின்சார விநியோகத்தை முற்றிலுமாக தடை செய்துள்ளனர். 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மூலமாக அந்நகர் முழுவதும் குண்டுவீசித் தாக்கியிருக்கின்றனர். அதன் பிறகு அந்நாட்டு அதிபர் மாதுரோ தங்கியிருந்த மாளிகையைத் தாக்கி அவரது பாதுகாப்புப் படையினரைக் கொன்றுவிட்டு அவரையும் அவரது மனைவியையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இறையாண்மையுள்ள ஒரு நாட்டின் தலைநகருக்குள் இராணுவத்தையும், விமானப்படையையும் அனுப்பி, அந்த நாட்டுமக்கள் மீது குண்டுவீசித் தாக்குதல் நடத்தியதுடன், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்நாட்டு அதிபரைக் கடத்திச் செல்லும் ஒரு அப்பட்டமான அக்கிரமிப்பு நடவடிக்கையை டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நடத்தியிருக்கிறது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையானது அமெரிக்க இராணுவ வலிமையின் சக்தியை பிரமிக்க வைக்கும் வகையில் வெளிப்படுத்தியிருப்பதாகப் பெருமை பேசியிருக்கிறார். வெனிசுலா அதிபரை சர்வாதிகாரி எனக் குற்றம்சாட்டும் டிரம்ப், அவர் அமெரிக்காவிற்குப் போதைமருந்து கடத்தல் செய்யும் கும்பலுக்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் கிடைத்த பணத்தை அமெரிக்காவிற்கு எதிராகப் போராடும் கொரில்லாக் குழுக்களுக்குக் கொடுத்ததாகவும் குற்றஞ்சாட்டியிருக்கிறார். தற்போது மதுரோவைக் கைது செய்திருப்பதன் மூலம் வெனிசுலா நாட்டு மக்களை அவரது சர்வாதிகார ஆட்சியிலிருந்து தான் விடுவித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அதுமட்டுமன்றி, இனி வெனிசுலா நாட்டின் ஆட்சியை அமெரிக்காவே நடத்தும் என்றும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஒருபக்கம் மதுரோவை போதை மருந்து கடத்தல்காரன் என்றும் சர்வாதிகாரி என்றும் குற்றஞ்சாட்டி இந்த இராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்திய டிரம்ப் மறுபுறம் வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியில் இனி அமெரிக்க நிறுவனங்கள் நுழையும் என்றும், சீரழிந்து போயிருக்கின்ற வெனிசுலா நாட்டு எண்ணெய் உற்பத்தி கட்டுமானத்தைச் சரி செய்யும் என்றும் இதன் மூலம் இரு நாட்டு மக்களும் பயனடைவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.

இறுதியாக தென் அமெரிக்க நாடுகளின் மீது அமெரிக்காவின் ஆதிக்கத்தை நியாயப்படுத்துகின்ற மன்ரோ கோட்பாட்டைச் சுட்டிக் காட்டி இனி இந்தப் பகுதியில் அமெரிக்கா வைத்ததுதான் சட்டம் எனக் கூறியிருக்கிறார். அமெரிக்காவின் நலனைப் பாதுகாப்பது என்ற விசயத்தில் சர்வதேச சட்டங்களெல்லாம் தன்னைக் கட்டுப்படுத்தாது என்று கொக்கரிக்கிறார்.

வெனிசுலாவின் மீதான அமெரிக்காவின் இந்த தாக்குதலைப் பல நாடுகள் கண்டித்துள்ளன. தென் அமெரிக்க நாடுகளான கியூபா, கொலம்பியா ஆகியன கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றன. சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளும் தமது கண்டனங்களை தெரிவித்திருக்கின்றன. அமெரிக்காவின் தயவை நாடி நின்று கொண்டிருக்கும் இந்திய ஆட்சியாளர்களோ, அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையைக் கண்டிக்கத் துப்பில்லாமல், இரு நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் இந்தப் பிரச்சனையச் சுமூகமாகப் பேசித் தீர்க்க வேண்டும் எனக் கூறியிருக்கிறது.

அமெரிக்காவிற்கு உள்ளேயும் கூட இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராகப் பலரும் கருத்துக் கூறியிருக்கின்றனர். பெர்னி சாண்டர்ஸ் உள்ளிட்ட பல அமெரிக்க செனட்டர்கள் டிரம்பின் நடவடிக்கையைக் கண்டித்துள்ளனர். அமெரிக்க சட்டங்களின் படி இது போன்ற போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர் அமெரிக்க காங்கிரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்ற சட்டத்தை டிரம்ப் மீறிவிட்டார் என்றும் குற்றஞ்சாட்டுகின்றனர். இது போன்ற இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு டிரம்பிற்கு இருக்கும் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்க பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரும் முயற்சியில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி ஈடுபட்டுள்ளது. இதற்கு டிரம்பின் குடியரசுக் கட்சியினைச் சேர்ந்த சில செனட்டர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வெனிசுலாவின் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கையை நியாயப்படுத்த டிரம்ப் இதுவரை மூன்று விசயங்களைத்தான் காரணமாக கூறிவருகிறார். ஒன்று வெனிசுலா அதிபர் மதுரோ அமெரிக்காவிற்கு போதைப் பொருள் விநியோகிக்கும் கும்பலை ஆதரிக்கிறார் அவர்களிடம் பணம் வாங்குகிறார். இரண்டாவது அவர் அந்நாட்டில் ஒரு சர்வாதிகார ஆட்சியினை நடத்தி வருகிறார். மூன்றாவது அந்நாட்டின் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை மீறி கள்ளச்சந்தையில் பல நாடுகளுக்கு வெனிசுலா கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்கிறது. அதுமட்டுமன்றி அந்நாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் தமது உற்பத்தி திறனை விட மிகக் குறைந்த அளவிலேயே உற்பத்தி செய்கின்றன – அதாவது வெனிசுலாவிற்கு எண்ணெய் உற்பத்தி நிலையங்களை நடத்தத் தெரியவில்லை. எனவே அந்நாட்டினைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து அந்நாட்டிற்கு ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்து கச்சா எண்ணெயைய இறக்குமதி செய்ய வேண்டும்.

அமெரிக்காவிற்குள் நுழையும் போதை மருந்துகள் கூறித்து அமெரிக்க போதை மருந்துகள் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் படியே, மெக்சிக்கோவிலிருந்தும், கொலம்பியாவிலிருந்தும் வரும் போதைப் பொருட்கள் தான் மிகவும் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்குள் நுழையும் போதைப் பொருட்களில் ஒரு சதவிதத்திற்கும் குறைவான அளவே வெனிசுலா நாட்டிற்குள் நுழைகிறது. எனவே போதை மருந்தைக் கட்டுப்படுத்தவே இந்த இராணுவ நடவடிக்கை என்பது டிரம்ப் இட்டுக் கட்டிக் கூறும் கதையே அன்றி வேறில்லை.

போதை மருந்துக் கும்பலை ஒழிப்பதுதான் டிரம்பின் நோக்கம் என்பது முற்றிலும் பொய் என்பது உலகறியும். வெனிசுலாவைப் போன்றே அமெரிக்காவின் அருகில் இருக்கும் மற்றொரு இலத்தீன் அமெரிக்க நாடுதான் ஹோண்டுராஸ். ஹோண்டுராசின் முன்னாள் அதிபர் ஒர்லேண்டோ ஹெர்மாண்டஸ், இவர் 2021ஆம் ஆண்டில் தனது பதவியை இராஜினாமா செய்த உடனேயே அந்நாட்டுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டார். அமெரிக்க நீதிமன்றத்தில் அவர் மீதான வழக்கு விசாரிக்கப்படு அவருக்கு 45 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டன. அப்படிப்பட்ட ஹெர்மாண்டஸைத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிப்பதாக டிரம்ப் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார். இன்னும் சில மாதங்களில் ஹோண்டுராஸ் நாட்டில் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் அமெரிக்காவிற்கு ஆதரவான வேட்பாளரை வெற்றிபெறச் செய்யவே ஹெர்மாண்டசை டிரம்ப் விடுவித்துள்ளார். இதுதான் போதை மருந்தை ஒழிக்கும் டிரம்பின் இலட்சணம்.

செனிசுலா மீதான அக்கிரமிப்பிற்கு இன்னொரு காரணமாக கூறப்படுவது அதிபர் மதுரோ சர்வாதிகாரியாகச் செயல்பட்டார் என்பது. 2024ஆம் ஆண்டில், மாதுரோவை எதிர்த்துப் போட்டியிட்டு அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த உரூரிட்டோ முன்வைக்கும் குற்றச்சாட்டை டிரம்ப் அப்படியே திரும்பக் கூறுகிறார். இந்த உரூரிட்டோவிற்குத்தான் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது. தற்போது இந்த உரூரிட்டோவையும் நம்பப் போவதில்லை என டிரம்ப் அறிவித்துவிட்டார். இனி அமெரிக்காவே நேரடியாக வெனிசுலாவின் நிர்வாகத்தை நடத்தப் போகிறது என்றும் கூறியிருக்கிறார்.

வெனிசுலா நாட்டில் சர்வாதிகார ஆட்சியை ஒழித்து அங்கே ஜனநாயகத்தை மலரச் செய்வதுதான் டிரம்பின் நோக்கம் என்றால் அவர் ஜனநாயகத்தை உருவாக்கும் வேலையை சவுதி அரேபியாவிலிருந்து தொடங்க வேண்டும். உலகிலேயே மிகவும் பிற்போக்கான, ஆணாதிக்க, சர்வாதிகார நாடான சவுதி அரேபியா பல ஆண்டுகளாக அந்நாட்டின் அரசரின் முடியாட்சியின் கீழ் இருந்து வருகிறது. உலக நாடுகளுக்கு ஜனநாயகத்தை வழங்கத் துடிக்கும் டிரம்ப் சவுதி அரேபிய நாட்டுக்குள் இராணுவத்தை அனுப்பி அந்நாட்டு சர்வாதிகாரியான மன்னரைக் கைது செய்து அமெரிக்க சிறையில் அடைப்பாரா? நிச்சயம் இல்லை. டிரம்பிற்கு தேவையெல்லாம் வெனிசுலா நாட்டின் மீது படையெடுத்துச் செல்ல ஒரு முகாந்திரம் அவ்வளவே அதற்காகத்தான் போதைமருந்த்துக் கடத்தல், சர்வாதிகார ஆட்சி என சப்பைக் கட்டு கட்டுகிறார் டிரம்ப்

இது இரண்டும் இல்லையெனும் போது வெனிசுலா மீதான அக்கிரமிப்பு நடவடிக்கைக்கு டிரம்ப் கூறியிருக்கும் மூன்றாவது காரணம் முக்கியமானதாகிறது. அது வெனிசுலாவின் எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது. உலக அளவில் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளங்களுக்கு நிகரான அளவில் வெனிசுலாவில் கச்சா எண்ணெய் உள்ளது, ஆனால் சவுதியில் உள்ளதுபோல் இல்லாமல் இது கடினமான கச்சா எண்ணெய் என்பதால் அதனை சுத்தீகரிக்க மேம்பட்ட தொழில்நுட்பம் தேவை. அத்தகைய தொழில்நுட்பம் வெனிசுலா வசம் இல்லாததால் அதற்காக உலக நாடுகளை அந்நாடு சார்ந்துள்ளது.

வெனிசுலா நாட்டின் எண்ணெய் வயல்களை ஆரம்பத்தில் இருந்தே அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களே கட்டுப்படுத்தி வந்தன. இதனை உறுதி செய்வதற்கு அந்நாட்டினை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அமெரிக்காவின் கைப்பாவைகள்தான் வெனிசுலாவின் அதிபராக வரமுடியும் என்ற நிலை இருந்தது. இந்நிலையில்தான் 1999ஆம் ஆண்டு வெனிசுலாவின் அதிபராகப் பதவியேற்ற யூகோ சாவேஸ், அந்நாட்டில் இருந்த அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களை நாட்டுடைமையாக்கினார். அன்று முதல் தங்களது முதலீட்டை, தொழில்நுட்பத்தை வெனிசுலா திருடிக் கொண்டுவிட்டதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகிறது. வெனிசுலா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

வெனிசுலாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை அதில் முக்கியமானது. அந்நாட்டின் பொருளாதாரத்தை முடக்கிப்போட்ட இந்த தடையை மீறி வெனிசுலாவானது சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு மறைமுகமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்து வந்தது. தற்போது வெனிசுலா நாட்டு அதிபரைக் கடத்திச் செல்லும் நடவடிக்கை முன்னர் அமெரிக்க அந்நாட்டின் எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கிச் சிறைபிடிக்கும் வேலையைச் செய்து வந்தது. இதன் மூலம் அந்நாட்டு அதிபரை மிரட்டிப் பணியவைக்க முயற்சித்து முடியாமல் போகவே நேரடி இராணுவ நடவடிக்கையின் மூலம் அதிபடைக் கடத்திச் சென்றுள்ளது.

டிரம்ப் அளித்துள்ள பேட்டியில் அவர் மன்ரோ கோட்பாட்டை மேற்கோள் காட்டியிருப்பது குறித்துப் பலரும் பேசி வருகிறார்கள். நூறாண்டுகளுக்கு முன்னர், சரியாகச் சொன்னால் 1823ஆம் ஆண்டில் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் ஜேம்ஸ் மன்ரோ. அப்போது இலத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தும் ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் காலனியாதிக்கத்தின் கீழ் இருந்தன. இதனை ஏற்றுக் கொள்ளாத மன்ரோ, வடஅமெரிக்கா, மற்றும் தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை உள்ளடக்கிய உலகின் மேற்குப் பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்துகின்ற உரிமை அமெரிக்காவிற்கு மட்டுமே உள்ளது என்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த நாடுகள் எதுவும் அமெரிக்காவை மீறி அங்கே தமது ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சிக்க கூடாது என்றும் கூறினார். இது தான் மன்ரோ கோட்பாடு.

நூறு ஆண்டுகளுக்கு முன்னர் கூறப்பட்ட மன்ரோ கோட்பாட்டை இப்போது தனது பேட்டியில் டிரம்ப் பயன்படுத்தியிருக்கிறார் என்றால் இலத்தீன் அமெரிக்கா நாடுகளில் அதிகரித்துவரும் சீனாவின் தலையீடுகளே இதற்குக் காரணம்.

சீனா மெல்ல மெல்ல தனது ஆதிக்கத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. அமெரிக்காவின் அடாவடிக்கு மாற்றாக கடன் கொடுப்பது, வியாபார ஒப்பந்தங்கள் செய்து கொள்வது, வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பது என பொருளாதார ரீதியில் உலக நாடுகள் மத்தியில் தனது செல்வாக்கை சீனா அதிகரித்து வருகிறது. நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக, அமெரிக்காவிற்கு மாற்றான ஒரு சக்தியாகும் நோக்கத்துடன் சீனா செயல்பட்டு வருகிறது.

சிலி, பெரு, கோஸ்டாரிக்கா, ஈகுவடார் உள்ளிட்ட நாடுகளுடன் சீனா சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளது. இந்நாடுகளுடனான வர்த்தக உறவுகள் தொடர்ந்து பலமடைந்து வருகின்றன. அமெரிக்காவை மிஞ்சிவிடும் அளவிற்கு இந்நாடுகளிடம் இருந்து சீனா இறக்குமதி செய்கிறது. 2023ஆம் ஆண்டு சிலி நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 38% சீனாவிற்கு சென்றுள்ளது.

வர்த்தக உறவுகளைத் தாண்டி, இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குக் கடன் அளிப்பதிலும் சீனா முன்னிலையில் உள்ளது. கடந்த இருபதாண்டுகளில் மட்டும் சீனா பல நூறு பில்லியன் டாலர்களை இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குக் கடனாக கொடுத்துள்ளது. வெனிசுலாவின் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு மட்டும் சீனா 60 பில்லியன் அமெரிக்க டாலர்களைக் கடனாக கொடுத்துள்ளது. இது மட்டுமன்றி பிரேசில், அர்ஜெண்டினா, ஈகுவடார் உள்ளிட்ட நாடுகளுக்கும் சீன பெரிய அளவில் கடனுதவி செய்துள்ளது. சீன வளர்ச்சி வங்கி, சீன ஏற்றுமதி இறக்குமதி வங்கி ஆகியவை இலத்தீன் அமெரிக்க நாடுகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டுள்ளன. சிறப்பு கடன் திட்டங்களை அந்நாடுகளுக்கு வழங்கியிருகின்றன. இதன் மூலம் அந்நாடுகளில் செயல்படுத்தப்படும் பல நூறு கட்டமைப்புத் திட்டங்களில் சீனா மறைமுக கூட்டாளியாக இருக்கிறது.

இது தவிர தனது “பெல்ட் அண்டு ரோடு” திட்டத்தினை சீனா இலத்தீன் அமெரிக்காவிற்கும் விரிவுபடுத்தியிருக்கிறது. இதுவரை இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியன் கடற்பகுதியிலும் இருக்கும் 20க்கும் அதிகமான நாடுகள் சீனாவின் “பெல்ட் அண்டு ரோடு” திட்டத்தில் இணைந்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சீனாவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்நாடுகளில் துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில் வழித்தடங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. சீனாவின் ஹுவாவே நிறுவனம் இந்நாடுகளின் தொலைதொடர்புச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துகின்றது. நிலத்திலும் நீரிலும் மட்டுமன்றி விண்ணிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் சில இலத்தீன் அமெரிக்க நாடுகளில் செயற்கைக்கோள் கட்டுப்பாட்டு மையங்களையும் கூட சீனா ஆரம்பித்துள்ளது. அர்ஜெண்டினாவின் பாதகோன் பாலைவனத்திலும், பிரேசில், பொலீவியா, சிலி, வெனிசுலா ஆகிய நாடுகளில் பல்வேறு இடங்களிலும் சீனா செயற்கைக் கோள் கட்டுப்பாடு மையங்களை உருவாக்கியிருக்கிறது.

இந்நாடுகளின் தொழில்துறையில் சீனாவின் சார்பை உறுதிப்படுத்துவதற்காக சீனா-இலத்தீன் அமெரிக்க நாடுகள் கூட்டுறவு நிதியம் (China-LAC Cooperation Fund) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டு அதில் பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளன. இதே போன்று சீன இலத்தீன் அமெரிக்க உற்பத்தித் திறம் ஒத்துழைப்பு முதலீட்டு நிதியம் (Sino-Latin American Production Capacity Cooperation Investment Fund) ஒன்றும் உருவாக்கப்பட்டு அதன் மூலம் பல மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சீனா இந்தப் பிராந்தியத்தின் தொழில்களில் முதலீடு செய்துள்ளது. அர்ஜெண்டினா, பொலீவியா, வெனிசுலா ஆகிய நாடுகளில் உள்ள லித்தியம் உள்ளிட்ட அரிதான கணிமங்களை ஏற்றுமதி செய்ய அந்நாடுகளுடன் சீனா ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

சீனாவின் பொருளாதார ஆதிக்கம் மெல்ல மெல்ல அரசியல் ரீதியிலும் அமெரிக்காவிற்கு எதிரானதாக வெளிப்பட ஆரம்பித்துள்ளது. கொலம்பியா பிரேசில் உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவை விட சீனா சார்பானதாக மாறிவருகின்றன. கொலம்பியா இன்னும் ஒரு படி மேலே போய், அமெரிக்காவிற்கு மாற்றாக பிரிக்ஸ் அமைப்பு மூலம் சீனா முன்னெடுத்துள்ள புதிய வளர்ச்சி வங்கியில் (New Development Bank) இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளது. வெனிசுலாவோ தன்னையும் பிரிக்ஸ் அமைப்பில் இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

இலத்தீன் அமெரிக்க நாடுகளான கியூபா, கொலம்பியா, வெனிசுலா உள்ளிட்டவை ஏற்கெனவே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகப் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றன. அமெரிக்காவிற்கு மிக அருகில் இருந்தாலும் இந்நாடுகளின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்குக் கட்டுப்பட மறுத்து வருகின்றனர். இந்நிலையில் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் சீனாவின் செல்வாக்கு அதிகரிப்பது என்பது அமெரிக்காவிற்கு பெரும் சவாலாக மாறிவருகிறது.

இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் அமெரிக்கா வெனிசுலாமீது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. வெனிசுலாவைத் தாக்குவதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் பல விசயங்களை அடைய நினைக்கிறது. லத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க மேலாதிக்கத்தை நிலைநாட்டுவது. இந்தப் பிராந்தியத்தில் சீனா உருவாக்கியிருக்கும் உற்பத்தி விநியோகச் சங்கிலியை உடைத்து அந்த இடத்தில் அமெரிக்காவினை நிலைநிறுத்துவது, அதன் முதல் கட்டமாக வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்க நிறுவனங்களின் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது, இலத்தீன் அமெரிக்க நாடுகள் சீனவுடன் கொண்டிருக்கும் உறவுகளைத் துண்டிப்பது, பிராந்தியத்தில் உள்ள மற்ற இடதுசாரி அரசாங்கங்களை அச்சுறுத்துவது, அமெரிக்காவிற்கு எதிராக அந்நாடுகள் உருவாக்கிவரும் பிராந்திய ஒருங்கிணைப்புத் திட்டங்களை அழிப்பது.

அமெரிக்காவின் இந்தத் திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும் வரை அந்தப் பிராந்தியத்திற்கு அமைதி திரும்பாது. வெனிசுலா என்பது வெறும் தொடக்கம்தான், தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள அடுத்தடுத்த தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புப் போர்களையும் அமெரிக்கா தொடர்ந்து நடத்தவிருக்கிறது.

  • அறிவு

One comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன