சென்னை உயர் நீதிமன்றத்திலோ, உச்ச நீதிமன்றத்திலோ இது நாள் வரை அமுல்படுத்தப்படாத கட்டாய ஈ பைலிங் தமிழக விசாரணை நீதிமன்றங்களில் திணிக்கப்பட்டுள்ளது, இதை திரும்ப பெற வலியுறுத்தி JAAC (தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக்குழு) தலைமையில் கடந்த ஒரு மாத காலமாக நீதிமன்ற பணி புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதம் மனித சங்கிலி என்று தொடர்ந்து போராட்டம் நடைபெற்றது, அதன் தொடர்ச்சியாக 07- 01- 2026 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வென்றெடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் உற்சாகமாக தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர், இதை அறிந்த உயர் நீதிமன்றம் JAAC ன் தலைவர் உள்ளிட்ட JAAC ன் நிர்வாகிகள், பார் கவுன்சில் தலைவர், உறுப்பினர்கள், பெடரேசன் தலைவர், உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர் சங்க தலைவர் ஆகியோரை 06-01-2025 மாலை திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்தது.
நாங்கள் கட்டாய ஈ பைலிங்கை அமல்படுத்துவோம், வழக்கறிஞர் சங்கங்கள் ஈ சேவை மையங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், வழக்கறிஞர் சங்கங்கள் வழக்கறிஞர்களுக்கு தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி கொடுத்துக் கொள்ளுங்கள் என்று உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
ஈ பைலிங்கை அமல்படுத்தியது நீங்கள், நாங்கள் ஏன் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கேள்வியோடு, யாருக்கும் பாதிப்பின்றி முழுமையாக நடைமுறைப்படுத்து எந்த கட்டமைப்பு வசதிகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
ஆறு மாதம் ஒத்தி வையுங்கள் என்று பெடரேஷன் தலைவர் திரு.மாரப்பன் அவர்களும் மூன்று மாதம் ஒத்தி வையுங்கள் என்று பார் கவுன்சில் உறுப்பினர் திரு.பிரபாகரன் அவர்களும் கூறிய நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று JAAC தலைவர் உள்ளிட்ட JAAC நிர்வாகிகள் உறுதிபட தெரிவித்து விட்டனர்.
பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் JAAC பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று JAAC நிர்வாகிகள் தெளிவுபடுத்தி விட்டனர். வழக்கறிஞர்களின் உறுதியையும் போராட்ட குணத்தையும் உணர்ந்து கொண்ட உயர்நீதிமன்றம் தனது முடிவிலிருந்து பின்வாங்கி, 01.01.2026 முதல் கட்டாய ஈ பைலிங் என்று பிறப்பித்த சுற்றறிக்கையினை காலவரையின்றி நிறுத்தி வைத்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டது.
கடந்த ஒரு மாத காலமாக தமிழக வழக்கறிஞர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்து போராடி வந்தனர். JAAC என்ற தமிழ்நாடு & புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் தலைமையில் வழக்கறிஞர்களும் வழக்கறிஞர் சங்கங்களும் ஒன்றிணைந்து திரண்டு போராடியதன் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமானது. (முன்பு 34(1) என்று குறிப்பிடப்படும் அடக்குமுறை சட்டம் வழக்கறிஞர்களுக்கு எதிராக வந்தபோது பெடரேஷன் எனும் வழக்கறிஞர் அமைப்பு வழக்கறிஞர்களுக்கு துரோகம் இழைத்ததால் தமிழக வழக்கறிஞர்களால் பெடரேஷன் புறந்தள்ளப்பட்டு JAAC உருவாக்கப்பட்டது)
தமிழக அளவில் ஒருங்கிணைந்தி ருந்தால் மட்டுமே தங்களுடைய உரிமைகளை பாதுகாக்க முடியும் என்ற புரிதலால் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது. வழக்கறிஞர் தொழிலை பாதுகாப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல இது, கட்டாய ஈ-பைலிங் நடைமுறையில் இருந்தால் பாதிக்கப்படும் வழக்காடிகளுக்காகவும் சேர்ந்ததுதான். நீதிபதிகளை எதிர்த்து எதுவும் சாதிக்க இயலாது என்ற அவநம்பிக்கை பரப்பப்பட்டு வரும் நிலையில் ஒன்றுபட்டு உறுதியுடன் போராடினால் அதிகார வர்க்கத்தை பணிய வைக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்த போராட்டமும் அதன் வெற்றியும் நினைவூட்டி உற்சாகத்தை கொடுத்துள்ளது.
- சிவா


தற்காலிகமாக தான் நிறுத்தி வைய்ப்பு நிரந்தரம் அல்ல
Congratulations for the deserving victory which was possible foregoing the regular income.
Comrades you have created history